பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 28, 2010

சன்டேனா இரண்டு (28-3-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள் - இட்லிவடையில்,எனது 50 வது சிறப்பு பதிவாக, 'இட்லிவடை ஸ்பெஷலாக' உங்களுக்கு.

செய்தி # 1

எனது பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஒரு நர்சரி பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அழைத்தார். சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் நர்சரி அது. அங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் சியாமளா டான்ஸ் ஆட போவதாக சொன்னார். புது டிரஸ், மேக்கப் என்று ஏக தடபுடலோடு குழந்தையை அழைத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.

உலகத்திலயே மிகவும் சிரமமான பணி..நர்சரி ஸ்கூலில் 'மிஸ்'ஸாக இருப்பதுதான். ஒரு குழந்தையின் குறும்புத்தனத்தை சமாளிக்கவே படாத படும் போது, பல குழந்தைகளை ஒரு வகுப்பில் வைத்து, கட்டி காப்பது எவ்வளவு சிரமம்? எனக்கு தெரிந்து, தன் குறும்பு செய்த குழந்தையை கண்டித்தமைக்கு, அந்த குழந்தையின் அப்பா, ரவுடிகளோடு டீச்சரை அடிக்க வந்த சம்பவங்கள் உண்டு. அதுவும், ஆண்டு விழா போன்ற கலை நிகழ்ச்சிகளில், குழந்தைகளை மேடையேற்றி, ஆடவைத்து.....நமது தமிழ்நாட்டின் நர்சரி ஸ்கூல் டீச்சர் ஒவ்வொருவரும் ஒரு ராஜு சுந்தரிகள்.பிரபு தேவிகள்.


கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. மேடை ஏறும் குழந்தைகளை விசில் அடித்து உற்சாக படுத்துவதற்காக, அந்த பகுதி இளசுகள் 'உற்சாகம்' ஏற்றி,வந்து இருந்தார்கள். ப்ரி.கே. ஜி. முதல் ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளாய் மேடை ஏற்றினார்கள். ப்ரி.கே.ஜி குழந்தைகள் மேடையில் ஆளுக்கு ஒரு திசை வேடிக்கை பார்த்தபடி நிற்க, பின்னணியில் ஒரு 'ரைம்ஸ்' ஓடியது.
பின்னர் அவர்களை வரிசையில் நிற்கவைத்து, போட்டோக்கள் எடுத்தனர்.

அதன் பின்தான் அந்த கொடுமை தொடங்கியது. எல்.கே.ஜி குழந்தைகள் ஆடிய பாடல்...'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா...'
யு. கே.ஜி குழந்தைகள் ஆடிய பாடல்...'உன் உச்சி மண்டையில சுர்ருங்குது'

வகுப்பு ஏற ஏற பாடல் வரிகளின் 'மெச்சுரிட்டியை (!?) ' ஏற்றி கொண்டு போனார்கள்.


அடுத்ததாக ஒன்றாம் வகுப்பு, நம் நண்பரின் குழந்தை 'ஹீரோயின்' ஆக ஆடிய பாடல்..'வாடி வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட'.

என் நண்பருக்கு உற்சாகம் தங்கவில்லை. தான் கொண்டு வந்த, டிஜிட்டல் கேமராவில் ஒரு ஷூட்டிங்கே நடத்த தொடங்கினார். " என்ன சார் இது. இந்த மாதரி குத்து பாட்டுக்கெல்லாம் குழந்தைகளை ஆட விடறாங்களே" என்றேன் அவரிடம் நான்.

"அட நீங்க வேற. அந்த குழந்தைக முகத்தை பாருங்க. எவ்ளோ சந்தோசம். அதுங்களுக்கு அர்த்தம் எல்லாம் புரியவா போகுது " என்றார் அவர். "சரி. 'நாட்டு கட்டை'ன்னா உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?" என்றேன். அவர் ஹி..ஹி என்றதில் சட்டை நனைந்தது(அவரோட சட்டைதாங்க!).

பரிகாரத்துக்காக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், 'பாளையத்தம்மா பாச விளக்கு' என்று அம்மன் பாட்டுக்கு ஆடினார்கள். மற்றது எல்லாம் குத்து பாட்டுக்கள்தான்.

