பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 29, 2010

ஆனந்த்-டொபலோவ் Game 3 & 4


செஸ் பற்றிய பதிவுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இ.வ வாசகர்களுக்கு மிக்க நன்றி.

மூன்றாவது, நான்காவது ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் நடந்து முடிந்தன.

முடிந்த ஆட்டங்களைப் பற்றி “கண்டேன் சீதையை” பாணியில் சொல்ல வேண்டுமென்றால்,“வெற்றி ஆனந்துக்கே”.


மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்கள் முதல் ஆட்டத்தை ஒத்து இருக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஆனந்த் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப் பின், Grunfeld-ஐ ஏறக்கட்டிவிட்டு Slav defense-ஐ தேர்வு செய்தார். கடந்த இரண்டு ஆட்டங்களைப் போலவே, 1.d4 என்ற நகர்த்திலிலேயே இந்த ஆட்டமும் தொடங்கியது. ஆனந்தின் ஆட்டங்களை உற்று நோக்கும் போது, அவர் காலம் காலமாக, 1.e4/e5 ஆட்டக்காரராக இருந்துள்ளார். 2008-ல் நடந்த கிராம்னிக்குடனான ஆட்டத்தில்தான் 1.d4-ல் தொடங்கி ஆட ஆரம்பித்தார். அதுவே அவரது வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. இந்த போட்டியிலும் 1.d4/d5-ல் தொடங்குவது ஆனந்தின் strategy-ஆகப்படுகிறது. இதன் மூலம், 1.e4/e5-க்கு எதிராய் டொபலோவ் தயார்படுத்தியிருக்கும் அனைத்து திட்டங்களும் வீணாகிவிடும் என்பதே ஆனந்தின் எண்ணமாக இருக்கும்.

டொபலோவுக்கு கிராம்னிக்குடனான போட்டி ஒரு கசப்பான அனுபவம். இரண்டாவது ஆட்டத்திலேயே கிராம்னிக் வெற்றிகரமாய் டொபலோவுக்கு எதிராக உபயோகித்த வழிமுறையை ஆனந்தும் கையாண்டதைப் பார்த்தோம். மூன்றாவது ஆட்டத்திலும் கிராம்னிக் கருப்பு காய்ளுடன் விளையாடும் போது பயன்படுத்திய Slav Defense-க்கு ஆனந்தும் தாவினார். இது ஒரு psychological ploy.

மூன்றாவது ஆட்டத்தைப் பொறுத்த மட்டில், ஆனந்த் பொறுமையின் சிகரமாய் திகழ்ந்தார். “எல்லா ரிஸ்கையும் டொபலோவே எடுக்கட்டும், பிரச்னையில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.”, என்பதே ஆனந்தின் திட்டம். டொபலோவ் சில காய்களை வெட்டுக் கொடுப்பதன் மூலம், தாக்குவதற்கான புதிய களங்களை உண்டாக்க முயன்றார். ஆனந்த், அவர் அளித்த வாய்ப்புகளை நிராகரித்து, ஆட்டத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். “எதிராளி தவறு செய்தால் ஒரு புள்ளி, இல்லையென்றால் அரை புள்ளி”, என்று இரு முடிவுகளுக்கும் open-ஆக இருந்தார் ஆனந்த். டொபலோவோ, வெற்றியைத் தவிர வேறெதற்கும் விளையாடுவதில்லை என்பதில் குறியாக இருந்தார். ஆனால், எவ்வளவு முயன்றும் ஆனந்தின் தற்காப்பை டொபலோவால் ஊடுருவ முடியவில்லை. முப்பது நகர்த்தல்களுக்குளேயே ஆட்டம் டிராவில்தான் முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முயலப் போய், ஏதேனும் தவறு செய்து, டிராவை தோல்வி ஆக்கிக் கொள்வாரா டொபலோவ் என்பதே ஆட்டத்தை கவனித்தவருக்குக் கிடைத்த ஒரே சுவாரஸ்யம். தான் டிரா offer-கள் கொடுக்கவும் போவதில்லை, ஏற்கவும் போவதில்லை என்று டொபலோவ் கூறியிருந்ததால், வழியே இல்லாமல் சமநிலை ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வேண்டியதாயிற்று. ஆனந்தும், “ஆடும் வரை ஆடிப் பார்”, என்று ஈடுகொடுத்து வந்தார். ஒரு கட்டத்த்ல், போட்டியின் arbiter-ஐ டொபலோவ் அழைத்து வந்தார். அவர் மூலமாக டிராவை தெரிவிக்க நினைத்தார். ஆனந்தோ aribter-ஐக் கண்டுகொள்ளவே இல்லை. தனது நகர்த்தல்களை ஆடி டொபலோவை கடுப்பேற்றினார். ஒரு வழியாய், சில நகர்த்தல்களை மீண்டும் மீண்டும் வைத்து, repetition மூலம் டிராவை அடைந்தனர்.

