பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 14, 2010

கல்கியும் நானும் - கடுகு

சில நாட்கள் முன் எனக்கு வந்த கடிதம்.

அன்புடையீர்,

இத்துடன் கல்கியும் நானும் கட்டுரையை அனுப்பியுள்ளேன்.சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள்.காரணம் இடை இடையே உணர்ச்சி மேலிட்டு விட்டதால் there may be some incongruities. நீளம் அதிகமாக இருந்தால் எடிட் செய்து விடுங்கள்.

கடுகு


யாராவது பொங்கலில் இருக்கும் முந்திரி பருப்பை எடுத்துவிட்டு சாப்பிடுவார்களா ?
எடிட் செய்யாமல் பொங்கல் ஸ்பெஷல் கட்டுரை கீழே....கல்கியும் நானும் - கடுகு

நான் எழுதிய எல்லா புத்தகங்களின் முன்னுரைகளிலும் கீழ்கண்ட வாசகம் இருக்கும். ஏதோ ஒப்புக்கோ என்னைப் பற்றி உயர்வான எண்ணம் படிப்பவர்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காகவோ எழுதப்பட்டதல்ல இது.

என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை , சிரத்தால் வணங்கி , கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.

கல்கி அவர்கள் தான் எனக்குள் எழுத்தார்வத்தை விதைத்தார். முதல் முதலில் 1952ல் பொன் விளையும் பூமி என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். (இந்தக் கட்டுரையை எழுத எனக்கு எப்படி வாய்ப்பு வந்தது என்பதைப் பின்னால் சொல்லுகிறேன்.) தம்பி உனக்கு எழுத்துத் திறமை இருக்கிறது என்பதை "பேஷ்" என்று ஒரே வார்த்தையில் சொல்லி எனக்கு ஊக்கமளித்தவர் அவர். . என் பூஜையில் உள்ள அவரது படம். 12. 12. 1954. தேதியிட்ட விகடனில் வெளியான அட்டைப்படம், அப்படம் அவ்வப்போது அசரீரி மாதிரி பேஷ் என்று சொல்லி என்ஆர்வத்திற்கு உரமிட்டு வந்து கொண்டிருக்கிறது.

கல்கி அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு இரண்டு வருடங்களே தான் கிடைத்தது. 1952’ல் கீழ்ப்பாக்கம் குருசாமி ரோடில் கல்கி அலுவலகத்தில் அவரை முதல்முதலாகச் சந்தித்தேன். அந்த இரண்டு வருடங்களை எப்படி நான் மறக்க முடியும்.! புத்தி தெரியும் பருவத்திலிருந்த எனக்கு அவை போதித்த பாடங்கள் ஏராளமானவை!
.
அவரது எழுத்துகள் மிகவும் எளிமையானவை.. மிகவும் வலிமையானவை. அவை தான் பாரதிமணி மண்டபத்திற்கு நிதி திரட்டித் தந்தவை; மகாபலிபுரத்தின் மகோன்னதத்தையும், அஜந்தாவின் அற்புதத்தையும் எடுத்துக் காட்டியவை.; நாமக்கல் கவிஞருக்கு நிதி வசூலித்துத் தந்தவை: தமிழ் இசை இயக்கத்திற்கு அசுர பலம் ஈந்தவை; சோழனையும் பல்லவனையும் சாதாரண மக்களுக்கும் அறிமுகப் படுத்தியவை. எலலாவற்றிற்கும் மேலாக சமூகசேவையில் ஈடுபட்டிருந்த அமைப்புக்களுக்கும் இளைஞர் சங்கங்களுக்கும் உற்ற தோழனாக அமைந்தவை. இச்ச்ங்கங்களீல் முத்தியால்பேட்டை இளஞர் சங்கமும், செங்கல்பட்டு சேவா ச்ங்கமும் அவருடைய செல்லப் பிள்ளைகள் என்று அந்த காலத்தில் பிரசித்தம்!

