பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 25, 2010

படித்துறையில் ஒருநாள் - ஹரன்பிரசன்னா


படித்துறையில் ஒருநாள்

எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு வசனத்தைப் பேச நூறு தடவை முயன்றார்கள். எப்படி சலிக்காமல் இதே வசனத்தைப் பேசுகிறார்கள் என்று முதலில் ஆச்சரியத்தோடும், பிறகு சலிப்போடும், அதன் பிறகு எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஓர் இயக்குநர் ஒரு படம் எடுத்தவுடன் எப்படி பைத்தியம் ஆகாமல் இருக்கிறார் என்கிற ஆதாரமான சந்தேகம் வந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளிய சிவாஜியை நினைத்து வியப்பாக இருந்தது. சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு பின்னணி பேசியவருக்கு இதுவரை நான் கோவில் கட்டாததை நினைத்துக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ‘பதறண்டாம் கேட்டேளா, நீங்களும் டப்பிங் பேசணும்’ - திடீரென்று சொன்னார் சுகா. இது என்ன ஒரு மேட்டரா என நினைத்துக்கொண்டு சென்றபின்புதான் தெரிந்து, வேண்டாத வேலையில் இறங்கிவிட்டோமோ என்று. அங்கே ஹீரோ ஒவ்வொரு வசனமாக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து என்னை பேசச் சொன்னார்கள். ஐந்து வார்த்தை உள்ள ஒரு வசனம். மீண்டும் மீண்டும் பேசினேன். படிக்கிற காலத்துல இப்படி படிச்சிருந்தா இன்னும் பத்து மார்க் கூட கிடைச்சிருக்கும் என்று என் அப்பா சொல்வது போல எங்கோ கேட்டது. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும். இப்படி பல. வசனம் ரொம்ப நீளமா இருக்கு என்று சொல்லலாமா என்று நினைத்தேன்! அடுத்த தடவை முதலில் டப்பிங் வைத்துவிட்டு, அப்புறம் படம் எடுக்கச் சொன்னால் ஈஸியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக ஐந்து வார்த்தை வசனத்தைப் பேசி முடித்தேன். (என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. அந்த வசனம் படத்தில் வந்தால் அதை மீண்டும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்! வரலாறு நமக்கு மிகவும் முக்கியம்.) அடுத்து கொஞ்சம் நீண்ட வசனம். ஆமாம், 7 வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உண்மையில் கதை எழுதுவதும், கட்டுரை எழுதுவதும், கவிதை எழுதுவதும், முக்கியமாக படத்தை விமர்சனம் செய்வதும் அதுவும் அதனைக் கிழிப்பதும்தான் எவ்வளவு எளிமையானது.

வாய்விட்டே சொன்னேன், ஒரு படத்தை எடுத்த பின்னால டைரக்டருக்கு கோட்டி பிடிக்காததே சாதனதாங்கேன். ஒருவர் சொன்னார், பத்து படத்தையும் பாத்தவன் கதய யோசிச்சேளா என்று. சரிதான் என நினைத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். இது படத்தில் 20 செகண்டு வந்தால் அதிகம். அதற்கு ஒரு முப்பது தடவை முயற்சித்தார்கள். நீங்க மூச்சு விடும்போது ஆளு உள்ள இழுக்கான், நீங்க இழுக்கும்போது ஆளு வெளிய விடுதான். சின்க் ஆல பாருங்க. ஒரு வழியாக சின்க் ஆனது. பெருமூச்சு ஒன்றை விட்டேன். இப்ப நா எப்படி வேணா மூச்சு விடலாம் கேட்டியளா. வேறொரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது, டி டி எஸ்ஸில் கேட்கும் சின்ன எக்ஸ்பிரஸனுக்கு இவ்வளவு உழைப்பு.

உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.

