"நீங்கள் எழுத்தனுபவமே இல்லாத என்னிடம் ஒரு கட்டுரை கேட்டது, உண்மையிலேயே
மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் தளத்தை தினமும் தவறாமல் பார்த்துவருபவன். பல ‘ஜாம்பவான்கள்’ கலந்துகொள்வதால், எனக்கு எழுத கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. எனது
‘நுனிப்புல்’ ஞானம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான்" என்று சொல்லி , சமீபத்தில் அமுதசுரபி தீபாவளிமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையை எனக்கு அனுப்பியுள்ளார் நண்பர் பாரதிமணி. அதை இட்லிவடை வாசகர்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி
ஆதெள கீர்த்தனாரம்ப காலத்திலிருந்தே, -- அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ‘கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திலிருந்து’ என்ற தேய்ந்து துரும்பாய்ப்போன பிரயோகத்தை தவிர்த்து -- மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி ஆயிரக்கணக்கில் ஜோக்குகளும், சிறுகதைகளும், சீரியல்களும் வந்துவிட்டன. ஆனால் மாமனார்-மருமகன் உறவுமுறைகளை இன்னும் கொச்சைப்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்! இந்தக்கட்டுரையில் என் மாமனார் க.நா.சு.வைப்பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.
தில்லியில் என் திருமணத்திற்குப்பிறகு தனியாக வீடு பார்க்க முனைந்த என் மாமனார் கநாசுவிடம், ‘எனக்கு இப்போ அப்பா இல்லை. என்னை மகனாக நினைத்து நீங்கள் என்னுடன் சேர்ந்து இருக்கக்கூடாதா? தனியாப்போகணுமா?’ என்று நான் கேட்ட கேள்வி அவரை மிகவும் பாதித்தது. ஒரு மாமாங்கத்துக்கும் மேலாக ஒரே வீட்டில் எந்த உரசலுமின்றி மாமனாரும் மருமகனும் சந்தோஷமாக இருந்தோம். இதற்கு முக்கிய காரணம் இருவருமே மற்றவருக்கான உரிய இடத்தை விட்டுக்கொடுத்து, எந்த அநாவசிய தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கத்தெரிந்ததால் தான். அவர் கடைசிக்காலத்தில் சென்னையில் வசித்தாலும், சாவதற்கு அவருக்குப்பிடித்தமான தில்லியில் என் வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு மகனாக நான் தான் அவரை நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டினேன்.
என் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். வெளியூருக்குப்போனால், என் மனைவி ஜமுனாவுக்கு எழுதும் எல்லாக்கடிதங்களிலும், ‘குழந்தைகளை ‘க’டிக்காதே’ என்ற வாக்கியம் நிச்சயம் இடம்பெறும். ஆம், அவர் கையெழுத்தில் ‘அ’ பார்ப்பதற்கு ‘க’வைப்போலவே இருக்கும்! குழந்தைகளும் அவரிடம் ஒட்டுதலோடு பழகும். அவர்கள் இன்று இருக்கும் நல்ல நிலைமைக்கு அவர் ஒரு முக்கிய காரணம். சின்னவயதிலேயே ‘அமர் சித்ர கதா’, ‘ட்வின்கிள்’ போன்ற சிறுவர் பத்திரிகைகளுக்கு ஆண்டுச்சந்தா கட்டிவிடுவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடித்தேடி வாங்கிவருவார். அவ்வப்போது British Council, American Library-யிலிருந்து குழந்தைகள் படிக்கும் புத்தகங்களைத்தேர்வு செய்து எடுத்துவந்து படிக்கச்செய்வார். அவருக்குப் படிக்க புத்தகங்கள் எதுவுமில்லையென்றால், என் குழந்தைகள் பாடபுத்தகங்களை கொண்டுபோய் படிக்க ஆரம்பித்துவிடுவார். He was a voracious reader! என் இரு குழந்தைகளுமே –ரேவதியும் அனுஷாவும் -- படிப்பதில் தாத்தாவைக் கொண்டிருக்கிறார்களென்பதில் எனக்குப்பெருமை! ரேவதி கல்யாணத்துக்குப் பிறகும் அவரது எல்லா புத்தகங்களையும் சரிவர பராமரித்துவந்தாள். சென்னை வந்தபிறகு கநாசுவின் எல்லா புத்தகங்களையும் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு கொடுத்துவிட்டேன்.
