பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 19, 2010

மண்டேனா ஒன்று - 19/4/2010


இது தவறான முன்னுதாரணம்

பொதுவாகவே எந்தவொரு சேவையானாலும் தனியார் நிறுவனங்களுடன் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிடுவது சற்றே சிரமமான விஷயமாகும். காரணம் தனியார் நிறுவனங்களைப் போன்று பொதுத்துறை நிறுவனங்கள் கணக்கு வழக்கின்றி விளம்பரத்திற்காக செலவழிப்பது கடினம். காரணம் பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்தமட்டில் குறைந்த செலவு அதிக லாபம் என்பதே அவர்களது தாத்பர்யம். ஆனால் தனியார் நிறுவனங்கள் விளம்பர மற்றும் இதர செலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது எப்படி ஒரு பொதுத்துறை நிறுவனம் தங்களது வர்த்தகத்திற்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தற்போது தங்களது செல்பேசி சேவைப் பயன்பாட்டை மக்களிடம் அதிகரிக்க, இலவச சிம் கார்டுகளை பெட்டிக் கடைகள் மூலமாக கோவில் சுண்டல் போல் விநியோகித்து வருகிறது. ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஒரு முகவரி அத்தாட்சி நகல் கொடுத்தால் முப்பத்து மூன்று ரூபாய்க்கு பேசிக் கொள்வதற்கான இலவச சிம் கார்டை அளிக்கிறது. முன்பு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோல் இலவச சிம் கார்டுகளை வழங்கி வந்தனர். அப்போதே இந்த யுக்தி பலவாறான விமர்சனத்திற்குள்ளானது. காரணம், இவ்வாறு கணக்கு வழக்கின்றியும், அதிக கெடுபிடிகள் இல்லாமலும் விநியோகிக்கப்படும் சிம் கார்டுகள் சமூக விரோதிகள் மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது. இது உண்மையும் ஆகும். இதற்கு பல கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன.

மேலும் இதுபோன்ற வகையில் வழங்கப்படும் கார்டுகளை ஒருவர் எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. அதாவது ஒருவர் பத்து புகைப்படங்கள் மற்றும் பத்து முகவரி அத்தாட்சி நகல் கொடுத்தால் அவர் பத்து சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இது எவ்வளவு விபரீதத்திற்கு இட்டுச் செல்லும்? ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்களையே அச்சுப் பிசகாமல் அடிப்பவர்களுக்கு போலி முகவரி ஆவணம் தயாரிப்பது எம்மாத்திரம்? இம்மாதிரி ப்ரீ பெய்டு இணைப்புகள் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தபடுகிறது என்பதால் காஷ்மீரில் ப்ரீ பெய்டு இணைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற தனியார் நிறுவனங்கள் இவ்வாறு செய்வதையே தடுக்க வேண்டிய மத்திய அரசு எதற்காக தன்னுடைய பொதுத்துறை நிறுவனம் மூலமாகவே இவ்வாறு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது? இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னவென்று அரசிற்குத் தெரியாதா?

இது குறித்து ஒரு மொபைல் கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் வேடிக்கையாக இருந்தன. அவர் கூறியதாவது, " இந்த கார்டுல முப்பத்து மூணு ரூபாய் டாக் டைம் இருக்கறதாலதான் இத பெரும்பாலானவங்க அதிக எண்ணிக்கைல வாங்கறாங்க. பேசி முடிச்சவுடனே அதை தூக்கி போட்டுட்டு வேற ப்ரீ கார்டு வாங்கிட்டு போறாங்க. மத்தபடி இவங்க சேவை நல்லா இருக்குங்கறதுக்காக இதை வாங்கறவங்க யாரும் இல்லை. ஒருத்தருக்கு இத்தனை கார்டுதான் குடுக்கலாம்கற வரைமுறை எல்லாம் எதுவும் இல்லாததால எங்களால குடுக்க முடியாதுன்னும் சொல்ல முடியல. மொத்தத்துல இலவச கார்டுகள்னால பி எஸ் என் எல்லுக்கும் நஷ்டம்தான், தவிர இப்படி எல்லா நிறுவனங்களுமே இலவச கார்டு குடுக்கறதனால, பணம் குடுத்து வாங்க வேண்டிய கார்டெல்லாம் தேங்கி போகிறது என்று அங்கலாய்த்தார்.

எது எப்படியோ? ஏற்கனவே நம் நாட்டில் தீவிரவாத சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை. இதில் இன்னமும் நாம் தீவிரவாதிகளுக்கு வசதி செய்து கொடுக்கும் நோக்கில் எவ்வித உறுதியான ஆவணங்களும், சான்றுகளும் இல்லாமல் சிம் கார்டுகளை சுண்டல் விநியோகம் செய்கிறோம். அதுவும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இது நல்லதற்கல்ல.

2 Comments:

Erode Nagaraj... said...

எதாவது காரணங்கள் தோன்றி, பி.எஸ்.என்.எல். சேவையைப் பெறுதல் கடினமாகும் வரை இலவச விநியோகம் தடைபடாது. கடந்த மூன்று மாதங்களாக, நண்பர்களின் குறுஞ்செய்தி ஒவ்வொன்றும் நான்கு முறைகள் அனுப்பப்படுகிறது. உதாரணமாக, இரவு பத்து மணிக்கு என் நண்பன் அனுப்பிய ஒரு செய்தி, காலை மூன்று வரை, சீரான இடைவெளிகளில் நான்கு முறை வந்தது! புகார் தெரிவித்தும் பயனில்லை.

அழைப்பு வந்தால், சீரான அலைஹ்ட் தொடர்பிற்காக, வீடுகளில் இருந்து தெருவிற்கு ஓடுவது தொடர்கிறது.

விளம்பரங்கள் வேண்டாம் என்று பதிவு செய்திருந்தும், அவைகள் வந்தபடிதான் உள்ளன.

இவ்விஷயத்தில், ஏர்டெல், இன்னும் ஒரு படி மேலே போய், விதம்விதமாய் முத்தமிடுவதைக் கற்றுத் தருகிறோம், இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்று ஒரு செய்தி என் கை பேசிக்கு வந்தது. அதோடு, நேற்று இதே போன்று, ஏர்டெல் web - லிருந்து, ஒரு செய்தி, இந்த வலைப்பக்கத்தை பாருங்கள், பலான விஷயங்கள் இருக்கிறது என்று...

உலகம் எங்கோ செல்கிறது...

Anonymous said...

இது மிகச் சாதாரண விஷயம் அல்ல. 25 ரூபாய்க்குப் பத்து மளிகை சாமான் என்பது போல தாரை வார்க்க. தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளையலாம் என்ற பயம் ஒரு சாதாரண நடுத்தெரு நாராயணனுக்கு இருக்கும்போது ராஜாதி ராஜாவுக்குத் தெரிந்திருக்காதா என்ன?
தமிழகமே குடும்பம் என்ற நிலைமாறி இந்தியாவே குடும்பம் என்ற நிலைக்கு இட்டுச்செல்ல எடுத்துவைக்கப்படும் முதற்படியாகக்கூட இருக்கலாம்.