ஓர் உதவி இயக்குநர் சொன்னார். (எனது விமர்சனங்களை படித்திருக்கிறார் போல) இனிமே எழுதும்போது இதெல்லாம் மனசுல இருக்கும்ல என்று. விமர்சகர்கள் மோசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிந்துகொள்வார். உண்மையில் இரு தரப்புமே நியாயங்களைக் கொண்டுள்ளது. உழைப்பின் உன்னதத்தோடு வரும் திரைப்படம் ஒன்று மிகவும் விமர்சிக்கப்படும்போது திரைப்படத்துடன் நேரடியாகப் பங்குகொண்டவர்கள் அடையும் நிம்மதியின்மை நிச்சயம் உண்மையானது. ஆனால் விமர்சனம் என்பது இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தாமல் இயங்கிவருகிறது. ஏனென்றால் விமர்சனம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. ஒப்பீடாலேயே தொடர்ந்து மாதிரிகள் கட்டமைக்கப்படுவதால் விமர்சனம் உழைப்பை மெல்லப் புறந்தள்ளுகிறது. ஆனால் விமர்சகன் ஒருவன் படம் எடுக்கும் விதத்தை முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்தானால் அவனது பார்வை இன்னும் கூர்மையடைவதோடு, எதை ஏன் எப்படி சொல்கிறோம் எனபதைவிட எதை எப்படிச் சொல்லக்கூடாது என்பது நிச்சயமாகப் புலப்படத் தொடங்கும் என்று தோன்றியது. பாலுமகேந்திரா சுகாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ‘என்ன பலன் என்று தெரியாமலேயே கடும் உழைப்பைக் கோரும் ஊடகம் திரைப்படம்’ என்ற பொருள்பட எழுதியிருந்தாராம். கடும் உழைப்பைக் கோரும் ஒரு திரைப்பட அனுபவத்தை இன்று நேரில் பார்த்தேன். நான் இன்று பார்த்தது நூறில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. இன்றைக்குப் பார்த்ததாவது மூளையை அழுங்கடிக்கும் விஷயம்தான். டப்பிங்குக்கு முன்னதாக படத்தின் வேலைகள் கோரும் க்ரியேட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தேவையான உழைப்பை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன். டப்பிங் முடிந்தது எனக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நான் பேசியது மொத்தம் 2 நிமிடங்கள் இருக்கலாம்! சரி போகலாம் என்றார் சுகா. விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்.

சுகா இப்படத்தை இயக்குகிறார் என்பது ஓர் ஆர்வம். இன்னொரு ஆர்வம் இளையராஜாவின் இசை குறித்தானது. சுகா இசை என்றால் என்ன என்று தெரிந்தவர். அதாவது இசையோடு தொடர்புடைய விஷயங்கள் தெரிந்தவர் என்றல்ல நான் சொல்வது. நேரடியாகவே இசை என்றால் என்ன என்பதை பற்றிய நல்ல அறிவு உள்ளவர். ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர். கர்நாடக ராகங்களில் தேர்ச்சி உள்ளவர். அதனால் அவர் இளையராஜாவோடு பணிபுரிந்து வரும் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அதீத ஆர்வம் எனக்கிருந்தது. மூன்றாவதான ஆர்வம் இத்திரைப்படம் நெல்லையோடு தொடர்புடையதென்பது. நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.

தேரோடும் என்னும் ராமகிருஷ்ணன் எழுதிய பாடலைக் கேட்டேன். முதல் முறை கேட்டபோது இசையின் ஆழம் என்னை அசர வைத்தது. (எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது. எனது கருத்து எனது ரசனை சார்ந்தது மட்டுமே.) பாம்பே ஜெயஸ்ரீயும் சுதா ரகுநாதனும் பாடியிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக அமையும். எஸ்ராவின் தமிழ் அழகாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல் நா. முத்துக்குமார் எழுதியிருக்கும் நீரோடும் எனத் தொடங்கும் (என நினைக்கிறேன்!) பாடல் இன்னொரு அசத்தலான பாடலாக இருக்கும். இந்த இரு பாடல்களைக் கேட்டபோது, குணா, மகாநதி, தேவர் மகன் காலத்தில் இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த பாடல்களின் நினைவு வந்தது. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்), உனைத் தேடும் ராகமிது (பொன்மலை), கண்ணில் பார்வை (நான் கடவுள்) வரிசையில் இப்பாடல்கள் இரண்டும் அமையும் எனபதில் ஐயமே இல்லை.

