பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 25, 2009

உலக கழிப்பறை நாள்!

சுத்தம் சோறு போடும்' என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதன் பொருள், மனிதர்களுக்கு அகசுத்தம், புறசுத்தம் இரண்டுமே அவசியம். அப்போதுதான் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும். 'நாம் சுத்தமாக இருக்க நினைத்தாலும், நம்முடைய சூழ்நிலை அதற்கு இடம் கொடுப்பதில்லையே...' என்று நம்மில் பலரும் வருந்தியிருப்போம். ஏனென்றால், மிகவும் அடிப்படையான சுகாதார வசதிகளைப் பொறுத்த வரை நாம் இன்னமும் மிக மிகப் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம்.நகரங்களுக்குப் போனால் திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள். ஆனால், அவசர ஆத்திரத்துக்கு ஒரு கழிப்பறை வேண்டுமென்றால், நீங்கள் தெருத்தெருவாகத் தேடி அலைய வேண்டும் அல்லது சாப்பிடுவது போல் பாவனை செய்து ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் நுழைய வேண்டும். அதிலும், பெரிய ஹோட்டல்களாக இருந்தால் தப்பித்தோம். இல்லாவிட்டால், கழிப்பறையைப் பார்த்துவிட்டு, வாந்தி எடுக்காமல் திரும்புவது கஷ்டம். இதுதான் நம்முடைய நகரங்களின் நிலவரம். நம்முடைய நகரங்களைத் திட்டமிடுகிறவர்கள் கழிப்பறைகளுக்கென்று இடம் ஒதுக்குவது வீண் வேலை என நினைக்கிறார்கள் போலும்!

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஒரு முறை சட்டப்பேரவையில் பேசும்போது, 'ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறீர்கள். அதை வாங்கிச் சாப்பிட்டு விட்டு காலையில் இயற்கைக் கடனை கழிப்பதற்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது!' என்று குறிப்பிட்டார். அது சிரித்து மறக்கக்கூடிய நகைச் சுவை மட்டுமல்ல... யோசிக்க வேண்டிய யதார்த்தமும்கூட! இரண்டு ரூபாய் கொடுப்பதுகூட பரவாயில்லை. ஆனால், அப்படிக் கொடுத்தாலும் பயன்படுத்தக்

கூடியவையாக கழிப்பறைகள் இருக்கின்றனவா என்பதுதான் பிரச்னை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுமைக்குமே இதுதான் நிலவரம்.

'கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமா?' என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். சரியான கழிப்பறை வசதி இல்லாததால், வெட்டவெளியில் மனிதர்கள் மல, ஜலம் கழிக்கிறார்கள். அதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 'உலகெங்கும் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கும் குழந்தைகளில் சுமார் 15 லட்சம் குழந்தைகள் இப்படி சுகாதாரமற்ற கழிப்பிடங்களால் ஏற்படும் தொற்று நோய் காரணமாகவே உயிரிழக்கிறார்கள்!' என்று யூனிசெப் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. பெண்களுடைய கண்ணியத்தைக் காப்பதில் கழிப் பறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன் படுத்துவது பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்! கல்வியிலும்கூட இதனுடைய தாக்கம் இருக்கிறது. பெண்கள் பள்ளிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்வதற்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததும் ஒரு காரணமாகத் தெரியவந்துள்ளது.

அண்மையில், உலக வங்கியின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 'தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லாதது ஒரு காரணம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நாட்களை உலக தினங்களாக நாம் அனுசரித்து வருகிறோம். கழிப்பறைக்காக சர்வதேச தினம் ஒன்று இருக்கும் என நாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். நவம்பர் 19-ம் தேதியை உலக கழிப்பறை நாளாக அனுசரிக்கிறார்கள். சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட அது பெரிய அளவில் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாளில் நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் இணைந்து, உலக அளவில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையன்றை வெளியிட்டுள்ளன. உலகமெங்கும் 250 கோடி மக்கள் நல்ல கழிப்பறை வசதிகள் இல்லாதவர்களாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 120 கோடி பேர் கழிப்பறை வசதியே இல்லாதவர்களாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நல்ல கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் மிகப்பெரும் சேதம் நாட்டுக்கும் உண்டாகிறது. ஆரோக்கிய மற்ற குடிமக்கள், பொருளாதார இழப்புக்கு வழி வகுக்கி றார்கள். அரசாங்கத்தின் மருத்துவச் செலவு இதனால் அதிகரிக்கிறது. கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்திருக்கிறது. வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், பொது கழிப்பிட வசதி களைப் பயன்படுத்து கிறவர்கள், சுத்த மான தண்ணீர் வசதி கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்று அந்த அறிக்கையில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப் படையில் பார்க்கும்போது, தென்னாசிய நாடுகளில்தான் கழிப்பறை வசதிகள் மிக மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

2006-ம் ஆண்டு நிலவரப்படி ஆப்பிரிக்க நாடுகளில் 28 சதவிகித மக்கள் வெட்டவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் அது ஏழு சதவிகிதமாக இருக்கிறது. மேற்காசிய நாடுகளில் அது ஐந்து சதவிகிதம் மட்டுமே. ஆனால், தென்னாசிய நாடுகளில் உள்ள மக்களில் 48 சதவிகிதம் பேர் திறந்தவெளியையே கழிப் பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உலகில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை குறிப்பிட்ட ஆண்டுக்குள் எட்டவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அந்த இலக்கை எட்டிக்கூடப் பார்க்காத ஒரு நாடு நம்முடைய இந்தியாதான்.

உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 250 கோடி மக்களில் 180 கோடி பேர் தென்னாசிய நாடுகளில் மட்டும் வசிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றவை இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பது நமக்கு பெரும் அவமானமல்லாமல் வேறென்ன?

திறந்தவெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக் கிறது. உலகில் 120 கோடி பேர் இப்படி திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 13 நாடுகளில் இந்தப் பழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சீனா, நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், நேப்பாள், சூடான், வியட்நாம் உள்ளிட்ட அந்த 13 நாடுகளில் முன்னிலை வகிப்பது இந்தியாதான். இங்கு 66 கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, உலகில் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிக மானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான்.

கழிப்பிட வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்பு கொண்டது என்பதை நாம் அறிவோம். குடியிருக்க வீடே இல்லாதவர்கள், எப்படி மேம் படுத்தப்பட்ட கழிப்பறை வசதியோடு இருக்க முடியும்? உலகிலேயே குடிசைகள் அதிகமாக இருக்கும் நம்முடைய நாட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் அதிகமாக இருப்பதில்... ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஒண்டுவதற்கே சிரமமாக இருக்கும் குடிசை வீடுகளில் கழிப்பறை கட்டுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம்!

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள வீடுகளில் 20 சதவிகித வீடுகளுக்கு மின்சாரமும், கழிப்பறை வசதியும் இல்லை என்று கண்டறியப்பட்டது. கிராமப் பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 27 சதவிகித வீடுகளில் மின் வசதியும், கழிப்பறை வசதியும் இல்லை. மின்சாரமும், கழிப்பறை வசதியும் உள்ள வீடுகள் வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. சுமார் 65 சதவிகித வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையென்று சென்செஸ் அறிக்கை கூறுகிறது. மொத்தமுள்ள ஒரு கோடியே 41 லட்சத்து 73 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் சுமார் ஒரு கோடியாகும். தற்போது, மக்களுடைய அடிப்படைத் தேவைகள் என்னவென்று ஆராய்ந்து, அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. முதல்வர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று இந்தக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதாகும். தமிழகத்தை முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலமாக மாற்றுவது அவசியம். இது தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம், கல்வி அறிவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் என்று சொல்வது எவ்வளவு பெருமையோ... அதைவிடவும் பெருமையானது, தமிழ்நாடு முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலம் என்பதாகும்.

தற்போது, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளோடு கழிப்பறையையும் சேர்த்துக் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் சுகாதார வளாகங்களை ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழு சுகாதாரத் திட்டத் தின் கீழும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களிடையே சுகா தாரம் பற்றிய விழிப்பு உணர்வும் உருவாக் கப்பட்டு வருகிறது. ஆனால், இவை போதாது.

அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதை பயன்படுத் துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொது மக்களைச் சார்ந்ததுதான். தற்போது அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிற பொது சுகாதார வளாகங்களை பொதுமக்கள் எவ்வளவு மோசமாகப் பராமரிக்கிறார்கள் என்பதை கிராமங் களுக்குச் சென்று பார்ப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும். ஒரு கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டால், ஒரு சில வாரங்களிலேயே யாரும் அணுக முடியாத ஒரு பகுதியாக அந்த இடம் மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு மோசமாக அவற்றை பொதுமக்கள் வைத்திருப்பது வேதனையளிக்கும் உண்மையாகும். தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகங்களை உருவாக்குவதால்தான் இப்படியான சிக்கல் எழுகிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. மக்களிடையே விழிப்பு உணர்வும், பொறுப்பு உணர்வும் இல்லாததுதான் இதற்கு மிகவும் அடிப்படையான காரணம்.

தமது வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் இப்படியான வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பொதுமக்கள் சரியாக உணராது உள்ளனர். அவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை.

