பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 07, 2010

மண்டேனா ஒன்று - 7/6/2010

நினைவலைகள்


எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் திரு.நீலகண்டன் அவர்களின் பேட்டியொன்று "Memories Of Madras" என்ற தலைப்பில் கடந்த புதன்கிழமை ஹிந்து மெட்ரோ ப்ளஸ்ஸில் வெளியாகியிருந்தது. திரு.நீலகண்டன் அவர்கள் பிரபலமாக நீலு என்று அறியப்பட்டவர். சோ ராமசாமி அவர்களுடைய சகோதரர் அம்பி ராஜகோபாலுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப்பைத் துவங்கி அக்கால மேடை நாடகங்களில் சக்கை போடு போட்டவர். அவர் ஹிந்துவிற்கு அளித்த அப்பேட்டியினுடைய தமிழாக்கம் உங்களுக்காக....
பல்வேறு காரணங்களுக்காக மதறாஸை என்னுடைய தாயகமாகக் கருதுகிறேன். சுமார் 1941-42 களில் மாஞ்சேரியிலிருந்து (தற்போது கேரளாவிலிருக்கிறது) நம்பர் 25, முத்துக்காளத்தி செட்டித் தெரு, திருவல்லிக்கேணிக்கு குடிபெயர்ந்ததிலிருந்தே இங்குதான் வசித்து வருகிறோம். ராகவேந்திரா எலிமெண்ட்ரி பள்ளியில் என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களும், இரண்டாம் உலகப் போரின் போது எவ்வாறு பதுங்கு குழிகளிலும், மறைவிடங்களிலும் ஓடி ஒளிவோம் என்பதும் இன்றைக்கும் தெளிவான நினைவிருக்கிறது.

மேலும், ஆகஸ்டு 15, 1947 ஐ யாரால் மறக்க முடியும்? அக்காலத்தில் வீட்டில் ரேடியோ வைத்துக் கொள்ளுமளவிற்கு எங்களுக்கு வசதியில்லாத காரணத்தால், பண்டித நேருவின் புகழ்பெற்ற நள்ளிரவு உரையைக் கேட்பதற்காக, ப்ரெஸிடென்ஸி கல்லூரிக்கு எதிரே இருந்த மெரினா கடற்கரைக்கு விரைந்தோம். (இதனால் பின்னர் இதற்கு ரேடியோ பீச் என்ற பெயரும் ஏற்பட்டது).

அந்நாட்களில் கையில் அவ்வளவாக பணம் இல்லாத சூழலிலும், எங்களுடைய இளைய வளரும் பருவங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உல்லாசமுமாகவே கழிந்தன. திருவல்லிக்கேணியில் வரிசையாக அடைசலான வீடுகள் இருந்தபோதிலும், எங்களுக்கு விளையாடுவதற்கு விசாலமான இடங்களும் இருந்தன. அக்காலத்தில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் விடாமல் பார்ப்போம். கிரிக்கெட் மாட்ச்கள் என்றாலே அப்பாவிடம் பணம் கேட்க வேண்டிய தயக்கமான தருணங்கள். இருந்தாலும் கிரிக்கெட் மீதான மோகம் குறைந்தபாடில்லை. காலை ஒன்பது மணிக்கு துவங்கவிருக்கும் மாட்ச்களுக்கு, விடியற்காலை மூன்று மணிக்கே டிக்கெட் வாங்குவதற்கு எங்கள் குழுவினர் ஆஜராகி வசதியான இடங்களைப் பிடித்து விடுவோம். பிறகு எட்டரை மணிவாக்கில் எங்களில் ஒருவர் வீட்டிற்குச் சென்று சாப்பாட்டு பொட்டலங்களைப் பெற்று வந்து, தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை அனுபவிப்போம்.

இது தவிர பிரெஸிடென்ஸி கல்லூரி அருகே அமைந்துள்ள வென்லாக் மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வோம். பொழுது போகாத தருணங்களில், வேர்க்கடலை சுண்டல், குச்சி ஐஸ், கமர்கட், பஞ்சு மிட்டாய், விதம் விதமான வடிவத்திலிருக்கு ஜவ்வு மிட்டாய் என பலதரப்பட்ட பண்டங்களை சுகாதாரம் பற்றிய கவலையின்று சுவைத்து மகிழ்வோம்.

