பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 19, 2010

வெள்ளி விமர்சனம் -சொர்க்கத்தின் குழந்தைகள்

நீங்கள் முதன் முதலாய் எப்போது நல்ல ஷூ அணிந்தீர்கள்? ஞாபகமிருக்கிறதா?

காலுக்கு ஏன் ஷூ அணிந்து வரவில்லை அல்லது பள்ளியின் சீருடையை ஏன் அணிந்துவரவில்லை என கல்லூரியிலோ, அல்லது பள்ளியிலோ வெளியே நிறுத்தப் பட்டிருந்தால்...


ஓரிரு வயது வித்தியாசத்தில் அன்பான தங்கை உங்களுக்கு இருந்திருந்து, அவளுடன் பள்ளிக்குச் சென்று வரும் இன்பத்தை அனுபவித்தவராய் இருந்திருந்தால்..

பெற்றோரின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்த குழந்தையாய் இளமையைக் கழித்திருந்தால்...

வறுமையில் செம்மையாய் உங்களின் பெற்றோர்கள் உங்களை வளர்த்ததாக உங்களுக்கு மனதில் இனிமையான நினைவுகள் இருந்தால்..

அப்பா உங்களுடன் சமமாய் பழகி இருவரும் சேர்ந்து ஏதேனும் வேலை செய்து , உங்கள் திறமையை அவர் மெச்சியது உங்கள் மனதில் பசுமையாய், இனிமையாய் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும்படி இருந்தால் இது உங்களுக்கான படம்.
ஒரு எளிய குடும்பத்தில் இரு குழந்தைகள். அண்ணனும், தங்கையும். ஒருநாள் அண்ணன் தங்கையின் பள்ளிக்கு செல்லும் காலனியை சரி செய்ய எடுத்துச் சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறான். அதை பெற்றோரிடம் சொல்லாமல் அண்ணனின் காலனியை வைத்தே இருவரும் சமாளிப்பதும், ஒரு நல்ல ஷுவைப் பெறக்கூடிய பெரும் கனவிற்காக காத்திருப்பதும் படம்.

இதர திரைப்படங்களைக் கேவலப்படுத்துவதற்காகவும் ஈரானிய திரைப்படங்களை பாராட்டுவதன் மூலம் கிடைக்கும் அறிவுஜீவி பிம்பத்திற்காகவும் இப்படி விமர்சனம் செய்கிறார்களோ என நினைத்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் வரும் மன மகிழ்ச்சியும், நமது திரையுலகம் போகவேண்டிய தூரத்தையும் நினைத்தால் ஆயாசம் வராமல் இல்லை. மொத்தம் நாலே நாலு பாத்திரங்களையும், ஒரே ஒரு ஊரையும் வைத்து இவ்வளவு அருமையான படத்தைத் தந்த மஜித்மஜிதியை எவ்வளவு பராட்டினாலும் தகும்.
அந்த நாலுபேரில் இரு குழந்தைகளைச் சுற்றியே மொத்தப் படமும் சுழல்கிறது. அலியும், ஸாஹ்ராவும் வாழும் இரானிய குடியிருப்புகள் கிட்டத்தட்ட 30 ஆண்ட்டுகளுக்க்கு முந்தைய தமிழ்நாட்டின் கிராமங்களை நினைவுபடுத்துகிறது. அழுக்கான, சிமிட்டி பூச்சுகள் இல்லாத சுவர்களைக் கொண்ட சந்துகள் நிறைந்த குடியிருப்பும், எப்போதும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் மரங்களும் நிறைந்த பள்ளிச் சூழ்நிலையும், நமக்கு வழக்கமான தமிழக கிராமப்பள்ளிகளை நினைவுக்குக் கொண்டுவரும். ஈரானிய நாட்டு ஆசிரியர்களும் தமிழக ஆசிரியர்களைப் போலவே அறிவுரை வழங்குகின்றனர்.

இரு குழந்தைகளும் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம். அப்படியே வாழ்ந்திருக்கின்றன இருகுழந்தைகளும். ஒரு குடும்பத்தின் கதையை அப்படியே செல்லுலாய்டில் எந்தவித அலங்காரங்களுமின்றி தந்திருக்கிறார் இயக்குனர்.

