பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 17, 2010

ஆர்லி & விர்ஜி

இம்மாத ”ரீடர்ஸ் டைஜஸ்ட்” இதழில் My Story என்ற பகுதியில் வெளியான உண்மையாக்க் கதையை அடிப்படையாக்க் கொண்ட கட்டுரை. சற்றே நெகிழ வைத்த கட்டுரை என்பதால் அதனுடைய மொழிபெயர்ப்பு உங்களுக்காக. இதன் மூலத்தை எழுதியவர் “அன்னா கார்மெலா டோலெண்டினோ”, பிலிப்பைன்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர்.

“ நான் எங்களது வீட்டின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள எனது படுக்கையறை ஜன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்; அவர்கள் இருவரும் மகாடி நகரில் அமைந்துள்ள எங்களது வீட்டின் முகப்புக் கதவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இது நடந்த்து 1996 கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று தின்ங்களுக்கு முன்பாக. நான் என்னை அன்னை தெரஸாவை விட கருணை சிந்தனையுள்ளவளாக நினைத்துக் கொண்டேன். பல வருடங்களாக ஆதரவற்ற சிறுவர் சிறுமியரைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாகத் தெரிந்து கொண்டிருந்தாலும், அவர்களை எங்களது இல்லத்திற்கு அழைப்பது இதுவே முதல் முறை.விர்ஜிக்கு பத்து வயது, என்னை விட ஒரு வயது இளையவள். பார்ப்பதற்கு ஏழ்மையாக இல்லாமல், மிகுந்த அழகுடையவளாகத் திகழ்ந்தாள். எனக்கு உடன்பிறந்த சகோதரிகள் இல்லை, ஆகவே அவளைப் பார்த்த கணத்திலேயே இவள் என்னுடையவள் என தீர்மானித்து விட்டேன். என்னுடைய படுக்கையறையில் அவளைச் சேர்த்துக் கொண்டு என்னுடைய பொம்மைகளையும், ரகசியங்களையும் அவளோடு பகிர்ந்து கொண்டேன். பாலட் நடன நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொடுத்தேன். என்னுடன் சேர்ந்து நான் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தாள்.

என்னுடைய மற்ற குடும்ப அங்கத்தினர்கள் ஆர்லியின் மீது மிகுந்த பரிவுடன் நடந்து கொண்டார்கள். ஏழு வயதில் மிகுந்த அழகுடையவனாக இருந்தான். அவன் என் பெற்றோர்களுடைய படுக்கையறையில், எனது சகோதரன் கார்லுடன் படுத்துக் கொண்டான். என்னுடைய சகோதரன் கார்லுக்கு 12 வயதாகியிருந்தாலும், பல சமயங்களில் ஏழு வயதுடையவன் போலவே நடந்து கொள்வான்.

நான்கு குழந்தைகளுடன் நாட்கள் மிகவும் குதூகலமாகவும், கேலி கிண்டல்களுடனும் நகர்ந்தன. கார் பயணங்களும், சூப்பர் மார்க்கெடிற்குச் செல்வதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவனவாக இருந்தன. புதிய பொம்மைகள் மற்றும் ஆடைகளால் ஆர்லியும் விர்ஜியும் மிகுந்த மகிழ்ச்சியடைபவர்களானார்கள்.

அவர்கள் எங்களுடன் மூன்று நாட்களுக்கு மட்டுமே தங்குவதாக ஏற்பாடு. கிறிஸ்துமஸிற்கு அடுத்த தினம் நாங்கள் அவர்களை அவர்களுடைய ஆதரவற்றோர் இல்லத்திலேயே சென்று விட்டுவிட வேண்டும். நாங்கள் அந்த குறுகிய இடைவெளியில் அவர்களுடைய உடமைகளை, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பாக்கிங் செய்யத் துவங்கினோம். ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தின் முடிவில் அவர்களுடன் கழித்த அந்த சந்தோஷமான தின்ங்கள் எங்களுக்குப் போதுமானதாக இல்லை.

எங்களோடு Share-your-home நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது தாயாரின் நண்பர் ஒருவர், அக்குழந்தைகளை மேலும் சில தின்ங்களுக்கு வைத்துக் கொள்ள நீட்டிப்பு கேட்கலாம் என்று யோசனை கூறினார். நாங்களும் அவ்வில்லத்தைத் தொடர்பு கொண்டு மேலும் சில தின்ங்களுக்கு நீட்டிப்பு கேட்டோம். ஆர்லி மற்றும் விர்ஜியுடன் மேலும் மூன்று வாரங்கள் கழிப்பதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்த்து.

நாட்கள் செல்லச் செல்ல, எங்களது பெற்றோர்கள் இருவரும் ஆர்லி மற்றும் விர்ஜியை ஸ்வீகரித்துக் கொள்வது பற்றிப் பேசத் துவங்கினார்கள். மிகவும் சீரியஸாகவே அவர்கள் அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இது எனது வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விடும் என்பதை அக்கணத்தில் நான் உணரத் தொடங்கினேன்.