பெரிய தெருவிலுள்ள ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்களது பாட்சிற்குதான் முதன் முறையாக மல்டிபிள் சாய்ஸ் கேள்வித்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் தேர்வின்போது வகுப்பிலே படிப்பில் சுட்டியாக உள்ள மாணவன் விடைக்குத் தகுந்தாற்போல் ஒன்று இரண்டு என விரல்களை உயர்த்த நாங்கள் விடையெழுதுவோம். தவிர ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர்கள் வைத்து அழைப்பதுவும் உண்டு. அவ்வாறுதான் வரலாற்றாசிரியர் பஞ்சாபகேசன், ”பங்க்சர்” என்றானது, டிரில் மாஸ்டர் வீரபத்ர நாயுடு, “மேஸ்திரி” ஆனதும்.

எங்கள் பள்ளிப் பருவத்தில், மாணவ சாரணர் இயக்கத்தில் சேர்வது மிகவும் பிரசித்தமானது. இன்னமும் குறிப்பாகச் சொல்லப் போனால் என்னுடைய நாடக தாகத்திற்கு ஊக்கமளித்ததே என்னுடைய சாரணர் இயக்க அனுபவங்கள்தான். ஒவ்வொரு சாரண முகாம்களிலும், சுமார் 200 பார்வையாளர்களுக்கு மத்தியில் 15 நிமிடங்கள் எங்களுக்கு நாடகம் நடத்த அனுமதியளிக்கப்படும். பிற்காலத்தில் மேடை பயத்தைப் போக்க அந்த அனுபவங்கள் மிகவும் உபயோகமாக இருந்தன.

அப்போதெல்லாம் எங்களுக்கு வார, மாதப் பத்திரிக்கைகளை வாங்கிப் படிக்குமளவிற்கு வசதியில்லை. ஆனால் அந்த ஏழ்மை நிலை அப்பத்திரிக்கைகளை நாங்கள் படிப்பதைத் தடுத்து விடவில்லை. பிற்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு அப்போது எங்கள் பகுதியில் பத்திரிக்கை விநியோகம் செய்பவராக இருந்தார். அவர் எனக்கு, படித்துவிட்டு மதியத்திற்குள் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளைத் தருவார். இரவில் வழக்கமாக அவர் எங்கள் வீட்டு வராண்டாவில்தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவருடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். பிற்காலத்தில் அதுவே எனக்கு மதறாஸ் தமிழில் நல்ல பாண்டித்யம் பெறுவதற்கு உதவியது.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தேவனின் மிஸ்.ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகந்நாதன் போன்ற நாடகங்களில் நடிப்பதன் மூலம் முழு நேர தொழில்முறை நாடக நடிகனானேன். அந்நாடகங்கள் திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிற்காக, திரு. “சாம்பு” என்.எஸ். நடராஜன் அவர்களால் இயக்கப்பட்டது. கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு வீட்டில் ஒரு வருட ஓய்வு. அந்நேரத்தில் வீட்டில் நண்பர்களுடன் அரட்டை, சீட்டாட்டம், நாடகம் பார்ப்பது என்று கழிந்தது. எங்கள் வீட்டில் என்னுடைய நான்கு சகோதரர்களில் நானே மிக இளையவன் என்பதால் எனக்கு இதிலெல்லாம் சர்வ சுதந்திரம் உண்டு.

என்னுடைய வாழ்க்கையில் இசை ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். இதன் காரணமாகவே கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக எனக்கு கர்நாடக இசையின் மீது அபரிமிதமான ப்ரேமை. மதுரை மணி ஐயர், எம்.டி.ராமநாதன், ஜிஎன்பி, டைகர் வரதாச்சாரியார், கே.வி.நாராயணஸ்வாமி என அனைத்து மேதைகளின் கச்சேரிகளையும் கேட்டுள்ளேன்.