நர்சரி தொடங்கி கல்லூரிகள், கலை நிகழ்ச்சிகள் வரை சினிமா குத்து பாடல்கள்தான் வியாபித்து இருக்கின்றன. நான் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது, கல்லூரி தொடங்கி முதல் கலை நிகழ்ச்சிகளை நாங்கள்தான் அரங்கேற்றினோம். எங்களுக்கு போடப்பட்ட கட்டளை என்ன தெரியுமா? "அனைத்தும் உங்கள் சொந்த சரக்காக இருக்க வேண்டும். சினிமா ஆடல், பாடல்களை முடிந்த வரை தவிருங்கள்". நாடகங்கள் மற்றும் மாணவர்கள் சொந்த டியுன்னில் உருவான பாடல்களுக்கு, நடனங்கள் புதிதாக அமைத்தோம். இன்றைக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது பள்ளிகளில் படிபடியாக குறைந்து வருவதாக, என்னிடம் கூறி வருத்தப்பட்டார் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

சரி.நம் கதைக்கு வருவோம்.அந்த அந்த வகுப்பு டான்ஸ் முடிந்த உடனே, தத்தம் குழந்தைகளோடு பெற்றோர்கள் சென்றுவிட, சிறப்பு விருந்தினராக அழைக்க பட்டு இருந்த, 'உள்ளூர் அரசியல் பிரபலம்' கடைசியாக வந்த போது, பள்ளி ஊழியர்கள், இரண்டு ஆயாம்மாகள் மற்றும் நான்(ஆர்வ கோளாறு!) மட்டுமே இருந்தோம்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " என்ற ரீதியில், ஆளில்லா கூட்டத்தில்(?) அவர் எழுச்சி உரை நிகழ்த்தினார்( விரைவில் 'அமைச்சர்' ஆகும் தகுதிகள் அவரிடம் கண்டேன்).

அப்புறம் நடந்தது என்ன தெரியுமா? என் நண்பர் என்னிடம் சொல்லி வருத்தபட்ட விஷயம் ஒன்று நடந்தது...ஆண்டு விழா நிகழ்ச்சிகள் முடிந்து, பள்ளி தொடங்கிய பின்னர், நண்பரின் குழந்தையை, சக வகுப்பு குழந்தைகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?.

" ஏய்...நாட்டுக்கட்ட சியாமளா".

செய்தி # 2


பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற மனோதத்துவ டாக்டரை பார்ப்பதற்காக போகவேண்டி வந்தது. ஆம், எனக்கு சில மாதங்களாக ஒருவிதமான மனோவியாதி...அதன் காரணமாக உடல் உபாதைகள். அதற்க்கு ட்ரீட்மென்ட் எடுக்கவே, மனோதத்துவம் தெரிந்த இந்த டாக்டரை அணுகினேன்.

என்னுடைய இந்த 'திடிர்' மனோவியாதிக்கு காரணம்....சமிபத்தில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு விசித்திரமான பழக்கம். விலாவாரியாக சொல்கிறேன்.

அந்த பழக்கம் என்னவென்றால்...பஸ்சிலோ அல்லது வேறு ஏதாவது வாகனத்திலோ போகும்போது, கண்ணில் படும் அனைத்து போஸ்டர்கள்,பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ப்ளெக்ஸ் ஆகியவற்றை கூர்ந்து கவனிப்பது அல்லது படிப்பது.

பாருங்கள்.ஒரு பிரம்மாண்டமான பேனரில் "தென்னாட்டு பிரபாகரனே" என்று போட்டு, பக்கத்தில் திருமாவளவன் மற்றும் ஒரு சிறுத்தை(!) இருவரும்
ஒரே சமயத்தில், வாய் பிளந்து உறுமுவதாக(?) ஒரு படம். அதை, பார்த்தது முதல் என் மனோநிலை பாதிக்க தொடங்கிவிட்டது.

"என்னை தென் சென்னை அ.தி.மு.க செயலாளர் ஆக தேர்வு செய்த சிங்கதாய்க்கு(?) நன்றி" என்று சிக்னல் அருகே ஒரு பேனர். அதில், ஒரு தாடிக்கார அரசியல்வாதி கைகூப்பி நன்றி சொல்ல, அவர் காலுக்கு கிழே பம்மிக்கொண்டு இருந்த ஒரு பயங்கர சிங்கம்(?), என் மீது பாய்வதாக இரவில் கனவு கண்டு அலறினேன்.

"மருத்துவர் அய்யா மாலடிமையே வருக" என்று ஒரு போஸ்டர் பார்த்தேன். யாரு அது புதுசா என்று விசாரித்ததில்,டாக்டர் 'ராமதாசை'தான் திராவிட உணர்வோடு(?) 'மால் அடிமை' என்று அழைக்கிறார்களாம். ஹ்ம்ம்..முடியல.(உங்க 'இன உணர்ச்சிக்கு' ஒரு அளவே இல்லையாப்பா!)

ஒரு மிக நீளமான சுவர் விளம்பரத்தில் "தமிழ் தேசிய பாதுகாவலரே" என்று எழுதிவிட்டு, 'தல'யின் பெயரை குறிப்பிடாமலே விட்டுவிட்டார்கள்(உணர்ச்சிவசபட்டுட்டாங்க போல). 'அவர்' யார் என்று கடுமையாக யோசிக்க தொடங்கியதில் என் நோய் முற்ற தொடங்கி விட்டது. (யாராவது சரியா சொன்னிங்கனா,இ.வ. பரிசு தருவார்).