இவை .யாவும் உங்களுக்குத் தெரியைதவை அல்ல. என் மன நிறைவுக்காக, நானே எனக்குச் சொல்லிக் கொள்வதற்காகத்தான் இவற்றை எழுதியுள்ளேன்.
------- 0o0 ------- 0o0 ------- 0o0 ---------
கல்கி அவர்களின் தொடர்பு எனக்கு எப்படி கிடைத்தது? செங்கல்பட்டில் சேவா சங்கம் என்ற அமைப்பை சில மூத்தவர்கள் உருவாக்கினார்கள். வயதிலும் படிப்பிலும் பதவியிலும் பெரியவர்களாக இருந்தும் என்னைப் போனற பொடியன்களையும் சேர்த்துக் கொண்டார்கள். ஆத்தூர் சீனிவாச ஐயர் (சோவின் தந்தையார்), ஓ. வி.. அளகேசன், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர் போன்றவர்கள் அதன் ஆதரவாளர்கள். அப்போது ஒரு சமூகப் பிரச்சினைப் பற்றி கல்கி அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினோம். மூன்று தினங்கள் கழித்து கல்கி கைப்பட எழுதிய ஒரு கடிதம் எங்களுக்கு வந்தது. ’என்னை வந்து சந்திக்க முடியுமா?’ என்று கேட்டு எழுதியிருந்தார். எங்களுக்கு உற்சாகம் தலைகால் புரியவில்லை. அவரைப் பார்க்கப் போன குழுவில் நானும் ஒட்டிக் கொண்டேன். அவருடைய வீட்டிற்குப் போய் அவரை சந்தித்தோம். அடுத்தவார கல்கி இதழின் சில பக்கங்களை எங்களுக்குக் காட்டினார். எங்கள் கடிதம் கிட்டத் தட்ட முக்கால் பக்கம் அச்சாகி இருந்தது.

பிறகு எங்களைப் பற்றியும் சங்கத்தின் சேவை.யைப் பற்றியும் விரிவாக விசாரித்தார். ”இந்த மாதிரி சங்கங்கள் நிறையத் தோன்ற வேண்டும். உங்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் நிறைய கிடைக்கும்” என்று உற்சாகப் படுத்தினார். அதன் பிறகு பல தடவை அவரைச் சந்தித்திருக்கிறோம். காந்தி ஜெயந்தி, பாரதி விழா என்று பல நிகழ்ச்சிகளை சங்கம் நடத்திய போது கல்கி அவர்கள் மூலமாகத்தான் பேச்சாளர்கள் ஏற்பாடு செய்தோம்..

சங்கத்தின் வளர்ச்சிக்காக எம். எஸ். அவர்களின் இசை நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஏதாவது நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்ள செங்கல்பட்டு வழியாக அவர் போகவேண்டியிருந்தால், மெயின் ரோடிலுள்ள எங்கள் தலைவர் வீட்டில் இறங்கிவிட்டுப் போவார். தலைவர் வீடு எங்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருந்ததால் நான் முதலில் ஆஜராகி விடுவேன்.

ஒரு சமயம் அப்படி அவர் வந்த போது நான் அவரிடம் ""நீங்கள் என் வீட்டிற்கு ஒரு தரம் வந்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்"" என்று சொன்னேன். அடுத்த தடவை வருகிறேன். திருக்கழுகு குன்றத்தில் நடக்கும் மகா நாட்டிற்கு வருவேன் என்றார். (அது சைவ மடாதிபதிகள் கலந்து கொண்ட பெரிய மாநாடு என்பது மட்டும் தான் இப்போது நினைவில் இருக்கிறது.) சொன்னபடியே வந்தார். அப்போது எங்கள் வீட்டில் என் சகோதரர் நிறைய அலங்கார மீன்களை வளர்த்து வந்தார். நூற்றுக்கணக்கான் மீன்கள் இருந்தன. அவற்றைப் பார்க்க மாடிக்கு அழைத்துப் போனேன். ”அடுத்த தடைவை பேத்தி கௌரியை அழைத்து வருகிறேன். அவள் மிகவும் ரசிப்பாள்” என்றார். (துரதிஷ்டம் கௌரியை அழைத்து வர வாய்ப்பே வரவில்லை. ஆனால் கௌரி (இபோதைய ஆங்கில எழுத்தாளர் கௌரி ராம்நாராயணன்) - தன் தாயார் ஆனந்தியுடன் 1998’ல் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைக் கௌரவப்படுத்தினார்!) அப்போது திரு ராஜேந்திரனும் திருமதி விஜயா ராஜேந்திரனும் வந்திருந்தார்கள்..
( கொசுறு: என்; டில்லி வீட்டின் பெயர் கல்கி.):
------- 0o0 ------- 0o0 ------- 0o0 ---------
சோவின் அப்பா எங்கள் சேவா சங்கத்தின் ஒரு தூண். அவர் ஆத்தூரில் பெரிய நவீன விவசாயப் பண்ணை வைத்திருந்தார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி அந்தப் பண்ணை.யைப் பார்க்க விரும்பினார் சில மாதங்களுக்கு முன்புதான் மகாபலிபுரம் போகும் வழி.யில் கல்கி கொஞ்சம் நிலம் வாங்கி அதில் விவசாயம் துவங்கி இருந்தார். ஆகவே அவர் ஆத்தூர் பண்ணையைப் பார்க்க விரும்பினார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் பண்ணைக்கு வந்தார். ஐந்து ஆறுமணி நேரம் சுற்றிப பார்த்தார். சீனிவாச ஐயரின் நவீன சாகுபடி முறை அவருக்குப் பிடித்திருந்தது பகல் உணவிற்குப் பிறகு விடைபெறும் போது ”இந்தப் பண்ணையைப் பற்றி ஒரு கட்டுரை போட நினைக்கிறேன். நானே எழுதுவதைவிட உங்களில் யாராவது ஒருவர் எழுதினால் நன்றாக இருக்கும்”. என்றார். வாயில் ஈ போவது கூட தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ""தம்பி நீ எழுதுகிறாயா"" என்று கேட்டார். அந்தக் கேள்வி அந்தக் கணமே என்னை எழுத்தாளனாக்கி விட்டது.

