பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 28, 2009

சாவியும் நானும் - கடுகு

பரிசாக ஒரு கட்டுரை என்ற பதிவை போட்ட பத்து நிமுஷத்தில் எண்ணையில் போட்ட கடுகு மாதிரி வெடித்து தள்ளிவிட்டார்கள் மக்கள்.... எல்லோருக்கும் என் நன்றி.

கட்டுரை கீழே...


சாவியும் நானும் - கடுகு

புது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எழுத்தாளர் சுந்தாவும் நானும் ஜி.டி. எக்ஸ்பிரஸை வரவேற்கக் காத்திருக்கிறோம். வருஷம் 1968.. ரயிலில் வரப்போகிறவர் எழுத்தாளர் சாவி. அவரை முதன் முதலாகச் சந்திக்கப் போகிறேன். அப்போது தான் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தினமணிக் கதிரில் தொடர்ந்து எழுதத் துவங்கி இருந்தேன். (தினமணி கதிரில் எழுத ஆரம்பித்தது ஓரு தனிக்கதை. அதை விவரித்தால் சுயப்பிரதாபமாக இருக்கும். ஆகவே தவிர்க்கிறேன்.)

ரயிலில் இருந்து சாவி இறங்கியதும், அவரிடம் சுந்தா என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு சகஜமான புன்னகையுடன் "ஹலோ” சொல்லியபடி எனக்குக் கைகொடுத்தார்.

கைகொடுத்தவர்
நாற்பது வருஷம் கழித்து இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனதில் நெகிழ்ச்சி எற்படுகிறது. அன்று மட்டுமல்ல, பின்னால் அடுத்த முப்பது வருஷங்களுக்கு மேலாக எனக்குப் பலவிதத்தில் கைகொடுத்து, எழுத்துலகில் என் தகுதிக்கு மீறிய உயரத்தில் என்னை வைத்துவிட்டார்.

சாவி நல்ல நகைச் சுவை எழுத்தாளர். அதைவிட நல்ல நகைச்சுவைப் பேச்சாளர். அதைவிட மிக நல்ல நகைச்சுவை ரசிகர்.

"அடடா.... என்னமாய் எழுதி இருக்கிறார் சும்மா கல கல என்று! எப்படி ஓடுகின்றது நடை!” என்று பாராட்டி ரசிப்பார்.

அவர் புதுமை விரும்பி. அதனால் குமுதம் செய்யும் புதுமைகளை ரசிப்பதுடன், அதுமாதிரி புதுமைகளைக் கதிரிலும் செய்ய விரும்பினார். நானும் ஏராளமான புதுமைகளுக்கு ஐடியா கொடுத்தேன். அவற்றை அவர் உடனுக்குடன் செயல்படுத்தி வந்தார். (என் புதுமைகளில் எண்பது பங்கு உமியும், இருபது பங்கு அவலும் இருந்தன என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன்.)

குமுதத்தில் ஒருத்தர் எழுதிவிட்டால் போதும், அவரை எப்படியாவது கதிரில் பிடித்துப் போடவேண்டும் என்று பரபரப்பார். நானும் 1963-லிருந்து குமுதத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததால் 1968-ல் என்னை தினமணி கதிரில் வளைத்துப் போட்டார்.

”பால்யூ என்னமா செய்கிறார்!. எவ்வளவு சுறுசுறுப்பாக செய்கிறார்!... ரா. கி. ரங்கராஜன் மாதிரி சரளமாக எழுதுவதற்கு ஆளே கிடையாது.... பாக்கியம் ராமசாமி நகைச்சுவையில் அபாரமாய் வெளுத்து வாங்குகிறார்" என்றெல்லாம் வியப்பார். இப்போது ஒரு சின்ன ரகசியத்தை இங்கே உடைத்தால் தவறில்லை. "பால்யூ தான் உமக்கு நல்ல நண்பராயிற்றே, கொஞ்சம் நம்ம கதிருக்கும் ஏதாவது எழுதச் சொல்லுங்களேன். அவர் எழுதுகிறார் என்பதை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன்" என்று என்னிடம் பல தடவை சொல்லியிருக்கிறார். ஒரு சமயம் ரா. கி. ரங்கராஜனையே தூண்டில் போட விரும்பினார். பிற்காலத்தில் தன் சாவி பத்திரிகையில் பாக்கியம் ராமசாமியை உதவி ஆசிரியராக அமர்த்திக்கொண்டு புளகாங்கிதமடைந்தார்.