காணாமல் போன ஷூவை அணிந்திருக்கும் மாணவியின் வீட்டை அடையாளம் கண்டு அண்ணனிடம் சொல்வதும், இருவரும் சென்று அதை வாங்கி வரச்செல்லும்போது, அந்தக் குழந்தையின் தகப்பனுக்கு கண் தெரியாது என்பதும், இவர்களைவிட அவர்கள் வறுமையில் இருப்பதைக் கண்டு கேட்கமல் திரும்பி வருவதும், அந்தப்பெண்ணுடன் நட்புகொள்வதும் என குழந்தைகள் குணத்தால் மனதை அள்ளுகின்றன.
அப்பாவும், மகனுமாக தெஹ்ரானின் நகர்ப்புறங்களில் இருக்கும் பெரிய பெரிய வில்லாக்களில் தோட்டவேலை செய்யச் செல்வதும், ஒரே ஒருவீட்டில் கிடைக்கும் அன்பான வரவேற்பையும், கிடைக்கும் ஊதியத்தையும் வைத்து, இதுபோல பலவீடுகளில் சம்பாதித்து என்னென்ன வாங்கலாம் என கனவுகளில் மிதப்பதும், கடைசியில் சைக்கிள் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தை நோக்கி ஓடி நிலைதடுமாறி விழுந்து சைக்கிள் வீனாகப் போவதும் அப்படியே ஏழைகளின் நாளைய நம்பிக்கை குறித்த ஏக்கங்களை காட்டுகிறது, அது சிதைவதும் அப்படியே..

வீட்டு வாடகையைக்கூட சரிவரக் கொடுக்க முடியாத வறுமையிலும், மளிகைக்கடையில் பாக்கி இருக்கும் சூழ்நிலையிலும், மசூதிக்கு கொடுக்க வேண்டிய சர்க்கரையிலிருந்து ஒரு சிறு கட்டியைக்கூட நாம் எப்படி எடுத்துக்கொள்வது எனக் கேட்கும்போதும், மசூதியில் நடக்கும் பிரார்த்தனைப்பாடலால் மனம் இளகி அழும்போதும் அலியின் தகப்பன் மீது நமக்கு மரியாதை வந்து விடுகிறது. ( தேநீரில் சர்க்கரை போடுவதில்லை, தனியாகக் கொடுக்கின்றனர்)

நோயாளி அம்மா, குறைந்த சம்பளம் வாங்கும் அப்பா, ஒரு சிறு குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டிய நிலை, ஒரே ஷூவை அண்ணனும் தங்கையும் மாற்றி மாற்றி போட்டுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை, எல்லாவற்றையும் குடும்ப சூழ்நிலைக்காக தாங்கிக்கொள்வதும், தகப்பனிடம் பணம் இல்லை என்பதை உணர்ந்து அதைக் கேட்காமலிருப்பதும், அருமை..
படத்தின் இறுதியில் ஒரு மாரத்தன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவதாக வந்தால் ஒரு ஷூ கிடைக்கும் என்பதற்காக பி.ஈ.டி வாத்தியாரிடம் போட்டியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி மன்றாடி போட்டியில் சேர்வதும், மூன்றாம் பரிசு வாங்குவதற்காக பின்னால் ஓடிவரும் இருவரை தனக்கு முன்னால் ஓட விடுவதும் இறுதியில் தோற்றுவிடப் போகிறோம் என்ற பயத்தில் கொஞ்சம் வேகமாக ஓடி முதல் பரிசை தட்டியவுடன் எல்லோரும் பாராட்ட , அலி, சார் நான் மூணாவது ஆளா வந்தேனா எனக்கேட்கும்போது நமக்கே பாவமாய் இருக்கும்.

படத்தின் இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், எப்போது அடங்கி இருக்க வேண்டும், என்ன மாதிரியான இசை எந்த சூழ்நிலைக்கு என பர்த்துப் பார்த்துச் செய்துள்ளனர். கிளைமாக்ஸில் வரும் ஓட்டப்போட்டியில் பந்தயத்தில் ஓடுபவர்களுடன் சேர்ந்து நாமும் மூச்சு வாங்குகிறோம், மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு தந்தி வாத்தியம் மயக்குகிறது.

அண்ணனும், தங்கையுமாக படத்தில் நடித்திருக்கும் இரு குழந்தைகளுக்கும் வாழ்க்கை முழுதும் திருஷ்டி சுற்றிப்போட்டால்கூட தீராது. அவ்வளவு அழகு மற்றும் நிஜமான அண்ணன் தங்கையாகவே ப்டம் முழுதும் நடிப்பு என்பதையே நாம் நினைக்காதபடி செய்திருக்கிறார்கள்.

