பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 24, 2010

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

இட்லிவடை வாசகர்கள் எவ்வளவு பேர் செஸ் விளையாட்டை ஃபாலோ செய்வார்கள் என்று தெரியாது. ஆனந்த் – டொபலோவ் விளையாட்டை பற்றி லலிதா ராம் ஒரு முன்னோட்டம் எழுதியுள்ளார். வாசகர்களுக்கு விருப்பம் இருந்தால் இட்லிவடையில் சில பதிவுகள் எழுதுவார். உங்கள் விருப்பத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.


இனி கட்டுரை...


40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது.


ஆனந்தைப் பற்றி இங்கு ஏற்கெனவே விவரமாய் எழுதியுள்ளேன். (ஏனோ இன்று சொல்வனம் வேலை செய்யவில்லை. சீக்கிரம் செய்யும் என்று நம்புகிறேன்) அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார். செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ். உலக விளையாட்டு அரங்கில் பல்கேரியாவின் பெயரை முன்னிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், டொபலோவ் அந் நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண ரசிகர் வரை அனைவராலும் விரும்பப்படுபவர். (நல்ல காலம் பல்கேரியாவில் ஐபிஎல் நுழையவில்லை).

டொபலோவ் தன் ஆட்டத்தை பெரும்பாலும் அதிரடியாகவே ஆடுவார். நிறைய நேரம் எடுத்துக் கொண்டு உள்ளதில் மிகச் சிறந்த நகர்த்தல்களைக் கண்டுபிடித்து ஆட்டத்தை தொடர்வதை விட, யாரும் பார்த்திராத ஆட்ட நிலைகளை உருவாக்கி, எதிராளியை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இந்த வகை ஆட்டத்தில் ரிஸ்க் ரொம்ப அதிகம். டொபலோவின் மிகப் பெரிய பலம் அவரது துணிச்சல்தான். தன் துணிச்சலான நகர்த்தல்களினால் பல முறைத தோல்வியைச் சந்தித்திருப்பினும் டொபலோவ் தன் aggressive approach-ஐ மாற்றிக் கொள்ளாமல் ஆடி வருகிறார். முதலில் தற்காத்துக் கொள்வோம். எதிராளி தவறு செய்தால், அதை வைத்து ஆட்டத்தை ஜெயிப்போம் என்ற வகை ஆட்டக்காரர்களுக்கிடையில் டொபலோவ் தனித்துத் தெரிகிறார். இவர் தோல்வியை அடைந்த பல ஆட்டங்கள் கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. (உதாரணமாக இந்த ஆட்டத்தைக் கூறலாம்.)

பல மறக்க முடியாத ஆட்டங்களை டொபலோவ் ஆடி வந்த போதும், 1995-லிருந்து 2005-வரை உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேறாமலே இருந்து வந்தது. (இப்போது கூட இவர் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் சாம்பியன் அல்ல.) காஸ்பரோவ் ஏற்படுத்திய பிளவால், ஒரே சமயத்தில் செஸ் உலகில் இரு சாம்பியன்கள் இருந்து வந்தனர். 2005-ல் FIDE என்ற அமைப்பின் போட்டியின் மூலம் டொபலோவ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனந்த் முதலான எட்டு முன்னணி வீரர்கள் ஆடிய டயுள்-ரவுண்ட் ராபின் டோர்னமெண்டில் முதல் ஏழு ஆட்டங்களில் ஆறு வெற்றியைப் பெற்று, சுலபமாக பட்டத்தை வென்றார் டொபலோவ்.

2005-ல் காஸ்பரோவ் ஓய்வு பெற்றார். அதன் பின், செஸ் உலகம் இணைவதற்கான சாத்தியகூறுகள் உருவாகின. 2006-ல் பொதுவாக ஒரு சாம்பியனைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, அப்போதைய சாம்பியன்களான கிராம்னிக்கும், டொபலோவும் எலிஸ்டாவில் பன்னிரெண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவது என்று முடிவானது. (போட்டியின் முடிவிலும் முழுமையான unification நடக்கவில்லை. அது 2008-ல் ஆனந்த் கிராம்னிக்கை வென்றவுடன்தான் நடந்துள்ளது).