கலைஞர் அண்ட் கோ பங்கேற்கும் நிகழ்ச்சிக்களில் உடன் பிறப்புக்கள் வைக்கும் பேனர்களை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. செல்வி ஜெ,. அவர்களை, சிங்கதாய்,புரட்சி தாய், மீட்பு தாய்,வீரத்தாய் என்று போட்டு, அவரை கடைசியில் ஒரு 'விளம்பர தாய்' என்று ஆக்கி விட்டார்கள் கழக ரத்தங்கள்.('தங்க தாரகை' ன்னு போடுகிறார்களே, அது 'அம்மாவுக்கா' இல்லை அவரது 'உடன்பிறவா சகோதரி'க்கா?).

எல்லா அரசியல்வாதிகளுமே 'தமிழின தலைவர்','இனமான காவலர்', 'தன்மான சிங்கம்' ஆகிய மூன்று அடைமொழிகளை, தங்களின் பொதுமொழியாக பயன் 'படுத்தி' கொள்கின்றனர்.அதிலும்,முதலிடம் பெறுவது 'தன்மான சிங்கம்'தான் .(டாக்டர்(ரேட்) இன்பா வாழ்க). .

ஆனால், என்னுடையே 'கருத்து கணிப்பின்' படி (என்ன ஒரு சர்வே) , நம் தமிழ் நாட்டில் அதிகபடியான திருநாமங்களில் அழைக்கபடுவது, தொல்.திருமா அவர்கள்தான். எழுச்சி தமிழர், மின்சார தமிழர், கூர்வாள், இடிமுழக்கம் இப்படி பல.(உக்காந்து யோசிப்பாங்களோ?).
போதாகுறைக்கு,'திருமா' வின் முதல் எழுத்தில் ஒரு வீச்சரிவாளை(!) வேறு சொருகி வைக்கின்றனர்.

அஜித் ரசிகர்களால், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் வீடு தாக்க பட்டபோது, அவர் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் இதோ.

"நடிகர் அஜித், எங்கள் தலைவனை வீடு புகுந்து தாக்கிய உன்னை வன்மையாக கண்டிக்கிறோம் "
-- இவன், மாவீரன்(?) ஜாகுவார் தங்கம் நாடார் (!) பேரவை.
(அண்ணாச்சி, நீங்களே சொல்லுங்க, உதைத்தது மாவீரமா அல்லது உதை வாங்கியது மாவீரமா).

சரி இந்த போஸ்டர் அலம்பல்கள் அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியவரோடு முடிந்து விடுகிறது என்று பார்த்தால், புண்ணாக்கு வியாபாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை 'இதை' விடுவதாக இல்லை.

உள்ளூர் பிரபலங்களின் வீட்டில் விசேஷம் என்றால், உடனே மனித நேயமே, கொடைவள்ளலே, நட்பின் இலக்கணமே, இதய தெய்வமே என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.

எதற்குதான் போஸ்டர் ஒட்டுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

ஹனிமூன் சென்ற ஒரு தம்பதிகளை வாழ்த்தி "இன்று தேன்நிலவுக்கு செல்லும் இரு நிலாக்களே..வெற்றியுடன்(?) திரும்பிவருக" என்று வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.

சென்னை - பாண்டி சாலையில், ஒரு ப்ளெக்ஸ் பார்த்தேன்.
ஒரு வாலிபர், டை சகிதம் பல்சர் பைக் மீது ஒய்யாரமாக அமர்ந்து இருக்க, அவர் தோளை தொட்டபடி, 'இளைய தளபதி' விஜய் நின்று கொண்டு இருந்தார். பிறகுதான், தலைப்பை பார்த்தேன். " எங்கள் ஆருயிர் நண்பனுக்கு, இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி".

இப்போது புரிகிறதா என் மனோவியாதிக்கான காரணம் (இதை படித்தவுடன், உங்களுக்குகே 'மைல்டாக' உங்கள் மீது சந்தேகம் வந்தால்,அதற்க்கு நான் பொறுப்பல்ல).

பரிசோதனைக்கு பின் காரணத்தை புரிந்து கொண்ட அந்த டாக்டர் இவ்வாறு சொன்னார், " முதல்ல இட்லிவடை போன்ற ஆசாமிகளோட(?) பழகறத நிறுத்திட்டு, எங்கையாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிட்டு வாங்க. அதுதான், ஒரு உங்களுக்கு ஒரே மருந்து".

"போஸ்டரோபோபியா(?)" என்று என் மனோவியாதிக்கு பெயர் சொன்ன(வைத்த) ஒரே காரணத்துக்காக, டாக்டரிடம் பீஸை அழுதுவிட்டு, வெளியே வந்தபோது 'அது' என் கண்ணில் பட்டது.

"மனநோய் தீர்க்கும் மாமருந்தே, உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" ௦-- இங்ஙனம் மருத்துவமனை ஊழியர்கள்.

தனக்கு தானே பட்டபெயர் வைத்து கொள்வது, துக்கம் உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது இவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களின் தவிர்க்க முடியாத கலாச்சாரம் ஆகி விட்டது.