நானும் கட்டுரையை எழுதி, திரும்பத் திரும்ப நூறு தடவைப் படித்து, திருத்தி, என்னை நானே பாராட்டிக் கொண்ட பிறகு ச்ங்கத் தலைவருடன் கல்கி அவர்களைப் பார்க்க சென்னை காந்தி நகருக்குச் சென்றேன்..

மாடியில் அவர் அறைக்குப் போனோம் கட்டுரையை வாங்கிப் படித்தார். சும்மா மேலோட்டமாகப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட விடாமல் படித்தார், என் மனது அப்போது டிக் டிக் என்று அடித்துக் கொண்டது. படித்து முடித்ததும் ""பேஷ்"" என்றார்.
அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
”டேய், அவர் ’பேஷ்’ என்று சொன்னது உன் கை எழுத்தைதான்” என்று என்னைக் கலாய்த்தார்கள்.

அடுத்த வார இதழில் என் கட்டுரை பொன் விளையும் பூமி என்ற தலைப்பில் நான்கு பக்கங்களில் வெளியாகி இருந்தது. கல்கி அவர்கள் பல இடங்களில் அதில் கை வைத்து மெருகேற்றிப் பிரசுரித்திருந்தார்.
------- 0o0 ------- 0o0 ------- 0o0 ---------
ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு கல்கி அவர்கள் தன் வீட்டில் 31.4.1954 31.8.1954 ஒரு விருந்தளித்தார். அதற்கு எங்களையும் அழைத்திருந்தார். ஜெயப்பிரகாஷ் போன்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பா?
ஜெயப்பிரகாஷுடன் பெரியவர்களெல்லாம் பேசிக்கொண்டிருந்ததை, அவர்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த நாங்கள் வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தோம்.

1954 டிசம்பர் ஐந்தாம் தேதி ஆல் இண்டியா ரேடியோவில் தமிழ் செய்தி அறிக்கையில் கல்கி அவர்கள் அமரரான செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் பெரிய இடி வீழ்ந்தமாதிரி இருந்தது. செங்கல்பட்டிலிருந்து அரக்கப்பரக்க நாங்கள் சென்னையில் அவருடைய காந்தி நகர் வீட்டிற்குச் சென்றோம். அதற்குள் அவரது உடலை கோட்டூர் புரம் மயானத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். உடனே நாங்கள் மயானத்திற்குச் விரைந்தோம். மயானத்தில் ஒரு இரங்கல் கூட்டம் துவங்கி இருந்தது. ம. பொ. சி. உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். ’தமிழோடு நிலை பெற்ற சக்தி’ என்று கவிதை ஒன்றை வாசித்தார் ஒருவர். ராஜாஜியைப் பேசும்படி கேட்டுக்கொண்டபோது தன் துக்கம் தாங்கமுடியாதது என்று கூறி பேச மறுத்துவிட்டார். பலர் மயானத்தில் சிதை வைக்கப்பட்டிருந்த உடலைத் தொட்டு தரையில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

அடுத்த சில தினங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு எஸ். எஸ். வாசன் தலைமை வகித்தார். ராஜாஜி உள்ளம் உருகும்படியான உரை நிகழ்த்தினார்.