கடந்த ஆண்டு ஆஸ்கார் பரிசுகளை அள்ளிக் குவித்த 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்தில் ஒரு காட்சிவரும். அந்தப் படத்தின் நாயகனான சிறுவன் திறந்தவெளி கழிப்பறையில் மலம் கழித்து கொண்டிருப்பான். அப்போது அமிதாப்பச்சன் அங்கு வந்திருப்பதாக யாரோ சொல்லிக்கொண்டு போவார் கள். அவன் அந்த மலக்குழியில் குதித்துக் கரையேறி அப்படியே அமிதாப்பைப் பார்க்க ஓடுவான். படம் பார்ப்பவர்களை குமட்டச் செய்த காட்சி அது. இந்தியாவின் தரத்தைத் தாழ்த்தும் காட்சி என்ற விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், நம்முடைய நகரங் களில் பல குப்பங்களைப் போய் பார்த்தால்... அத்தகைய காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை உணரலாம். இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது

- ரவிக்குமார் எம்.எல்.ஏ.

( நன்றி: ஜூவி )

10 Comments:

வீரராகவன் said...

ஆரோக்கியமாக ஓடி வந்து பந்து வீசும் கிரிக்கெட்டை அபாயகரம் என்பதை உணர்ந்து மெரினாவில் தடை செய்பவர்கள், கடற்கரை மட்டுமன்றி, நகரத்தையும் சுத்தமாக வைத்திருக்க போதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தாது ஏன்? மெரினாவின் தற்போதைய சூழ் நிலை உலக கழிப்பறை நாள் கொண்டாட ஏற்ற இடமே.

Litmuszine said...

ரவிகுமார் எழுதரல்லாம் ஒரே 'ஆய்' , ரொம்ப ஸ்மெல் ஜாஸ்தி என்று அவர் பக்கமே போரதே கிடையாது. அவரிடம் இருந்து ஒரு நல்ல கட்டுரை! ஆச்சர்யம் !!

Hariharan # 03985177737685368452 said...

Something seriously must be done. Clean toilets are not luxury it is a necessity for all.

maddy73 said...

என்னது, நீங்க எம்.எல்.ஏ. வா? அப்புறம் என்ன சார், நீங்க முதல்ல உங்கள் தொகுதியில் மேலும் பல கழிப்பிடங்கள் கட்டி, சட்டசபையில் மற்ற எம்.எல்.ஏ க்களுக்கு ஒரு முன் உதாரணமா இருக்கலாமில்லையா?
நன்றி, நல்ல பதிவு... மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பும் நண்பன் --

ஜிகர்தண்டா said...

கழிப்பறைகளை கூட வியாபார உத்திகளை பயன் படுத்தி டெண்டர் விட்டு காசு பார்க்க ஆரம்பித்த பிறகு, நல்ல கழிப்பறைகளை எதிர்பார்ப்பது வீண்தான் ஒருவேளை
இனி தேர்தலுக்கு எல்லா தமிழருக்கும் நாப்பி குடுத்து விழா எடுப்பார்களோ என்னமோ?

ஒரு ஜோக் தான் நினைவுக்கு வருகிறது :: யூரின் போக காசு கேட்டத பாத்த பாரின் காரன் சொன்னானாம் " எங்க ஊர்ல வெளில போனாதான் காசு தரனும் (fine) உங்க ஊர்ல உள்ள போறதுக்கு காசு கேட்கறதாலதான் அவனவன் வெளில ப்ரீ-யா போறான்னு".

Anonymous said...

I think it has become too stale to blame the governments anymore. It might be a good idea if big corporates come forward and adopt different areas in the city to provide toilet facilities.

kamalfan said...

உலகநாயகனை கிண்டல் செய்தே பிழைப்பை ஓட்டும் இட்லிவடை, கமல் நடித்த நானும் ஒரு தொழிலாளி, மகராசன் போன்ற படங்களை பார்க்கவேண்டும். சேரி வாசியாக நடித்து அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி அதில் கழிப்பறை கட்டி, பணம் தந்த அரசியல்வாதியையே கூப்பிட்டு திறப்புவிழா நடத்துவார். அவரை கிண்டல் செய்பர்கள் chowchaalyam தான் !!!

ஜெயக்குமார் said...

ரவிக்குமாரின் அருமையான கட்டுரை. அவரது தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாய் மாற்றலாமே.??

vedanarayanan said...

It is a very good article. I didnot know that there is a designated day for this.

But anyway , a clean toilet is associated with individual economics. The costs are in the range 2k-10k. But the space is a bigger economic criteria in cities.

But I donot think it is a big problem in villages. There is a vast area and the shit gets recycled quickly, except in rainy season it causes serious health hazards.

But towns and metros, it is a problem with support population (autowals, drivers, maid servants, plumber, electrician) living in poor conditions not the professionals who live in decent houses. I always wonder how the support population can afford to live in metro cities.

kggouthaman said...

If some central Govt / Railway department authorities are reading this, please note:
The cleanliness of second class compartment toilets is very pathetic in all the trains. I had often traveled between Chennai and Bangalore - and this is my observation. First class and second AC compartment toilets are maintained better than the second class compartment toilets.
Railway and health ministry people have to inspect and take appropriate action.