அப்போது இந்தியாவில் வெளிநாட்டு Portable Typewriters கிடைப்பது அரிது. அதனால் நான் வெளிநாடு போகும்போது, ஆறு மாதத்துக்கொருமுறை, Brother, Olivetti, Remington என்று புது மாடலில் வந்திருக்கும் தட்டச்சுகளை வாங்கிவருவேன். (பழைய டைப்ரைட்டரை வாங்கின விலையை விட அதிக விலைக்கு விற்றுவிடுவேன்!) அதில் ஒரு குழந்தையைப்போல இரவுபகல் பாராது, இரு சுட்டுவிரல்களால் தட்டிக்கொண்டேயிருப்பார். அவர் அறையிலிருந்து ‘டப்..டப்’ என்று டைப் அடிக்கும் சப்தம் கேட்டவாறிருக்கும். அவர் எப்போது தூங்குவாரென்று அவருக்கே தெரியாது! கையில் செலவுக்குப் பணமில்லையென்றால், யாரிடமும் கேட்கமாட்டார். அடிக்கொருதரம் வாசலை எட்டிப் பார்த்து, ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாச்சா?’ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார் ஏதாவது மணியார்டர் வராதாவென்று எதிர்பார்த்து. வெளியில் போவது சுத்தமாக நின்றுவிடும். பேப்பர்க்காரனிடம் குவிந்திருக்கும் பழைய பேப்பர் பத்திரிகைகளைப்போட்டு காசு வாங்குவார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது எனக்குப்புரியும். என் மனைவியிடம், ‘உங்கப்பாட்டே பணமில்லைனு நினைக்கிறேன். இதை நீயாகக் கொடுத்ததாக அவரிடம் கொடு’ என்று நூறோ இருநூறோ கொடுப்பேன். (அப்போது இது பெரிய தொகை). அன்று மாலையே பி்ரிட்டீஷ் கெளன்ஸில், யூ.என்.ஐ. கான்டீன் என்று கிளம்பிவிடுவார். தில்லியில் ஞானபீடம் ஜெயின், குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யர், வாத்ஸ்யாயன், ஸ்டேட்ஸ்மன் இரானி போன்றவர்கள் ஆதரவில் எல்லா ஆங்கிலப்பத்திரிகைகளுக்கும் எழுதிவந்தார். வசதியாகவே வாழ்ந்தார்.
ஒரு சமயம் குமுதம் பத்திரிகை மூத்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில், ‘வைரமோதிரக் கதைகள்’ என்று தொடராக வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களிடம் ஒரு கதை பெற்று, அதற்கு சன்மானமாக ஒரு வைரமோதிரம் பரிசளித்தார்கள். தி. ஜானகிராமன், சாண்டில்யன் போன்றோர் எழுதினார்கள். குமுதம் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்து, ‘எடிட்டர் உங்க விரலுக்கு அளவெடுத்துக்கிட்டு வரச்சொன்னார்; அடுத்தவாரம் வந்து கதை வாங்கிட்டுப்போறேன்’ என்று பணிவாகச்சொன்னார். கநாசு பதிலுக்கு ‘செட்டியார் உங்களுக்கு ஒழுங்காக சம்பளம் தருகிறாரா?’ என்று சீரியஸாகக் கேட்டதும், வந்தவர் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார். பிறகு கநாசுவின் மனைவி, ‘வந்து கேட்டவனுக்கு எதையாவது எழுதிக்கொடுத்து ஒரு வைரமோதிரம் வாங்கத் துப்பில்லே......நானோ பாப்பாவோ அதை போட்டிண்டிருப்போம்! வீட்டுக்கு வந்தவனை விரட்டிட்டேளே!’ என்று அரற்றியது தான் மிச்சம்!