சாவி தனது இருதய பைபாஸ் ஸர்ஜரியைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினார். அதை அச்சில் பார்த்ததும் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே இல்லை. காரணம், அந்தக் கட்டுரை அவரது அபிமானப் பத்திரிகையான குமுதத்தில் வெளியாகியிருந்தது.

குமுதத்தில் சுஜாதா ஒரு கதை எழுதியிருந்தார். அவர் டில்லியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் எனக்குக் கடிதம் எழுதினார். அதன்படி சுஜாதாவிடம் கதை கேட்டு வாங்கி அனுப்பினேன். பின்னால் சுஜாதா கதிரில் தொடர் கதை எழுத ஆரம்பித்தார். கதையை வாராவாரம் சுஜாதா என்னிடம் கொடுப்பார். அதை டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் கொடுத்து, விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பேன். எழுபதுகளில் சுஜாதாவை ஒரு சினிமா நடிகர் அளவுக்குப் பாபுலராக்கியவர் சாவிதான்.


சாவியின் கோபம்
சாவியின் கோபம் சற்று பிரபலமானது. " ”எனக்கு முன் கோபம் உண்டு என்ன செய்வது? அது என்னோடு பிறந்தது” என்பார்.

ஒரு சமயம் வாரியார் ஸ்வாமிகள், காமராஜர் ஆகியவர்களைச் சேர்த்துக் கொண்டு ’சத்ய சபா’ என்ற அமைப்பை சாவி துவங்கினார். காமராஜரிடம் சபா பற்றி முதலில் பேச போனபோது, காமராஜர் "சபாவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணேன். என்னை எதுக்கு இழுக்கறே? எனக்கு முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி" என்றார். உடனே சாவி "ரொம்ப நல்லதாப் போச்சு. எனக்கும் முன்கோபம் ஜாஸ்தி. நமக்குள் நல்ல பொருத்தம் இருக்கும்" என்றார். காமராஜர் உடனே சிரித்துவிட்டு "சரி....சரி....நான் வர்றேன்” என்று கூறிவிட்டார்.

சாவியின் கோபத்திற்கு மற்றொரு சின்ன சம்பவம். தன்னை அலட்சியப் படுத்தினாலும் சாவி கவலைப்படமாட்டார். ஆனால் தினமணி கதிரை யாரும் குறைவாகப் பேசக்கூடாது, அலட்சியப் படுத்தக்கூடாது.

ஒரு பிரபல இயக்குனர் தன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட இப்படி ஓரு வசனத்தை எழுதியிருந்தார். கதாநாயகியை ரயில் நிலையத்தில் வழியனுப்பும் கதாநாயகன் "இந்தா, இந்த வார குமுதம், கல்கி, விகடன் எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் படித்துக்கொண்டே போ" என்கிறான். படத்தைப் பார்த்துவிட்டு வந்த சாவி, நேரே கதிர் ஆபீசுக்குச் சென்றார். அச்சுக்குப் போகத் தயாராயிருந்த ப்ரூஃப்களை வரவழைத்து, அதில் இடம் பெற்றிருந்த அந்த குறிப்பிட்ட படத்தின் விமரிசனத்தை எடுத்துவிட்டார். அந்த இடத்தில் நாலைந்து ஜோக்குகளைப் போட்டு, அச்சுக்கு அனுப்பிவிட்டார்!

"மூன்று பத்திரிகைகளின் பெயரை எழுதிய டைரக்டர், ஏன் நம் தினமணி கதிரின் பெயரைச் சேர்க்காமல் விட்டார்? சரி, அது அவர் இஷ்டம். படத்தின் விமரிசனத்தை நீக்கி விடுவது என் இஷ்டம்" என்றார்.

(படம் ரிலீசாகி மூன்று, நான்கு வாரங்களாகியும் கதிரில் விமரிசனம் வராததால், சாவியை டைரக்டர் அணுகி சமாதானம் செய்ததெல்லாம் தனிக்கதை.)
!

கட்டுரைகளைக் கிடப்பில்....
சாவிக்கு என் எழுத்தின்மேல (தவறான?) மோகம் இருந்ததால், தினமணி கதிரின் ஆஸ்தான எழுத்தாளனாக நான் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தேன். என் எழுத்து வராத இதழே இல்லை என்று பெருமையடித்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். இருந்தும் ஒரு சமயம் என் மூன்று கட்டுரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார். அவரது கேரக்டர் கட்டுரைகளைப் போல, நானும் மூன்று கேரக்டர் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்களாகியும் அவை வெளியாகவில்லை. நானும் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. ஆறு மாதம் கழித்து திடீரென்று முதல் கட்டுரை வெளியாயிற்று. தொடர்ந்து கேரக்டர் கட்டுரைகளை அனுப்பும்படி கடிதம் எழுதியிருந்தார். நானும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். இருபத்து மூன்று வாரங்கள் வெளியாயின. "அடுத்த வாரத்துடன் கேரக்டர் கட்டுரையை நிறுத்திவிடுங்கள்”என்று அவரிடமிருந்து ஒருவரிக் கடிதம் வந்தது. ஐம்பது, அறுபது கட்டுரைகள் எழுத நினத்திருந்தேன். அவர் சொன்னபடி இருபத்தி நாலாவது கட்டுரையுடன் நிறுத்திவிட்டேன்.

