பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 25, 2010

நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா! - பாரதி மணி

அன்புள்ள இட்லிவடை:

முந்தைய கநாசு கட்டுரைக்கு நான் எதிர்பாராத வரவேற்பிருந்தது. பல பழைய நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு பாராட்டினார்கள். இட்லிவடைக்கு நல்ல வீச்சு!

கட்டுரையில் வரும் என் பக்கத்துவீட்டு இளைஞன் தான் இதை எழுதத்தூண்டுதல். இளைய தலைமுறைக்கு பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றது. தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. என்னைப்போன்ற ‘பெரிசு’களுக்கு இது கவலையைத்தருகிறது.

படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால், குடியரசு தினத்தன்று வெளியிடவும்.
பாரதி மணி


நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா! - பாரதி மணி

நான் தில்லிக்குப்போன பிறகு பார்த்த(?) முதல் குடியரசுதின விழா 1956-ம் ஆண்டு. உண்மையைச் சொன்னால் ஏதோ ஒரு படத்தில் பழம்பெரும் நடிகர் ’என்னத்தே’ கன்னையா சொன்னது போல் ‘பாத்தேன்….. ஆனா…. பார்க்கலே’ என்று சொல்வது தான் சரியாக இருக்கும். 150 சானல்களுள்ள டி.வி.யும் கையில் ரிமோட்டும் வராத காலம். அதற்கு முன்னால் எங்களூரில் சினிமாத் தியேட்டர்களில் மெயின் பிக்சருக்கு முன்னால் போடப்படும் Indian Newsreel No. 1049-ல் பிரதீப் ஷர்மா அல்லது மெல்வில் டிமெல்லோவின் விளக்கவுரையுடன் குடியரசுதின விழாவை திரையில் தான் பார்த்திருக்கிறேன்.

நான் 1955-ம் வருடம் தில்லி போனபோது, அந்த வருடத்திய குடியரசு விழா நடந்து முடிந்திருந்தது. 1956-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி விழாவுக்கு நேதாஜிநகர் அக்கா வீட்டுக்குப்பக்கத்திலிருந்த S.N. Depot-விலிருந்து அதிகாலை நான்கு மணியளவில் ஊர்வலம் நடக்கும் ராஜ்பத்துக்கு (அப்போது அந்தப்பெயர் சூட்டவில்லை Kingsway தான்) ஸ்பெஷல் பஸ்கள் விடுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. சரி, போய்ப்பார்ப்போமே என்று தெரியாத்தனமாக முடிவு செய்தேன்.


தில்லிக்குளிரில், என் அக்கா மூன்று மணிக்கே எழுந்து, அவசர அவசரமாக தேங்காய்சாதம், பூரிக்கிழங்கு, தயிர்சாதம், வடாம் வற்றல்கள் தயார் செய்து கொடுத்தனுப்பினாள். காத்திராமல் பஸ் கிடைத்தது. ஆனால் டைவர்ஷன் என்கிற பெயரில் துக்ளக் ரோடு பக்கமாக இறக்கிவிட்டுவிட்டார்கள். அங்கிருந்து நடையோ நடை. இன்றைய போலீஸ் கெடுபிடியொன்றுமில்லாமல் ராஜ்பத் போய்ச்சேர்ந்தேன். விடியாத இருளில், கொண்டுபோயிருந்த ஜமுக்காளத்தை பனியால் நனைந்திருந்த புல்வெளியில் விரித்து குளிருக்கு இதமாக ஷாலை போர்த்திக்கொண்டு நாலரை மணிக்கே உட்கார்ந்துவிட்டேன். ஒன்பதரை மணிக்கு ராஷ்டிரபதிபவனிலிருந்து திறந்த குதிரை சாரட்டில் வரும் திரு. ராஜேந்திர பிரசாத் என்னைத்தாண்டித்தான் Saluting Base-க்குப்போகவேண்டும். பத்து நிமிடத்துக்குள் ராஜஸ்தானிலிருந்து ஒட்டகவண்டியில் ‘சப்பீஸ் ஜன்வரி’ பார்ப்பதற்காகவே தில்லி வந்த ஐந்தாறு ராஜஸ்தானி குடும்பங்கள் என்னை சுற்றி வளைத்து உட்கார்ந்துகொண்டன. அங்கே தண்ணீரில்லாத காரணத்தால் வருடத்திற்கொரு முறையே குளிப்பவர்கள். அணிந்திருக்கும் ஜிப்பா வேஷ்டி, நீண்ண்ட தலைப்பாகையை வருடத்திற்கு இருமுறை தோய்த்து விடுவார்கள்! தண்ணீரே கண்டறியாத அவர்கள் போர்த்தியிருந்த ரஜாய் நாற்றத்தையும் மீறின ஒட்டக வாசனை! ஐய்யோ, எப்படி இதை ஐந்துமணி நேரம் பொறுத்துக்கொள்வது என்ற யோசனையிலிருந்த போது ஆரம்பித்தது அதைவிட பெரிய பிராணாவஸ்தை! என்னைத்தவிர சுற்றியிருந்தவர்களுக்கு எல்லாம் தீவிர Gas Trouble! போதாததற்கு முந்தைய இரவு அளவுக்கதிகமாக வேர்க்கடலையும், மூலி என்றழைக்கப்படும் முள்ளங்கியும் பச்சையாக நிறைய சாப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள் போர்த்தியிருந்த கனமான ரஜாயையும் மீறி அவர்களது அபானவாயுத் தொல்லை தாங்கமுடியவில்லை. ’குடியரசு’ என்ற வார்த்தையின் முதல் எழுத்தையும் கடைசியெழுத்தையும் தன் பெயராகக்கொண்டிருந்தாலோ என்னவோ அந்த வாயு அன்று என்னை ரொம்பவே படுத்தியது. ’மெளனம் பிராணசங்கடம்’ என்ற பழமொழியின் பொருள் அன்றுதான் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவராக முறை வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்கினார்கள். எழுந்து ஓடிவிடலாமா என்ற யோசனையை தற்காலிகமாக ஒத்திப்போட்டேன். ஏனென்றால் நான் உட்கார்ந்த இடம் ஜனாதிபதி உட்காரப்போகும் Saluting Base அருகிலிருந்தது. தவிர இந்தியா கேட் வரை கூட்டம் நிரம்பிவிட்டது. குடியரசுதின விழா பார்க்க வந்ததற்கான தண்டனை இது. சகித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எப்படி? பார்வதிபுரத்தில் நான் கற்றுக்கொண்ட பிராணாயாமம் கைகொடுக்குமென்று நினைத்து, எழுந்து நின்று மூச்சை உள்ளடக்கி நிறுத்திக்கொண்டேன். அதையும் மீறித்தாக்குகிறது. கொஞ்சநேரத்தில் இதுவும் பழகிவிடும் என்று நினைத்து மறுபடியும் உட்கார்ந்தேன். அன்று நான் பட்ட அவஸ்தை வேறு யாருக்கும் நேரக்கூடாது! அரைநூற்றாண்டுக்குப்பிறகும் இன்னும் மறக்காத அனுபவம்! கொஞ்ச நேரத்தில் கிழக்கு வெளுத்து விடிய ஆரம்பித்தது. நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாலை பனிமூட்டத்தையும் மீறி சூரியவெளிச்சத்தில் பிரும்மாண்டமான இந்தியா கேட் தெரிகிறது. அப்போது மணி ஆறரை தான். இன்னும் மூன்றுமணிநேரத்தை இந்த நரகவேதனையில் எப்படி கழிக்கப்போகிறேன் என்பதுதான் அப்போதைய தலையாய -- இல்லை, மூக்காய --பிரச்னை!