ஆட்டம் முடிந்ததும் இருவரும் கை கொடுத்துக் கொள்வது மரபு. இந்த ஆட்டம் முடிந்ததும் அது நடக்கவில்லை. Press Conference-ன் போது டொபலோவ் இருவரும் கை கொடுக்க மறந்துவிட்டதாகக் கூறினார். ஆனந்தோ, “அதையும் arbiter மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமோ என்ற குழப்பத்தால் கொடுக்கவில்லை”, என்று டொபலோவை நக்கலடித்தார்.

ஆட்டத்திலும் சரி, ஆட்டத்துக்கு வெளியிலும் சரி, டொபலோவின் சளும்பலுக்கு எல்லாம் சளைக்கப் போவதில்லை என்பது போல அமைந்தது ஆனந்தின் பதில்.ஆட்டத்தைப் விமர்சித்த கிராண்ட்மாஸ்டர்கள், “இந்த ஆட்டம் கிராம்னிக் ஆடியது போலவே இருந்தது”, என்றனர்.போட்டியின் முடிவில் ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா? கிராம்னிக்குக்கு இருக்கும் ‘டொபலோவ் வெறுப்பு’ அவரை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

நான்காவது ஆட்டத்தையும், வெற்றி பெற்ற இரண்டாவது ஆட்டத்தைப் போலவே, Catalan Opening-ல் தொடங்கினார் ஆனந்த். இரண்டாவது ஆட்ட தோல்விக்குப் பின், டொபலோவ் மீண்டும் ஒரு முறை அதே சூழலில் சிக்கியிருக்க வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி. ஏற்கெனவே கிராம்னிக்கிடம் இதே சூழலில்தான் டொபலோவ் பாடாய்ப் பட்டார். ஆனந்த் மெது மெதுவாய், தனது Queen Side-ஐ பலப்படுத்தி வந்தார். ஆட்டத்தின் எந்த ஒரு நேரத்திலும், ஆனந்த் தனது preparation-ஐ விட்டு வெளி வந்ததாகத் தெரியவில்லை. பாதி ஆட்டம் வரை, கிராம்னிக்கின் ஆட்டம் போலவே விளையாடி வந்த ஆனந்த், 23-ஆவது நகர்த்திலில் தனது குதிரையை "castled செய்யப்பட்ட ராஜாவுக்கு அருகில் உள்ள இரண்டு pawn-களுக்காக” தியாகம் செய்தார். இதன் மூலம், டொபலோவின் ராஜா, வெட்ட வெளியில் மாட்டிக் கொண்டார். Queen Side-லேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த டொபலோவுக்கு திடீரென்று வந்த king side attack அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த நகர்த்தலைத் தொடர்ந்து, அடுத்த 5-6 நகர்த்தல்களில் சிறிது பிசகியிருந்தால் கூட டொபலோவுக்கு சாதகமாய் ஆட்டம் திரும்பியிருக்கும். ஏனெனில், டொபலோவ் கூடுதல் காய்களுடன் களத்தில் இருந்தார். ஆனந்தோ, கம்ப்யூட்டர்கள் வெற்றிக்கென்று கணித்த நகர்த்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி டொபலோவை திக்குமுக்காட வைத்தார். இன்னும் சில நகர்த்தல்கள் போனால் check and mate ஆகிவிடுவார் என்ற நிலையில், 32-வது நகர்த்திலில் டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதன் மூலம், இரண்டாவது ஓய்வு தினத்துக்குள்ளும் ஆனந்த் நிறைவாய் நுழைந்திருப்பார். இரண்டாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியிலாவது டொபலோவின் பிழை ஆனந்துக்கு பெரிதும் உதவியது. பிழையான நகர்த்தல்களை எதுவும் டொபலோவ் வைக்காத போதும், ஆனந்த் வெற்றியை அடைந்தது அவருக்கு பெரிய திருப்தியை அளித்திருக்கும்.

