பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 14, 2009

(ஒரு திகில்) பஞ்சர் அனுபவம்

சென்ற வாரம் நடுவழியில் பஞ்சரான எனது தந்தையின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்டும் போது ......யதிராஜ சம்பத் குமார் சொல்லும் திகில் பஞ்சர் அனுபவம்!

கீழ்ப்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கம் வரும் வழியில் "நியூ ஆவடி ரோட்டின்" மத்தியில், RTO அலுவலக சமீபத்தில் தனது பைக் பஞ்சராகிவிட்டதாகவும், அருகில் மெக்கானிக் ஷாப் ஏதும் தென்படவில்லை எனவும் வீட்டிலிருந்த எனக்கு எனது தந்தை சுமார் மாலை 4.30 மணிக்கு செல்பேசினார். உடனே நான் எனது பைக்கில் பஞ்சர் ஸ்தலத்தை அடைந்தேன். வண்டியின் தள்ளாமை நிலையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சிறிது தொலைவிலிருந்த "விஜய்ஸ்ரீ மஹால்" திருமண மண்டபம் அருகிலிருந்த மெக்கானிக் ஷாப் ஒன்றிற்கு மெக்கானிக்கை அழைத்து வரும் நிமித்தம் பொருட்டு சுமாராக இருந்த மெக்கானிக் ஷாப்பிற்குள் நுழைந்தேன்.


"வாங்க சார், வண்டில இன்னா ப்ரச்சனை??" என்று மெக்கானிக் போன்று தோற்றமில்லாத ( சட்டையில் வண்டி மை, ஆயில் கறை போன்ற சமாச்சாரம் ஏதுமில்லை ) ஒரு இளைஞர் வினவினார். அவரது தோற்றத்திலேயே எனது வயிற்றில் ஒரு பயப் பந்து உருண்டது. என் வண்டில ப்ரச்சனை ஏதுமில்ல சார்....RTO ஆபீஸ் பக்கத்துல அப்பாவோட வண்டி பஞ்சராகிடுச்சு....தள்ளிட்டு வர முடியாது, கொஞ்சம் வரீங்களா?? என் வண்டில போய் வீல கழட்டிட்டு வந்துடலாம் என்றேன். அவர் எனது அப்பாவினுடைய வண்டியின் ஜாதகத்தை என்ஜின் நம்பர் தவிர அனைத்தையும் விசாரித்தார். இதெல்லாம் ஏன் என்பது போன்ற எனது சந்தேகப் பார்வைக்கு, பேக் வீல் கழட்டறதுக்கு என்ன வண்டின்னு தெரிஞ்சாதான் சரியான ஸ்பேனர் எடுத்துட்டு வரமுடியும் என சென்னைத் தமிழில் பதிலளித்தார். சரி என்று பஞ்சர் ஸ்த்லத்தை அடைந்து அங்கு "ரியர் வீலை" கழட்டி எனது அப்பாவை அங்கேயே நிறுத்திவிட்டு மெக்கானிக் ஷாப்பை அடைந்தோம். இதுவரை எல்லாமே சுமூகமாகத்தான் நடந்தது.