சில மாதங்கள் கழித்து நான் சென்னை சென்ற போது அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் "உங்கள் கேரக்டர் கட்டுரையை இருபத்து நாலு வாரத்துடன் நிறுத்திவிடச் சொன்னேனே, ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே!”

”பத்திரிகையில் போடுவதும் போடாமல் இருப்பதும் உங்கள் ஊரிமை, நான் கேட்பது சரியாக இருக்காது என்பதால் கேட்கவில்லை" என்றேன்.

”சரி, நீங்கள் கேட்டமாதிரி வைத்துக்கொண்டு நான் பதில் கூறிவிடுகிறேன் நான் இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறேன், என்னை நீங்கள் மிஞ்சக் கூடாது என்பதால் நிறுத்தச் சொன்னேன்" என்றார், இப்படிச் சொன்னாரே தவிர, பின்னால் குங்குமம் இதழில் மேற்கொண்டு இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகளை எழுதியபோது, வெகுவாகப் பாராட்டினார்.

பின் குறிப்பு
சாவி அவர்களைப் பற்றி நூறு பக்கக் கட்டுரை எழுதுமளவுக்கு பல தகவல்கள், சம்பவங்கள் உண்டு. பலவற்றில் நானும் இடம் பெறுவேன் என்பதாலும், சந்தடிசாக்கில் கந்தகப்பொடி வைப்பது போல், என் பிரதாபத்தையும் கூற வேண்டியிருக்கும் என்பதாலும் இப்போது இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பாராட்டி எழுதினீர்கள் என்றால் ஆபத்து. ஏனென்றால் தொடர்ந்து கல்கியும் நானும், தேவனும் நானும், குமுதம் எஸ். ஏ. பி. யும் நானும், ரா. கி. ரங்கராஜனும் நானும், பாக்கியம் ராமசாமியும் நானும், புஷ்பா தங்கதுரையும் நானும், டைரக்டர் ஸ்ரீதரும் நானும், டைரக்டர் கே. பாலச்சந்தரும் நானும், சித்ராலயா கோபுவும் நானும், சுப்புடுவும் நானும், டில்லி கணேஷும் நானும் என்று எழுதித் தள்ளிவிடுவேன். எச்சரிக்கை!
இட்லிவடையும் நானும் என்பதை விட்டுவிட்டீர்களே :-)

(ஆசிரியர் குறிப்பு: கடுகு, அகஸ்தியன் என்ற புனைபெயரில் எழுதும் பி.எஸ்.ரங்கநாதன் விரல்விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை எழுத்தாளார்களில் ஒருவர். 77 வயது ஆகும் இளைஞர்.

கடுகுக்கு 'பேஷ்' என்று சொன்னவர்களின் பட்டியல்:

- 'பேஷ்' என்று ராஜாஜி இவருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார்
- இவர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு 'பேஷ்' என்று பாராட்டினார் கல்கி
- இவர் எழுத்தை பாராட்டி எஸ்.ஏ.பி ஒரு கடிதம் எழுதி தந்துள்ளார்
- சாவி இவரை நிறைய பாராட்டியுள்ளார்.
)

தொடர்புடைய மற்ற கட்டுரைகள்:
கடுகு
போதுமடா டில்லி !

18 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

மிக நல்ல கட்டுரை. கடுகு அவர்களுக்கு நன்றிகள்.


கடுகு'வின் வாயிலாக தேவன் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. அவரின் உயர்தர ஹாஸ்ய எழுத்துக்களைப் படிக்குங்கால், அவருடன் சமகாலத்தில் வாழ முடியவில்லையே என்ற பெருத்த ஏக்கமே ஏற்பட்டு விடுகிறது. அவரின் ஹாஸ்யத்தில் மயங்கித்தானோ என்னவோ இறைவன் அவரை வெகு சீக்கிரமே தன்னுடன் அழைத்துக் கொண்டான்.