கநாசு அடிக்கடி வெளியில் போய் ஹோட்டல்களில் சாப்பிட விரும்பியதற்கு என் மாமியார் தான் காரணமென்று என் மனைவி ஜமுனா கூறுவார். அதில் உண்மை நிறையவே உண்டு! ‘ராஜி Boiled Vegetables பண்ணினா அது ஏன் Spoiled Vegetables-ஆவே போகிறது?’ என்று கேலியாகக்கேட்பார். என் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் யாராவது ‘உனக்கு நடிக்கத் தெரியவில்லை......எழுதத்தெரியவில்லை’ யென்று சொன்னால் மகிழ்ச்சியுடன் ஆமோதிப்பேன். அது உண்மை! ஆனால் சமையலில் நளனுக்கு வாரிசு நான் தான்! என் தாயார் சிவகாமியின் கொடுப்பினை அது! வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பமாக வீட்டில் என் குழந்தைகள் உட்பட எல்லோரும் என்னை சமைக்கச்சொல்லுவார்கள். அன்று வெளியில் போய்விட்டு கநாசு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது, ‘ராஜி, இன்னிக்கு ஞானபீடம் ஜெயின் மத்தியானம் ஹோட்டலில் சாப்பிடக்கூப்பிட்டார். மொதல்லே சரீன்னேன். அப்புறம் தான் இன்னிக்கு மணி சமையல்னு ஞாபகம் வந்தது. ஒரு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்துட்டேன். இந்த சின்னவெங்காய சாம்பாரும், அவியலும், கூட்டும், துவரனும் ஓபராய் ஹோட்டல்லே கெடைக்குமோ?’ என்று சொல்லிக்கொண்டே என் சமையலை ருசித்துச்சாப்பிடுவதை பல முறை தள்ளி நின்று ரசித்திருக்கிறேன்! என் மசால் வடைகளை விரும்பிச்சாப்பிடுவார்.
தில்லிக்குளிர்காலத்தில் சாப்பாட்டுக்குப்பிறகு வேர்க்கடலை உடைத்து கொறிக்க ஆரம்பித்தால், மாலைக்குள் அரைக்கிலோவுக்கும் மேலாக முடித்திருப்பார். நடப்பதற்கு அஞ்சாதவர். பக்கத்திலிருக்கும் அம்பாரம் போல் குவித்த வேர்க்கடலை வண்டியை விட்டுவிட்டு, நேரு ப்ளேஸ் வரை நடந்துபோய் வேர்க்கடலை வாங்குவார். நடையில் ‘சிதம்பர நடராஜர்’ தான்! வயோதிகத்துக்கான எந்த உபாதைகளும் அவருக்கு இருந்ததில்லை. தலைவலி, ஜலதோஷமென்று வந்தால், ஜாம்பெக் தான் அவரது சர்வரோக நிவாரணி! அதைப்பற்றி வேடிக்கையாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்!
ஒரு தடவை கலைமகள் தீபாவளிமலரில் அவரது கதையொன்று வெளிவந்தது. என்னிடம் படிக்கக் கொடுத்தார். மூன்று பக்கக்கதையில் 42 தடவை ‘தான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அவன் தான்....அதைத்தான்... கீழே தான்....சொன்னதைத் தான்....இப்படி. அவைகளை ஒரு பென்சிலால் அடிக்கோடிட்டு ஜமுனாவிடம் காட்டினேன். பிறகு என் காது கேட்க, ‘ஆமா, இன்னொரு தடவை பார்த்திருக்கணும்... நிறையவே ’தான்’ இருக்கு.....சாம்பாருக்கு போடற அளவுக்கு!’ என்று சொன்னார்.
ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh ‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.
வீட்டுக்கு வந்ததும், என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடேலே படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு கநாசுவின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு தான்! பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை.....ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’
அவரிடமிருந்த மற்றொரு நல்ல குணம் பிறருக்குத்தரும் மரியாதை. வயதில் மிகச்சிறியவர்களையும் பன்மையிலேயே அழைப்பது. இதை அவர் Political Correctness-க்காக செய்வதில்லை. தில்லியில் அவருக்கு சீடராக இருந்த எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி இல்லாத நேரங்களிலும், ‘ராஜி, இன்னிக்கு ராஜாமணி வந்தாரா?’ என்று பன்மையில் தான் கேட்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு நேர் எதிர்! மனதுக்குப்பிடித்த புதிய நண்பர்களிடம் ஒரு வாரத்துக்குள் ‘வாடா....போடா’ லெவலுக்கு இறங்கிவிடுவேன். தெற்கே வந்தால் சென்னையில் சி.சு. செல்லப்பாவும், சிதம்பரத்தில் ’மெளனி’யும் என்னிடம் பேசும்போது வாக்கியத்துகொரு தடவை வாய்நிறைய ‘மாப்பிளே....,மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!