டயரைப் பிரித்து ட்யூபை ஆராய்வதற்குள் என்ன அவசரமோ தெரியவில்லை, யாருக்கோ தனது செல் பேசியிலிருந்து ஒரு "மிஸ் கால்" அருளினார். "மிஸ் கால்" வரம் பெற்றவர் திரும்பவும் கால் செய்தார், அவரிடம் சுமார் ஒரு பதினைந்து நிமிடங்கள் இங்குமங்கும் நடந்து கொண்டே பேசினார். வண்டி டயரை சீக்கிரம் பாருங்கள் என்று கெஞ்சும் பாவனையில் அவரை இருமுறை பார்த்தேன். போனால் போகட்டுமென்று டயரைப் பிரித்து ட்யூபை ஆராய்ந்ததில் ஒரு ஆணி குத்திய அளவிற்கு ஒரு துளை இருந்தது. மேலும் ஆராய்ந்ததில் காற்றடிக்க உபயோகப்படும் "மெளத்"ற்கு அருகில் சரியாக ஒரு துளை. இத்தனைக்கும் வண்டியின் வயதே 8 மாதங்கள்தான் ஆகின்றன. டயரும், ட்யூபும் வண்டியோடு வந்த ஒரிஜினல் சமாசாரங்கள். எப்படி "மெளத்தில்" துவாரம் விழ முடியும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, "சார் ட்யூப்தான் மாத்தணும், வேற வழியில்ல. நம்மகிட்டே கம்பெனி ட்யூப் ஒரு வருஷ வாரண்டியோட இருக்கு மாத்திடலாமா?? 180 லயும் இருக்கு, 230 லயும் இருக்கு.,என்று ட்யூபை மாற்றும் ஆயத்தத்துடன் என்னிடம் கேட்டார். அவர் காட்டிய கம்பெனி (??) ட்யூபை பார்த்தவுடனேயே இன்னும் இரண்டு நாட்களில் அது பல்லிளிக்கும் போல எனக்கு தோன்றியதால், இல்ல சார் பக்கத்துலதான் "MRF Show Room" இருக்கு அங்க போய் வாங்கிட்டு வந்துடறேன், நீங்க வீல் மட்டும் மாட்டி குடுத்துடுங்க என்றேன். அவர் முகம் சற்றே விகாரமாகி என் வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்தது. சற்றே மரியாதையை விட்டு, "அல்லாம் நம்மதும் கம்பெனிதான் இங்கயே போட்டுக்க" என்று சென்னையின் இலக்கியத் தமிழுக்கு மாறினார். நான் சற்றே சுதாரித்துக் கொண்டு, "இல்ல சார், "MRF" Dealer எனக்கு தெரிஞ்சவரு, சகாயமா தருவாரு என்று ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு, அவர் பதில் பேசும் முன்பு வண்டியைக் கிளப்பிவிட்டேன்.

ஷோ ரூமில் ட்யூபை வாங்கிக் கொண்டு மெக்கானிக் ஷாப்பிற்கு திரும்பி வந்தால் அங்கு கடை மட்டும்தான் இருந்தது. மெக்கானிக்கும், அவர் சார்ந்த பொருட்களும் இட்சிணி வேலை போல் மறைந்து விட்டிருந்தன. இதென்னடா புதுப் பிரச்சனை என்று நொந்து கொண்டு அருகில் இருந்த "சீட் கவர் மற்றும் ஹெல்மெட்" கடையில் விசாரித்தேன். அங்கிருந்த பெரியவர் நான் கேட்டதைக் கவனிக்காமல் எனது பைக்கின் சீட் மற்றும் பெட்ரோல் டாங்கின் கவர்களைப் பார்த்துவிட்டு, "என்ன சார் "Evening Star" ல போட்டீங்களா?? நம்மகிட்ட சீப்பா கிடைக்கும் சார்.....இந்த "STUDDS" ஹெல்மெட் அங்க என்ன ரேட் ஆகுது என்று என்னிடம் வியாபார பேச ஆரம்பித்தார். நான் வெறுத்துப் போய், சார் வண்டி வீல கழட்டி பஞ்சர் ஒட்ட குடுத்தேன், ட்யூப் வாங்க்ட்டு வரதுக்குள்ள கடைய பூட்டிகிட்டு போயிட்டாரு மெக்கானிக், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?? என்று 16 வயதினிலே சப்பாணி பரட்டையிடம் "ஆத்தா வையும் சந்தைக்கு போவணும் காசு குடு" என்னும் ரேஞ்சில், அப்பா அங்கே காத்திருக்கிறார் என்று சொன்னேன். அதற்கு அவர் என்ன தம்பி "மெளத்துல" ஓட்டையா என்று கேலி தொனிக்கக் கேட்டார். நான் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, ஆமா சார், இவர்கிட்ட ட்யூப் வாங்க சொன்னாரு, நான் Dealer கிட்ட போய் வாங்க போய்ட்டு வரதுக்குள்ள இவர காணோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா என்றேன். அவர், தெரியலப்பா, இவனுகளால இந்த தொளிலுக்கே கேவலம், கஸ்டமர இப்படித்தான் நட்டாத்துல உட்டுட்டு பூடுவானுங்க" என்று அங்கலாய்த்தார். இதற்கிடையே எனது தந்தையிடமிருந்து அடிக்கடி செல்பேசி அழைப்புகள்....அவரிடம் ஒருவாறு விஷயத்தைச் சொல்லி சற்றே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு மெக்கானிக்கிற்காக தவமியற்ற ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆயிற்று, மெக்கானிக் வரும் வழியாகத் தெரியவில்லை. என்னிடம் சற்றே "சீட் கவர்" கடைக்காரருக்கு கருணை பிறந்திருக்க வேண்டும் போலும், மெக்கானிக்கினுடைய செல் நம்பரை என்னிடம் கொடுத்து, தம்பி ட்ரை பண்ணி பாரு ஆனா நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லாதே, அவன் கேட்டா ஏதானு சொல்லி சமாளி என்று நம்பரைக் கொடுத்தார்.