தேவனும் நானும்....என்று எழுதித் தள்ளி விடுவேன் என்று கடுகு அவர்கள் செய்த எச்சரிக்கையையே சாக்காக வைத்துக் கொண்டு....இட்லிவடை வாசகர்களின் சார்பாக....தேவனும் நானும் என்ற ரீதியில் தேவன் அவர்களுடனான உங்களுடைய சுகானுபவங்கள் இட்லிவடை வாசகர்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ள வேணுமாய் மிகுந்த தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

விவேகானந்தன் said...

பேஷ் பேஷ்..!

kggouthaman said...

// // தொடர்ந்து கல்கியும் நானும், தேவனும் நானும், குமுதம் எஸ். ஏ. பி. யும் நானும், ரா. கி. ரங்கராஜனும் நானும், பாக்கியம் ராமசாமியும் நானும், புஷ்பா தங்கதுரையும் நானும், டைரக்டர் ஸ்ரீதரும் நானும், டைரக்டர் கே. பாலச்சந்தரும் நானும், சித்ராலயா கோபுவும் நானும், சுப்புடுவும் நானும், டில்லி கணேஷும் நானும் என்று எழுதித் தள்ளிவிடுவேன். //
1. எழுதுங்க
2. எழுதுங்க
3. எழுதுங்க
. ''
. ''
. ''
11. எழுதுங்க.
நீங்க எழுதினதுல - 'ஐயோ பாவம் சுண்டு' தவிர மற்றவற்றை மிகவும் ரசித்தவன் நான்.
மாமியார், கமலா, தொச்சு - எல்லாமே சூப்பர் காரக்டர்ஸ்

வால்பையன் said...

மிக பழைமையான(நாங்க யூத்தாக்கும்) எழுத்தாளர் என்பதால் விட்டு போச்சு, படிக்க முயற்சிக்கிறேன்!

சீனு said...

//இந்தக் கட்டுரையைப் பாராட்டி எழுதினீர்கள் என்றால் ஆபத்து. ஏனென்றால் தொடர்ந்து கல்கியும் நானும், தேவனும் நானும், குமுதம் எஸ். ஏ. பி. யும் நானும், ரா. கி. ரங்கராஜனும் நானும், பாக்கியம் ராமசாமியும் நானும், புஷ்பா தங்கதுரையும் நானும், டைரக்டர் ஸ்ரீதரும் நானும், டைரக்டர் கே. பாலச்சந்தரும் நானும், சித்ராலயா கோபுவும் நானும், சுப்புடுவும் நானும், டில்லி கணேஷும் நானும் என்று எழுதித் தள்ளிவிடுவேன். எச்சரிக்கை! //

'குடி குடியை கெடுக்கும்'னு போட்டிருந்தாலே அத வக்கனையா படிச்சுட்டு, தீபாவளிக்கு 220 கோடிக்கு குடிச்சோம். இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். தொடர்ந்து எழுதுத் தள்ளுங்கள்.

ஸ்ரீராம். said...

கண்டிப்பாக பட்டியலில் உள்ள அனைத்தையும் தொடர்ந்து எழுதுங்கள். இட்லி வடையின் புதிய பகுதி அமர்க்களமாக ஆரம்பிக்கிறது.

Dubai Nara said...

ரொம்ப பிரமாதமான நடை.

சென்டிமீட்டருக்கு ஒரு நக்கல் நய்யாண்டி என்று தலைகாட்டாமல் வேண்டிய இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

வயதானாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!!

மானஸ்தன் said...

இதற்கு முன்பு திரு கடுகு அவர்களின் படைப்புகளைப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இட்லிவடைக்கு நன்றி, வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்காக. இட்லிவடை ஸ்பெஷல் பகுதியில் இன்னும் பல சுவாரஸ்யமான பழைய விஷயங்கள் எழுத வேணுமாய் திரு கடுகு அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

R.Gopi said...

மிக பிரமாதமான நையாண்டி நடை....

கலக்கறார்....

Baski said...

//மானஸ்தன் said...

இதற்கு முன்பு திரு கடுகு அவர்களின் படைப்புகளைப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இட்லிவடைக்கு நன்றி, வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்காக. இட்லிவடை ஸ்பெஷல் பகுதியில் இன்னும் பல சுவாரஸ்யமான பழைய விஷயங்கள் எழுத வேணுமாய் திரு கடுகு அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.//

I wish the same.

Anonymous said...

I WONDER ANY OF OUR NEW GENERATION
PEOPLE KNOWS ABOUT

OLD GENERATION WRITERS KADHUGU,KALKI, CHAVI...

Murali

Simulation said...