பொதுவாக ஆனந்த் நன்றாக விளையாடும் போது, எதிராளியைவிட வேகமாக ஆடுவார். இந்தத் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ஆனந்த் டொபலோவைவிட மெதுவாகவே விளையாடி வந்தார். நான்காவது ஆட்டத்தில் பழைய ஆனந்தைப் போல மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினார். It is a sign that shows Anand is back in his elements.

செஸ் உலகம் இரண்டு விஷயங்களை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

1. டொபலோவ் இப்போது எப்படி ஆடுவார். இதற்கு முன் பல டோர்னமெண்டுகளில், பின் தங்கிய நிலையிலிருந்து முன்னேறி, இறுதியில் வெற்றியையும் அடைந்திருப்பவர் இவர். கிராம்னிக் உடன் மோதிய ஆட்டத்திலும், இரண்டு புள்ளிகள் பின்தங்கியிருந்த போதும், அபாரமாக ஆடி, ஒரு கட்டத்தில் கிராம்னிக்கைவிட அதிகம் புள்ளிகள் கூட பெற்றிருந்தார். அதனால், அடுத்த சில ஆட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

2. டேனைலோவ் கிராம்னிக்குடனான ஆட்டத்தில் ஏற்படுத்திய Toilet Gate சர்ச்சை போல, புதிதாக எதையாவது கிளப்புவாரா? சர்வ நிச்சயமாய் கிளப்புவார் என்றே பலர் ஊகிக்கின்றனர்.

அடுத்த ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுவார். அதற்கு அடுத்த இரு ஆட்டங்களிலும் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.(ஆறு ஆட்டங்களுக்குப் பின் odd number ஆட்டங்களில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.) ஆதலால், ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் எப்படியாவது ஜெயிக்கப் பார்ப்பார். அப்படி முயல்கையில், over-push செய்து தோல்வியுற்றால், சாம்பியன்ஷிப்பைக் கிட்டத்தட்ட ஆனந்த் வென்றுவிட்டார் என்றே வைத்துக் கொள்ளலாம்.


- லலிதா ராம்

பி.கு:
1. அடுத்த அப்டேட் ஆறாவது ஆட்டத்துக்குப் பின்.
2. ஆனந்தின் வெற்றியை நீங்களும் இங்கு ஆடிப் பார்க்கலாம்.
3. படங்கள் இங்கே

எப்படி இவ வாசகர்கள் செஸ் பதிவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எனக்கு இன்னும் புரியாத புதிராக இருக்கிறது !


32 Comments:

சத்யராஜ்குமார் said...

மிக அருமையான செஸ் அலசல்! நன்றி லலிதாராம் & இட்லிவடை டீம்.

//இன்னும் சில நகர்த்தல்கள் போனால் check and mate ஆகிவிடுவார் என்ற நிலையில்,//

இல்லை, ஆனந்தின் அடுத்த மூவ் செக் மேட்தான்.

ஈரோடு கோடீஸ் said...

//போட்டியின் முடிவில் ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை//

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. முன்பே ஒரு பேச்சு வந்தது. Kramnik is one of the seconds for Anand - என்று. ஆட்டம் அருமையாகச் சென்றுகொண்டிருக்கிறது.