அவர் கொடுத்த நம்பருக்கு செல்லினேன். அலோ, சார் வீல கழட்டி போட்டுட்டு கடைய பூட்டிகிட்டு போய்ட்டீங்க, எவ்வளவு நேரம் நிக்கிறது, எப்ப வருவீங்க என்று கேட்டேன். அவர் முதலில் கேட்டது, "நம்பர் எப்படி கெடச்சது?" சீட் கவர் பெரியவரின் பயம் இப்போதுதான் புரிந்தது. என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிக்கும்போதே, இங்கதான் பக்கத்துல ஒரு அவசர வேலையா வந்தேன், இருங்க வரேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் வரை வரவில்லை, திரும்பவும் முயற்சி செய்த போது அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இது என்னடா பெரிய வம்பாகிப் போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சீட் கவர் பெரியவர், இந்த பசங்க எல்லாம் "மெளத்" ல வேணும்னே நம்ம பாக்காதப்ப ஓட்டய போட்டுட்டு, அவங்ககிட்டயே ட்யூப் வாங்க சொல்லுவாங்க...அவங்க வியாபார தந்திரம் என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். இதனிடையே அப்பா செல்லில், மெக்கானிக் வரலேன்னா வண்டிய ஏதாவது "Three Wheeler" ல ஏத்தி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போய்டலாம் என்றார். இல்லப்பா இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம், வீல் அவன்கிட்ட இருக்கு என்று சொல்லிவிட்டு, மறுபடியும் நேரத்தைக் கொன்றதில் அரை மணியில் வந்து சேர்ந்தார் மெக்கானிக். ஒரு ஐயாயிரம் ரூபாய் பணம் வரணும் அதான் போனேன் என்று சொல்லிவிட்டு அடுத்த "மிஸ் காலுக்கு" தயாரானார். நான், சார் ஏற்கனவே ரெண்டரை மணிநேரமா அப்பா அங்க நின்னுட்டு இருக்கார், நீங்க வேற கடைய பூட்டிட்டு போய்ட்டீங்க, கால் அப்பறம் பண்ணலாம் முதல்ல ட்யூப மாட்டி வீல போட்டு குடுத்துடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒரு ஆட்டோ வந்தது. ஆட்டோ ட்ரைவர் நமது மெக்கானிக்கிற்கு அத்யந்த ஸ்நேகிதன் போலும். ஆட்டோ ட்ரைவரின் தோற்றப் பொலிவைக் கண்டதும், சரி நமக்கு இன்று ஏழரை உச்சம் என்று நினைத்துக் கொண்டேன். நடுவில் ஆட்டோ ட்ரைவர் வேறு என்னிடம் ஏதோ சென்னைத் தமிழில் கேட்க, எனக்கு அது புரியவில்லை. உடனே ஆட்டோ, மெக்கானிக்கிடம், அவன்ட சொல்றா என்று சொன்னான். பிறகு ஒருவழியாக ட்யூபைப் போட்டுவிட்டு, மெக்கானிக் என்னிடம் நீங்க முன்னாடி வண்டில போங்க நான் ஆட்டோல வரேன் என்றார்.....இல்ல சார் வண்டில போய்டலாம் என்றதை பொருட்படுத்தாமல் ஆட்டோவில் கிளம்பினார்.