இந்தக் கட்டத்த்தில், டொபலோவின் மேனேஜர் சில்வியோ டேனைலோவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இவர் செஸ் இண்டெர்னேஷனல் மாஸ்டராக இருந்திருக்கிறார் என்பதை விட டொபலோவின் மேனேஜராக இருப்பவர் என்றே அனைவராலும் அறியப்படுபவர். இன்று, டொபலோவை ‘bad boy of chess’ என்று பலர் அழைக்க முக்கிய காரணமாய் விளங்குபவர். அநேகமாய், டோபலோவ் சார்பில் நேர்காணல்கள் இவர்தான் வழங்குவார். பேசும் போது எடுத்தே கவிழ்த்தேன் என்று எதையாவது சொல்வார். எதிராளியைத் தூண்டிவிடுவதில் இவருக்கு நிகரே இல்லை எனலாம். 90-களில் டொபலோவின் கோச்சாக இருந்து பின்பு அவரது மேனேஜர் ஆனவர். இந்தப் பின்னணியின் டொபலோவ் கிராம்னிக்கின் ஆட்டங்களைக் காண்போம்.

முதல் நான்கு ஆட்டங்கள் முடிந்த போது கிராம்னிக் 3-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது டேனைலோவ் ஒரு அறிக்கை கொடுத்தார்:

“ஒவ்வொரு நகர்த்தலுக்குப் பின்னும் கிராம்னிக் தன் இருக்கையை விட்டு எழுந்து செல்கிறார். சராசரியாக ஒரு ஆட்டத்தில் 50 முறையாவது relaxation room-க்குப் போகிறார். 25 முறையாவது toilet-க்கு போகிறார். வீடியோ சர்வைலன்ஸ் இல்லாத toilet(!!!)-க்கு அடிக்கடி கிராம்னிக் செல்வது சந்தேகத்தை அளிக்கிறது. இந்த முறைகேட்டை உடனடியாக சீர் செய்யாவிட்டால் டொபலோவ் தொடர்ந்து விளையாடமாட்டார்.”

இந்த அறிக்கையைத் தொடர்ந்து நடந்த பரிசீலனையில், டேனைலோவ் கூறிய குற்றச்சாட்டுகள் மிகப் படுத்தப்பட்டவை என்று தெரிய வந்தாலும், இரு ஆட்டக்காரர்களுக்கு தனித் தனி கழிப்பறைகள் கொடுப்பதை நிறுத்தி, இருவருக்கும் ஒரே கழிப்பறையைக் கொடுப்பது என்று முடிவானது. இதற்கு கிராம்னிக் மறுப்பு தெரிவித்து, ஐந்தாவது ஆட்டத்தை forfeit செய்தார். அதன் பின் இரு பக்கமும் மாறி மாறி அவதூற்றினை வாரி இறைத்துக் கொண்டனர். கடைசியாக, “ஆட்டம் தொடரும். பழைய படியே கிராம்னிக் பிரத்யேக கழிப்பறைக்குச் செல்லலாம். ஆனால், அவர் forfeit செய்த ஆட்டம் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் டொபலோவ் வென்றதாகக் கருதப்படும்”, என்று முடிவானது. இது நியாயமா? டேனைலோவ் இருக்கும் இடத்தில் எல்லாமே நியாயம்தான்.

அதன் பின் நடந்த ஆட்டங்களில் இரு முறை டொபலோவ் வென்று முன்னணியில் இருந்தார். பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அபாரமாக விளையாடி சமநிலைப் படுத்தினார். 12 ஆட்டங்களும் முடிந்த போது இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனால், ராபிட் ஆட்டங்கள் தொடங்கின. மூன்று ராபிட் ஆட்டங்கள் டிராவில் முடிந்த பின், கடைசி ஆட்டத்தில் கிராம்னிக் வென்று உலக சாம்பியன் ஆனார். அதன் பின், கிராம்னிக்கின் toilet-ன் கூரையில் கேபிள்களைக் கண்டுபிடித்ததாகவும், கிராம்னிக்கின் நகர்த்தல்கள் பல Fritz9 என்ற கம்ப்யூட்டர் பேகேஜ் சிபாரிசு செய்த நகர்த்தல்களாகவே இருப்பதாகவும் டேனைலோவ் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். ”I believe that his (Kramnik’s) play is fair, and my decision to continue the match proves it” என்று முதலில் சொன்னவரும் டொபலோவ்தான். தோல்விக்குப் பின் பேச்சை மாற்றி அவதூறை இறைக்க ஆரம்பித்தார். இதற்குப் பின்னும் “severe reprimand” உடன் டோபலோவ் தப்பித்துக் கொண்டார்.

