பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 02, 2010

ஷெனாய் இசையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை


இந்த இசையை கேட்பதற்கு காது மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். காது வழியாக நெஞ்சை தொடும் இசை. (2.05 நிமிடங்களில் உங்கள் கண்களில் கண்ணீர் வரும்). முழுவதும் கேட்டுவிட்டு இந்த கட்டுரையை படியுங்கள்.

ஒரு தேசத்தின் வரலாற்றில், ஈடு செய்ய இயலாத தனிமனித இழப்புகள் நிகழ்வதும், ஒருவரின் இழப்பிற்காக தேசமே கண்ணீர் சிந்துவதும் நூற்றாண்டுகளுக்கொருமுறை நிகழும் அரிய நிகழ்வாகும். அவ்வாறாக தேசமே கலங்குமளவிற்கு ஒரு தனிமனித இழப்பென்றால் அது ஒரு அரசியல் வித்தகராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதனை நிரூபிக்கும் விதமான இழப்பு, ஷெனாய் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் என்ற மஹாபுருஷருடைய இழப்பு. இசையோடு ஒன்றிப் பிணைந்த கலாச்சாரத்தையுடைய பாரத தேசம் வழங்கிய கொடை!! காசி நகர், விஸ்வநாதருக்கும், விஸாலாக்‌ஷிக்கும் இணையாக மதித்த ஒரு இணையற்ற இசைக் கலைஞர் காலஞ்சென்ற திரு.உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான்.

1916 ஆம் ஆண்டு பீஹார் மாநிலத்தில் பிறந்த இவரது தந்தை போஜ்புரி மன்னரின் அரசவையில் ஷெனாய் கலைஞராக இருந்தார். பிறகு இவரது குடும்பம் அவரது பூர்வீகமான பெனாரஸிற்கு (காசி) இடம் பெயர்ந்தவுடன் இவரது ஷெனாய் குருகுலம் இவரது தாய்மாமாவிடம் துவங்கியது. அவரது மாமா, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஷெனாய் கலைஞராக இருந்துவந்தார். இசைக்கு மத, மொழி வேறுபாடுகள் கிடையாதென்பதற்கு இவரது குடும்பம் ஒரு உதாரணம். இஸ்லாமியராக இருந்தாலும், கலைவாணியான சரஸ்வதியின்பால் அதீத பக்தி கொண்டவர். இவரது அன்றாடப் பணிகள் சரஸ்வதி பூஜைக்குப் பின்னரே துவங்கும்.

பொதுவாக, திருமணம் மற்றும் சடங்குகளில் நடக்கும் சிறு அளவிலான இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே என்றிருந்த ஷெனாய் இசைக்கருவிக்கு (நாதஸ்வரம் போன்ற, ஆனால் அதை விட அளவிலான சிறிய இசைக்கருவி) புதிய முகவரி கொடுத்து, கச்சேரி மேடைகளிலேற்றிய பெருமை இவரையே சாரும். 1930 இல், தனது பதினான்காவது வயதிலேயே, அலஹாபாத்தில் நடைபெற்ற அனைத்திந்திய இசை மாநாட்டில், அம்மாநாட்டின் சிறந்த இசைக்கலைஞராக தேர்வு செய்யப்பெற்றார். பிறகு 1937 இல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் அதே விருதினைப் பெற்றார். பிறகு இசையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி விருது, மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் தான்சேன் விருது மற்றும் அரசாங்கத்தின் பத்ம விருதுகள் மூன்றும் என அனைத்தையும் பெற்றார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக பாரத தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று அவ்விருதிற்கே ஒரு கெளரவத்தை ஏற்படுத்தினார்.

இப்பெருமைகளல்ல்லாமல், வேறொரு மிகப்பெரிய கெளரவமும் இவருக்கு உண்டு. பாரத தேசத்தின் சுதந்திர தினத்தையும், முதல் குடியரசு தினத்தையும் தனது ஷெனாய் இசையின் மூலம் வரவேற்ற பெருமை இவரைச் சாரும். 1947, ஆகஸ்டு 15 மாலை தில்லி செங்கோட்டையில், பாரத்த்தின் சுதந்திரத்தனை வரவேற்கும் பொருட்டு இவரது இசைக் கச்சேரி நடைபெற்றது. அதே போல 1950, ஜனவரி 26 அன்றும், செங்கோட்டையில் இந்தியாவின் முதல் குடியரசு தினத்தை தனது ஷெனாய் இசை மழையின் மூலம் வரவேற்றார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களில்,செங்கோட்டையில் பிரதமரின் உரைக்குப் பிறகு இவரது ஷெனாய் கச்சேரி நடப்பது ஒரு மரபாகவே ஏற்படுத்தப்பட்ட்து. தூர்தர்ஷன் அதனை நேரடியாக ஒளிபரப்பும்.

ஷெனாய்க்கு அடுத்து இவர் அதிகமாக அறியப்படுவது இரண்டு விஷயங்களுக்காக. அவற்றுள் ஒன்று சரஸ்வதியின்பால் இவருக்குள்ள பக்தி, மற்றொன்று தேச பக்தி, குறிப்பாக பெனாரஸ் மற்றும் கங்கையின் மீதான இவரது பக்தி. காசி விஸ்வநாதர், விஸாலாக்‌ஷி ஆலயங்களில் எண்ணிலடங்காத இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். உலகிலுள்ள அநேக நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ள இவரை, அமெரிக்காவிலுள்ள பிரபல பல்கலைக்கழகமொன்று, அவரை அங்கேயே நிரந்தரமாகத் தங்கி, தமது மாணவர்களுக்கு இசை பயிற்றுவிக்குமாறு அழைப்பு விடுத்த்து. அதற்கு அவர் கூறிய பதில்,

“ என்னுடைய பெனாரஸையும், கங்கை நதியையும் உங்களால் அமெரிக்காவிற்கு தருவிக்க முடியுமென்றால், எனக்கு அங்கேயே தங்கிவிடுவதில் ஆட்சேபணையேதுமில்லை”

தவிர, வாழ்க்கையில் மிகுந்த சுகம் தரக்கூடியதான விஷயமாக இவர் குறிப்பிடுவது, கங்கைக்கரையில் நமாஸ் செய்வதையும், அங்கு காசி விஸ்வநாதரின் பிரசாதங்களோடு கூடும் மக்களைக் காண்பதும் ஆகும்.