மணி எட்டு. என்னுடைய வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் வீலை மாட்டியதும் மெக்கானிக் என் அப்பாவிடம் 150 ஆச்சு சார் என்றார். எங்கள் இருவருக்கும் மயக்கம் வராத குறை. என்ன சார் வீல கழட்டி மாட்றதுக்கு 150 ரூவாயா?? என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். அப்போதுதான் ஆட்டோ ட்ரைவர் எதற்கு உடன் வந்தார் என லேசாகப் புரிந்தது. அவர் மெக்கானிக்குடன் சேர்ந்து கொண்டு, "கேட்டத குடு சார், கடைய ஆளில்லாம உட்டு வந்திருக்காரில்ல இம்மாந்தூரம்??" என்று மிரட்டும் தொனியில் கூறினார். நான், அப்பா, ஏதோ பிரச்சனை பண்ணுவாங்க போலருக்கு பேசாம குடுத்துட்டு முழுசா ஆத்துக்கு போய்ச் சேரலாம்....என்று ஆங்கிலத்தில் (வாழ்க ஆங்கிலம்) கூறிவிட்டு 150 ஐ அழுதுவிட்டு ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.


- யதிராஜ சம்பத் குமார்.

கடைசியில் பஞ்சர் ஆனது யார் ?

26 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

கடைசியில் பஞ்சர் ஆனது யார் ?///சந்தேகமில்லாமல் நாங்களிருவரும்தான்.

கடப்பாரை said...

இது தான்டா சென்னை!!

இதுவே எங்க மதுரைன்னா மெக்கானிக் செவுள சேத்து ஒரு திருப்பு திருப்பிருப்போம்!

kggouthaman said...

ய.ரா.ச.கு அவர்களே!
மனதை நிரடுகின்ற சம்பவம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு, MY TVS போன்ற நமூதான கடைகளை பரிச்சயம் செய்து வைத்துக்கொண்டு, அவர்களின் செல் எண், தொலைபேசி எண் எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு - பிரச்னை வரும்பொழுது, அவர்களின் உதவியோடு - அதை சமாளிக்கலாம் என்பதுதான். ஆரம்பத்திலேயே ஒரு மூன்று சக்கர வாகனத்தில், பழுதான இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம். என்னுடைய கார் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் புற நகர்ப் பகுதிகளில் மக்கர் செய்த காலத்தில், பல்லாவரம் TORANA MOTORS (MY TVS) திரு ரமேஷ் உதவியது எனக்கு இன்றும் ஞாபகம் உள்ளது.

Anonymous said...

thiruntha maatanga... thiruttu pasanga... type typea kolla adipanunga...

blogpaandi said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.

காலப் பறவை said...

குத்துங்க எஜமான் குத்துங்க... இந்த பஞ்சர் கடைகாரங்களே இப்படி தான்

sandoz said...

/* இதுவே எங்க மதுரைன்னா மெக்கானிக் செவுள சேத்து ஒரு திருப்பு திருப்பிருப்போம் */

There will be rouges in every city.. Even if it is new york.. It is impossible to slap everyone.. No point in saying Madurai or Chennai..

Anonymous said...

As you had time, you did experiments with Mechanic.

Not all the mechanics are like this...

ஜெயக்குமார் said...

மதுரையில மெக்கானிக்க செவுளையெல்லாம் திருப்ப வேணாம்.. அண்ணே.. அப்பா நடுரோட்ல நிக்கிறாருண்ணெ.. வண்டி பஞ்சராயிருச்சுண்ணே அப்படின்னாப் போதும்.. அவர் சைக்கிளையோ, பைக்கையோ எடுத்துட்டு வந்து உங்க வண்டி டயரக் களட்டி சரிசெஞ்சு மாட்டிக்குடுத்துட்டு உங்கப்பாவுக்கு ஒரு கும்புடும் போட்டு காப்பித்தண்ணி வாங்கிக் குடுத்து வண்டிய சரியாக்கி அனுப்புற மெக்கானிக்கும் இருக்காங்க.. நீங்க பாத்துக் குடுங்கண்ணேன்னு சொல்லி வழக்கத்தவிட 10 ரூபா கூடவே குடுக்குறமாதிரி நம்ம நெஞ்ச நக்கிருவாங்க..

thiru said...

@kggouthaman!
Dear friend!
Why don't you share those phone numbers of My TVS or good mechanics around chennai. If possible, every one can share such good-service-provider's contact numbers so that it will be helpful to all of us...