2006-ல் கிராம்னிக் சாம்பியன் ஆனாலும், 2005-ஐப் போலவே 2007-லும் டோர்னமெண்ட் நடத்துவதாக FIDE அறிவித்து இருந்தது. கிராம்னிக் உலக சாம்பியன் என்றால், 2007 ஆட்டங்களுக்கு அர்த்தமே இல்லை. இந்தக் குழப்பம் தீர கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார், டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராவின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையிலான போட்டி 2008-ல் ஜெர்மனியில் நடை பெற்றது. கூடவே இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

2008-ல் FIDE ஒரு Super GM டோர்னமெண்ட் நடக்கும், அதில் வெற்றி பெறுபவர் டொபலோவுடன் மோதுவார். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ஆனந்த்-கிராம்னிக் போட்டியில் வென்று சாம்பியன் ஆனவருக்கு சேலஞ்சராக ஆடுவார் என்றது ஒப்பந்தம்.

இதெல்லாம், எந்த ஊர் நியாயம் என்றெல்லாம் கேட்கப்படாது. அதான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே டேனைலோவ் ஜெகஜால கில்லாடி என்று. சென்ற வருடம் டொபலோவும் காம்ஸ்கியும் ஆடிய போட்டியில் டொபலோவ் வென்று ஆனந்துக்கு சாலஞ்சரானார்.

உலக சாம்பியன் போட்டி எங்கு எப்பொது நடத்தலாம் அதற்கு தேவையான பொருளையும் prize money-ம் யார் தருவார்கள்? எவ்வளவு தருவார்கள்? என்றெல்லாம் குழப்பங்கள் தொடர்ந்தன. கடைசியில் பல்கேரியாவின் பிரதமரின் ஆதரவுடன், அந் நாட்டின் தலைநகரில் ஆட்டம் நடக்கும் என்று முடிவானது. போட்டி ஆரம்பிக்கும் சில வாரங்கள் முன், “ஆனந்த் போட்டியை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்தியாவில் ஸ்பான்ஸர்கள் பிடித்திருக்கலாம். என்னையே எல்லா வேலையும் செய்ய வைத்துவிட்டார்.”, என்று டொபலோவ் புலம்ப ஆரம்பித்துவிட்டார். தன் சொந்த நாட்டில் ஆடுவது மிக மிகக் கஷ்டமான விஷயம். இருப்பினும் வேறு வழியேயில்லாமல் ஆடுவதாக அவர் தெரிவித்த போது சிரிப்புதான் வந்தது.

இன்று தொடங்கவிருக்கும் ஆட்டம், நேற்றே தொடங்கி இருக்க வேண்டியது. ஐஸ்லேண்ட் எரிமலையால் தாமதமாகத் துவங்குகிறது. இருவருக்கும் நடக்கவிருக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்?

இந்தக் கேள்வி, பல முன்னணி செஸ் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவரின் பதில், “இருவரும் மிக மிக நல்ல ஆட்டக்காரர்கள். ஆனந்தின் நிதானம் அவரது பலம். வெறும் செஸ் பலத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆனந்த் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டங்கள் பல்கேரியாவில் நடக்கின்றன. அது சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை அடக்குவதற்கு சமானம். ஒரு சிங்கம் மட்டுமென்றால் பரவாயில்லை. இரண்டு சிங்கங்கள் இருக்கின்றன. உலக சாம்பியன் ஆவதற்கு இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்ற நிலையில் இரு சிங்கங்களும் பசியுடன் இருக்கின்றன. ஜெயிப்பதற்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது டொபலோவுக்கு வாய்ப்புகள் அதிகம்”.

பல்கேரியாவில் ஆடுவதற்கு ஆனந்த் ஒப்புக் கொண்டதை, “A Terrible Blunder”, என்றே பலர் கருதுகின்றனர். (உதாரணம்: இதையும், இதையும் பார்க்கலாம்) பல்கேரியத் தரப்பு தன் சத்தாய்ப்பை சென்ற வருடமே தொடங்கிவிட்டது. “ஆனந்த் செஸ் ஆடாமல், உலக சாம்பியன் ஆன மிதப்பில் இருக்கிறார். அப்படி அவர் ஆடினாலும், இன்று இருக்கும் இளம் வீரர்களுடன் அவரால் தாக்கு பிடிக்க முடியாது. சாம்பியன்ஷிப்பை தக்க வைக்க ஆனந்த் வேண்டுமென்றே போட்டி நடைபெறாமல் இருக்கும்படி அலைக்கழிப்பார். இதன் மூலம் நாங்கள் nervous ஆகிவிடுவோம் என்பதே ஆனந்தின் எண்ணம்”, என்றெல்லாம் போன வருடமே டேனைலோவ் உளறிக் கொட்டினார்.