முதல் முறையாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், போஸ்டர் மற்றும் பேனர்களை தவிர்த்து விடும்படி, தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். எல்லா அரசியல்வாதிகளும்,தொழிலதிபர்களும், பொது மக்களும் இதை பின்பற்ற வேண்டும் என 'பாடி கார்ட் முனி'யை வேண்டுவோம். (நிறைவேற்றினால், அவருக்கும்
வாழ்த்து போஸ்டர் ஒட்டுவோம்).

இதற்க்கு மேலும், இதை பற்றி விரிவாக எழுதினால், "போஸ்டர் கலாச்சாரத்துக்கு எதிரான போர்கொடியே..புரட்சிப்புயல் இன்பாவே" என்று எனக்கே, வாசகர்கள் யாராவது பேனர் வைத்து விடுவார்கள் என்பதால் (ஒரு அல்ப ஆசைங்க), அடியேன் இத்துடன்.......எஸ்கேப்ப்.


குறிப்பு: 'சன்டேனா இரண்டு' பகுதி இத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறுகிறது. சில வாரங்களுக்கு பின், இட்லிவடையில் மீண்டும் இதே பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
இன்பா
சண்டேனா இரண்டு 50 வாரம் எப்படி இருந்தது என்று வாசகர்கள் செல்லலாம். ஓட்டு பெட்டி சைடு பாரில் இருக்கிறது

46 Comments:

அமுதப்ரியன் said...

/* குறிப்பு: 'சன்டேனா இரண்டு' பகுதி இத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறுகிறது. சில வாரங்களுக்கு பின், இட்லிவடையில் மீண்டும் இதே பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
இன்பா
சண்டேனா இரண்டு 50 வாரம் எப்படி இருந்தது என்று வாசகர்கள் செல்லலாம். ஓட்டு பெட்டி சைடு பாரில் இருக்கிறது */

யார்ட்ட கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க, நீங்க மட்டும் இன்னும் 1 மாசத்துல மறுபடியும் வரலை, அப்புறம் ”இன்பம் பெறப்போன இன்பாவே! நீ செய்வது பண்பாவே”ன்னு திருநெல்வேலி பாஷையில திட்டி டிஜிட்டல் போர்டு ஜெமினியில் இருக்கும். சொல்லிப்பிட்டேன்.

அமுதப்ரியன்.

♥Manny♥ said...

ஒரு கலக்கல் பதிவு..!! :)

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவங்க தமிழகத்துல வக்கீல்கள் துவங்கி, சினிமா டைரக்டர் வரை நிறைய பேர் இருக்காங்க. ஆனா இதுல முதன்மையானவங்க யாருன்னு சீர்தூக்கி பார்த்தா, தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் சகோதரரான அண்ணன் சீமான்தான்.

50 வது பதிவிட்ட இன்பாவிற்கு வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

நல்லாவே இருந்துச்சுண்னே. நன்றிங்கண்ணே.

மதுரைவாசி said...

எங்க மதுரைக்கு வந்து பாருங்க. அப்போ தெரியும் நீங்க எழுதி இருக்கிறதெல்லாம் ஜுஜுபின்னு. சாம்பிள் இதோ... இந்தியாவின் உரமே... தலைமை செயலகமே... அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையே... தேர்தலில் எதிருகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசளிப்பவரே... ஸ்ஸ்ஸ்ஸ்சப்ப்பா ... முடியலை சாமி...

padma said...

நீங்கள் சொல்வது தான் சரி .நான் படித்த காலத்திலும் கூட கட்டாயமாக சினிமா இசை கூடாது .இன்றும் நான் படித்த பள்ளியில் அதை பின்பற்றுகிறார்கள் .பெற்றோரே இதற்கு துணை போனால் , இதை விரும்பினால் என்ன செய்வது ?

Anonymous said...

//எல்லா அரசியல்வாதிகளுமே 'தமிழின தலைவர்','இனமான காவலர்', 'தன்மான சிங்கம்' ஆகிய மூன்று அடைமொழிகளை, தங்களின் பொதுமொழியாக பயன் 'படுத்தி' கொள்கின்றனர்.//

அண்ணே,

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அது என்ன ’தன்மான ....’ மத்தவங்க்ளுக்கு எல்லாம் தன்மானம் இல்லையா? அப்புறம் ‘மானமிகு ...’ ஏன் மத்தவங்க எல்லாம் மானம் குறைஞ்சவங்களா? இல்ல, மானம் இல்லாதவங்களா, இல்ல மானம் கெட்டவங்களா? இது என்ன ’அடை மொழி’ன்னு எனக்கு புரியவே இல்லீங்கண்ணே. என்ன சொல்ல வர்றாங்கன்னு அவங்களுக்கும் தெரியலே.