என்னுடைய தாயார் ஆர்லியை அடிக்கடித் தழுவிக் கொள்வதைப் பார்த்தேன், என்னைக் கூட அவ்வளவு அதிகமாகத் தழுவியதில்லை. அவர்கள் எங்கேயாவது வெளியே சென்று விட்டுத் திரும்பினாலும், ஆர்லியையே தேடினார்கள். அதற்குப் பிறகு வந்த சிறு சிறு பரிசுப் பொருட்கள் போன்றவை என்னுள் ஆர்லி மற்றும் விர்ஜியின் மீது விரோத்த்தை மெதுவாக வளர்த்தன.

ஆர்லியும் விர்ஜியும் வருவதற்கு முன்னால், நான் எதிர்பார்த்த அளவு அன்பு எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்த்து. இப்பொழுது என்னுள் பொறாமை கிளர்ந்து வருவதை என்னால் மறுக்க முடியவில்லை.

அதனால் அவர்களை எவ்வாறு அவமதிக்கலாம் என்று திட்டமிட்டேன். பேசாமலேயே இருப்பது மற்றும் சிறிய விஷயங்களுக்குத் திட்டுவது என துவங்கினேன். என்னுடைய ஆதங்கத்தை நான் விர்ஜியுடன் பகிர்ந்து கொண்டேன், அவளும் கசப்பாக உணர்வதாகத் தெரிவித்தாள். ஆனால் இப்போது நினைக்கையில் அவள் என்னைத் திருப்தி செய்த்தாகவே உணர்ந்தேன்.

என்னுடைய திட்டங்களை எல்லாம் ஆர்லி கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. வெறுப்படைந்த நான் வேறு வழிமுறையகளைக் கையாளத் துவங்கினேன். எப்போதும் முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொள்வது, மற்ற நபர்கள் மகிழ்ச்சியாகச் சிரிக்கும் போது நான் மெளனமாக இருப்பது, என்னுடைய பெற்றோர்களுடன் பேசாமலேயே இருப்பது, ஆர்லியிடம் அவர்கள் அன்பு காட்டும் போதெல்லாம் அங்கிருந்து விலகிச் செல்வது எனத் துவங்கினேன். எனது இந்த செயல்பாடுகளால் எனது பெற்றோரிடம் தோன்றிய குற்றவுணர்விலும், குழப்பத்திலும் நான் பெரும் திருப்தியை அடைந்தேன்.

என்னுடைய இத்தந்திரம் நன்றாகவே வேலை செய்த்து. என்னுடைய பெற்றோர் ஸ்வீகாரம் பற்றி பேசுவதை நிறுத்தினர். மூன்றாவது வார இறுதியில் ஆர்லி மற்றும் விர்ஜியை அவர்களுடைய இல்லத்திற்கே அழைத்துச் சென்றோம். நாங்கள் பிரியாவிடை பெற்ற போது ஆர்லி கண்ணீரோடு இருந்தான். ஆனால் நாங்கள் திரும்பவும் வந்து அடிக்கடி பார்ப்போமென்றும், கூட்டிச் செல்வோமென்றும் ஆறுதல் படுத்தினேன். ஆனால் அவர்களைத் திரும்ப பார்க்கும் உத்தேசம் கூட எனக்கு இல்லை.

நான் வீடு திரும்பியவுடன் என்னுடைய பழைய வாழ்க்கை எனக்குத் திரும்பக் கிடைத்து விட்ட்தாகவே எண்ணினேன். சில நாட்களுக்குப் பிறகு விர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தாள். அவள் மறுபடியும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதை உணர்ந்தேன். என்னுடைய தாயாரின் அலுவலக தொலைபேசி எண்ணைக் கேட்டாள், ஆனால் எனக்கு அது மனப்பாடமாகத் தெரிந்திருந்தும் தரவில்லை. அதற்கடுத்த மாதங்களில் அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகள். பிற்கு நின்றுவிட்டன.

பத்து வருடங்கள் கழிந்த பிறகு விர்ஜிக்கு தனது அலுவலக தொலைபேசி எண்கள் கிடைத்த்தாகவும், அடிக்கடி அழைத்து தங்களை ஸ்வீகரித்துக் கொள்ளும்படி விர்ஜி மன்றாடியதாகவும் எனது தாயார் என்னிடம் தெரிவித்தார். என்னுடைய தாயாருக்கு அவர்களை ஸ்வீகரித்துக் கொள்வதில் சம்மதம் இருந்தாலும், எனக்காக எனது தந்தை பயந்தார். சில வாரங்களுக்கே என்னால் அவர்களுடன் சமாளிக்க முடியவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று நினைத்தார்.