பிள்ளையாண்டான் said...

Good Coverage!!

Thanks IV and LR!

Anonymous said...

Excellent Job. Please continue your good work.

Thanks

Think Tank said...

அருமை அருமை மிக அருமையான வர்ணனை! anand's post match comments were not available much in the web, but you have captured those as well. தமிழில் படிக்கையில் இன்னும் நன்றாக இருக்கிறது.

Venkat said...

What is meant by "ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை

Venkat said...

What is mean போட்டியின் முடிவில் ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை

பார்வையாளன் said...

விறு விருப்பான, நாவல் படிப்பது போல உள்ளது/.... நுணுக்கமான தகவல்கள்,,, சுவையான கருத்துக்கள்... சூப்பர்...

தினமும் எழுதினால், நன்றாக இருக்கும்...

SNRamesh said...

Great job in describing about the game to the readers, with spicy news bits added on how the psychological game is played. Amazing to see the support.

T.Duraivel said...

மிக அருமையான கட்டுரை. இதைப்போல் செஸ்ஸை விமர்சித்து எழுதியதை நான் படித்ததில்லை.மிகவும் நன்றி.
த.துரைவேல்

ramya said...

Good review. I like the way Anand travelled to Sofia. Will try in future.

மானஸ்தன் said...
This comment has been removed by the author.
சத்யராஜ்குமார் said...

//அடுத்த மூவ் செக் மேட்//

வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

Qf7 -ஐ அப்புறம்தான் கவனித்தேன்!

வீரராகவன் said...

அருமையான பதிவு. ஆனால் இ.வ ரசிகர்களின் ஆர்வத்தைப் பற்றிய சந்தேகம் தேவையில்லை. இ.வ ரசிகர்களுக்கு கிரிக்கெட்டோ, ர - ரசிகானந்தா சுவாமிகளோ, செஸ் ஆட்டமோ, எல்லாம் ஒன்றுதான். அதை சுவாரசியமாக பதிவிடும் ராம் அவர்களைதான் இ.வ ரசிகர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம்.
கண்டிப்பாக மொக்கை பதிவாக இருந்தால் கண்டனங்களும் ஏவுகணைகளும் உண்டு. ஆனால் லலிதா ராம் அவர்களுக்கு இ.வ சார்பில் பூச்செண்டு அல்ல பூங்கொத்து. பாராட்டுக்கள். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.

Mukkodan said...

It's interesting to read a Chess match review in Tamil.
Please keep up the good work.

Anonymous said...

Nice to read reviews in Tamil. Keep providing coverage for Anand's matches going forward

Balaji said...

I want to know which channel is telecasting the matches???

Indian said...

Lucid writing.

pkgaran said...

Great Job, Wishing you for doing again and again....

Shankar said...

Keep up the good job.
This might help new build new patrons for the game.Parents much encourage their children to indulge in this game.

அனுஜன்யா said...

மிக சுவாரஸ்யமான விமர்சனம். மூன்று கட்டுரைக்கும் சேர்த்துதான் தான் சொல்கிறேன்.

I Think 'Win with Catalan and draw with Slav' will be the 1st half strategy for Anand. Is Topa likely to play anything other than 1.d4? I doubt.

Btw, Ram, is not Catalan a reverse of Grunfeld?

ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்னும் எழுதலாமே ராம்? இட்லி வடை வாடகை நிறைய கேட்கிறாரா? :)

அனுஜன்யா

kggouthaman said...

// எப்படி இவ வாசகர்கள் செஸ் பதிவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எனக்கு இன்னும் புரியாத புதிராக இருக்கிறது !//

ஆமாம் எனக்கும் இது புரியாத புதிராகத்தான் இருக்கு... !

Sankari said...

Superb article. Very interesting. Thanks for publishing this. Appreciate the author for this wonderful article.

Ram said...

Anujanya,

You are right. Malcom Pein had pointed out the same after Game 2 in Chessbase.