இதை விட பெரிய ஜோக், என்னமோ ’இனமான’, ’இனமான’ன்னு சொல்றாங்க. என்ன இனமான? மிருக இனமா? பறவை இனமா? பூச்சி இனமா? ஆண் இனமா? பெண் இனமா? இனமானன்னனா என்னதான்ய்யா அர்த்தம்? ஏன் இப்படிப் படுத்திக் கொல்றீங்க... தாங்க முடியலையே!

இன்னொரு சந்தேகம், ஏன் தெலுங்கு இனத் தலைவர், மலையாள இனத் தலைவர், கன்னட இனத் தலைவர், ஆங்கில இனத் தலைவர், பிரெஞ்சு இனத் தலைவர்னுலாம் யாரும் இல்லை? அப்படி இல்லைனா ஏதாவது கல்யாண மண்டப விழாவுல இந்த மாதிரி பட்டத்தைக் கொடுக்க வேண்டியது தானே!

தங்கத் தாய் சரி, வெள்ளித் தாய், பித்தளைத் தாய், வெண்கலத் தாய், எவர் சில்வர் தாய், பிளாஸ்டிக் தாய் எல்லாம் எங்கே? அதுபோல சிங்கத்தாய் மாதிரி புலித் தாய்,கரடித் தாய், நரித் தாய், எலித் தாய்னு எல்லாம் பட்டம் கொடுப்பானுங்களா?

எங்கய்யா போய்ய்க்கிட்டுக்கு தமிழ்நாடு, எனக்கு ஒண்ணுமே புரியல போ................

- சும்பி

சைவகொத்துப்பரோட்டா said...

50 - பதிவு கண்ட "பேனர் புயல் - இன்பா" விற்கு
வாழ்த்துக்கள்.
"ஓ" போட்டுட்டேன்.

Anonymous said...

போஸ்டர் கலாச்சாரத்துக்கு எதிரான போர்கொடியே..புரட்சிப்புயல் இன்பாவே

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

புரட்சிப்புயல் இன்பா முதலியார்(?) பேரவை
ஆலங்குடி வட்டம்
நாகை மாவட்டம்

மதுரைவீரன் said...

எங்க ஊர்ல எது எல்லாம் ரொம்ப சாதாரணம் ..இதோ பாருங்க..
http://ithumadurai.blogspot.com/2010/02/blog-post_17.html

R.Gopi said...

//சண்டேனா இரண்டு 50 வாரம் எப்படி இருந்தது என்று வாசகர்கள் செல்லலாம். ஓட்டு பெட்டி சைடு பாரில் இருக்கிறது//

********

50 வாரமா “சண்டேன்னா இரண்டு” எழுதின இன்பா... இப்போ சொல்றது என்ன... “எப்படி இருந்தது என்று வாசகர்கள் செல்லலாம்” என்று செல்லி (சொல்லி) இருக்கிறார்..

kggouthaman said...

ஐம்பது வார சண்டே செய்திகளில், இந்த வாரம்தான் சூப்பர்.
செய்தி ஒன்று சிந்திக்க;
செய்தி இரண்டு சிரிக்க.

kggouthaman said...

செய்தி எண் ஒன்று படிக்கும்பொழுது நினைவுக்கு வந்தது, இது:
குரோம்பேட்டையில், வீட்டுப் பக்கத்தில் உள்ள பிரபல பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு - எழுத்தாளர் சுஜாதா வந்திருந்தார். கலை நிகழ்ச்சியில், ஒரு பெண் மேடையில் ஏறி பாடிய 'வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது' என்கிற பாட்டைக் கேட்டுவிட்டு அவர் முகம் ஒரு மாதிரியானது. பிறகு உரையாற்றும்போழுது, "பள்ளிக் கூடக் குழந்தைகள் சினிமா சங்கீதம் எல்லாவற்றையும் விட்டு - சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது யாராலே - என்பது போன்ற பாடல்களைப் பாடுவது நன்றாக இருக்கும். கல்லூரி கட்டம் வந்த பிறகு இதுபோன்ற பாடல்கள் பாடலாம்' என்றார். கேட்டுக் கொண்டிருந்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், குறிப்பாக அப்பள்ளி கலைநிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியைக்கும் முகத்தில் அசடு வழிந்தது.

kggouthaman said...

செய்தி எண் இரண்டு படிக்கும்பொழுது நினைவுக்கு வந்தது, இது:
முன்னொரு காலத்தில், எம் ஜி யார் முதலமைச்சராக இருந்தபொழுது, எதிர்க் கட்சித் தலைவரின் படத்தை சுவரில் வரைந்து, உடன் பிறப்புகள், 'தமிழ் மக்களின் இன மான உணர்வுகளின் முதல்வரே!' என்று எழுதியிருந்தனர். சாலையில் என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்த என் அண்ணன் பெண் (இங்கிலீஷ் மீடியத்தில் நாலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், அப்போது) - எழுத்துக் கூட்டி படித்தாள் - சுவரில் எழுதி இருந்ததை. " தமிழ் மாக்களின், ஈனமான உணர்வுகளின் முதல்வரே!"

ஆசிர் said...

போஸ்டரோபோபியா


தில்லு தான்...