ஒருவழியாக நான் மயக்கமடையாமல் அந்தவேளையும் வந்தது. குடியரசு மாளிகையிருந்த ராய்ஸினா குன்றிலிருந்து குதிரைப்படை முன்னே வர ஜனாதிபதி அமர்ந்து வந்த சாரட் வண்டியின் குளம்பொலி கேட்கத்தொடங்கியது. அடுத்தநொடியே எங்கள் நாகர்கோவில் கிருஷ்ணா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த புதுப்படம் ரிலீஸாகும் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் கெளண்டருக்கு முன்னால் இருப்பது போலிருந்தது. பின்னாலிருந்து முன்னேறி வரும் கூட்டத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல் கீழே விரித்திருந்த பெட்ஷீட், உணவுப்பொட்டலங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம்கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளப்பட்டு கடைசிஆளாக ஒரு கேனையனைப்போல் முழித்துக்கொண்டிருந்தேன். குதிரைகளின் குளம்புச்சத்தம் மட்டும் கேட்கிறது; ஆனால் முன்னால் முண்டியடித்துப்போனவர்களின் தலைகள் தான் தெரிகிறது. நானிருக்கும் உயரத்துக்கு எட்டியும் பார்க்கமுடியாது!

எனக்கு வந்த ‘நபும்சக’ கோபத்தில், கூட்டத்தைவிட்டு வெகுதூரத்தில் புல்தரையில் பெட்ஷீட்டை விரித்து தனியாக உட்கார்ந்து கொண்டுவந்திருந்த வாரப்பத்திரிகைகளை படிக்கத்தொடங்கினேன். கம்பத்துக்கு கம்பம் கட்டியிருந்த ஒலிபெருக்கியிலிருந்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நேர்முக வர்ணனை மட்டும் தெளிவாகக்கேட்டது. பக்கத்திலிருந்த மரத்திலேறிப்பார்ப்போமா என்று ஒரு சின்ன யோசனை. சிறுவயதிலிருந்தே மரமேறிப்பழக்கமில்லாததால், அந்த யோசனையை உடனே கைவிட்டேன்!


