பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 16, 2009

பெட்டிக்காரன் - இரா.முருகன்

வார்த்தை நவம்பர் 2009 இல் வந்த இரா.முருகன் கட்டுரை....

எழுத்தாளனா? இங்கே என்ன செய்யறீங்க?

பக்கத்து சீட்காரர் விசாரித்தார். அப்படியே வெளியே சாடிவிடலாம் என்று பார்த்தேன். சின்ன சிக்கல். வானத்தில் இருந்து கையில் லேப்டாப் பையோடும் கழுத்தில் டையோடும் இறங்கி வருகிற ஒரு சோடா புட்டி கண்ணாடிக்காரனை மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. மேலே பறக்கிற விமானத்தில் இருந்து குதித்து மேகங்களின் ஊடாகப் பாய்ந்து கீழே வந்து இத்தனை களேபரத்திலும் மூச்சு உடம்பில் இருந்து பிரிந்து போகாமல் ஒட்டிக் கொண்டிருக்குமா? கீழே, துருக்கி நாட்டுக் கடைத்தெருவில் வேடிக்கை பார்க்கிற ஒருத்தருமா ஆதரவாகக் கையை நீட்டி என்னை இறக்கி விட மாட்டார்கள்?

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனியில் அதிகாரி என்றால் கொஞ்சம் மரியாதை கூட கிடைக்கலாம். ஆனாலும் தப்பித் தவறி கூடவே எழுத்தாளனும்தான் என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது. பின்னஞ் சந்தில் ராக்கெட்டைத் திணித்துத் திரும்பவும் மேலே அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். எனக்குத் தெரியும்.

பறக்கிற விமானத்திலும், பாழாய்ப்போன துருக்கியிலும் மட்டுமில்லை. பறந்து தாழ்ந்து ஸ்காட்லாந்தில் தரை இறங்க வேண்டிய எடின்பரோ நகரத்தில், அங்கே குடக்கூலிக்குக் குடிபோன இடத்தில் கூட இதே கதைதான். போய்ச் சேர்ந்து கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு புத்திசாலித்தனமாக (நான் நினைக்கிறது இது) மூஞ்சியை வைத்துக்கொண்டு ஆலோசனை சொல்லி உடனடியாகப் பெட்டி தட்டும் ஆபீசும் இதில் அடக்கம். எங்கேயும் சொல்லக்கூடாத சிதம்பர ரகசியம் ‘ஐயா, அம்மா, நான் ஒரு எழுத்தாளனும் கூட’.

அது சிலபேர் முகராசி. சதா சிரித்துக் கொண்டே ரொம்ப பிரியமாகப் பேசியபடி வருடக் கணக்காக உற்ற தோழராக இருப்பார்கள். அவர் வீடு எங்கே இருக்கு, எத்தனை பிள்ளைகள், மனைவி இல்லத்தரசியா வேலைக்குப் போகிறவரா இதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரிந்து என்ன ஆக வேண்டும், அதது அவங்க அவங்க சொந்த சமாசாரம் என்கிற தாராள மனப்பான்மைக்காரர்களுக்காக – சரி சார், அவங்க ப்ளட் க்ரூப், எச்.ஒன் என் ஒன் பாசிட்டிவா நெகட்டிவா, பிளட் பிரஷர், ரத்தத்தில் சர்க்கரை அளவு இதெல்லாம், வேணாம், இதிலே ஒண்ணு ரெண்டாவது தெரியுமா? சொன்னால்தானே தெரியும். இன்னோரன்ன கல்லுளிமங்கன்கள் வாயைப் பிடுங்கி வார்த்தை வரவழைக்கவே முடியாது.

