பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 12, 2010

மண்டேனா ஒன்று - 12/4/2010


கடந்த மார்ச் 27 ஆம் தேதியிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கான பணவீக்க அறிக்கை நேற்றைய முன்தினம் வெளியிடப்பட்ட்து. கடந்த டிசம்பர் மாதம் 16.8 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், தற்போது 17.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நிலைமையை கவனித்து வருகிறோம் என்று நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் பணவீக்கம் அதிகரிக்கும்போதும் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று சொல்லி வருகிறார்களேயொழிய நிலையை சீர் செய்தபாடில்லை. இந்த வீக்கம் நேற்றைய முன்தினம் இந்தியப் பங்குச் சந்தைகளை வேறு ஒரு ஆட்டு ஆட்டி வைத்த்து.இந்த வீக்கத்திற்குக் காரணம் தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் உருளைக் கிழங்கு 60 சதவிகிதமும், மற்ற காய்கறிகள் சராசரியாக 11 சதவிகிதமும் விலையேற்றம் கண்டுள்ளன. இது தவிர உணவு தானியங்கள் மற்றும் விதைகளின் விலையிலும் கணிசமான விலையேற்றம் (46.7%) ஏற்பட்டுள்ளது. அத்யாவசியப் பொருட்களின் விலைகளும் குறையவில்லை. இதுவே தற்போதைய வீக்கத்திற்குக் காரணம். வெங்காயம் மட்டுமே 2 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. இந்த உணவுப் பண்டங்களுக்கான விலைவீக்கத்தினால் ஒட்டுமொத்த பணவீக்கம் 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.உணவுப் பண்டங்களுக்கான விலையேற்றம் பற்றி கூறுகையில் விவசாயத் துறை அமைச்சர் ஷரத் பவார், இன்னும் 8 முதல் 10 நாட்களுக்குள்ளாக எல்லா விலையும் சரிந்து விடும் என ஆரூடம் கூறுகிறார். அது எப்படி என்றுதான் தெரியவில்லை. ஷரத் பவாரின் கூற்றை ஆராய ஒரு கமிட்டி அமைத்தால்தான் உண்டு. இதே ஷரத் பவார் முன்பு சர்க்கரை விலை குறையும் என்றார். கடைசியில் சர்க்கரை விலை விண்ணைத் தாண்டியது. பிறகு சர்க்கரையை குறைத்துக் கொண்டால் டயாபடீஸ் வியாதி வராது என்று மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கி ஒரு அறிக்கை வெளியிட்டார். இவருக்கு பிசிசிஐ மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐபில் விவகாரங்களை கவனிப்பதற்கும், நடக்கும் மாட்ச்களை அவ்வப்போது பார்ப்பதற்குமே நேரம் சரியாகப் போகிறது. இவரை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு சிரமப்படுவானேன்?பிரதமர் தற்போது நிலையை ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூன்று கமிட்டிகளை நியமித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நுகர்வோர் விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு அமைத்துள்ள கமிட்டிக்கு இவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை தலைவராக நியமித்துள்ளதுதான். வேளாண் உற்பத்தி தொடர்பான கமிட்டிக்கு ஹரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா தலைவராகவும், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டிக்கு மத்திய திட்டக் கமிஷன் தலைவர் மோண்டெக் சிங் அலுவாலியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சியே பொருளாதார மேதைகளின் கூடாரம் என மார்தட்டிக் கொள்வர். ஆனால் என்ன செய்வது? மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், மாண்டெக் சிங் அலுவாலியா போன்ற பொருளாதார மேதாவிலாசங்களும், அறிவு ஜீவிகளும் இருந்து என்ன பயன்? விலைவாசியைக் குறைப்பதற்கு பதில், சர்க்கரையைக் குறைத்து சாப்பிடுவது சர்க்கரை நோயைத் தடுக்கும் என கூறுமளவிற்குதான் இவர்களது பொருளாதார நிபுணத்துவம் பயன்படுகிறது.என்னதான் விலைவாசி ஏற்றம் கண்டாலும், அது இரண்டு நாட்களுக்குத்தான் பெரிதாகப் பேசப்படும். பிறகு அதற்கு பழகிவிடும் என்ற நிலை நமது மக்களிடமும் இருப்பது துரதிருஷ்டம்தான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதோடு விலைவாசியும் மறந்து போகும் என்பதுதான் சரி!!.

- யதிராஜ்

5 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ஆயிரத்தி ஒன்றுக்கு வாழ்த்துக்கள்
இ.வ.

kggouthaman said...

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க, மின்வெட்டு இல்லாமல் செய்ய, கேப்டன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

Biggest favour for indian politicians is long term memory loss of our people. people will cry for every bombblast and forget within a week.For price rise they think for a week and try to shrink their budget or to earn more.
but this is needed for the people who are voting for money.

வழிப்போக்கன் said...

விலைவாசி உயர்வு, காலாவதியான மருந்து/போலி மருந்து விநியோகம் - இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி எந்தப் பத்திரிகையும், டெலிவிஷனும் உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லை. மேலெழுந்தவாரியாக, போலீஸ் கொடுக்கும் அறிக்கைகளையும், அரசு அளிக்கும் விளக்கங்களையும் அப்படியே பிரசுரித்துவிட்டு வாய்மூடி மௌனமாக இருக்கின்றன. ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.

சீனு said...

மதி காட்டூன் தான் நியாபகத்துக்கு வருது. "மின் கட்டண உயர்வு மைனஸ் மின்வெட்டு என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் வழக்கமான பில் தொகை தான் வரும்! கூடுதல் சுமை ஏதும் இருக்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...!"

இப்பொழுது ஆயிரம்...பின் ரெண்டாயிரம்...நாலாயிரம்...ஆறாயிரம்...எட்டாயிரம்...பிம்பிலிக்கி பிகாபி வரை செல்ல வாழ்த்துக்கள்.