சிறிதுநேரத்தில், ‘வீட்டிலிருந்தால் இப்போது ரேடியோ கமென்டரியைத்தானே கேட்டுக்கொண்டிருப்போம்’ என்ற நொண்டி சமாதானத்தோடு பத்திரிகையை மீண்டும் கையிலெடுத்தேன். அப்போது ஒரு மூன்று-நான்கு வயது குழந்தையொன்று என்னை நோக்கி ஓடிவந்தது. வேற்றுமுகம் பாராமல் என் மடியில் உட்கார்ந்து என் கண்ணாடியை பிய்த்தெடுத்தது. என் மூக்குக்குள் தன் பிஞ்சுவிரலை விட்டு எதையோ தேடியது. தில்லி எருமைப்பால் ஊட்டி வளர்த்த கழுக் மொழுக் பஞ்சாபிக்குழந்தை. அழகான குழந்தை. என் சட்டைப்பாக்கெட்டில் என்ன, கொண்டுவந்த பையில் என்னவிருக்கிறதென்று ஆராய ஆரம்பித்தது. ’க்யா நாம் ஹை, பேட்டா?’ என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. சுற்றுமுற்றும் குழந்தையின் பெற்றோர்கள் தென்படுகிறார்களாவென்று பார்த்தேன். ஊஹூம்...குழந்தையின் பக்கம் யாரும் திரும்பவில்லை. எல்லோரும் அப்போது மேஜர் பிரதாப்சிங் தலைமையில் அணிவகுத்துச்செல்லும் ராஜ்புட்டாணா ரைபிள்ஸ் ஜவான்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? ‘பிள்ளை பிடிப்பவன்’ என்று போலீஸ் வந்து ரெண்டு தட்டு தட்டினால் என்ன பதில் சொல்ல? நான் நல்லவன் தான் என்று சொல்ல குழந்தைக்கு பேசவும் தெரியாது! அக்கா கொடுத்துவிட்டிருந்த பொட்டலத்திலிருந்த நாடா பக்கோடாவை நானும் குழந்தையும் – நான் கொஞ்சமாக குழந்தை நிறைய்ய – சாப்பிட்டு முடித்தோம். திரும்பிப்பார்த்ததில் ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்த ஆவடி டாங்க்கின் மூக்கு மட்டும் உயரத்தில் தெரிந்தது. இத்தனைதூரம் வந்ததற்கு, கொண்டுவந்த சாப்பாட்டையாவது ஒழுங்காக சாப்பிடலாமென்று நினைத்து, ஒலிபெருக்கிகளிலிருந்து வரும் ரன்னிங் கமெண்டரியைக் கேட்டுக்கொண்டே தேங்காய்சாதம், பூரிக்கிழங்கு, தயிர்சாதம் என்ற ஆர்டரில் ஒவ்வொன்றாகப்பிரித்து குழந்தைக்கும் ஊட்டிவிட்டு நானும் சாப்பிட்டேன். அந்த பஞ்சாபிக் குழந்தைக்கு இதுதான் முதல் தென்னிந்திய உணவாக இருந்திருக்கவேண்டும். என் மருமகன்களைப் போல் படுத்தாமல் சமத்தாக (நிறைய்ய்ய) சாப்பிட்டது. பக்கத்திலிருந்த ஃபெளண்டன் அருகில் போய் குழந்தைக்கு கைகழுவி வாயைத்துடைத்துவிட்டேன். சாப்பிட்ட தெம்பில் குழந்தை என்னைச்சுற்றி ஓடி விளையாடத்தொடங்கியது. குளிருக்காக கொண்டுவந்திருந்த (என் அத்தானின்) குரங்குக்குல்லாயை நான் வீசியெறிய, குழந்தை கொள்ளைச்சிரிப்புடன் ஓடிப்போய் அதை எடுத்து வந்தது. இதையே ஒரு விளையாட்டாக கொஞ்சநேரம் தொடர்ந்தோம். இதற்கிடையில், ஒலிபெருக்கிகளில் ‘கடைசி ஐட்டமாக விமான அணிவகுப்பு நடைபெறும்’ என்ற அறிவிப்பு வந்தது. ‘போங்கடா, இதைப்பார்க்க உங்க தயவு தேவையில்லை’ என்று மனதில் நினைத்துக்கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ணாந்து பார்த்தேன். முதலில் மலர் தூவிக்கொண்டே வந்த இந்தியக்கொடியேந்திய ஹெலிகாப்டர்கள். தொடர்ந்து 2, 3, 4, 3, 2 என்ற Formation-ல் ஜெட் விமானங்கள், கடைசியாக ஆரஞ்ச், வெள்ளை, பச்சைக்கலரில் புகையுடன் ஆகாயத்தைக்கிழித்துக்கொண்டு மேலே போய் மறையும் மூன்று ஜெட் விமானங்கள். சுபம்! அந்த வருடத்து ரிபப்ளிக் டே பரேட் நான் பார்க்காமலே இனிதே நிறைவுற்றது. என்னை பார்க்கவிடாமல் பின்னுக்கு தள்ளிய நாசகாரக்கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. ஆமாம், இப்போது இந்தக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய? சரி, கூட்டம் குறையட்டும் என்று சற்றுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அந்த அழகான குழந்தையின் பெற்றோர் கூட்டத்திலிருந்து விடுபட்டு வந்து, ‘அரே முன்னா, அங்க்கில் கே ஸாத் மஸ்தி கர் ரஹே ஹோ! அங்க்கில் கோ சுக்ரியா போலோ’ என்று குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘படுத்தாமல் இருந்தானா? ரொம்ப தாங்க்ஸ்’ என்று விடைபெற்றுச் சென்றார்கள். அவர்கள் குழந்தைத்தொந்தரவு இல்லாமல் இரண்டுமணி நேரம் ‘சப்பீஸ் ஜான்வரி பரேட்’ பார்க்க, இந்த ‘அசமஞ்சம்’ Babysitting பண்ணி்க் கொண்டிருந்தது! அவர்கள் போனபின் தான் குழந்தையின் பெயரை கேட்டுவைத்துக்கொள்ளவில்லையே என்று தோன்றியது. அந்தக்குழந்தைக்கு இன்று 56 வயது ஆகியிருக்கும்! நிச்சயமாக என்னை அவருக்கு நினைவிருக்காது!

வீட்டுக்குப்போனதும், என் அக்கா கேட்ட ’எப்படீடா இருந்தது? எல்லாம் பாத்தியா?’ என்ற கேள்விக்கு, ‘நீ தந்துவிட்ட தேங்காய்சாதமும், பூரிக்கிழங்கும் நன்னா இருந்துது’ என்றுதான் என்னால் பதில் சொல்லமுடிந்தது!

அதற்குப்பிறகு தில்லியில் எனக்கென ஒரு விலாசமும் அதையொட்டிய ’வியாபகமும்’ வந்தபிறகு, பாதுகாப்பமைச்சகத்திலிருந்து VVIP Pass வாங்கி பலமுறை குடியரசுத்தலைவர் அமரும் பகுதியிலேயே உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் என் முதல் அனுபவம் மறக்கமுடியாதது. 1982-க்குப்பிறகு இந்தியாவில் கலர் டிவி வந்தபின் தில்லி தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பை வீட்டிலிருந்தே பார்க்க வசதி வந்துவிட்டதால், அதற்குப்பிறகு போனதேயில்லை.

இந்தத்தலைமுற இளைஞர்கள் எத்தனை பேருக்கு Beating the Retreat என்பதன் பொருள் தெரியும்? போனவருடம் ஜனவரி 29-ம் தேதி மாலை என் சென்னைவீட்டில் எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆண்டுதோறும் தவறாமல் பார்க்கும் இந்த நிகழ்ச்சியை தில்லி தூர்தர்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் பக்கத்துவீட்டு இளைஞன் என்னைப்பார்க்க வந்தான். அவனுக்கு இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நீ இந்தியனாக இருக்கவே லாயக்கில்லாதவன் என்ற கோபத்துடன் ’உன் தந்தையிடம் போய்க்கேள்’ என்று சொல்லியனுப்பினேன். அந்த மகானுபாவருக்கும் பீட்டிங் தி ரெட்ரீட் பற்றி எந்த தகவலும் இல்லை. இன்னும் நான்கு இளைஞர்களிடம் கேட்டேன். They were also blissfully ignorant about this grand National Ceremony!