நமக்கு இந்த விஷயத்தில் நேர்மாறு. முகம் படுசீரியஸ் எப்பவுமே. ‘அதென்ன எழவு வீட்டு போட்டோவிலே கூட கோபத்தோட நிக்கறீங்க? கைமாத்து ஏதும் வாங்கி அந்த மனுசர் திருப்பித் தராமப் போய்ச் சேர்ந்துட்டாரா?’ என்று அன்போடு விசாரிப்புகளை சகஜமாக எதிர்கொள்ளப் பழகிவிட்டது. ஆனாலும் என்? என் வாயைத் திறந்து பேச ஆரம்பித்த பதிமூன்றாவது நிமிடத்தில் உள்ளாடை சைஸ் வரை என் தரப்பில் இருந்து தகவல் பரிமாறப்பட்டு விடும். சங்கதி அப்படி இருக்க எழுத்து மோகம் மட்டும் அந்தரங்கத்தில் புதைந்து கொண்டு விடுமா என்ன? உள்ளாடை அளவு தவிர மற்ற எல்லாம் சொல்லியது எடின்பரோவில் வீட்டு புரோக்கரிடம். உடனடியாக குடக்கூலிக்கு வீடு வேண்டி இருந்தது.

அந்த வீட்டு புரோக்கர் பாட்டியம்மா ‘என் கூட வா’ என்று அழைத்தபடி, தெரு ஓரமாகக் குடையைப் பிடித்துக் கொண்டு சிலை சிலையாகக் கடந்து வளர்ப்பு நாய்க் கழிவை மிதிக்காமல் வேகமாக நடந்தார். மழையும், சிலையும், கழிவும் சற்றுத் தூக்கலான நகரம். எனக்கு முன்னால் நடக்கிற புரோக்கர் அப்பத்தாவும் தூக்கலான குதிகால் செருப்பு அணிந்து தாவிக் குதித்து நடக்க நான் பின்னால் மழையில் நனைந்து குளிர்ந்தபடி உத்தேசமாக அந்தம்மாவின் பின்புறங்கள் ஈரத்தில் துலங்கிய திசையில் நகர்ந்ததை மாநகரக் காவலர்கள் பார்த்திருந்தால் ஜெரியோபிலியா கேஸ் (முதியவர்கள் மேல் மையல் கொண்டு மடலூறும் பிரகிருதி) என்று முடிவு செய்து குழந்தைகள் காப்பகத்தில் சிறை வைத்திருப்பார்கள்.

அவள் கொண்டு போய் நிறுத்திய இடம் எடின்பரோ தோப்புத்தெருவில் ஒரு பழைய வீடு. தெரு முழுக்க கருப்புக் கல் கட்டிடங்கள் வருடம் பூரா மழையில் நனைந்து, கருப்பு ஆடை உடுத்தி நித்திய துக்கம் அனுஷ்டிக்கிற பெண்களைப் போல் மவுனமாக நிற்க, நடுவே இந்த வீடு வயோதிகமும் துக்கமுமாகப் பரிதாபமாக அழுதது. வாசலில் டாக்டர் மெக்வெய்ன். பல் டாக்டர் என்று கல்லில் கொத்தி வைத்திருந்தது. அவர்தான் வீட்டு சொந்தக்காரரா என்று புரோக்கரிடம் கேட்டேன். ‘மெக்வெய்ன் தாத்தா போய்ச் சேர்ந்து ஐம்பது வருஷமாச்சு. லாண்ட்லார்ட் அவரோட பேரன். என் அந்தக்கால பாய் பிரண்ட்’.

அறுபது கடந்த அந்த பாய் பிரண்டும் கேர்ள் பிரண்டும் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருக்க நான் ஒரு மர நாற்காலியில் உட்கார்ந்து அங்கே கிடந்த பழைய செய்தித்தாளில் ரெண்டாம் உலக யுத்தம் போனவாரம் ஆரம்பமான செய்தியை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தேன். வீடு ரெண்டு உலக யுத்தங்களை சந்தித்து விட்டு இன்னும் ஒன்று வந்தாலும் பார்க்கத் தயாராக எல்லாச் சுவரிலும் மழைத் தண்ணீர் இறங்கி கனகம்பீரமாக நின்றது. அங்கங்கே பல்லுப்போன மாதிரி பல் டாக்டர் வீட்டு ஜன்னல் கம்பி பலதும் மிஸ்ஸிங்க்.