படத்தை அங்கங்கே பார்த்த வகையில், எல்லாருமே புதிய முகங்கள் என்பது தெரிந்தது. மற்றபடி என்ன கதை என்பதெல்லாம் விளங்கவில்லை. ஆனால் ஆர்வம் மட்டும் விண்ணோங்கி வளர்ந்துவிட்டது. படத்தின் ஹீரோ டப்பிங் தியேட்டரில் ஓரத்தில் கீழே உட்கார்ந்திருந்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத பையன். அடுத்த படத்துல எங்களையே பாத்து நீங்க யாருன்னு கேப்பான் என்றார் நண்பரொருவர். இப்படம் பெரும் வெற்றிபெற்று அக்கேள்வியை அவர் நிஜமாகவே கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆர்யா தயாரிக்கும் படம் இது. ஆர்யா இன்று டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் தொடங்கிய தினத்தில் இருந்து இன்றுதான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். முதல் படம் இயக்கும் இயக்குநருக்குத் தேவையான சுதந்திரம் சுகாவுக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படம் வர நினைக்கும் ஆர்யாவை நினைத்தும் சந்தோஷமாக இருந்தது.

சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.

சிவாஜி வசனம் பேசி நடித்த காட்சியை திரையில் பார்த்தபோது கருணாநிதி தேம்பி தேம்பி அழுதார். இப்ப ஹபி பேசிய வசனத்தை பார்த்து எவ்வளவு பேர் கண்ணீர் சிந்த போகிறார்களோ !!

23 Comments:

கானகம் said...

சும்மா பின்னி பெடலெடுத்துருக்காரு, நகைச்சுவையில.. ரொம்ப நல்லா இருக்குது பதிவு..

அதிலும் இந்த வரிகளை ரசித்துப் படித்தேன்

//// விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்//

// சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.//

Anonymous said...

இப்ப ஹபி பேசிய வசனத்தை பார்த்து எவ்வளவு பேர் கண்ணீர் சிந்த போகிறார்களோ

I will simply hand over you to V.C.Kuhanathan for some nice treatment:)

கானகம் said...

//கருணாநிதி தேம்பி தேம்பி அழுதார். இப்ப ஹபி பேசிய வசனத்தை பார்த்து எவ்வளவு பேர் கண்ணீர் சிந்த போகிறார்//

ஓஹோ, ஹபி ங்கிறது தானே வச்ச்சுகிட்ட செல்லப்பேராக்கும்..

:-)

Anonymous said...

ஏங்க, இந்தக் கட்டுரைக்கும், மேலே துவக்கத்தில் இருக்கும் ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணுமே புரியல்லியே? ரெண்டு பேர்ல யாரு ஹரன் பிரச்ன்னான்னுட்டு கண்டு பிடிக்கச் சொல்றியளா? அது குமுதத்திலல்ல விளையாட்ற் விளையாட்டு?

Sundar Padmanaban said...

ஆஹா! வாழ்க்கையின் திருப்புமுனையை அடைந்ததற்கு வாழ்த்துகள் பிரசன்னா!!!!

எவ்வ்வ்வளவு நீளமான வசனத்தைப் பேசியிருக்கீங்கன்னு நெனச்சு மலைப்பா இருக்கு! அடுத்த தடவை போறதுக்கு முன்பு பயிற்சிக்காக குணா படத்துல கிரீஷ் கர்னாட் ஓரமா நிக்க கமல் சுத்திச் சுத்தி வந்து “இப்ப ஒரு ஊசி போட்டீங்களே அது என்ன ஊசி?” என்று ஆரம்பித்து ”பென்ட்டதால்” எனத் தொடர்ந்து, எதுலயும் முட்டிக்காம “அபிராமி...அபிராமி..”ன்னு முடிச்சு பழகினீங்கன்னு வைங்க. அவார்டை அள்ளிக்கிட்டு வந்துரலாம்ல?