திருவல்லிக்கேணி நாராயணஸ்வாமி ஹாலில், பார்த்தசாரதி ஸபாவினர் கச்சேரிகளை நடத்துவர். சுமார் முன்னூறு முதல் நானூறு பேர் வரை அமரக்கூடிய அளவிற்கு ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு, கச்சேரி துவங்குவதற்கு வெகுநேரம் முன்பிருந்தே கூட்டம் களை கட்டத் துவங்கும். முன்னணி வித்வானின் கச்சேரியாக இருந்தால் மண்டபம் நிரம்பி, வெளியில் நின்று கொண்டு பலர் கேட்குமளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.

ஒரு முறை புல்லாங்குழல் மாலியினுடைய கச்சேரி மாலை ஆறு மணிக்குத் துவங்குவதாக இருந்தது. ஆனால் அவரால் நடு இரவுதான் வரமுடிந்தது என்றாலும், விடியற்காலை 4.30 வரை கச்சேரி நீண்டது.

நாங்கள் சாரணர் இயக்கத்தில் இருந்தபடியால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக வேண்டி மியூசிக் அகாதமிக்கு அழைக்கப்படுவோம். இது என்னுடைய இசை தாகத்திற்கு மேலும் உரமளித்தது.

நாங்கள் பல இடங்களில் நாடகங்கள் நடத்துவோம். இன்றைய நிலை போலில்லாமல், அன்றைக்கு நகரெங்குமிருந்த ஸபாக்கள் நாடகங்களுக்கு ஊக்கமளித்தன. நாடகம் நடத்துவதற்குண்டான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து, எங்கள் நாடகம் முதல், ஆர்.எஸ்.மனோகரின் சரித்திர நாடகங்களை மேடையேற்றுவதற்குத் தோதான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தன.

அக்காலங்களில் மேடை நாடகங்களில் ஆண்களே பெண் வேடமேற்று நடிப்பதுவும் உண்டு. பி.என்.குமார், ஏ.என்.ராதாகிருஷ்ணன் போன்றோர் எங்கள் நாடகக் குழுவின் பிரசித்தி பெற்ற கதாநாயகிகள். ஒருமுறை சோ கூட பெண்வேடமேற்று நடித்துள்ளார். இதனால் வடசென்னையில் உள்ள சில சபாக்கள் எங்கள் நாடகங்களை நடத்த மறுத்தன. பிறகுதான் சுகுமாரி எங்களது நாடகக் குழுவின் முதல் நிஜ கதாநாயகியானார்.

(1936’இல் பிறந்த நீலகண்டன் என்கிற நீலு அவர்கள் முதலில் வி.டி.ஸ்வாமி & கம்பெனியில் குமாஸ்தாவகச் சேர்ந்து நாற்பதாண்டுகால உழைப்பிற்குப் பிறகு அந்நிறுவனத்தின் பொது மேலாளராக ஓய்வு பெற்றார். இவர் இதுவரை ஏழாயிரத்திற்க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் க்ரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் கூட நடித்திருக்கிறார். தவிர இவர், விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்கிற சோவினுடைய நாடகக் குழுவின் முக்கிய அங்கத்தினராவார் ( இக்குழுவை சோவினுடைய சகோதரர் அம்பி என்கிற ராஜகோபாலுடன் இணைந்து நிறுவியதே நீலுதான், ஆனால் இங்கு அவ்வாறு பிரசுரிக்கப்படவில்லை.) இவை தவிர இவர் சுமார் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சோ’வினுடைய எங்கே பிராமணன் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.)

நன்றி : ஹிந்து.

- யதிராஜ்

10 Comments:

kggouthaman said...

நீலு அவர்கள் பற்றிய தகவல்கள் சுவையாக உள்ளன. பல விவரங்கள் புதியவையும். மிக்க நன்றி யதிராஜ்.

யதிராஜ சம்பத் குமார் said...

”மெட்ராஸ் பை நைட்” என்ற நாடகத்தில் வரும் ஒரு ராமாயண நாடகக் காட்சியில் சோ அவர்கள் கைகேயியாக பெண் வேடமேற்றிருப்பார்.

கெளதமன் சார்..