இவர் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் காலத்தில், இந்திய அரசாங்கம் இவரை தில்லிக்குத் தருவித்து உயர் சிகிச்சை அளிக்க முன்வந்த போதிலும், என்னுடைய இறுதி மூச்சு பெனாரஸிலேயே பிரிய வேண்டும் என்று மறுத்து, பெனாரஸ் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையிலேயே காலமானார். தனது பூர்வீக மண்ணின்பால் அவர் கொண்ட காதலை என்னென்று சொல்வது?

இவர் இறந்த பிறகு இவரது ஷெனாய் கருவி, இவர் சிதையோடு சேர்த்து எரியூட்டப்பட்ட்து. இவரது இறந்த தினம் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டு, கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டன. இவரது சிதை 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட்து.

- யதிராஜ்இந்த வீடியோவையும் பார்த்துவிடுங்கள்

9 Comments:

பாரதி மணி said...

தில்லியில் இந்த மகானின் பல இசைக்கச்சேரிகளை கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றவன் நான். திரு என்.பி. சேஷாத்ரி நடத்திவந்த நேஷனல் கல்சுரல் ஆர்கனைஸேஷன் சார்பில் நடக்கும் வருடாந்திர இசைவிழாக்கள் இவர் இசையுடன் தான் தொடங்கும்.

பான் (வெற்றிலைபாக்கு) போடும் பழக்கமுள்ள இவர் ஒருநாள் கச்சேரி முடிந்தபின் பான் கேட்டார். உதவியாளர் வெற்றிலைசெல்லத்தை கொண்டுவர மறந்திருந்தார். பக்கத்தில் யாரிடமும் இல்லை. உடனே நான் பாதி இரவில் தில்லி முழுவதும் அலைந்து திறந்திருந்த ஒருகடையில் ஏழெட்டு பான் வாங்கி அரைமணி நேரத்தில் திரும்பிவந்து அவரிடம் கொடுத்தேன். பிரித்து வாயில் போட்டுக்கொண்டே, ‘ஜீத்தே ரஹோ, பேட்டா! இஸ் பான் கா கீமத் சுக்கானா முஷ்கில் ஹை!’(நல்லாயிரு குழந்தே. இந்த பான் விலை மதிப்பற்றது) என்று தலையைத்தொட்டு ஆசீர்வதித்தார்.Great Humanbeing!

IdlyVadai said...

திரு பாரதி மணி,

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

நீங்கள் ஒரு மெயில் அனுப்பியிருந்தாக சொல்லியிருந்தீர்கள், அது வரவில்லை. திரும்ப அனுப்ப முடியுமா ?

நன்றி
இட்லிவடை

ரிஷபன் said...

அற்புதமான கட்டுரை.

இவரைப் போன்றோர்க்கு விருது கொடுக்கும் போது அந்த விருதுக்கு பெருமை என்று சொல்லலாம்.

நம்ம சின்ன கலைவானர் போன்றோர்கு தந்த பிறகு அந்த விருதை மரியாதைப்பட்ட யாருக்கும் கொடுத்தால் அது ............அய்யோ பாவம்.

Baski said...

A great human being. Thanks to IV/Yudhiraj for sharing information about a great personality.

S. Krishnamoorthy said...

பாரத ரத்னா விருதே நமது விருதுப்பெட்டித் தமிழகக் கலைமாமணிபோல் ஆகிவிட்ட பிறகு விருதும் சருகும் ஒன்றாகிவிட்டன.
கிருஷ்ணமூர்த்தி

பாரதி மணி said...

இருமுறை அனுப்பியும், உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால்,ஆச்சரியமாகஇருக்கிறது.

நான் ஒரு ‘கணினி கைநாட்டு’ தான் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம். மறுபடியும் அனுப்புகிறேன்.

பாரதி மணி

Shankar said...

இங்கு இன்னும் ஞாயிறு ஆரம்பிக்கவில்லை. ஆனால் சனி இரவே நெகிழவைத்துவிட்டீர்கள். யூ ட்யூப்பிலிருந்து இதை mp3 ஆக மாற்றிவிட்டுதான் ஓய்ந்தேன். ம்ம்...ஒற்றுமை என்று போட்டுவிட்டீர்கள்...ஆனால் மனம் தான் கேட்க மாட்டேனென்கிறது.. ஒரு கொலைகாரனுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு...சரஸ்வதியைப் பூஜித்து நாளை ஆரம்பித்த இந்த மஹான்...எதிர்ப்பதமாக இன்னொருவரும் ஞாபகத்துக்கு வருகிறார்...என்ன செய்ய?

RamMmm said...

சிறு திருத்தம். அவரது ஷெனாய் வாத்தியம் அவரது உடலோடு புதைக்கப்பட்டது.

Rajagopalan said...

Really wonderful article. I have heard his concert once directly. He indeed belongs to all of us. Sheikh Chinnamoulanah, Nadaswara Vidhwan also reflected a similar kind of feelings.