ராஜ சுப்ரமணியன் said...

////நான் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது ...////

அட, நானும் அந்த ஸ்கூல்லதான் படிச்சேன்.

பார்வையாளன் said...

ரசிச்சு சிரிச்சேன்... சிரிச்சு ரசிச்சேன்....

பார்வையாளன் said...

நான்தான் first

கிரி said...

50 வாரம் ஆகி விட்டதா! வாழ்த்துக்கள்.. தொடருங்கள்

படுக்காளி said...

கல கல மொறு மொறு, இன்றைய சண்டேனா இரண்டு.

வளரும் சமுதாயத்தை இன்றைய சினிமா எப்படி தாங்(க்)குகிறது.
அரசியல் போஸ்டர்கள ஜனத்தை எப்படி டெரரைஸ் செய்கிறது.என நகைச்சுவையாய் சொல்லப்பட்ட நச் பதிவு.

50 வது பதிவு வாழ்த்துக்கள் இன்னம் கலக்குங்க,

ஊசிப் போகா இட்லி வடையே
ஊத்திட்டு போக்கா எனக்கு சாம்பாரே.
திங்க வெறும் இட்லியும் வடையுமா
எப்போ தருவீங்க சட்னியும் சாம்பாரும்

இன்பா என் நண்பா
பாடவா ஒரு வெண்பா
தூக்குதே உன் பண்பா
மணக்குதே தமிழ் மண்ணா
என ப்ளெக்ஸ் வைக்கவா

Anonymous said...

சொல்லீட்டிங்கல்லே, நல்லபடியா சிகிட்சை முடிஞ்சு வாங்க, அடிக்கொரு பிளெக்ஸ் வெச்சுருவோம் !!இனி சண்டே வந்தா போரடிக்கும். :(

தேடுதல் said...

அண்ணன் அஞ்சா நெஞ்சனை பத்தி ஒண்ணுமே சொல்லலியே படத்த மட்டும் போட்டுடீங்க.

அந்த பயம் மனசில இருக்கட்டும். இல்லன்னா இட்லிவடைய சாம்பார ஊத்தி பெசஞ்சிறுவோம் ஜாக்கிறத.

Anonymous said...

எனக்கு என்னமோ உங்களுக்கு பிராக்கெட் போபியா தான் வந்துருக்குனு நினைக்கிறேன். நெறைய பிராக்கெட்( ) தான் இருக்கு.

வி. ஸ்ரீ குமார்................

பிரசன்னா said...

50 ஐ கண்ட எங்களின் முனியாண்டி விலாசே! வாழ்க வாழ்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் செய்தி பற்றி :
எனக்கும் இந்த வருத்தம் உண்டு. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பிரபல சினிமா பாடல்களின் வரிகளை மாற்றி தேச பக்திப் பாடல்களாக நடனம் ஆடுவோம்.(உதா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா.... என்ற பாடலை 'அடிமை அகன்றதும் ஆட்சி வந்தது" என்று மாற்றி ஆடினோம்)

பெற்றோர்கள் நினைத்தால் இதை மாற்றி விடலாம். குறிப்பாக என் பெண் படிக்கும் பள்ளியில் கூட சென்ற வருடம் அப்படி ஒரு சினிமா பாடலுக்கு ஆடும்படி சொன்னபோது, என் பெண் அப்படி ஆடுவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று மறுத்து விட்டேன். இந்த வருடம் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சி (ஒரு வரவேற்புப் பாடல் தான்) என்று சொன்னபோது ஒப்புக் கொண்டேன்.

இரண்டாம் செய்தி பற்றி :
முதல் செய்தியை சிந்தனைக்கு விருந்தாக்கி, இரண்டாம் செய்தியை சிரிப்புக்கு மருந்தாகி கலக்கி விட்டீர்கள், இன்பா,

இன்பா,
எங்கள்
நண்பா,
இடைவேளை என்கிறீர்களே,
புது வம்பா?

(ஏதோ, என்னால முடிஞ்ச ஒரு பேனர்.)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதைப் பற்றி நானும் என் எண்ணத்தை எழுதி இருக்கிறேன், படித்து பார்க்கவும்

http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_28.html

jaisankar jaganathan said...

//தனக்கு தானே பட்டபெயர் வைத்து கொள்வது, துக்கம் உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது இவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களின் தவிர்க்க முடியாத கலாச்சாரம் ஆகி விட்டது//

இதெல்லாம் இந்திய கலாச்சாரம்.

இத்தாலி சோனியா-அன்னை சோனியா ஆகலியா?

ஹிரோயின் ஜெயலலிதா -அம்மா ஜெயலலிதா ஆகலியா?

ஜெயக்குமார் said...

இப்படிப்பட்ட ஆசிரியர்களால் சமூகம் கெட்டுப் போகிறது.. அவர்கள் உருவாக்கும் தலைமுறையும்..

நல்லதந்தி said...