( அமுதசுரபி அக்டோபர் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தது )
[
ஆசிரியர் குறிப்பு: ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட மணி, 'பாரதி' படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்த பிறகு 'பாரதிமணி' என்ற பெயரை பெற்றார். ( பாபா படத்தில் இவர் சி.எம்'க நடித்திருப்பார் நல்ல வேளை பாபாமணி என்று பெயர் வாங்கவில்லை :-). எனக்கு எழுத தெரியாது என்று கலக்கும் இவருக்கு வயது 72. இளைஞர். தில்லி வாழ்க்கையில் இவருடைய அனுபவ கட்டுரைகள் பலர் கேட்டிராதவை. க.நா.சுப்ரமணியத்தின் மருமகன். எழுத்தாளர் ஜெயமோகனும் இவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் - பார்வதிபுரம். போனவருடம் ரிலீஸ் ஆன இவருடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரை தொகுப்பு படிக்க வேண்டிய ஒன்று. ( ஜெயகாந்தனிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் இந்த டைட்டிலை வைத்துள்ளார்). 'காந்திபாய் தேசாய் - தலைவர்களும் தனயர்களும்' என்ற கட்டுரையை இப்படி முடிக்கிறார் "‘இன்னும் நிறைய இருக்கிறது, எழுதப்போனால் எனக்குப் பிடித்தமான டெல்லியில் பிடிக்கவே பிடிக்காத திஹார் ஜெயிலில் நிரந்திரமாக எனக்கு ஒரு இடம் நிச்சயம். "அங்கே..ஏ...ஏ எனக்கோர் இடம் வேண்டும்" என்று இந்த வயதில் நான் பாடத் தயாரில்லை! )
அவருடைய முகவரி: bharatimani90@gmail.com
]
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, October 29, 2009
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி
Posted by IdlyVadai at 10/29/2009 08:50:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், எழுத்தாளர்கள், கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)










36 Comments:
மணிக்கு நகைச்சுவை அதிகமாக உண்டு.
நகைச்சுவைக்குக் கற்பனைத் திறனை விட, உள்ளதை உள்ளபடி வித்தியாசமான கோணத்தில (கோணலாக?!) உண்மையாக எழுத வேண்டும்.’கதைக்கத்’ தெரிந்திருக்க வேண்டும். மணிக்கு எல்லாம் கை வந்திருக்கிறது.....ஆனால் ஒன்று:அவரது மனைவி திருமதி ஜமுனாவிற்கு உள்ள சென்ஸ் ஆஃப் ஹ்யூம்ரில் 25 விழுக்காடு இவரிடம் இருக்கும்போதே இப்படி கலக்குகிறாரே! 100 விழுக்காடு இருந்தால் என்னமாய் கலக்குவார்!
(ஆனால் ரொம்ப வருஷமாக 25-ய் விட்டு உயரவில்லை என்று உண்மையை அவர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்!)--மணியின் விசிறி
சரவணகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.பி.ஏ. பட்டதாரியான சரவணகுமார், லண்டனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி அன்று, வேலைக்கு சென்று திரும்பிய சரவணகுமாரை, மர்ம ஆசாமிகள் சிலர் அடித்துக்கொலை செய்து விட்டதாக லண்டனில் இருந்து தகவல்கள்
MBA graduate working in Petrol Pump....for 3 years ....?..news in Nakkheeran
மிகவும், மிகவும் சுவையான கட்டுரை. அதைவிட மிகவும் இரசித்துப் படித்தேன். என் மனைவிக்கும் படித்துக் காட்டினேன். ஒரு மருமகன் பார்வையில் மாமனார் என்பது வித்தியாசமான பார்வை. மாப்பிள்ளை மாமனாருக்கு - மனைவி வழியாக பணம் தருவதும், பிரபல நடிகருடன் - க நா சு அவர்கள் நிகழ்த்திய உரையாடலும், எங்கள் இருவருக்குமே சுவைத்தது. நன்றிகள் பல இ வ.