தமிழ்நாட்டில் இன உணர்வு என்று சொன்னவுடனேயே, பலருக்கும் ‘கல்தோன்றி மண்தோன்றாக்காலமும்’, ‘புலியும் முறமும்’ தான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறதென்று நான் சொன்னால், என் வீட்டுக்கும் ஆட்டோ வரலாம். நான் சொல்வதெல்லாம், Both our ancient Tamil Pride and National Pride can peacefully co-exist within ourselves without any quarrels என்பது தான்! அவை ஒன்றுக்கொன்று விரோதிகளல்ல. இதற்கு ஐம்பதுகளில் நமக்கு போதிக்கப்பட்ட ஹிந்திவெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். தேசியத்தையும் இந்தியையும் நாம் ஒருசேரப்பார்க்கிறோம். தமிழக அரசியலை வெளியிலிருந்து கவனித்துவருபவன் என்ற நிலையில், நம்மில் பலருக்கு தேசிய உணர்வு என்பது நீர்த்துப்போயிருக்கிறதென்பதே உண்மை. சென்னை கோட்டையில் ஆண்டுக்கொருமுறை கூடி தேசிய உறுதிமொழியை அச்சிட்ட காகிதத்தைப்பார்த்து படித்துவிட்டு, போகும்போது அதை காற்றில் வீசிவிட்டுத்தான் போகிறோம். தூக்கத்திலிருந்து எழுப்பிக்கேட்டாலும், ‘நான் ஓர் இந்தியன்’ என்று மிடுக்கோடு பதில் வருவதற்கு மாறாக, ‘I am also an Indian’ என்று யோசித்து சொல்லும் பதிலாக இருக்கிறது. தேசியம் என்பது நமக்கு தமிழ்நாட்டைத்தாண்டி, தில்லி போகும்போது குளிருக்கு போர்த்திக்கொள்ளும் ஒரு போர்வையாகவே உள்ளது. பட்டிமன்ற மேடைகளில் மட்டுமே பகத்சிங், லாலா லாஜ்பத் ராய், ராணி லட்சுமிபாய் போன்ற பெயர்களில் ஒரு பேசுபொருளாக உதவுகிறது. நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு நமது தேசியகீதத்தை முழுவதுமாக, கடைசி வரி வரை பிழையின்றி – ஆம், பிழையின்றி – உரக்கப்பாடத்தெரியும்? நிச்சயமாக அது இந்திமொழியில் இல்லை! பாராளுமன்றம் சென்னையிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! ‘இப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பிரயோசனம்?’ என்று பதில்கேள்வி கேட்ட என் பக்கத்துவீட்டு இளைஞன் தான் இன்றைய சமூகத்தின் முகம்!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் தேதி தொடங்கும் நமது குடியரசுதின விழா 29-ம் தேதி மாலை ஆறுமணிக்கு Beating the Retreat நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவடையும். Grand Finale! 2009-ம் ஆண்டு மட்டும் அந்த சமயத்தில் நம் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் இறந்துபோனதால் Beating the Retreat நடைபெறவில்லை. 1690-ல் இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ்-II காலத்திலிருந்து நடந்துவருகிறது. போருக்கு புறப்பட்ட படைகள் வெற்றிவாகை சூடி சூரிய அஸ்தமனத்துக்குப்பின் போரை நிறுத்திவிட்டு, மகிழ்ச்சியுடன் தங்கள் (Barracks) பாசறைகளுக்குத் திரும்பும் நிகழ்ச்சி. இந்தியா குடியரசான பின் 1950-ல் மேஜர் ராபெர்ட் தலைமையில் முதல்முறை நடைபெற்றது.

நான் தில்லியில் இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் நேரிலோ அல்லது தூர்தர்ஷனிலோ தவறாமல் கண்டுகளிக்கும் நிகழ்ச்சி. எத்தனைதடவை பார்த்தாலும் அலுக்காமல், ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முப்படைகளின் Brass, Pipes and Drums இசைக்கருவிகளின் சங்கமம். சரியாக மாலை ஐந்துமணிக்கு ராய்ஸினா குன்றின் மேலிருக்கும் ராஷ்ட்ரபதி மாளிகையிலிருந்து தாளகதி தவறாமல் வாசிக்கும் இசைக்கேற்ப விஜய் செளக் நோக்கி அணிவகுத்து நடந்துவரும் முப்படை வீரர்கள் பார்க்க புற்றிலிருந்து வெளிவரும் எறும்பு வரிசை போலிருக்கும். எனக்கும் காந்திஜிக்கும் மிகவும் பிடித்த ‘Abide with me…’ என்ற hymn எப்போது வருமென்று காத்திருப்பேன். நடுவில் ட்ரம்கள் மட்டுமே பங்கெடுக்கும் Drummers’ Call தனியாவர்த்தனம். தொடர்ந்து முப்படைகளின் சக்ரவியூக ஃபார்மேஷனில் Veer Kargil, Deshon Ka Sartaj, Pyaari Bhoomi இப்படி வந்து காதையும் கண்ணையும் நிறைக்கும். ஒருமணிநேரம் போவதே தெரியாது. கடைசியாக கோரஸில் Saare Jahan Se Achchaa Hindustan Hamaaraa வாசித்துக்கொண்டு அனைவரும் திரும்பிப்போகும்போது நமது இந்தியமனம் இசையில் கரைந்து, அவர்களோடு போய்விடும். அந்த அந்தியிருட்டில், மணிச்சத்தத்துக்கிடையே ராஷ்டிரபதி பவன், செளத் ப்ளாக், நார்த் ப்ளாக், பாராளுமன்றக்கட்டடம் எல்லாம் ஒரே நேரத்தில் வரிசை விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளிக்கும். அந்த க்ஷணத்தில் ஒருதுளி தேசிய உணர்வுள்ளவருக்கும் நெஞ்சு இரண்டு இஞ்சாவது விம்மியிருக்கும். அதற்கு நான் காரன்ட்டீ!

என் மூத்தமகள் ரேவதியின் திருமணம் ஜனவரி 29-ம் தேதிதான் நடந்தது. அன்றுமாலை ரிசப்ஷனுக்கு வந்திருந்த விருந்தினர் நண்பர்கள் பார்க்க ஏதுவாக கல்யாண மண்டபத்தில் பெரிய திரையில் அன்று மாலை ஒளிபரப்பான Beating the Retreat திரையிடப்பட்டது. கல்யாணக்கச்சேரி, இசைநிகழ்ச்சிக்கு பதிலாக, ஆர்மியில் ‘பெரிய இடத்து’ சிபாரிசு மூலம் Indian Army Band தான் ஏற்பாடு செய்திருந்தேன். சாதாரணமாக ‘தனிநபர்’ நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு அதில் மோகம்.