கல்கிக்கு அஞசலிக் கூட்டங்களை பல அமைப்புகள் நடத்தின என்றாலும் அரண்மனைக்காரத் தெரு கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டம் மறக்க முடியாதது. அதில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கத்தின் காரியதரிசி பேசியது இன்னும் பசுமையாக உள்ளது. அவர் பேசியது: ""கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் பாரதி விழாவை பவழக்கார தெருவில் நடத்திக்கொண்டிருந்தோம் - கல்கி அவர்களின் பரிபூர்ண ஆதரவுடன் மூன்றாம் நாள் மாலை மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது நான் வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காசு தீர்ந்து போன நிலைமை. பலருக்கு பணம் பாக்கி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன்.. மேடையில் உட்கார்ந்திருந்த கல்கி அவர்களிடம் சென்று, நிலைமையை ரகசியமாக கவலையுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர் "தம்பி கவலைப் படாதே, இந்தா என் வீட்டு மேஜை சாவி, வீட்டிற்குப் போய் என் மைஜை டிராயரை திறந்து அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வா"என்று சொல்லி சாவியைக் கொடுத்தார். நான் போய் எடுத்து வந்தேன். இளஞர்கள் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை ...... என்று பேசிக்கொண்டே வந்த அந்த இளஞர், துக்கம் தாளாமல் மேடை.யில் நின்றுக் கொண்டே குலுங்கி குலுங்கி அழழ ஆரம்பித்து விட்டார்.. இவ்வளவு பெரிய கூட்டத்தில், மைக் முன்னால் நின்று அழுகிறோமே என்று அவருக்குத் தோன்றவே இல்லை. காரணம் கல்கி அவர்கள் மீதிருந்த அபார பக்தி. இப்படி பல ஆயிரம் இளஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தார் கல்கி.

------- 0o0 ------- 0o0 ------- 0o0 ---------
சமீபத்தில் கல்கி அவர்களின் நூற்றாண்டு விழா சமயத்தில் தபால் தலை வெளியிட்டார்கள். இது தொடர்ப்பாக ஒரு சின்ன குறிப்பு. ஜனதா அரசு 1977’ல் அமைந்த போது அப்போது தபால் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் -பெர்னாண்டஸ் அவர்களைப சாவியும் நானும் பார்க்கப்போனோம். கல்கி அவர்களுக்கு தபால் தலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைத்தோம். ""கல்கியைப் பற்றி நான் நன்கு அறிவேன் நிச்சயம் செய்கிறேன் அவரைப் பற்றிய ஒரு குறிப்பை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஒரு வாரம் கழித்து நான் கொண்டு போய்க கொடுத்தேன். துரதிஷ்டம் அடுத்த சில வாரங்களுக்குள் ஜனதா அரசே கவிழ்ந்து விட்டது.

மற்றொரு அரிய அனுபவத்தை பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் கதை கடைசி அத்தியாயம் கல்கி இதழில் வெளியான வாரத்தின் போது அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். தமது வயலைப் பார்வையிட அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எங்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். அவருடன் காரில் போவதாலே.யே கேள்வி கேட்க எனக்கு அந்தஸ்து வந்து விட்டது என்று கருதிக் கொண்டுவிட்டேன். ”பொன்னியின் செல்வன் தொடரில் ஒன்றிரண்டு விஷயம் முழுமையடையவில்லையே” என்று அவரிடம் கேட்டேன்.

அவர் சொன்னார் ""தம்பீ .... இது சரித்திரக் கதை, கதையைசரித்திரத்தை ஒட்டியே முரண் பாடில்லாமல் எடுத்துக் கொண்டு போகவேண்டும் எனக்குப் பின்னால் வேறு யாராவது இன்னும் ஆராய்ச்சி செய்து இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு நாவல் எழுதலாம்"" என்றார். என்னையும் ஒரு ஆளாக மதித்துக் கூறியதை இப்போது எண்ணும் போதும் கண்களில் நீர் திரையிடுகிறது. என்னிடம் கூறிய கருத்துக்களை அடுத்த வார கல்கி இதழில் எழுதினார்.
------- 0o0 ------- 0o0 ------- 0o0 ---------
கல்கி அவர்களின் பூத உடலை மயானத்தில் பலர் வ்ணங்கினார்கள் என்று சொன்னேன் அல்லவா? அப்படி வண்ங்கியவர்களில் நானும் ஒருவன். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். அவர் உடல் மேல் வைக்கப்பட்டிருந்த ரோஜா மாலையிலிருந்து மூன்று நான்கு ரோஜாப்பூக்களை எடுத்துக்கொண்டேன். அந்த பூக்களை ஒரு சிறிய குங்குமப் பேழையில் வைத்து என் புத்தக அலமாரியில், நான் வைத்திருந்த கல்கி அவர்களின் படத்தின் முன்பு வைத்தேன். அந்த மலர்களைப் பல வருடங்கள் வைத்திருந்தேன். சில நாட்களிலேயே மலர்கள் வாடிவிட்டன. அவற்றின் மணமும் போய் விட்டது. ஆனால் கல்கி அவர்களின் தமிழ் மணம் இன்றும் என் வீட்டில் மெலிதாக மிதந்து கொண்டிருக்கிறது..