இதுல மஞ்ச துண்ட காணோம் ... !!!
//இதுல மஞ்ச துண்ட காணோம் ... !!!//
மஞ்சள் கமெண்ட் எழுதினால் வேலூர் ஜெயில்ல போட்டுவிடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது.. :-)
எதாவது இன்ட்ர்ஸ்டிங்கா போடுங்க சார்?
பாரதி மணி சார்
வாய் விட்டுச் சிரிக்க வைத்த எழுத்து. நீங்கள் நடிப்பதுடன் தமிழில் தொடர்ந்து எழுத வேண்டும். இன்னும் உங்கள் பல நேரங்களில் பல மனிதர்கள் படிக்கவில்லை. உடனே வாங்கிப் படி என்று இந்த கட்டுரை சொல்கிறது. உங்கள் மாமனார் பற்றி தஞ்சைப் பிரகாஷ் அவர்கள் எழுதிய சாகித்ய அகதமி பிரசுரத்தின் எழுத்தாளர் வரிசையில் படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையை இங்கு சமர்ப்பித்த இட்லி வடைக்கும் எனது நன்றி.
அன்புடன்
ச.திருமலை
சமீபத்தில் மனோஜ் ஷ்யாமளன் இந்தியா வந்திருந்த பொழுது அவரை சந்திக்க வந்த ஷாருக்கானைப் பார்த்து யார் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டாராம். பின்னர் ஷாரூக்கான் தன்னைப் பற்றி சொல்லி அறிமுகமானவுடன் ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்த நினைவு இப்பொழுது வருகிறது என்று சொன்னாராம்.
பதிவெல்லாம் ஓ.கே. எப்போ சொந்தமா எழுத போறீங்க?
//பதிவெல்லாம் ஓ.கே. எப்போ சொந்தமா எழுத போறீங்க?//
எனக்கு ஒருவாரம் ரெஸ்ட் :-) சிபிஐ உதவியுடன் 2G 3G பற்றி தோண்ட ஆரம்பித்திருக்கிறேன். எழுதிய பின் போடுகிறேன் :-)
அமர்க்களம்... உயிர்மையில் அவர் எழுத்தைப் படித்ததிலிருந்தே அவர் இரசிகனானேன்... விரைவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் மாமா..
when i was pressed "aduthavalipthivu"
cyber protection virus infected to my computer please check.
மாமனாரைக் குறை சொல்லாத மருமகர்கள் (! 77 வயசா.. எழுத்தைப் பார்த்தாத் தெரியலை) அபூர்வம். இந்தக் காலக் குழந்தைகள் புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விட்டார்கள். எல்லோருக்கும் ஒரு க நா சு தாத்தாவாகக் கிடைப்பாரா என்ன?
அது சரி, இட்லிவடை எல்லாத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பிசுருக்கறதும் புதுமைல ஒண்ணா?
nice article by mani. thanks for sharing.
மற்றும் ஒரு புதிய அனுபவம். மறைந்த திரு கிநாசு பற்றி இன்றுதான் அறிந்தேன். அருமையாக எழுதி உள்ள திரு பாரதிமணி அவர்களுக்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து - முடியாவிட்டால் அட்லீஸ்ட் அவ்வப்போதாவது - இட்லிவடையில் எழுதுங்கள். இளைய சமூகம் பல நல்ல-பழைய விஷயங்களை அறிந்து கொள்ளும்.
//மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!
///
அது எப்டி நீங்கள் எதிர் பார்த்தீர்கள்? நீங்கள்தான் மகன் என்று அவர் ஒப்புக்கொண்டு விட்டாரே!!!
:-)
பதிவு சூப்பர்....
ஈரோடு அண்ணா சண்டே உங்கள பார்க்க வராறாம்...
அப்படியே இட்லிவடை கிட்ட சொல்லி அந்த 2G 3G மேட்டர கொஞ்சம் சீக்கிரம் தோண்டி போட சொல்லுங்கோ...
நல்ல தாத்தா . அவர் எழுதிய நூல்களின் லிங்க் இருந்தால் கொடுங்கள். நாங்களும் படித்து மகிழ்கிறோம்.