சோ’ அவர்களின் “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” என்ற நூலின் ஆரம்ப அத்யாயங்களில் சோ அவர்கள் நீலு பற்றி சுவைபடக் கூறியிருப்பார்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

நீலு அவர்களின் உடலுக்குதான் வயதாகி விட்டதே தவிர மனதிற்கு இல்லை. அவரை துக்ளக் விழாவில் கண்டு பேசிய போது தெரிந்து கொண்டேன்..

அநன்யா மஹாதேவன் said...

சுவையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!

ரிஷபன்Meena said...

அவர் தோற்றத்தை வைத்து அவருக்கு 85 வயதுக்கு மேலிருக்கும் என்று நினைத்திருந்தேன்.

வி.எஸ் ராகவன் மற்றும் நீலு போன்றவர்களை பிளாக் அண்ட் ஒயிட் காலங்களிலிருந்தே வயதான தோற்றங்களில் மட்டுமே பார்த்துவந்திருக்கிறேன்.

அதிலும் வி.எஸ். ராகவன் தாத்தாவா பிறந்து தாத்தாவாகவே வாழ்கிறாரோ என்ற சந்தேகம் கூட எழுவதுண்டு.

Kameswara Rao said...

திரு நீலு அவர்களின் "Madras By Night", Nermai Urangum Neram, தவிர கெளரவம் படத்தில் அவரின் நகைச்சுவை நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும் அவரின் அனுபவங்கள் மிகவும் சுவையாக இருந்தது குறிப்பாக சேப்பாக்கம் கிரிக்கெட் அனுபவங்கள், நான் நினைவு தெரிந்த நாள் முதல் மயிலாப்பூர் வாசி தான். சிறுவயதில் (நான்காவது என்று நினைவு) Austrialian Pace bowler Hogg பார்பதற்கு மயிலையில் இருந்து சேப்பாக்கம் நடந்தே சென்றது நினைவுக்கு வந்தது.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

காமேஷ்
போட்ஸ்வானா

முகமூடி said...

ஹிந்துவில் நான் தவறாமல் படிப்பது. தமிழாக்கம் அருமை. முடிந்தால் இதற்கு முன் வந்த கட்டுரைகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

1971-72 இருக்கும். ராயப்பேட்டை பொது மருத்துவ மனைக்கு எதற்காகவோ போயிருந்த போது இதே நீலு ஒரு நீல நிற லாம்ப்ரெட்டாவில் கேட்டுக்குள் நுழைந்து கொண்டே என்னிடம் " ஆர்த்தொபீடிக் வார்டு எங்க இருக்கு? " என்றார். "அதோ!" என்று அந்தப் பக்கம் கை காட்டி விட்டு அன்று மாலையே நண்பர்களிடமெல்லாம் டமாரம் அடித்தேன்" டேய் ! 'நூற்றுக்கு நூறு'ல நடித்த நீலுவோட இன்று பேசினேண்டா!" என்று!நண்பர்களும் 'ஆ' என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்!

நன்றி!

சினிமா விரும்பி

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

1971-72 இருக்கும். ராயப்பேட்டை பொது மருத்துவ மனைக்கு எதற்காகவோ போயிருந்த போது இதே நீலு ஒரு நீல நிற லாம்ப்ரெட்டாவில் கேட்டுக்குள் நுழைந்து கொண்டே என்னிடம் " ஆர்த்தொபீடிக் வார்டு எங்க இருக்கு? " என்றார். "அதோ!" என்று அந்தப் பக்கம் கை காட்டி விட்டு அன்று மாலையே நண்பர்களிடமெல்லாம் டமாரம் அடித்தேன்" டேய் ! 'நூற்றுக்கு நூறு'ல நடித்த நீலுவோட இன்று பேசினேண்டா!" என்று!நண்பர்களும் 'ஆ' என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்!

நன்றி!

சினிமா விரும்பி

KVK said...

திரு நிலு அவர்களுடைய குரல் வளம் பேசும் தோரணை ரொம்பவும் வித்தியாசமானது ... கமல் லின் பஞ்ச தந்திரத்தில் நடிசுருபார் ..

பிரகதீஸ்வரன்