அலியின் அப்பாவின் சைக்கிளில் இரண்டு ஜோடி ஷுக்கள் அலிக்கும், ஸாஹ்ராவுக்குமாக வாங்கி இருப்பதை நமக்குக் காட்டும்போது, அலியின் ஷூ இனிமேல் பயன்படுத்தவே முடியாத அளவு நைந்துபோய் இருப்பதை கழட்டிவீசுவதும், அலி போட்டியில் மூன்றாவதாய் வராததல் இனிமேல் நமக்கு ஷூ கிடைக்காது என நினைக்க, படம் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் இருவருக்கும் ஷூ கிடைத்த மகிழ்ச்சியுடன் படம்பார்த்து முடிப்பர்.
படம் முழுக்க உண்மைத்தன்மையைக் கொண்டுவர இந்தப்படம் ரகசியமாகவே படம் பிடிக்கப் பட்டிருக்கிறது. 1998ல் சிற்ந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் ஆஸ்காருக்குப் போட்டியிட்ட்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்திடம் தோற்றது, இருப்பினும் பல விருதுகளை வென்றதுடன் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது இந்தத் திரைப்படம்.


இப்படி அழகான குடும்பமும், பெற்றோரும் கொண்ட இந்தக்குழந்தைகள் நிச்சயம் சொர்க்கத்தின் குழந்தைகளே.

- ஜெய் ஹனுமான்
( சொர்க்கத்தின் குழந்தைகள் - Children of Heaven ( Iranian Movie) 1997 )

8 Comments:

Anonymous said...

Can you post the reviews of the movies of Dibakar also.

Love Sex Aur Dhokha (LSD)

http://www.dibakarbanerjee.com/

padma said...

நன்றி .இப்படி நல்ல படங்களை அறிமுகபடுத்துவதர்க்கு .ஆனால் இந்த படங்கள் எல்லாம் எங்கே காண கிடைக்கும்? அதையும் சொல்லுங்களேன் ப்ளீஸ்

தோமா said...

Very Good Movie, i have watched so many times.

Its available in youtube also pls try

Anonymous said...

I never thought you would be a very lazy reviewer like this.

In tamil movie there is comedy dialogue. (" Ennadu gandhi thatha sethuttara"). Like that you publish review for this movie after 10-12 years.

//இதர திரைப்படங்களைக் கேவலப்படுத்துவதற்காகவும் ஈரானிய திரைப்படங்களை பாராட்டுவதன் மூலம் கிடைக்கும் அறிவுஜீவி பிம்பத்திற்காகவும் இப்படி விமர்சனம் செய்கிறார்களோ என நினைத்ததுண்டு//

This is lousy thought.

khaleel said...

i have also watched this.very good movie. the review is also very good.
but i would suggest not to watch these iranian movies since they are so realistic and you will feel the pain even for hours after the movie.

Kalakumar said...

இனிமையான ஆனந்தஅனுபவம் இந்த படம்.மழலைகளின் மனத்தின் திறந்த வெளியை அவர்களின் போக்கிலேயே அருமையாய் காட்டி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் மஜீஸ்.எதார்த்தங்களின் பெயரை சொல்லி நம் இயக்குனர்கள் நம்மை படுத்திய அயர்ச்சியில் ஒரு உண்மையான நிதர்சனம் இந்த படம்.விமர்சனத்தில் உங்களின் கட்டேற்றம்(built-up) எனக்கு சரியாக படவில்லை.அது ஒரு தமிழ் சினிமா பாணியிலேயே இருப்பதாக தோன்றுகிறது.இந்த நல்ல படத்திற்கு உங்களிடம் இருந்து இன்னும் ஒரு நல்ல விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.அடுத்த முறை தவற விடாதீர்

Kalakumar said...

இனிமையான ஆனந்தஅனுபவம் இந்த படம்.மழலைகளின் மனத்தின் திறந்த வெளியை அவர்களின் போக்கிலேயே அருமையாய் காட்டி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் மஜீஸ்.எதார்த்தங்களின் பெயரை சொல்லி நம் இயக்குனர்கள் நம்மை படுத்திய அயர்ச்சியில் ஒரு உண்மையான நிதர்சனம் இந்த படம்.விமர்சனத்தில் உங்களின் கட்டேற்றம்(built-up) எனக்கு சரியாக படவில்லை.அது ஒரு தமிழ் சினிமா பாணியிலேயே இருப்பதாக தோன்றுகிறது.இந்த நல்ல படத்திற்கு உங்களிடம் இருந்து இன்னும் ஒரு நல்ல விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.அடுத்த முறை தவற விடாதீர்

ஹரன்பிரசன்னா said...

இது மாதிரியான ஈரானியப் படங்கள் எனக்கு வெறுப்பைத் தர ஆரம்பித்துவிட்டது.