இதுவரை இந்த Musical Bonanza-வை நீங்கள் பார்த்ததில்லையென்றால், இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 29-ம் தேதி மாலை ஐந்துமணிக்கு தில்லி தூர்தர்ஷனில் Beating the Retreat நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். நமது ’அசட்டு’ தூர்தர்ஷன் தான் சில உருப்படியான நிகழ்ச்சிகளை இன்னும் தந்துகொண்டிருக்கிறது! இந்த ஒருமணி நேரம் மற்ற சானல்களில் வரும் மானாட மயிலாட...டீலா, பீலா?.....சூப்பர் 10.....அவனா அவளா?.....சிரி சிரி...’விடுமுறைதின’ சிறப்பு நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு இதை பாருங்கள். ’நான் ஓர் இந்தியன்!’ என்ற பெருமிதத்தில் உங்கள் நெஞ்சு ஒரு இஞ்சாவது விம்மிப்புடைக்காவிடில், பணம் வாபஸ்! அதற்கும் நான் தான் காரன்ட்டீ!
- பாரதி மணி
’காலச்சுவடு’ ஜனவரி 2010 இதழில் வெளிவந்தது

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

28 Comments:

Madhavan Srinivasagopalan said...

Interesting informations..

Republic-Day Greetings to IV & all IV fans.

Subbu said...

Very Nice. Good information on beating the retreat.
Somehow after the entry of Satellite channels, we stopped watching the Parade. Greeting on R-day celebrations.
Jai Hind

யதிராஜ சம்பத் குமார் said...

நல்ல கட்டுரை!! பாரதி மணி அவர்களுக்கு நன்றிகள் பல.

Anonymous said...

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
Source:http://thatstamil.oneindia.in/news/2010/01/25/no-national-language-india-gujarat.html

R Gopinathan said...

ஐயா wikipedia வில் தேடியபோது இந்தத் தகவல் கிடைத்தது.
---------------------
Originally it was known as watch setting and was initiated at sunset by the firing of a single round from the evening gun.

An order from the army of James II (England), otherwise James VII of Scotland dated to 18 June 1690 had his drums beating an order for his troops to retreat and a later order, from William III in 1694 read "The Drum Major and Drummers of the Regiment which gives a Captain of the Main Guard are to beat the Retreat through the large street, or as may be ordered. They are to be answered by all the Drummers of the guards, and by four Drummers of each Regiment in their respective Quarters". However, either or both orders may refer to the ceremonial tattoo.
---------------------
இதில் வெற்றிபெற்ற பின் போரை நிறுத்திவிட்டுத் திரும்புவதாக சொல்லவில்லையே? தாங்கள் மேலும் விளக்கினால் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

மேலும், 1690 ல் ஜேம்ஸ் மன்னர் ஆரம்பித்த ஒரு விஷயத்தை எப்படி நமது தேசப்பற்றுடன் முடிச்சுப்போடலாம் (அதுவும் இந்த விஷயத்தைப் பற்றித் தெரியாதவரைப் பார்த்து "நீ இந்தியனாக இருக்கவே லாயக்கில்லாதவன்" என்று நீங்கள் கோபப்படும் அளவுக்கு) என்பதையும் நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அல்லது குடியரசு தின நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சியாக வருவதாலும் நமது ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டதாலும் மட்டுமே நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா?

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

லெமூரியன்... said...

ஹ்ம்ம்.....நன்றாகத்தான் எழுதியிருக்கிறார் திரு பாரதி மணி அவர்கள்...!

ஆனால் காலச்சுவட்டில் இந்த கட்டுரை வந்ததுதான் என்னை வியப்படைய செய்கிறது..!

\\தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு நமது தேசியகீதத்தை முழுவதுமாக, கடைசி வரி வரை பிழையின்றி – ஆம், பிழையின்றி – உரக்கப்பாடத்தெரியும்?....//

நன்றாகவே பாடுவேன்....சப்தமாக..!
முன்னாள் சைனிக் பள்ளி மாணவன் ஆயிற்றே..! மூளை சலவை செய்து வைத்திருந்தார்கள்..! அதன் விளைவே அடி மனதில் தங்கி இருக்கிறது(இந்திய குடியரசு கீதம் )..!
ஆனால் அதன் அர்தம் எனக்கு சிரிப்பூட்டும்..!

\\அவனுக்கு இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நீ இந்தியனாக இருக்கவே லாயக்கில்லாதவன் என்ற கோபத்துடன்........//
ஆனாலும் திரு மணி பாரதி ஐய்யா அதிகம் டென்ஷன் ஆகிறார் என நினைக்கிறேன்...!

அதென்ன?? ஆரிய இனத்துகாரர்கள் எல்லாம் வட இந்தியாவை விமர்சிக்கும் தமிழர்களை இப்படி போட்டு தாக்குகிறீர்கள்..!

\\’நான் ஓர் இந்தியன்!’ என்ற பெருமிதத்தில் உங்கள் நெஞ்சு ஒரு இஞ்சாவது...........///
உங்களது நகைச்சுவை உணர்வு கண்டு வயிறு வலிக்க சிரித்து கிடந்தேன்.

Anonymous said...