@kadapparai
Madurai - a irunthalum, mechanic mathia manthiriyoda aala iruntha enna pannuveenga!!

கடப்பாரை said...

@திரு

மதுரை....மத்திய மந்திரி....

ஒரு மாதிரி யாரையோ சாடை காமிக்கற மாதிரி இருக்கு....

அது இருக்கட்டும்....மெக்கானிக்கா இருக்கறவருக்கு மத்திய மந்திரியவே தெரியும்னா அவரு எதுக்கு இன்னும் பஞ்சர் ஒட்டிக்கிட்டு இருக்காரு??

வட்டமாகி சுமோவுல இல்ல போவாரு??

Anonymous said...

///நீங்க பாத்துக் குடுங்கண்ணேன்னு சொல்லி வழக்கத்தவிட 10 ரூபா கூடவே குடுக்குறமாதிரி நம்ம நெஞ்ச நக்கிருவாங்க..///

என்னமா யோசிச்சு எப்டி எல்லாம் எழுதராங்கயா!!! மெய்யாலுமே மெய் சிலிர்க்குது.

IdlyVadai said...

//இதுவே எங்க மதுரைன்னா மெக்கானிக் செவுள சேத்து ஒரு திருப்பு திருப்பிருப்போம்!//


//நீங்க பாத்துக் குடுங்கண்ணேன்னு சொல்லி வழக்கத்தவிட 10 ரூபா கூடவே குடுக்குறமாதிரி நம்ம நெஞ்ச நக்கிருவாங்க..//

மக்களே அடுத்த முறை மதுரைக்கு செல்லும் போது இரண்டு ஆணியுடன் சென்று உங்கள் நண்பர் வண்டியை பஞ்சர் செய்து உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

Erode Nagaraj... said...

யதிராஜசம்பத்...

ஏதோ ஒரு வகையில் ந்யாயத்திற்கு புறம்பான செயல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இவர்களுக்கு சமூகக் காரங்கள் சொல்லி கதாநாயகர்களாக்கும் இயக்குனர்களும் மனித 'உரிமை' ஆர்வலர்களும் இன்னும் இதே போல் பலரையும் உருவாக்கியபடி கடமையில் திளைப்பார்கள்.

பஞ்சர் ஒட்டும் கடைகளில் தண்ணீரை அழுக்காக வைத்திருப்பதே, அதனுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 'பொருளை' நீங்கள் பார்த்துவிடக் கூடாது என்று தான்.

kggouthaman said...

// @kggouthaman!
Dear friend!
Why don't you share those phone numbers of My TVS...//

Torana Motors in Chromepet, Chennai
Category:
Motor Cycle Service Stations Address:
#106, GST Road
Chromepet
Chennai -600044

Landmark:
Pallavaram Lakshmi theatre.
Phone:
044 22643282,
044 22642882.
Mobile: 9840977482 (Check)

SUBBU said...

யப்பா கடப்பாரை, நாங்க மட்டும் என்ன பன்னிருப்போம்.

காடுவெட்டி சுப்பு

Sathyaprakash Dhanabal said...

i was bit disappointed after reading the story. these Mother f***ers shouldn't be left alone...

Anonymous said...

இந்த மாதிரி கதைக்கு ஏற்ப "பஞ்ச்" போட்டோ எடுத்துக் குடுக்கற "punch"er யாரு இட்லி அண்ணே?

டகிள் பாட்சா said...