ஆனந்தை விட ஐந்து வயது இளையவராதலால், இது போன்ற தொடர்களுக்குத் தேவைப்படும் Stamina தன்னிடம் அதிகம் இருப்பதாக டொபலோவ் சில வாரங்களுக்கு முன் கூறியுள்ளார். இதெல்லாம் ‘part of mind games’. டொபலோவ் ஆட்டத்தின் போது டிரா offer செய்ய மாட்டார். ஆனந்த் பேசினாலோ, draw offer செய்தாலோ அதை சட்டை செய்ய மாட்டார், என்று கூறியுள்ளார். பழம் தின்று கொட்டை போட்டவரான ஆனந்துக்கு இவை எல்லாம் சலனத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

முதல் சில ஆட்டங்களுக்குள் ஆனந்த் முன்னிலையை அடைந்தால் டொபலோவ் குழுவினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இதுவரை ஆனந்தும் டொபலோவும் ஆடிய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும் போது, ஆனந்த் டொபலோவை விட நிறைய வெற்றியைப் பெற்றுள்ளார். கூர்ந்து நோக்கின், அதில் நிறைய வெற்றிகள் வேகமாக ஆடும் ரேபிட் ஆட்டங்களின் வந்துள்ளன. கிளாசிகல் ஆட்டங்களில் டொபலோவ் ஆனந்தை விட ஒரு ஆட்டம் அதிகமாக ஜெயித்துள்ளார். இதிலிருந்து, இரு ஆட்டக்காரர்களும் சம வலிமை கொண்டவர்களே என்பது தெளிவாகிறது.

எது எப்படியோ செஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது. என்னைப் பொறுத்த மட்டில் ஆனந்த் ஜெயித்தால் ரொம்ப சந்தோஷம் தோற்றால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏனெனில், சென்ற முறை பட்டத்தை வென்றவுடன், ஆனந்தின் கவனமெல்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே இருந்து வருகிறது. இதனால், இடைப்பட்ட காலங்களின் அவர் ஆடிய ஆட்டங்களின் தற்காப்பாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வருட போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும், ஆனந்த் தன் பெயரை என்றும் நிலைக்கும்படி செய்துவிட்டார். இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்த ஆட முடியும் என்று டெஹ்ரியாத நிலையில், இந்த உலக சாம்பியன் என்ற பாரத்தைச் சுமக்காமல் இருந்தால், பழைய Tiger from Madras மீண்டும் ரசிகர்கள் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்த அட்டத்தைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி: 1920-களுக்குப் பின் இரு ரஷ்யரல்லாதவர் ஆடும் முதல் சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.
நல்ல வேளை இதில் ஐபில் மாதிரி கோமாளித்தனம் எதுவும் இதுவரை இல்லை. விளையாட்டு விலையாட்டாகியிருக்கும்!. செஸுக்கு மூளை தேவை அதனால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.

என்ன தான் இருந்தாலும், சியர் லீடர்ஸ் இல்லாத ஆட்டமும் ஒரு ஆட்டமா!


( நன்றி: கிரிக்கெட் தவிர )

9 Comments:

Anonymous said...

too interesting... But highlight ப‌ண்ணி ச‌ந்தோஷ‌ப்ப‌ட‌ வேண்டாம் யாருக்கு தெரியும், அங்க‌யும் ஓவ்வொரு காய் வெட்டுப்ப‌டும் போதும், இல்ல‌ ரொம்ப‌ நேர‌ம் யோசிக்கும் போதும் Cheer Leaders'அ ஆட‌ விட்டாலும் ஆச்ச‌ரிய‌ப‌ட்ற‌துக்கில்ல‌ :)

பார்வையாளன் said...

yes yes.. we eaglry waiting for chess realted articles in IDLY VADAI

Anonymous said...

Yes. Would like to see more of this.

maayavi said...

Definitely would like to see more posts of this.

Shankar said...

Why not?
We have had a overdose of cricket as such.We can also learn the rudiments of Chess game and its current global scenario.

kggouthaman said...

சைடு பார் வோட்டெடுப்பு நடத்துங்கள்.

Senthil Kuppusamy said...

Very good article. Please continue such articles

Saran said...

Yes.. absolutely need a change.. and the article is really nice with very good interesting information.
Please continue this in ur idli vadai as a separate tab.

R.Gopi said...

//kggouthaman said...
சைடு பார் வோட்டெடுப்பு நடத்துங்கள்.//

*****

மிக சரியே...

இத பண்ணுங்க மொதல்ல....