,,,ஒட்டகவண்டியில் ‘சப்பீஸ் ஜன்வரி’ பார்ப்பதற்காகவே தில்லி வந்த ஐந்தாறு ராஜஸ்தானி குடும்பங்கள் என்னை சுற்றி வளைத்து உட்கார்ந்துகொண்டன. அங்கே தண்ணீரில்லாத காரணத்தால் வருடத்திற்கொரு முறையே குளிப்பவர்கள். அணிந்திருக்கும் ஜிப்பா வேஷ்டி, நீண்ண்ட தலைப்பாகையை வருடத்திற்கு இருமுறை தோய்த்து விடுவார்கள்! தண்ணீரே கண்டறியாத அவர்கள் போர்த்தியிருந்த ரஜாய் நாற்றத்தையும் மீறின ஒட்டக வாசனை! ஐய்யோ, எப்படி இதை ஐந்துமணி நேரம் பொறுத்துக்கொள்வது என்ற யோசனையிலிருந்த போது ஆரம்பித்தது அதைவிட பெரிய பிராணாவஸ்தை! என்னைத்தவிர சுற்றியிருந்தவர்களுக்கு எல்லாம் தீவிர Gas Trouble! போதாததற்கு முந்தைய இரவு அளவுக்கதிகமாக வேர்க்கடலையும், மூலி என்றழைக்கப்படும் முள்ளங்கியும் பச்சையாக நிறைய சாப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள் போர்த்தியிருந்த கனமான ரஜாயையும் மீறி அவர்களது அபானவாயுத் தொல்லை தாங்கமுடியவில்லை. ’குடியரசு’ என்ற வார்த்தையின் முதல் எழுத்தையும் கடைசியெழுத்தையும் தன் பெயராகக்கொண்டிருந்தாலோ என்னவோ அந்த வாயு அன்று என்னை ரொம்பவே படுத்தியது. ’மெளனம் பிராணசங்கடம்’ என்ற பழமொழியின் பொருள் அன்றுதான் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவராக முறை வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்கினார்கள். எழுந்து ஓடிவிடலாமா என்ற யோசனையை தற்காலிகமாக /////

நகைச்சுவை என்ற பெயரில் ஒரு வாந்தி.ஒரு சக மனிதனை இப்டியா விமர்சிப்பது?
உங்களுக்கெல்லாம் "அது" வரவே வராதா?இல்ல நீர் ஆத்தில் சுண்டல் ,வடை சாப்பிட மாட்டீறோ?கள்ளபருப்பு வடையும்,பட்டாணி சுண்டலும் நல்லா வக்கணையா கொட்டிண்டு ,பெருமாள் சாமி,என்று ஏழை மக்களை ஏமாற்றி திண்ணை தேய்ச்சு விட்ட குசும்பு நாத்தம் இன்னும் போலையா?
இவ்வளவு வருஷம் கழிச்சும் உங்களை போன்ற ஆட்களேஇன்னும்
திருந்தல! இந்தஅழகுல தேசியத்தபத்தி கவலை?

சீனு said...

அட! லெமூரியன், இந்த பதிவை உங்களைப் போன்றவர்களுக்கென்று நினைத்துவிட்டீர்களா? ஹா...ஹா..

Santhappanசாந்தப்பன் said...

நல்ல கட்டுரை.....

தமிழ் நாட்டில் பல பேருக்கு தேசிய கீதம் பாடத் தெரியாது என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல்.

"தேசிய மாணவர் படை" (National Cadet Corps) என்று ஒன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உண்டு. தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு அணி செல்லும். நாடு முழுவதிலிருமிருந்து, சுமார் 1800 பேர் கலந்து கொள்ளும் இந்த முகாம், ஒரு மாத காலம் நடைபெறும். இந்த "குடியரசு தின முகாம்" (RDC - Republic Day Camp) அன்றுதான் நிறைவு பெறும். சிறப்பாக செயல் பட்ட அணிக்கு, "வெள்ளைப் பதாகை" அல்லது "பிரதம மந்திரி பதாகை" எனப்படும் விருது கொடுத்து கெளரவிப்பார்கள். இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அணி பலமுறை வெற்றிப் பெற்றுள்ளது.

எந்த ஒரு தேசிய மாணவர் படை வீரனுக்கும், குடியரசு தின முகாமில் (RDC) இடம் பெறுவது தான் இலட்சியம். ஒரு ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், NCC பயிற்சி முடித்து வெளி வருகிறார்கள். இவர்களில், 99% சதவீதம் பேருக்கு "Beating the Retreat" பற்றி தெரிந்திருக்கும்.

Baski said...

நல்ல கட்டுரை. நன்றி பாரதி மணி அவர்களே.

//தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு நமது தேசியகீதத்தை முழுவதுமாக, கடைசி வரி வரை பிழையின்றி – ஆம், பிழையின்றி – உரக்கப்பாடத்தெரியும்? நிச்சயமாக அது இந்திமொழியில் இல்லை! பாராளுமன்றம் சென்னையிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!//

உங்கள் கோவம் நியமானது. திராவிட கட்சிகள் நமக்கு கற்று தந்த நாட்டு பற்று அவ்வுளவு தான்.
என்னக்கும் சுத்தமாக பாட தெரியும்.
அனால் இன்னைக்கு வரைக்கும் அர்த்தம் முழுவதுமாக தெரியாது. (அரை குறையாக தெரியும்)
"பெங்காலி - ஹிந்தி" எனக்கு பெரிய வித்யாசம் ஒன்னும் தெரியலை. என்பது என் கருத்து.

இந்த நிகழ்ச்சியை நான் பல முறை தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். அனால் இந்த Closing Ceremony பெயர் Beating the Retreat என இப்போ தான் தெரியும்.

btw... கவலை வேண்டாம்... நாட்டு பற்று உள்ளவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். (All is Well) :-)

Anonymous said...

குடியரசுக்கு மவுசு போய்விட்டது. இப்பொது குடி அரசு தான்.
26-ம் தேதி ஒரு ரவுண்டு மார்க்கெட்டை சுற்றி வாருங்கள். 99% கடைகள் திறந்திருக்கும், அரசு உத்திரவை காற்றில் பறக்க விட்டு விட்டு!
சென்ற வருஷம் அமெரிக்கா போயிருந்தேன். அவர்கள் சுதந்திர தினம் ஜூலை 4 அன்று, ஒவ்வோரு வீட்டிலும் தீபாவளி மாதிரி விளக்கு, கொடி என்று இருந்தது, சில அபார்ட்மென்டில் 2,3 FLOOR உயர பிரம்மாண்டமான கொடியைத் தொங்க விட்டிருந்தார்கள். 200 வருஷத்திற்கு மேல் ஆன பிறகும் அங்கு இப்படி ஒரு தேசீய உணர்வு. ஹூம்....