கடுகு அவர்கள் தினமணிக்கதிரிலோ அல்லாது கல்கியிலோ "கேள்வி-பதில்" வழங்கிக் கொண்டிருக்கும்ப்போது, அவருக்கு நானும் கேள்விகள் அனுப்புவது வழக்கம். நகைச்சுவையாக பதில் அளிப்பது அவர் வழக்கம். ஒரு காலத்தில் அவரது கதை இல்லாத தீபாவளி மலரே இருக்காது.
அவரைப் போன்றோர்கள் இணையத்தில் எழுத வருவது நல்லது.

சமீபத்தில் (உண்மையாகவே சமீபத்தில், அதாவது போன சனிக்கிழமை) பாக்கியம் ராமஸ்வாமி (ஜ.ரா.சு) அவர்களின் "அக்கறை" சந்திப்பில் கடுகு அவர்களைப் பார்த்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிக எளிமையான மனிதர்.

- சிமுலேஷன்

பாரதி மணி said...

ஐயா, கடுகு! ‘இட்லிவடை’யில் இப்போது ‘முதியோர் தின’க்கொண்டாட்டம் போலிருக்கிறது! முதலில் நீர் மாட்டிக்கொண்டீர். இன்று பார்த்தால், நான் அவர்கள் படிப்பதற்கு மட்டுமே அனுப்பியிருந்த க.நா.சு.கட்டுரையையும் போட்டிருக்கிறார்கள்! பேஷ், பேஷ்!

ஆதெள கீர்த்தனாரம்ப காலத்திலிருந்தே’ எனக்கு PSR, கடுகு, அகஸ்தியன் எனும் பல பெயர்கொண்ட ரங்கநாதனைத்தெரியும். தபால்துறைப்பணியில் Transfer-ல் தில்லிக்கு அவர் வந்ததிலிருந்து நாற்பது வருடப்பழக்கம். அவர் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும். இவரைச்சுற்றி பத்துப்பேர் வாயைப்பிளந்துகொண்டு, இவர் ஜோக்குகளுக்காக காத்திருப்பார்கள்.

பலருக்குத்தெரியாத விஷயம் இவர் ஒரு நாடகாசிரியரும் என்பது. தில்லியில் எனது DBNS நாடகக்குழுவுக்காக Lord Arthur Saville's Crime என்ற முழுநீள நகைச்சுவை நாடகத்தை தமிழ்ப்படுத்தி ‘பாவம், பூபதி!’என்ற பேரில் எழுதினார். அதில் நான் தான் கதாநாயகன்!

அவர் வெளியில் சொல்லிக்கொள்ளாத விஷயம் அவர் ஒரே மகள் ஆனந்தி அமெரிக்காவில் புற்றுநோய்த்தடுப்புக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது!

வாழ்க இ.வ.வின் ‘முதியோர் தினவிழா’!

அன்புடன்,
பாரதி மணி

str said...

அந்தக் கால தீபாவளி கல்கி விகடன் படித்தது போல இருக்கிறது அடுத்தடுத்து கடுகு, பாரதி மணி ஆகிய பெரியோர்களின் கட்டுரைகள். கடுகு சார் அவசியம் தேவன் கல்கி ஆகியோர் பற்றியும் எழுத வேண்டும். இ பா, சுஜாதா, கடுகு, தி ஜா ரா, கா நா சு, மணி, பி ஏ கே என்று டெல்லி தான் தமிழ் எழுத்தாளர்களின் தலைமையகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

I am happy to find that my article is liked by so many. If all those who have commented send me their postal address and email ID, I will be happy to send them my book Charectero Charector.
Kadugu
kadugu@gmail.com

Maha said...

//இட்லிவடையும் நானும் என்பதை விட்டுவிட்டீர்களே :-)//

கண்டு பிடிச்சிட்டேன். சோ தான் இட்லி வடை.

Maha said...

பரிசாக ஒரு கட்டுரை - பேஷ் பேஷ். ரொம்ப நன்னாயிருக்கு. இந்த தலைப்பிலயே ஒரு தொடர் ஆரம்பிக்கலாம். பிரபலங்களின் கட்டுரை இருக்கட்டும்.

சிரிப்பானந்தா said...

கடுகு நன்றாக வெடிக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட! கடுகு சார், நீங்கள் சொன்ன அத்தனை கட்டுரைகளுக்காகவும் காத்திருக்கிறேன். நீங்கள் முடித்தவுடன் தான் கடுகும் நானும் என்ற தலைப்பில் எழுதலாமென்றிருக்கிறேன் (ஹி...ஹி...!)
அன்புடன்,
சிரிப்பானந்தா