டெல்லிக்கு ராஜான்னாலும் தாத்தா சொல்லை தட்டாதே!
நல்ல கட்டுரை. உண்மைதான் மாமனார்- மருமகன் உறவைப் பற்றி எந்தத் திரைப்படமும் வந்ததாக எனக்கு நினைவில்லை.
சூப்பரப்பு....
கடுகு, இப்போது கநாசு மற்றும் பாரதி மணியன் --இ வ தில்லி சம்பந்தப்பட்டவரோ? 2G 3G விவகாரம் எல்லாம் வேறு பேசுகிறார்!
Nice one..
///Sesha said...
கடுகு, இப்போது கநாசு மற்றும் பாரதி மணியன் --இ வ தில்லி சம்பந்தப்பட்டவரோ? 2G 3G விவகாரம் எல்லாம் வேறு பேசுகிறார்!
///
அட! additional point!!
எப்டி எல்லாம் மக்கள் திங்க் பண்ணராங்கப்பா!!!!
:-)
//கடுகு, இப்போது கநாசு மற்றும் பாரதி மணியன் --இ வ தில்லி சம்பந்தப்பட்டவரோ? 2G 3G விவகாரம் எல்லாம் வேறு பேசுகிறார்!//
எங்க ஊரிலிருந்து காசிக்கு போய் வருபவர்கள் (கயாவில்) தங்களுக்கு பிடித்தமான சாப்பிடும் பொருளை தங்கள் வாழ் நாளில் இனி தொடமாட்டோம் என உறுதி எடுத்து வருவார்கள். அது மரபு.
இ.வ. பின்னூட்டம் இடுபவர்கள் அவர் யார் அது ஒரு குழுவா அவரா இவரா என்று கேட்பது மரபு.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியை விட மிக மோசமாக துவைக்கப்பட்டது இந்த கேள்வியாய் தான் இருக்கும்.
அவர் யாராய் இருந்தால் என்ன எழுத்தைப் பார் எழுதுறவனைப் பார்க்காதே(சொன்னது வடுகபட்டியா ?) என்று விட்டு விட்டு சென்றால் என்னைத் தமிழ் இனத்திலிருந்து தள்ளிவைத்து விடுவார்கள். அதனால் என் பங்குக்கு
1) நிறைய வயதான இளைஞர்களின் நன்பர்களாக இருப்பதால் பாக்கியம் ராமசாமியா ? ( அப்பா யாரும் சொல்லாத ஒரு பேர்)
2) டெல்லி தொடர்பு இருப்பதால் டெல்லி கனேசா?
முடியல...
// கோபிநாத் said...
நல்ல கட்டுரை. உண்மைதான் மாமனார்- மருமகன் உறவைப் பற்றி எந்தத் திரைப்படமும் வந்ததாக எனக்கு நினைவில்லை//
சில வருடங்களுக்கு முன், ஜனகராஜ் & நிழல்கள் ரவி நடித்து - ஒரு மாமனார் / மாப்பிள்ளை படம் - மனதைத் தொட்ட படம் பார்த்த ஞாபகம் - படம் பெயர் மறந்துபோச்சு.
'சில வருடங்களுக்கு முன், ஜனகராஜ் & நிழல்கள் ரவி நடித்து - ஒரு மாமனார் / மாப்பிள்ளை படம் - மனதைத் தொட்ட படம் பார்த்த ஞாபகம் - படம் பெயர் மறந்துபோச்சு.'
வி சேகரின் இயக்கத்தில் நான் புடிச்ச மாப்பிள்ளை படம்தான் அது. நானும் இததயெ யோசிச்சு, படம் பெயர் நினைவுக்கு வராமல் பின்னூட்டக் கும்மி அடிக்கவில்லை
அசோகமித்திரனைக் குறித்து தேசிகன் எழுதியிருக்கும் ஒரு நெகிழ்வான கட்டுரை.
//Anonymous said...
அசோகமித்திரனைக் குறித்து தேசிகன் எழுதியிருக்கும் ஒரு நெகிழ்வான கட்டுரை.//
சொல்வனத்தில் - 'ஆடோவில் போன அசோகமித்திரன்' - கட்டுரை படித்து நெகிழ்ந்தேன்
என்ன ஆச்சு உங்களுக்கு?