அது சரி டப்பிங் யாருக்கு உங்களுக்கா வேற ஆளுக்கா? அதச் சொல்லலியே.. இல்ல நாந்தான் சரியாப் படிக்கலையோ?

Jokes apart, மனமார்ந்த வாழ்த்துகள்! படம் வந்ததும் வெள்ளித்திரையில் கேட்கிறேன்!

Jayashree Govindarajan said...

சுகாவுக்காக இல்லைன்ன்னாலும், 'டப்பிங் அங்கங்க படு சொதப்பல்'னு ஒத்தைவரி விமர்சனம் இதே இட்லிவடைல எழுதவாவது இந்தப் படத்தைப் பார்த்தே(இட்லிவடை மாதிரி பார்க்காமலேகூட எழுதிடவேண்டியதுதான்!) ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுட்டேன். என் இணைய வாழ்க்கைல நான் எழுதப்போற முதல் திரை விமர்சனம் படித்துறைதான்.

பிச்சைப்பாத்திரம் said...

//இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன்.//

என்னது முனகலா? உங்க கேரக்டர் என்னன்னு சரியா விசாரிச்சீங்களா? சென்சார்ல கட் பண்ணிடப் போறாங்க. :-)

jokes apart, பல இலக்கியவாதிகளின் பங்களிப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் நண்பர் சுகாவின் படத்தை நானும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். (விமர்சனம் எழுத. :-) பாலுமகேந்திராவின் சிஷ்யர் நிச்சயம் சோடை போக மாட்டார் என்கிற நம்பிக்கை மற்ற சிஷ்யர்களின் சாதனை மூலம் தெளிவாகிறது.

சினிமா என்பது பல நபர்களின் கடுமையான உழைப்பால் உருவாவதுதான் என்றாலும் அதற்காகவே குப்பையான படங்களை நியாயப்படுத்தி விட முடியாது அல்லவா? ஆனால் அந்த உழைப்பை நினைவில் வைத்திருப்பது அவசியமானதொன்று.

'படித்துறை' வெற்றிப்படிகளில் ஏறி நிற்க அட்வான்ஸ் வாழ்த்துகள்!

சத்தீஷ் said...

ப்ரசன்னா
நிச்சயமாக நல்ல எதிகாலம் உள்ளது!எப்போது மன்றம் ஆரம்பிக்கலாம்?ஆனால் ஒரு நிப்ந்தனையுடன்:மத்தியில் போக்குவரத்து அல்லது தொலைத் தொடர்பு துறை எனக்கு வாங்கித் தருவதாக எழுதித் தர வேண்டும்!!
(இட்லிவடைதான் துணை முதல்வராகி விடுவாரே!?)2011 ல் ஆட்சி நமதே!! சரி நீங்கள் (இ.வ்) (துணை)முதல்வராகி முதல் கைய்யொப்பமிடும் அரசு ஆணை?
'' இன்று முதல் வலைப்பதிவில் சமையல் குறிப்பு எழுதுவோர் கவிதை (பின்,முன்,நடு-நவீனத்துவ )விமர்சனம் செய்யக்கூடாது!!!

Anonymous said...

என்னடா... எங்கேயோ நம்ம இருட்டுக்கடை வாசம் வீசுதேனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.. அப்புறம் தான் ஹபி யோட மூணாவது ஆர்வம் தெரிஞ்சுது... :)

// நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.//

ஹ்ம்ம்ம்.. எனக்கும் ஆர்வமா இருக்கு :)

// இப்ப ஹபி பேசிய வசனத்தை பார்த்து எவ்வளவு பேர் கண்ணீர் சிந்த போகிறார்களோ !! //
ஏன்? நாங்க ஆனந்தக் கண்ணீர் சிந்த கூடாதோ? இ.வ. க்கு பொறாமை...

