பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 16, 2010

ஒரு ஜூரியின் டயரி - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

"எலெ அந்த மாட்டை இங்கே வந்து கட்டுலே" என்று ராமராஜன் படத்தில் வரும் டையலாக் தான் எனக்கு "எல்லே ராம்" என்றவுடன் நினைவுக்கு வரும். முனியின் கடித்ததில் செல்லமாக ஒரு குட்டு வைத்ததற்கு பழிவாங்கும் விதமாக "ஒரு ஜூரியின் டயரி"யை அனுப்பி இருக்கார்.

சன் டிவி வேட்டைக்காரன் ரிலீஸ் மாதிரி இவரோட தொடரின் முதல் பகுதி இட்லிவடையில். மற்ற பகுதிகள் அவர் சொந்த செலவில் அவர் தியேட்டரில் ஓட்டுவார்.


ஒரு ஜூரியின் டயரி - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.

ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?

'ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)

மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?

என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.

ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.

ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!

புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று ... ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?

’தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ - என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.

மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.

’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.

அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.

இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.

வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.

அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.

நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)
மக்களே, மீதி பகுதிகளை ஓடிப் போய் இங்கே பாருங்க, இல்லை இப்படியே பின் சந்து வழியாக ஓடிப் போய்விடுங்கள். கால்கள் உங்கள் கையில். ....

3 Comments:

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள இட்லிவடை,

தியேட்டரே கிடைக்காமல் நாட்டில் எல்லோரும் அல்லாடுகையில், ஏகப்பட்ட போட்டிக்கு நடுவில், முதல் நாள், முதல் ஷோவை நீங்கள் எடுத்துக்கொண்டது மிகவும் அருமையான இலக்கியத்தரமான gesture!

’நல்ல படம் என்றால் நெட்டிலேயே திருட்டு விசிடி, நமக்குப் பிடிக்காதவர் படம் என்றால் படப்பெட்டியே கபளீகரம், நமக்கெதுக்கு வம்பு, அவர்கள் தியேட்டரிலேயே ஓட்டிக் கொள்ளட்டும் என்கிற உங்கள் மேனேஜ்மெண்ட் டெக்னிக் - diplomatic excellence.

நூறாவது நாள் விழாவிற்குக் கூப்பிடுகிறேன், வந்து ஒரு கோலி சோடாவாவது சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்!

நன்றி!

பி.கு: படம் எப்படி இருந்தாலும் இப்போதெல்லாம் பில்டப் அதிகமாகத் தேவைப்படுகிறது, இல்லையா?! நாலு வாரம் ஓட்டினாலேயே கல்லா கட்டி விடலாமென்று நாட்டிலே சொல்லிக் கொள்கிறார்கள்!

ஜெயக்குமார் said...

அடப்பாவிகளா, தொடர் பதிவுக்குக் கூட ஒரு விளம்பரம், அதுவும் இட்லிவடை டீ.வியில்..

”எல்லே”ய் நீ பெரிய ஆளுதாண்டா.. அப்படினு உங்களை உங்க நண்பர்கள் பாராட்டி இருப்பார்களே,இல்லையா எல்லே ராம்?

மானஸ்தன் said...

என்னபா இது. கஷ்டப்பட்டு எழுதி இருக்காரு திரு எல்லே! ஒரே ஒரு பின்நூட்டம்தானா!!

சரி நான் என்பங்குக்கு ஒண்ணு போட்டு வைக்கிறேன். ஜக்குபாய் "வெளிவந்து" இவரும் இரா.முரு. மாதிரி பிரபலாமா ஆகிவிட்டால், நான் பாசமாகப் போட்ட இந்தப் பின்னூட்டத்தை அவர் நினைச்சுப் பார்ப்பார்!

:>