மணியின் மணியான கட்டுரைக்கு ஒரு பேஷ்.-- டில்லி பல்லி

Anonymous said...

Good article..but i can't able to control my yawns WHILE READING

MURALI

வழிப்போக்கன் said...

பதிவு மிக நன்றாக இருக்கிறது.
பல ஆண்டுகள் நான் வாழ்ந்த தில்லி வாழ்க்கையும் முதல்முறையாக நான் பார்த்த குடியரசு தின விழாவும், Beating the Retreatம் நினவுத் தோரணங்களாக நிழலாடுகின்றன இப் பதிவைப் படித்தவுடன். வருணனை அப்படியே காட்சியைக் கண் எதிரே நிற்பதுபோல இருக்கிறது.
பாரதிமணி தொடர்ந்து எழுதவேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி

geethasmbsvm6 said...

//கடைசியாக கோரஸில் Saare Jahan Se Achchaa Hindustan Hamaaraa வாசித்துக்கொண்டு அனைவரும் திரும்பிப்போகும்போது நமது இந்தியமனம் இசையில் கரைந்து, அவர்களோடு போய்விடும். அந்த அந்தியிருட்டில், மணிச்சத்தத்துக்கிடையே ராஷ்டிரபதி பவன், செளத் ப்ளாக், நார்த் ப்ளாக், பாராளுமன்றக்கட்டடம் எல்லாம் ஒரே நேரத்தில் வரிசை விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளிக்கும். அந்த க்ஷணத்தில் ஒருதுளி தேசிய உணர்வுள்ளவருக்கும் நெஞ்சு இரண்டு இஞ்சாவது விம்மியிருக்கும். அதற்கு நான் காரன்ட்டீ!//

திரு பாரதி மணி சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். குடியரசு தின அணிவகுப்பை விட நாங்கள் Beating Retreatஅணி வகுப்பை சாரே ஜஹான் ஸே அச்சா பாடலுக்காகவே பார்ப்போம். அவர் சொல்வது போலவே அருமையான இசை, கண்ணையும், காதையும் நிறைக்கும். அதிகமாய் ராணுவக் குடியிருப்புகளில் வாசம் செய்ததாலோ என்னமோ எங்கள் விருப்பமும் இவையே. பொதுவாய்த் தமிழ்நாட்டில் ராணுவத்தினரின் அருமையும், தேசீயத்தின் அருமையும் அவ்வளவாய்த் தெரியவில்லை என்பதும் உண்மை. ராணுவ வீரர்களில் உள்ள தமிழர்களே எங்களிடம் வருந்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மதிப்பே இல்லை எங்களுக்கு என்பார்கள். தலைகுனிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்??? :((((((((((

இனிய குடியரசு தின வாழ்த்துகள் அனைவருக்கும்.

geethasmbsvm6 said...

//இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.//

அநானி அவர்க்ளே,

இந்திய அரசோ, அல்லது மக்களோ ஹிந்தியை ஒருபோதும் தேசீய மொழியாகச் சொன்னதில்லை. அரசு அங்கீகரித்த பதினான்கு மொழிகளில் ஹிந்தியும் உண்டு, நம் அருமைத் தமிழும் உண்டு. ஆகவே இந்தத் தீர்ப்பே அர்த்தமற்றது. அவர் வியாபாரி, பொருட்கள் விற்பதற்காக ஹிந்தியில் அச்சிடவேண்டும், அச்சிட்டாகவேண்டும், அதற்கு நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமே இல்லை என்பது என் கருத்து.

டிராகன் said...

அருமையான நல்ல கட்டுரை ,நான் அந்த beating the retreat தவறாமல் பார்த்துகொண்டு இருக்கிறேன்,

அப்புறம் இட்லி வடை,
ஒரு நல்ல கட்டுரை வழங்கியமைக்கு நன்றிகள் பல ....,

சைவகொத்துப்பரோட்டா said...

//Beating the Retreat//

இது பற்றி இப்பொழுதுதான் எனக்கு தெரியும், (கோபபடாதீங்க MR.பாரதி மணி)

நல்ல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.

கௌதமன் said...

// இதுவரை இந்த Musical Bonanza-வை நீங்கள் பார்த்ததில்லையென்றால், இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 29-ம் தேதி மாலை ஐந்துமணிக்கு தில்லி தூர்தர்ஷனில் Beating the Retreat நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள்.//
அப்படியே செய்கிறேன் சார். பாரதிமணி - முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் - என்றைக்கும் தனிதான்.

R.Gopi said...

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்....

பாரதி மணி அவர்களின் எழுத்தில் நகைச்சுவை தூக்கல்...

பாபா படத்தில் வருபவரா இவர் என்னும் அளவிற்கு ”மொட்டை”யுடன் என்னே ஒரு “டெர்ரர் போஸ்” குடுக்கறார்??

“குடியரசு” தினம் அன்று ”குடிமகன்”களுக்கும் லீவா?? அதாவது டாஸ்மாக் விடுமுறையா??

R.Gopi said...

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்....

பாரதி மணி அவர்களின் எழுத்தில் நகைச்சுவை தூக்கல்...

பாபா படத்தில் வருபவரா இவர் என்னும் அளவிற்கு ”மொட்டை”யுடன் என்னே ஒரு “டெர்ரர் போஸ்” குடுக்கறார்??

“குடியரசு” தினம் அன்று ”குடிமகன்”களுக்கும் லீவா?? அதாவது டாஸ்மாக் விடுமுறையா??

படுக்காளி said...

வெகு நாளைக்கு பிறகு மிகவும் சிலாகித்து வாசித்த பதிவு. நல்ல தமிழ், தகவல், அறிவுரை ; என மிகவும் மனம் கவர்ந்தது. வாசிக்கும் அனுபவத்தில் பரவசம் அடைந்தேன். மிக்க நன்றி, பாரதி மணிக்கும் இட்லி வடைக்கும்.

நகைச்சுவையை தளமாக்கி, மெல்லிய உணர்வாய் குழந்தையுடன் விளையாடியது, இசை,தமிழ் உணர்வு, தேசிய உணர்வு, இன்றைய சேனல்கள் என அருமையான நடை. தெளிர்ந்த குளிர் நீர் ஓடை போல்.