Then HEARTY WISHES to Harran Prasanna :)

அது சரி,,, இந்த படத்துக்கு இ.வ. ல review(s) எழுதப்போவது யாரு(s)??? ;-p

ஈ ரா said...

//உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.
//

உண்மை..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஹபி,

இதை விடக் கொடுமை நாம் நடித்த காட்சிக்கு நாமே டப்பிங் செய்வது!

என்னதான் சவுண்ட் ரெகார்டிங்கில் இருந்தாலும், கண்முன்னே பெரிய திரையில் காட்சி ஓடினாலும், மூன்று மாத முன்பு பாங்காக்கிலும், குவாலாலம்பூரிலும் எந்த மூடில், என்னத்தைச் சொல்லித் தொலைத்தோம் என்று நினைவுக்குக் கொண்டு வருவது ஒரு கொடுமை!
ஜக்குபாய் டப்பிங்கில் அதை நான் பர்சனலாகவே அனுபவித்தேன்.

”சார், அப்ப சிரிச்சுக்கிட்டே பேசிட்டீங்க, இப்ப அதே வசனத்தை சீரியசா சொல்றீங்களா?” என்பார் ஒரு உதவி இயக்குனர். அல்லது, ”மொத்த வசனத்தையுமே வேற மாதிரி, ஆனா லிப் சிங்க்கோட இப்படி சொல்லுங்க” என்று படுத்துவார் இன்னொரு உதவி! அவருக்கென்ன, மைக் முன் நிற்பது நாம் தானே!

”அப்பாடா! எல்லாம் சரியாகச் சொல்லி விட்டோம் போலிருக்கிறதே” என்று நீள்மூச்சு விடுமுன், “சார், இன்னொரு டேக் போயிடலாமா?” என்பார் ரெகார்டிங் எஞ்சினியர்.

“ஆரம்பம் ஒரு அரை செகண்ட் லேட்” அல்லது “முடிக்கும்போது அந்த ‘ம்’மை இன்னும் 50 மில்லிசெகண்ட் இழுத்துப் பிடிங்க” என்பார் இன்னொரு அசிஸ்டெண்ட்.

சிவாஜியையும், சாவித்திரியையும், ஏன், வடிவேலுவையும், கவுண்டரையும் கூட நினைத்து நினைத்து மனதில் இந்தத் தொழில் மேல் மரியாதை பொங்குவது இந்த மாதிரி இருட்டறை ரெகார்டிங் கூடத்தில்தான்! காமெரா முன் மறுமுறை நிற்கவில்லையே தவிர, மற்றபடி அதே நடிப்பை இன்னமும் மெருகூட்ட முடிவதும் இங்கே நிகழ்கிற ஒரு சந்தோஷம்!

ஒவ்வொரு படமும் இப்படித்தான் அடி அடியாக மெருகூட்டப்படுகிறது!

என்னத்தைச் சொல்ல, எல்லாமே இன்ப வேதனை தான்!

Anonymous said...

Where can i hear the songs? or yet to be released

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்னங்க இது ?!

‘படத்துறையில் நான்’ங்கறதை நீங்களும் ‘படித்துறையில் நான்’னு போட்டிருக்கீங்க, ஒரு பய மக்கானும் இதைப்பத்தி இன்னும் கேக்கலைங்கறேன்?!

மொதல்ல நானும் இந்தாளு ஹபி எங்கேயோ போகக்கூடாத எடத்துக்குப் போயி, செய்யக்கூடாத என்னவோ செஞ்சு சறுக்கி விழுந்துட்டாரோன்னு தான் பயந்தேன். மேட்டரப் பார்த்தா அப்படி ஏதும் காணலை.

சரி, நாம எத எளுதிக் கிளிச்சாலும் போடறாங்களே, நமக்கென்னன்னு நானும் எம்புட்டு நேரம் தான் சாமி வாயப் பொத்திக்கிட்டிருக்கறது ?

ஆராய்ச்ச்சியும் ’தல’ய சரி பண்ணுங்க ராசா!

கௌதமன் said...