இட்லிவடை வாசகர்களுக்கு இதைவிட ஒரு நல்ல பொங்கல் பரிசு கிடைக்குமா ?


13 Comments:

வலைஞன் said...

இதுதான் உண்மையான சர்க்கரை பொங்கல்! அற்புதம்!! மிகவும் நன்றி!!!

amaithi appa said...

வயதிலும் படிப்பிலும் பதவியிலும் பெரியவர்களாக இருந்தும் என்னைப் போனற பொடியன்களையும் சேர்த்துக் கொண்டார்கள்//

அன்றைய பெரியவர்கள் இவரைப் பொடியன் என்று ஒதுக்கி இருந்தால்,
இன்றைக்கு நமக்கு கடுகு அவர்கள் கிடைத்திருக்கமாட்டார்கள் . இது நாம் என்றும் நினைவில்கொள்ள வேண்டிய
விஷயம். இளையவர்களை வளரவிட வேண்டும் என்பதே பொங்கல் செய்தியாக நாம் எடுத்துக்கொள்வோம்.

Kameswara Rao said...

IV
Wonderful write up about Thiru Kalki not only the works of Kalki but the experiences of others with Kalki is worth reading.

Hope Mr. Kadugu continues his expreinces with Kalki for another 2-3 parts.

there is a small mistake in the date 31.4.1954 please check

Kamesh
Botswana

R. Jagannathan said...

Thank you for posting Shri Kadugu's article. Your Manjal comment is very apt. - R. Jagannathan

ரிஷபன் said...

இட்லியின் மஞ்சள் கமென்ட் என்றாலே அது தனி தான்.

ரொம்ப நல்ல கட்டுரை.

Anonymous said...

<>

அன்புள்ள திரு ராவ் அவர்களுக்கு,
பாராட்டுக்கு நன்றி.
ஆம். தேதி 31-8-1954 என்று இருக்க வேண்டும்.
அதிருக்கட்டும் அதை தவறான தேதி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?
--கடுகு

Anonymous said...

April has only 30 days

பாரதி மணி said...

சர்க்கரைப்பொங்கல் கட்டுரை. திரு. கடுகு அவர்களுக்கும், வெளியிட்ட் இ.வ.வுக்கும் நன்றி!

S. Krishnamoorthy said...

கோட்டூர்புர மயானத்தில் நடந்த இரங்கற் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் நானும் ஒருவன்.
ம.பொ.சி. மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது இன்னும் நினைவில் நிற்கிறது.
“தமிழன்னை தன் எழுதுகோலைத் தூக்கி எறிந்துவிட்டாள்.” என்று சொன்னார்.
கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

Dear IDLY VADAI.
Will you please let me know' "WHO IS Mr. KALKI".

Is he a social worker, People like me born and brought in abroad will be happy, please write more about the services which he rendered to th society.

Thanks
Joe

Anonymous said...

For JOE" You may go tothis site to knwo more about KALKI

http://en.wikipedia.org/wiki/Kalki_Krishnamurthy

kggouthaman said...

// இட்லிவடை வாசகர்களுக்கு இதைவிட ஒரு நல்ல பொங்கல் பரிசு கிடைக்குமா ? //
உண்மைதான், சிறந்த, சுவையான பரிசு. நன்றி.

Swami said...

kalki sirantha manidhabimani. Sollondru, seyalonru enru ezhuthum ezhuthalar mathiyil kalki unmayana,jathi matham parkkathu anaivaraiyum vazha vaitha unnadamana mahathma. sirappana katturaikku nandri kadugu sir.