கம்ப்யூட்டர் காரன். கதையும் எழுதுவான். மூணு நாவல், எட்டு சிறுகதை தொகுப்பு, நாலு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கட்டுரைத் தொகுப்பு. எழுதியிருக்கானாம். இதோட கூட ஆபீசும் போய் வருவான் இந்தப் பிள்ளையாண்டான்.

புரோக்கரம்மா எடுத்துவிட, வீட்டுச் சொந்தக்காரர் விரோதத்தோடு பார்த்த மாதிரி பட்டது. தீர விசாரிக்கும் தோரணையில் என்னை அணுகினார் அவர்.

எழுத்தாளனா? கம்ப்யூட்டர் ஆசாமியா? யார் நீ?

வேலு நாயக்கரிடம் விசாரிக்கிற குழந்தை போல அவர் கேட்க, எழுத்தும் மற்றைய வேலையும் வெவ்வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் இடத்தில் வந்து மாட்டிக் கொண்டேன் என்று புரிந்து கொண்டேன். எழுத்தாளன் என்றால் எழுதிச் சம்பாதிப்பான். தினசரி ஏகதேசம் எட்டு மணி நேரம் மதுக்கடையில் கசப்பு லாகர் பியர் குடித்தபடி கதை எழுதுவான். கம்ப்யூட்டர்காரன் என்றால் ஆபீசில் மாய்ந்து மாய்ந்து பெட்டி தட்டி சம்பளம் வாங்கி வீட்டுமனைக் கடன், சேமநல நிதி பிடித்தம் இதெல்லாம் போக மாசக் கடைசியில் ஒரு கணிசமான தொகை வங்கிக் கணக்கில் வரவு வர, மதுக்கடையில் பியர் குடித்து சுருதி ஏற்றிக் கொள்வான். ரெண்டு ஆசாமிகளும் வெவ்வேறு ஜன்மங்கள். குடிப்பதில் மட்டுமே ஒற்றுமை.

ஆனால், நம்ம ஊர் வழக்கம் வேறு. எழுத்தை தொழிலாக வைத்துக் கொள்ளாமல், வேலை பார்த்துக் கொண்டே வாரக் கடைசியில், ராத்திரி கண் முழித்து பெண்டாட்டி படுத்துக் கொள்ளச் சொல்லி படுக்கையில் இடம் விட்டு நகர்ந்தாலும் பொருட்படுத்தாமல் டெட்லைன் காப்பாற்ற எழுதி அனுப்பி சன்மானம் வாங்குகிறது அது. வீட்டுக்காரருக்கு இந்த வளமுறையை கோடி காண்பிப்பதில் அடுத்த ஐந்து நிமிடம் கடந்து போனது. போகட்டும். தமிழ் எழுத்து பற்றி அவரும் அறியட்டும்.

மேட், சயாமிஸ் ரெட்டையர்கள் தெரியுமா?

அவர் கேட்டார். கேட்டிருக்கேன். தோள் பக்கத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். சாகிற வரைக்கும் ரெண்டு பேரும் ஒட்டியே இருக்கப்பட்டவர்கள்.

இருபது வயசு காணும் சயாமிஸ் ரெட்டையர்கள் ஒரு ஜோடி இருந்தாங்க. ரெண்டு பேரும் இப்படி சதா மழை பெய்யற ஸ்காட்லாந்திலே வருஷக் கணக்கா தனியாக் கழிக்க வேண்டிப் போனது.

நான் கதை கேட்கிற சுவாரசியத்தோடு அப்புறம் என்று கேட்டேன். அப்புறம் என்ன? அவர் இன்னொரு கிளாஸ் விஸ்கியை தாராளமாக தன் கோப்பையில் வார்த்துக் கொண்டார். எனக்குக் கொடுத்ததை பாட்டியம்மா புரோக்கர் குடித்துவிட்டாள். நாள் முழுக்க குடித்தாலும் ஸ்டெடியாக இருக்கிற மக்கள்.