இப்பொழுது பதிமூன்றாண்டுகள் கடந்து விட்டன. இப்போது ஆர்லிக்கு 20 வயதிருக்கும், விர்ஜிக்கு 23 இருக்கலாம். நான் அப்பொழுது பக்குவமில்லாத 11 வயதினளாக இருந்தேன், வருத்தம் மேலிடுகிறது. அந்த இரவு, அவர்களது தொடர்ச்சியான நம்பிக்கை இழந்த தொலைபேசி அழைப்புகளைப் பற்றி எனது தாயார் சொன்ன போது, என்னுடைய குற்ற உணர்வு என்னுள் என்னை வதைத்த்து. என்னுடைய பக்குவமின்மை எப்படி அவர்களது வாழ்க்கையையே மாற்றி விட்ட்து.


நாங்கள் அவர்களை ஸ்வீகரித்துக் கொண்டிருந்தால், அவர்கள் நல்ல கல்வியைப் பெற்றிருக்கலாம், இன்னும் நல்ல வாழ்க்கையைப் பெற்றிருக்கலாம், அன்பைப் பெற்றிருக்கலாம். நானும் கடைசியில் என்னுடைய மற்ற இரு சகோதர சகோதரிகளாக அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கலாமோ? அல்லது வெறுத்திருப்பேனா? இப்பொழுது அவர்கள் எத்துறையிலாவது நிபுணர்களாக இருப்பார்களா அல்லது அவர்களது வாழ்க்கைப் பாதை வேறு திசையில் மாறியிருக்குமா? நான எனது குடும்பத்தை சில பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறேனா அல்லது அவர்க்ளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதை மறுத்திருக்கிறேனா?


ஆர்லியும் விர்ஜியும் இப்போது எங்கோ போய்விட்டார்கள். அவர்கள் இருந்த ஆதரவற்றோர் இல்லத்தை இப்போது தேடினேன், ஆனால் அது இப்போது இல்லை. அது சார்ந்த அமைப்புகளிடம் விசாரித்தேன். நான் யாரைத் தேடுவதாக வினவினார்கள். வெறும் ஆர்லி, விர்ஜி என்று கூறியது போதுமனதாக இல்லை. அவர்களது முழுப்பெயரைக் கூட்த் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது எனக்கு இருக்கவில்லை.


எனக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, எப்போதாவது எங்காவது தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு மனிதன் வந்து என்னை அடையாளம் கண்டு கொள்வான். நீங்கள் எனக்கு மிகவும் அறிமுகமானவார் போல் தோன்றுகிறீர்கள் என்று கூறுவான். நான் அவனது கண்களை நோக்கி, ஆம் நாம் முன்பே பார்த்திருக்கிறோம். உங்களைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றுகிறோம் என உறுதியளித்து விட்டு, பிறகு நிர்க்கதியாய் விட்டுச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் நான் என்று சொல்லிவிட்டு, ஆர்லி என்னை மன்னித்து விடு, மன்னித்து விடு.

(நன்றி: ரீடர்ஸ் டைஜிஸ்ட், தமிழில் யதிராஜ் )


9 Comments:

மோகன் குமார் said...

நெகிழ்ச்சியான கட்டுரை. பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

aluthutein....

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Labels : சிறந்த கட்டுரை //

வழிமொழிகிறேன்

Han!F R!fay said...

நல்லாருக்கு நண்பா...

Han!F R!fay said...

நல்லாருக்கு நண்பா...

ந.லோகநாதன் said...

Great Story

R.Gopi said...

மிக மிக நல்ல கட்டுரை...

இட்லிவடைக்கும், வெண்பொங்கல் யதிராஜுக்கும் நன்றி...

சுரேஷ் கண்ணன் said...

நெகிழ்ச்சியான கட்டுரை. யதிராஜிற்கும் இட்லி வடைக்கும் நன்றி. 'கேளடி கண்மணி' திரைப்படத்தை ஞாபகப்படு்த்தியது, இக்கட்டுரை.

"The Blind side" திரைப்படமும் இதே போன்றதொரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. அநாதையான சிறுவனை,இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவள் இன்னொரு குழந்தையாக ஏற்றுக் கொள்வார். ஆனால் வீட்டிலுள்ள குழந்தைகள் புதிய நபரின் வருகை குறித்து எந்தவொரு சுணக்கத்தையும் காட்டாதது போலவே இயக்குநர் சித்தரித்திருப்பார். இந்த முரணை ஆங்கில் நாளிதழில் விமர்சனம் எழுதிய ஒரு மாணவர் சரியாக சுட்டிக் காட்டியிருந்தார்.

ஆர்லியும் விர்ஜியும் நல்லதொரு வாழ்வை இழந்ததற்கு அந்தப் பெற்றோர்களும் ஒரு காரணம் என நினைக்கிறேன். தன்னுடைய குழந்தையிடம் அந்த வேற்றுமையுணர்ச்சி தோன்றாதவாறு நடந்து கொண்டிருக்கலாம், சொல்லிப் புரிய வைத்திருக்கலாம்.

எல்லாமே நாமாக யூகமாகச் சொல்லிக் கொள்வதுதான். நடைமுறையில் மனித மனம் விநோதமாக நடந்து கொள்வதை எப்படியும் விளக்கவோ யூகிக்கவோ முடியாது.