சுய விளம்பரம்தான் என்ன பண்றது!.
இதையும் கொஞ்சம் படிங்க!

பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!
http://thanthii.blogspot.com/2008/09/blog-post_23.html

வலைஞன் said...

பென்னாகரத்தில் 85% வாக்குப் பதிவு !!
கொடுத்த பணம் நல்லா வேலை செஞ்சிருக்கு!!!

Anonymous said...

இன்பா
மீண்டும் விரைவில் சந்திப்போம்.வாழ்த்துக்கள்!!
இட்லிவடை
மானஸ்தன் இட்லிவடையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டரா? எங்கே ஆளையே காணம்?

ராமன் இந்தியா said...

ரொம்ப நன்றி நண்பா!! எனக்கும இந்த " போஸ்டரோஃபோபியோ" இருப்பதை தாங்கள் மூலம் தான் அறிய முடிந்தது! ஆனால், எனக்கு கூடவே இன்னொரு சப் வியாதி யும் இருக்கிறது ... (கட்டாயம் உங்களுக்கும் இருக்கும்! ) -அது "போஸ்டரோ தப்பு காணு மேனியா"---- வெளியிடப்படும் எல்லா போஸ்டர் களிலும் (குறிப்பாக தமிழைக்காப்பற்ற மற்றும் தமிழ்ப்பற்றுடன் ஒட்டப்படும் போஸ்டர்களில் ) குறைந்த பட்சம் ஒரு சொற்பிழையோ, இலக்கணப்பிழையோ இல்லாமல் இருப்பதே இல்லை!! கூடவே என்ன மருந்து(expiryஆகாத ) கொடுத்தார்கள் என்றும் சொல்லி இருக்கலாம் !!

டோரிக்கண்ணு.. said...

இல்லாததை இருப்பதாய் காட்டிய
இருப்பதை இல்லாததாய் காட்டிய
உன்மத்தர்களைப் பற்றிய உண்மையை
துகிலுரித்துக் காட்டியஉமது திண்மையை

உலகுக்கு எடுத்துரைக்க உதவிய எங்கள்
அரசியல்வாதிகள்,ஏனைய தோழர்களை

என்றென்றும் "பிளக்(ஸ் )ஸிபிலாக" வாழ
பதிவர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

சரவணகுமரன் said...

ஐம்பது வாரங்கள் எப்படி’ன்னு சொல்ல தெரியலை. ஆனா, இன்னைக்கு சூப்பரு...

SAN said...

Hi Inba,
Vazthugal.
Wish you a happy married Life.(Am i correct since you are going on a long leave!!!!!)

நீச்சல்காரன் said...

சிந்திக்க/ சிரிக்க இந்த வாரம் சூப்பர்

மடல்காரன்_MadalKaran said...

இன்பாவின் எழுத்துக்கள் அத்தனையும் முத்துக்கள்
எழுத்துக் கொத்துக்கள்
சண்டேன்னா ரெண்டுன்னு சொல்லி 100 எழுத்திடீரு!
வெண்பா எழுதுவதை விட்டு பண்பா வாழ்த்துகிறேன் இன்பா என் நண்பா.
- மடல்காரன்.

pachhamilaka said...

பலரை தட்டி கேட்ட இன்பா வாழ்த்துக்கள்

Anonymous said...

violence in movies can affect the interrogators, sex in movies and songs will affect the kids.. big time

http://www.nytimes.com/2010/03/27/arts/television/27twentyfour.html

வீரராகவன் said...

என்னுடைய பள்ளி ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த 5 வருடங்களில்
1)ஒரு முறை கூட ஆண்டுவிழாவிற்கு எந்த தலைவரையும் அழைக்கவில்லை.
2)ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்வி, ஒழுக்கம், திறமை போன்ற 10 அம்ச அடிப்படையில் சிறந்து விளங்கும் முதல் மூன்று குழந்தைகளின் பெற்றோர்களைத் தான் மேடையில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறோம்.
3) நாட்டுப்புற பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
4)முகம் சுளிக்க வைக்கும் இரண்டர்த்த (ஓரே அர்த்த்மா?) பாடல்களையோ, நடன அசைவுகளோ கண்டிப்பாக தவிர்க்கப்படுகிறது.
5) நிகழ்ச்சி முழுவதயும் தொகுத்து வழங்குவது, நடத்துவது குழந்தைகள்தான். ஆசிரியர்கள் தலையிடுவதில்லை.
6)எங்கள் பள்ளியின் பெற்றோர்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் தான் எங்கள் பள்ளியின் வளர்ச்சி. தீபாவளி சமயம் ரூ.20 பெற்று பாதித் தொகையை ஆயாக்களுக்கும் மீதி தொகையில் அனைத்து குழந்தைகளுக்கும் பிரியாணி வழங்குகிறோம்.
7) மேலும் பலவற்றை சொல்லலாம். ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எங்கள் மகன் திருமண வரவேற்பு மார்ச்சு 26 எங்கள் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக்.மே.பள்ளி, கோவையில் நடந்தது. எங்கள் பள்ளி குழந்தைகள் 1000 பேரை அழைத்தோம். 5000 பேருக்கு மேல் வந்தனர். இதுவே எங்கள் பள்ளியின் மீது பெற்றோர் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கைக்கும் அடையாளம்.