குரல் கொடுப்பதில் இவ்வளவு சிரமங்கள் உள்ளனவா? அடேங்கப்பா!
சரி நான் 'பேசாம' நடிக்கப் போயிடறேன்.

Simulation said...

எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்:)


// வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும்.//

//இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். //

sendhil said...

all works requires effort, but where this effort goes is the point, film critics can should the end product only. Amount of effort for making a film like "பசங்க" might be lesser than for a work like "வேட்டைக்காரன்" (taking into account the special effects, special sound, lot of closeup shots and dialogue delivery of the entertainer needed for the film), but the end product is subject of the criticism. So don't hesitate to tear apart the bad works. Can we eat a tasteless food saying that the chef has worked for hours to prepare the food?

Anonymous said...

//
‘படத்துறையில் நான்’ங்கறதை நீங்களும் ‘படித்துறையில் நான்’னு போட்டிருக்கீங்க, ஒரு பய மக்கானும் இதைப்பத்தி இன்னும் கேக்கலைங்கறேன்?!//

...இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ...

Anonymous said...

//ஏங்க, இந்தக் கட்டுரைக்கும், மேலே துவக்கத்தில் இருக்கும் ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணுமே புரியல்லியே? ரெண்டு பேர்ல யாரு ஹரன் பிரச்ன்னான்னுட்டு கண்டு பிடிக்கச் சொல்றியளா?//

இடது ஓரத்தில் இருப்பவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். நடுவில் இருப்பவர் 'படித்துறை' திரைப்படத்தின் இயக்குநர் சுகா. வலது ஓரத்தில் இருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். (அதனால் வலதுசாரியா என்றெல்லாம் கேட்கக்கூடாது) :)

Anonymous said...

மாக்கான் ‍‍‍‍‍‍= மஞ்ச மாக்கானும் பூதமும்

எளுதி, இதையெல்லாம் பார்த்தா லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் = முகமூடின்னு தோணுதே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

"மாக்கான் ‍‍‍‍‍‍= மஞ்ச மாக்கானும் பூதமும்

எளுதி, இதையெல்லாம் பார்த்தா லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் = முகமூடின்னு தோணுதே!" by Anonymous

ஆகா! மறுபடியும் கெளம்பிட்டாய்ங்கய்யா, கெளம்பிட்டாய்ங்க!

‘மாக்கான்’ங்கறது மாயவரம் சைடில செல்லமான பிரயோகம்ங்க!

இத்தனைக்கும் என் ஐடில போட்டோ போட்டு வேற பயமுறுத்தறேன், என்னியப் போயி முகமூடின்றியளே, இது நல்லாவா இருக்கு ?!

Anonymous said...

மன்னிக்கணும் ராம் சார்! நான் முகமூடி தளத்தோட தீவிர வாசகன். அந்த உரிமைல சொன்னேன். kelambinavangka கொள்ளப் பேரு ஆள் அட்ரஸ் இல்லாமப் போயிட்டாய்ங்க்க!

Anonymous said...

//
‘படத்துறையில் நான்’ங்கறதை நீங்களும் ‘படித்துறையில் நான்’னு போட்டிருக்கீங்க, ஒரு பய மக்கானும் இதைப்பத்தி இன்னும் கேக்கலைங்கறேன்?!//

ராம் அண்ணாச்சி! படத்தோட பேரு, படித்துறை. அதத்தான் ஹபி அண்ணாச்சி 'படித்துறையில் ஒருநாள்'-னு எழுதியிருக்காரு. அதுகூட வெளங்காம மத்த எல்லாரையும் மாக்கானுப்பிட்டீங்களே. இப்ப நீங்கதான் அண்ணாச்சி மாக்கானா நிக்கறீங்க. பாத்துக்கிடுதுங்க.

Subramanian said...

அண்ணாச்சி சுகா எங்க ஊரு காரருங்கதுக்காக சொல்லல..நீங்க சொன்ன மாதிரி தெறமையான ஆளுங்க,நெல்லையப்பர் சாமி அருளால படம் நல்லா ஓடனும்.