அந்த சயாமிஸ் ரெட்டையர்களில் ஒருத்தர் பொன்னை விரும்பும் பூமியிலே பெண்ணை விரும்பும் சராசரி மனுஷர். இன்னொருத்தர் ஒருபால் புணர்ச்சியாளர். அவர் தன் புட்டத்தைத் தட்டிக் காட்ட, புரோக்கர் பாட்டியம்மா வெடிச்சிரிப்பு சிரித்தாள். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

எழுத்தாளனும் கம்ப்யூட்டர்காரனுமா ஒட்டிப் பிறந்திருக்கே நீ. இதிலே யார் சராசரி, யார் ஒருபால்னு தெரியாது. ஆனா, எப்பவுமே ரணமா வீங்கியிருக்கிற பின்புறம் உனக்குன்னு பிறக்கும்போதே விதிச்சிருக்குமே?

அன்பாக விசாரித்தார். ஆனாலும் என்னை பேண்டைக் கழற்றச் சொல்லிப் பரிசோதிக்காமல் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டார் அந்தப் புண்ணியவான்.

ஆபீசில் சக புராஜக்ட் சீனியர் மேனேஜர்களான வெள்ளைக்காரர்கள், ஒற்றைக் கருப்பர், ஒரு நியூசிலாந்துக்காரர் ஆகியோர் அவங்க ஊரில் அடுத்த ஜன்மத்தில் எழுத்தாளனாகப் பிறந்து சொர்க்க போகத்தோடு வாழ்க்கை நடத்த அன்போடு அழைப்பு விடுத்தார்கள். கார்டியன் பத்திரிகையில் வாராவாரம் ஒரு ஆங்கில எழுத்தாளர் வீட்டுக்குப் போய், அவர் எழுத உபயோகிக்கும் அறையைப் படம் எடுத்து விஸ்தாரமாகப் பிரசுரித்திருப்பார்கள். அதில் ஒரு பிரதியை எனக்குக் காட்டி, எழுத்தாளன் வீடு என்றார் இன்னொரு சிநேகிதர். சகல சுக சௌகரியத்தோடும் ஒரு அறை. ஓரத்தில் சின்னதாக ஒரு பூஜாடி தட்டுப்பட்டது. தமிழில் எழுதி புத்தகத்துக்கு ராயல்டி வாங்கிய பணத்துக்கு மேல் ஐநூறு ரூபாய் கைக்காசு போட்டு அது மாதிரி ஒரு பூஜாடி வாங்கலாம் என்று தோன்றியது.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கத்துக்கு மாறாக மழை ஓய்ந்திருந்தது. செய்தித்தாளில் கண்ணில் பட்ட முதல் விஷயம் ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் காலை பத்து மணிக்குக் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.

இங்கிலீஷ் கவிஞர் பெருமக்களையும் ஒரு சேஞ்சுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துவிட்டு வரலாமே என்று கிளம்பினேன். அதில் எத்தனை பேர் ஹாலிவுட் படத்துக்குப் பாட்டெழுதும் கனவில் இருப்பார்கள் என்று கொசுறாக சிந்தனை.

தரையில் நடக்கிற, ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்த இளம் கவிஞர்கள் பலபேரும். ஒரு பெண் கவிஞர் தொப்புளில் தொங்கட்டான் மாட்டியிருந்தார். அடுத்த சந்திப்பில் இவர்களுக்கு நம்ம ஊர் நயம் கதர் ஜோல்னாப்பை பரிசளிக்க மனதில் முடிவு செய்து கொண்டேன் - உள்ளே விவகாரமான ‘கவிஞர் கூடல்’ அழைப்பிதழோடு.

எடின்பரோ கவிஞர் சந்திப்பில், ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர், – நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான ஜான் பர்ன்சைட் கலந்து கொண்டு கவிதை வாசித்தார். பரவலாகப் பேசப்பட்ட அவருடைய நாவலான ‘அப்பாவைப் பற்றிய பொய்கள்’ பற்றிய பேச்சை ஜாக்கிரதையாகத் தவிர்த்து விட்டு (‘நாவலை எல்லோரும் காசு கொடுத்து வாங்கிப் படிச்சுட்டு வாங்க, அப்புறம் பேசலாம்’) அவர் கவிதை படித்தார். பட்டியல் ரகக் கவிதை.

ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் ப்ரயன் ஜான்ஸ்டோன் அடுத்துக் கவிதை வாசிக்க எழுந்தார். என்னோடு இருந்த முப்பது பேரில் பத்து பேர் முன்கூட்டியே நிச்சயித்துக் கொண்டதுபோல், பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள். அவர்கள் 1843-ல் திறக்கப்பட்டு இன்னும் கதவு அடைக்காத பியர்க்கடையில் நுழைகிறது ஜன்னல் வழியாகக் கண்ணில் பட்டது. கவிதையா பியரா என்று மனசில் சின்ன விவாதம். பக்கத்தில் தொப்புள் லோலாக்கு பெண் வந்து உட்கார்ந்ததும் கவிதை வென்றது.

அறுபது வயது கடந்த கவிஞர் ப்ரயன் ஜான்ஸ்டோன். விஞ்ஞானி ஐன்ஸ்டின் போல் தலைமுடியும், நரைத்த கட்டை மீசையுமாக இருந்தார். கம்பீரமான குரல். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.

கண்ணாடிக்குள் இருந்த
என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.
இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,
கண்ணாடிக்குள் தட்டுப்படும
என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.

கூட்டம் முடிந்து கவிஞரிடம் போய் அறிமுகப்படுத்திக் கொண்டேன். வழக்கம் போல் பொட்டி தட்டும் சாப்ட்வேர்காரன் பிளஸ் எழுத்தாளன் என்று அறிவித்தபோது அவர் ஒரு சலனமும் இல்லாமல் என்னைத் திரும்ப வெறித்துப் பார்த்தார். எந்த மொழியில் எழுதுகிறீர்கள் என்று மட்டும் கேட்டார். சொன்னேன்.

தமிழ் கிரேக்க மொழியை விடப் புராதனமாது இல்லையா என்று திரும்பக் கேட்டார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளொடு முன் தோன்றியதை ஆங்கிலத்தில் சொல்லி, விலாவாரியாகக் குலமுறை கிளர்த்தினேன்.

அப்படியான பழைய மொழியில் எழுத அதிர்ஷ்டம் இருக்கணுமே. எழுதியே காசு கொட்டும். ஆனாலும் கையிலே இன்னொரு தொழில் இருக்கணும்னு துடிப்பா இருக்கற உங்க திறமைக்கு என் வாழ்த்துகள்.

பீஷ்மர் கர்ணனை ஆசீர்வதித்தது சம்பந்தம் இல்லாமல் நினைவு வந்தது.

நானும் வேலையில் இருந்து தான் ரிடையர் ஆனேன்.அவர் தொடர்ந்து சொன்னார். நம்பவே முடியவில்லை.ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து போன வருடம் ரிடையர் ஆனேன்.

‘பல்லி விழும் மௌனம்’ என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு படகு போல பெரிய டயோடா காரில் கிளம்பினார் ப்ரையன். நான் அவர் பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

( நன்றி: வார்த்தை, எனக்கு அனுப்பிய இரா.முருகனுக்கு ஸ்பெஷல் நன்றி )

பின்னஞ் சந்தில் ராக்கெட்டைத் திணித்துத் திரும்பவும் மேலே அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். எனக்குத் தெரியும். கடவுள் எல்லாவற்றையும் மேலேயிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று எதற்கு சொல்றோம் ? இதற்கு தான்!

11 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

நல்ல கட்டுரை!!