Anonymous said...

//’தன்மான ....’ மத்தவங்க்ளுக்கு எல்லாம் தன்மானம் இல்லையா? அப்புறம் ‘மானமிகு ...’ ஏன் மத்தவங்க எல்லாம் மானம் குறைஞ்சவங்களா? இல்ல, மானம் இல்லாதவங்களா, இல்ல மானம் கெட்டவங்களா? இது என்ன ’அடை மொழி’ன்னு எனக்கு புரியவே இல்லீங்கண்ணே. என்ன சொல்ல வர்றாங்கன்னு அவங்களுக்கும் தெரியலே//

எங்களுக்குப் புரியாமல் இல்லை, மரமண்டை அனானி சும்பியே. உனக்குத் தான் அதைப் புரிந்து கொள்ளும் அறிவில்லை. ’இனமான’ என்றால் இனத்தின் மானத்தைக் காத்தவர் என்று பொருள். ’தன்மானத் தலைவர்’ என்றால் தங்கள் தகுதியியையும், திறமையையும் மறந்து திராவிடத் தமிழன் தாழ்வுற்றுக் கிடக்கையில் அவர்களுக்கு இனமான உணர்வையும், தன்மானத்தையும் ஊட்டிய தலைவன் என்பது பொருள்.

’மானமிகு’ என்றால் மக்கள் மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாக, ஆரிய, பார்ப்பனீய தீய சக்திகளுக்கு, பண்டை பெருமை வாய்ந்த திராவிட இனம் மானம் கெட்டுச் சேவகம் செய்து வந்த காலத்தில் அதை எதிர்த்துப் போராடி மான உணர்வை ஊட்டிய மானம் மிகுந்த மறவன் என்பது பொருள்.

ஆக, எல்லாம் பொருள் பொதிந்தவைதான். அது உனக்குப் புரியவில்லை. அவர்களாக இந்தப் பட்டங்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. மான உணர்வு மிக்க தமிழர்கள், திராவிடத் தோன்றல்கள், அறிஞர் பெருமக்கள் வைத்த பட்டப்பெயர்கள், அளித்த கௌரவப் பட்டங்கள்தான் இவை.

இவ்வளவு பேசுகிறாயே, “பூஜயஸ்ரீ”, “பெரியவா”,” மஹா பெரியவா”, “இந்திர சரஸ்வதி” - இவையெல்லாம் யார் கொடுத்த பட்டங்கள்? எந்தப் பள்ளியில் கல்லூரியில் படித்து வாங்கியது? இவர்கள் மட்டும் அதை தெருத்தெருவாக விளம்பரம் செய்யலாமா? விளக்கம் சொல்ல முடியுமா உன்னால்?

உன் அவிழ்ந்த குடுமியை இறுக்ககட்டிக் கொண்டு போய் வேலையைப் பார். தமிழ் இனம் காக்க வந்த திராவிட மறவர்களைக் குறை சொல்லாதே!

அன்புடன்
கோண்டு

shiva said...

Hats off Inba and Iv
for this
Milestone post.

puratchipuyal Inba rocks

Anonymous said...

When I saw the photograph, I noted that the school is related to the institution from Dayanantha Sarasawthy.

Please confirm the incidents described in the post happened in that school.

Dayanantha is totally against all these uncultural activities. People should not entertain these sort of activities in a school run in His name.

gops said...

This type of "Kuthuppattu" dance is an unavoidable/essential item in the culturals of almost all the schools and colleges.
The irony is these are called Cultural Programmes. Perhaps the organisers do not know the meaning of CULTURE.
We have come to a stage that this will turn only for the worse. See the supreme court comment in Kushbu's case. They could have just stopped with her statement being a personal one. But the verdict is there is nothing wrong in premarital sex and living in together. They have even dragged Lord Krishna without knowing the truth. If this is the type of court judgement encouraging nasty cultures , what to say of future children? Only Lord Krishna can save them.

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

ஜீயார் said...

இந்த பேனர்களையெல்லாம் பார்த்து ஒரு சிரிப்பை மட்டும் காட்டி செல்ல வேண்டும். நெல்லை திமுக மாநாட்டிற்று எங்கள் அமைச்சர் விளம்பர போர்டுக்காக செஞ்ச செலவு மொத்தம் 1 லட்சம். சராசரி 100 போர்டு வைத்தார்கள். ஒரே அடைமொழியை 100 போர்டிலும் வைக்கமுடியுமா. 100 அடைமொழிகளையும் அவர்களாலே சிந்திக்க முடியுமா. போர்டு டிசைன் பண்ற நாங்கதான் பல தலைவர்களுக்கு அடைமொழி தருகின்றோம்.