”தினமுமா மொக்கை?” என்று அலுத்துக் கொள்ள வைப்பதை விட, “இன்னும் கொஞ்சம் எழுதலாமே”, என்று சொல்ல வைப்பது மேல் இல்லையா:-)

Reporting games with one white and one black keeps the write up interesting. (நானே சொல்லிக்கறேன்:-)) Every two games is kinda mini-match:-)

Erode Nagaraj... said...

பார்த்தாராம், வந்தாராம், பகிர்ந்தாராம், லலிதாராம்...

அனுஜன்யா said...

Juz as expected, 5th game drawn. Another slav again :)

Highlight is the lights going off during the 5th game :)

Anujanya

shanmuganathan said...

இந்த கட்டுரைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியப்படைகிறேன் என்று இருந்தது,,அது என்ன வியப்பு..நம்மவர்கள் எப்பொழுதும் சிறந்த விளையாட்டுக்கு முழு ஆதரவும் தருவார்கள் ..கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி செஸ் ஆக இருந்தாலும்....நம்வர்களின் விளையாடன கபடி பற்றி எழுதி பாருங்கள்,வரவேற்று எப்படி இருக்கும் என்று,என்ன ஒரு விஷயம் எந்த விளையாட்டு ஆனாலும் அது மக்களிடம் சென்றடைந்தால் அது வரவேற்பு பெரும்... நம்மூரில் கிரிக்கெட் மட்டும் மக்களிடம் செல்கிறது,இதற்கு மீடியா ஒரு காரணம் என்று சொல்வதை விட மீடியா தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம்..இந்த செஸ் ஆட்டங்களை பற்றி எந்த ஒரு மீடியாவிலும் செய்தி வராத போதும் இட்லிவடை மக்களிடம் தன்னால் முடிந்த அளவு எடுத்து சென்றது தான் இந்த வரவேற்புக்கு காரணம் ,,இல்லை என்றால் இதுவும் பத்தோடு ஒன்று அதோடு இதுவும் ஒன்றாகி இருக்கும்......

Anonymous said...

இதை போன்ற செஸ் பற்றிய பதிவுகளை நான் இதற்குமுன் படித்ததில்லை. ஆட்டத்தை பற்றிய உங்களது வர்ணனைகள் மிக மிக அருமை.
செஸ் பற்றிய பல தகவல்கள் மற்றும் நுணுக்கங்களை தொடர்ந்து எழுதவும்..
ஆவலுடன் உங்கள் ரசிகன்...

Saran said...

Without having interest, they wont give importance to a game. Through this post we come to know about the people having interest in chess.
Thanks to LalithaRam and Idlyvadai.
It ll be good if u post update for everymatch.
Cheer up Anand!! :)

ஜெயக்குமார் said...

செஸ் பற்றி கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓரளவு அறிமுகம் இருக்கிறது. மேலும் அதைப்பற்றி தகவல்களை ஆங்கில பத்திரிக்கைகள் தவிர வேறு யாரும் தருவதில்லை. லலிதாரமின் கட்டுரை தொய்வின்றி செல்கிரது வெறும் புள்ளிவிவரங்களாக அடுக்காமல் எதைச் சொல்வது என்பதில் தெளிவிருப்பதால் அதிகம் விரும்பப்பட்டிருக்கிறது, இந்த செஸ் தொடர். வாழ்த்துக்கள்

செந்தில் நாதன் Senthil Nathan said...

//மிக அருமையான செஸ் அலசல்! நன்றி லலிதாராம் & இட்லிவடை டீம்.
//

வழி மொழிகிறேன்.

ரெண்டு ஆட்டங்கள் ஒரு பதிவு--நல்ல பார்மட்..தொடருங்கள்!!

யோசிப்பவர் said...

எல்லாரும் நிறையை சொல்லிட்டாங்க. நாமாவது குறை சொல்வோம்.
//1. அடுத்த அப்டேட் ஆறாவது ஆட்டத்துக்குப் பின்.//
இது கொஞ்சம்கூட நல்லால்லை. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் அப்டேட் கொடுத்தால் நலம்.