இது போல் இன்னும் நிறைய வாசிக்க ஆசை.

எனினும் இனி வரும் கட்டுரையில் அபான வாயு மாதிரி சமாச்சாரத்துக்கு ஒரு வரி போதுமோ. ஒரு பாராகிராப் வேண்டாமோ.

கூட்டத்தில் முட்டி மோதி பார்க்காமல் வாசம் சரியில்ல, கூட்டம் தாங்கல என ஸ்கூட் அடித்தது நல்ல முன்னூதாரணம் இல்லையோ.

அப்படி இரு இப்படி படு என வெறுமே அறிவுரை மட்டும் சொல்லாது, இப்படி செய்யலாமே இது நல்லா இருக்கே என ஆலோசனை சொன்னால் கேட்பவருக்கு கடை பிடிக்க தோன்றும் என நினைக்கிறேன்.

குறை இல்லா மனிதன் உண்டா. மாற்றம் ஒன்றுதானே மாறாதது.

என் மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லி விட்டேன், காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

தங்கள் எழுத்து மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய வாசிக்க தூண்டுகிறது.

வலைஞன் said...

நாகரீகமாக சொன்னால் ஒரு அசட்டுத்தனமான கட்டுரை!
ஆசிரியர் மொழியில் சொன்னால் ’குடியரசு’ போல் இருக்கு!!
Kindly don't waste our time publishing such insipid articles.

vedhanarayanan said...

Definitely a good tamil writing.

But substance wise, I fail to understand the connection between patriotism and youngsters not listening the beating the retreat.
There is a chorus on youngsters being not patriotic. People fail to understand that the most hardworking people in this country at present are the IT guys and they are all youngsters.

The gas discussion is of bad taste. A neat writing can get spoiled by this. And a feedback from an "anonymous" is bad too connecting it to a particular community.

If the discussion is all about music, then a genuiene music lover will love to listen to any music.
Asking a common man to listen to BTR rather than the current day TV programs is meaningless that holds good even for carnatic music/old songs. No one will listen to it unless they are connected to it. No youngster knows what was the struggle for freedom. They probably know more of reservation struggle, current day politics.

Anonymous said...

பாரதி மணி மிகவும் சரளமாக எழுதி இருக்கிறார்.டில்லியில் இருந்ததால் குடியரசு தின அணிவகுப்பை நானும் நேரில் பார்த்து பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு விவரங்கள் நினைவில் இல்லை பாரதி மணிக்கு நல்ல நினைவுத்திறன். - கடுகு

சிறியவன் said...

1994 aam varudam, dhilliyil irundhpoludhu, en nanaban vijayum nanum, vijay chowkil nadandha, beating the retreatin rehersal programme parthom. really fantastic. bharathi mani ayya solvathu pola ennamo namey vasippathu pol oru perumitham nilaviyathu unmai

Andhuvan said...

Hi

I read your post.

I totally disagree with your comments that not many know national anthem in TN. Can you with same confidence claim people from all the other states know National Anthem?

I have been outside TN for the last 10 years and move with different lots of Indians who are not Tamils. National feeling is low in most of the Indians irrespective of he is Tamil or Assamese or Marati.

Similarly people get national pride only when the Union govt instills confidence. There were times, just because TN was under dravidian party rule, cong govt in the centre ignored TN for starting PSUs. How do you classify this act?

It has to be receprocative.

TN is no different from other states except for not speaking hindi in terms of national pride.

Hindi is just a language, if one needs it, he/she can learn within 6 months. It is not a show stopper. I dono why people make a big fuss of not knowing Hindi.

பாரதி மணி said...

இதை இன்று நடந்த ‘Beating Retreat’ பார்த்துவிட்டு எழுதுகிறேன். காரியாலயத்துக்குப்போகும் இ.வ. நண்பர்கள் எத்தனைபேர் பார்க்கமுடிந்ததோ?

சிலருக்கு ‘அந்த’ ஈரெழுத்து சமாசாரம் உகந்ததாக இல்லை. அதையும் ‘இடக்கரடக்கலா’கத்தான் சொல்லியிருந்தேன். இரண்டெழுத்து தானே! அதை ‘விட்டு’ விடுவோம்! நிம்மதியாக இருக்கும்!

இன்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது, நமது ஆற்காடு வீராசாமியார் நடுவில் பத்துநிமிட்த்துக்கு என் ஃப்யூஸை பிடுங்கிவிட்டார். இன்வெர்ட்டர் இருந்தாலும், கேபிள்வாலாவின் சிக்னல் வராததால், பார்க்கமுடியவில்லை!

Universal Music என்பது இது தானோ! ஃபரூக் அப்துல்லாவும் விரல்களால், தாளம் போட்டுக்கொண்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனி மனைவியின் விரல்களும் தாளத்திற்கேற்ப அசைந்தன! நம் முப்படைகள் வாசிக்கும் ‘ஊமை வாத்தியங்களை’ ரசிக்க இசையின் அடிப்படை அறிவு கூடத்தேவையில்லை. நமது சேஷகோபாலனும், உஸ்தாத் அம்ஜத் அலி கானும், ஏ.ஆர். ரஹ்மானும், யானியும், பரவை முனியாமாவும், மெஹ்தி ஹஸனும், புஷ்பவனம் கந்தசாமியும் எல்லைகளை மறந்து ரசிக்கலாம். அதைத்தான் எனது கட்டுரையில் சொல்ல முயற்சித்தேன்.

இந்நிகழ்ச்சியை பார்த்து ரசித்த இ.வ. நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியடைவேன்

அன்புடன்,
பாரதி மணி

Anonymous said...

beating retreat is a great MUSICAL extravaganza with immense NATIONAL Fervor.On few occasions, I could see it on TV. Is there any DVD / CD version of this MUSICAL by the Armed Forces, for my personal view and library. Like "Jana Gana Mana" & "Vande Maataram" album, does anyone like BharathBala have come out with a VIDEO CD/DVD version of this BEATING RETREAT? PL post the relevant details, if you have. The blog was good overall, except for some pungent personal expressions. Awaiting the video content.