இது 5வது கமெண்டு.
//மஞ்சள் கமெண்ட் எழுதினால் வேலூர் ஜெயில்ல போட்டுவிடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது.. :-)
//
இது 10வது கமெண்டு.
//சிபிஐ உதவியுடன் 2G 3G பற்றி தோண்ட ஆரம்பித்திருக்கிறேன். எழுதிய பின் போடுகிறேன் ://
5 கமெண்ட் தாண்டினா பயம் போய் விடுமா?
இவ,
கந்தன் இஅய்யவுக்கு வணக்கம் (பாபா பார்த்தால்) மற்றபடி நான் படிக்கவேண்டியது நிறைய உள்ளது (including palana nerangalil pala manithargal) இந்த பதிவால் திரு க.ந.சு அவர்களின் படைப்புகளை தேடி பிடித்து படிக்கவேண்டியதுதான் நல்ல மனிதர்... நல்ல மாப்பிள்ளை
காமேஷ்
//சில வருடங்களுக்கு முன், ஜனகராஜ் & நிழல்கள் ரவி நடித்து - ஒரு மாமனார் / மாப்பிள்ளை படம் - மனதைத் தொட்ட படம் பார்த்த ஞாபகம் - படம் பெயர் மறந்துபோச்சு//
நான் புடிச்ச மாப்பிள்ளை.
நல்ல கட்டுரை. உறவினர் மற்றும் நண்பர்கள் வழியாக நிச்சயிக்கப்படும் திருமணம் பெரும்பாலும் வெற்றியை தரும். இது என் வாழ்க்கையிலும் வெற்றியை தந்தது. ஒரு கிக் பற்றி சொன்னார். அது எந்த விதமான கிக் என்று சொல்ல முடியாது. அதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.
நல்ல கட்டுரை. உறவினர் மற்றும் நண்பர்கள் வழியாக நிச்சயிக்கப்படும் திருமணம் பெரும்பாலும் வெற்றியை தரும். இது என் வாழ்க்கையிலும் வெற்றியை தந்தது. ஒரு கிக் பற்றி சொன்னார். அது எந்த விதமான கிக் என்று சொல்ல முடியாது. அதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.
நல்லவேளை மணியைப் பார்த்து நீங்கள் யாரு என்ன செய்கிறீர்கள் என்று க.நா.சு கேட்கவில்லை.
இவ,
அண்ணா, நீங்க கொடுத்த அசோகமித்திரன் லிங்க் படித்தேன், நெகிழ்ந்தேன், நான் கல்கி, சாண்டில்யன், அகிலன், ர.சு.நல்லபெருமாள், கோவி, சாவி, ஜாவர் சீதாராமன்,கண்ணதாசன்,ஜனநாதன், ஜெயகாந்தன், விக்ரமன், மற்றும் பலரது படைப்புகளை படித்திருக்கிறேன் (there are others also whom I could not mention in this list) இப்படி நெகிழ்வான ஒரு கட்டுரை படித்து வெகு நாட்களாகிறது, நேற்று க.ந.சு (thank you IV) . இன்று அசோகமித்திரன் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டது போல் அவரது படைப்புகளுக்கு லிங்க் கொடுத்தல் மிகவும் நன்றாக இருக்கும் அதுவும் அசோகமித்திரன் சொன்ன பதில்
எழுதிப் பிழைப்பதில் உள்ள சிரமங்கள்? என்ற கேள்விக்கு இவரின் ஒரு வரி பதில்:
“எல்லாச் சிரமங்களையும் துயரங்களையும் அனுபவித்தாயிற்று”
Kamesh
//( பாபா படத்தில் இவர் சி.எம்'க நடித்திருப்பார் நல்ல வேளை பாபாமணி என்று பெயர் வாங்கவில்லை :-). //
அருமை அண்ணன் "பாபாமணி" வாழ்க....
(இவண் அகில உலக பாபாமணி ரசிகர் மன்றம்...)
மகன் ஆனப்புறம் மாப்பிள்ளை ஆக முடியாது! மானஸ்தன் ரொம்ப மானஸ்தன் தான்.
Post a Comment