அதில் எத்தனை பேர் ஹாலிவுட் படத்துக்குப் பாட்டெழுதும் கனவில் இருப்பார்கள் என்று கொசுறாக சிந்தனை.//


இதென்ன?? கவிஞர்கள் என்றாலே, சினிமாவிற்கு பாட்டெழுதும் கனவோடுதான் இருப்பார்களா?? டிபிகல் தமிழ் சினிமா சிந்தனையாக இருக்கிறது இவ்வரிகள்....சென்னைக்கு வரும் கிராமத்தார்கள் எல்லாம் சினிமாக்கனவோடுதான் வருவார்கள் என்பது போல!!

sreeja said...

// அது சிலபேர் முகராசி. சதா சிரித்துக் கொண்டே....வாயைப் பிடுங்கி வார்த்தை வரவழைக்கவே முடியாது //

இது உ.போ.ஒ. பின் எழுதியதா முன்னா?
-----------------------
சில ஆபாசங்களை தவிர்த்து எழுதினாலும் சுவாரசியம் இருக்கும். அதெல்லம் உண்மை, கண்டதை சொல்கிறேன் என்று எழுதி உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாமே - பிளீஸ்.

அமுதப்ரியன் said...

அருமை இரா.முருகன் அவர்களே!!

அதென்ன இப்படி அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

அமுதப்ரியன்

ஜெயக்குமார் said...

சரியான பிளேடு பதிவு.. இதற்கு இ.வ. நன்றி வேற. இவரது கட்டுரைகள் பொதுவாய் நன்றாய் இருக்கும்..

KVR said...

sreeja முதன்முறை இரா.மு கட்டுரை படிப்பவரா?

saivakothuparotta said...

nijamagave en sitrarivirku ondrume puriyavillai. ennathan solla varukirar...

Dubai Nara said...

வலுக்கட்டாயமா அங்காங்கே நகைச்சுவையைத் திணித்தது போலிருந்தது. வாசிப்பு ஓட்டம் நிறையத் தடைப்படுகிறது.கட்டுரைய அதன் போக்கிற்கு எழுதியிருக்கலாம். பெரிய எழுத்தாளர் என்றாலும் வாசகர் feed back அவசியம் தானே.

மானஸ்தன் said...

//கடவுள் எல்லாவற்றையும் மேலேயிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று எதற்கு சொல்றோம் ?////

அப்பனே! ஞானபண்டிதா!! எல்லாரையும் (இட்லி வாசகர்களையும் சேத்துதான்) காப்பாத்துப்பா!!

R.Subramanian@R.S.Mani said...

If this type of articles continue ( both inclusive of CHITHTHAR) WHETHER THE WORLD WOULD BE AVAILABLE IN 201`2 OR NOT THE idlyvadai would not be available to see even 2010
Suppamani

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பிரபாகர் said...

இரா. முருகனின் எடின்பரோ செய்திகள் அவர் எண்ணங்களில் அமைத்த வண்ணங்கள் . ஸ்காட்லாந்தில் எடின்பரோ தோப்புத் தெருவில்( Grove Street) நான் வாசித்த பொது பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அறிமுகப்படுதிக்கொண்டதில்லை.

இராஜகுமாரர்கள் (பிரின்சஸ் ) வீதியைப் பற்றி அவ்வபோது அவர் தொடர்களில் படிப்பது அருமை.

"நாள் முழுக்க குடித்தாலும் ஸ்டெடியாக இருக்கிற மக்கள்". எனக்குக் தெரிந்தவரை அது உண்மையல்ல. நம்மூர் மக்கள் தண்ணி தலைகேறி தள்ளாடுவது போல், இங்கு இரவு நேரங்களில் சரடுவிடும் யுவன்களும் யுவதிகளும் அதிகம்.

"கவிதையா பியரா என்று மனசில் சின்ன விவாதம். பக்கத்தில் தொப்புள் லோலாக்கு பெண் வந்து உட்கார்ந்ததும் கவிதை வென்றது."
இரா முருகன் இரவு நேரத்தில் கின்னஸ் பியர் அருந்தி கிக்கேறி கிரங்காமல், லோதியன் தெரு மற்றும் ஜார்ஜ் தெருக்களில் நடைபயிலாமல் அறையில் அமர்ந்து கவி புனைந்தது தெரிகிறது !!