இவனுங்க பொழப்பே இப்படித்தான். மயிலாப்பூரில் இப்படித்தான் காலை வேளையில் பஞ்சர் ஒட்ட ஒரு கடையில் உட்கார்ந்திருந்தேன். பெட்ரோல் பங்கை ஒட்டிய சிறிய பெட்டிக்கடை. ஒனர் வந்துதான் சார் செய்யனும் என்று பொடிப்பயல் உட்கார வைத்து விட்டான். ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு வந்தார் ஓனர். "என்ன சார்! பஞ்சரா! கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க! காலைலே சாமிக்கு பூசை போட்ட பிறகுதான் வேலய ஆரம்பிப்போம்" என்று சாமிக்கு விளக்கு ஏற்றி, ஊதுவர்த்தி ஏற்றி சட்டை பையில் இருந்து சின்னதாய் ஒரு காகித பொட்டலத்தை எடுத்து ' நைவெத்தியம்' வேறு. 'ஆஹா! என்ன ஒரு பக்திமான்! இவர்களால்தான் உலகத்தில் மழை பெய்கிறதோ! என்று நினத்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பூஜை முடிந்து, பொட்டலத்தை எடுத்து சின்னப்பயல் கையில் கொடுத்து 'போட்டுட்டு வாடா' என்று சொல்லி அனுப்பி விட்டு டூல்ஸ் எடுக்க போனார். 'நான் எதிர் கடையில் டீ சாப்பிட்டு வரேன் அதுக்குள்ள பஞ்சர் போட்டு வையுங்க என்று எதிர் கடைக்கு போனேன். " அங்கு டீ குடித்து கொண்டிருந்த பேண்ட் போட்ட ஒரு வாலிபர் "என்ன சார்! இன்னிக்கு நீங்க மாட்டினீங்க போலிருக்கு" என்றான். "ஏன் இப்படி சொல்றீங்க" சந்தேகத்துடன் கேட்டேன். "பையன் கையில ஒரு பொட்டலத்தை கொடுத்து அனுப்பிச்சுருப்பானே" "ஆமா"
அங்க பாருங்க அந்த சாமி படயல்ல மொத்தமும் சின்ன ஆணி. அதை கொண்டு போயி தெரு முனையில எறச்சி விட்டுட்டு வர்ரதுதான் பையனோட மொதல் வேலை" என்றார். தூரத்தில் பார்த்த போது அந்த தெரு முனையில் சிறுவன் ஏதோ இறைத்துக்கொண்டு போவது தெறிந்தது.
எப்படியெல்லாம் தொழிலை நடத்துகிறார்கள். இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

Anonymous said...

http://www.mkalagiri.com/
http://www.mkalagiri.com/viewgreetings.php

ராகவன் said...

எனக்கும் இந்தா மாதிரி 2 தடவை நடந்தது. "மெளத்திற்கும் டியூபிற்க்கும் உள்ள இணைப்பில் விரிசல் அதனால் டியூபினை மாத்தனும் எனச் சொல்லி 200 வரை கறந்து விட்டானுக அந்த நாசமாப் போன சென்னை மெக்கானிக்குகள் இருவர். அதிலிருந்து பஞ்சர் எனறால் அருகிலிருக்கும் பெட்ரோல் பங்கில் போய் காற்றடித்து விட்டு தெரிஞ்ச மெக்கானிக் ஷாபிற்கு வண்டிய ஓட்டிகிட்டு போய் விடுவேன்.

Baski said...

இதெல்லாம் சப்பை மேட்டர்! எவ்வளவோ தேவலை.

அந்த மெக்கானிக் பெரிய மனசு பண்ணி ரெண்டரை மணி நேரத்தில் வந்துருக்கார். அவருக்கு பெரிய மனசு. சில நாதாரிகளை கண்டுபிடிக்க நீங்க சி.பி.ஐ கிட்ட தான் போகணும். அவ்வுளவு கடமை உணர்ச்சி.

நீங்க முதலிலேயே டயர் கழட்டி மாட்ட எவ்வளவு என கேட்டிருக்கலாம். ஒருவேளை அது இந்த மாறி கொள்ளைகளை தவிர்த்திருக்கும்.

மதுரையானாலும் / சென்னையானாலும் "செவுள்ள திருப்புறதுக்கு" தில் வேண்டும்..
ஒருவேளை உங்கள் கை/கால் உடைக்க/துண்டிக்கபடலாம். அதற்கும் தில் வேண்டும்.
அப்புறமா அது கொலை வரைக்கும் கூட போகும்.. அதற்கும் தில் வேண்டும்.
போலீஸ், கேசுன்னு அலையனும். அதற்கும் தில் (ரொம்பவே) வேண்டும்.

ஆனால் சும்மா இப்படி இட்லிவடையில் ஒரு பின்னூட்டம் போட ஒரு மண்ணாகட்டியும் வேண்டாம்.

திரு கடப்பாரை, நான் எழுதியது தவறென்றால் மன்னிக்கவும்.

லவ்டேல் மேடி said...

நீங்க மட்டுமில்ல.... கதையே செம அடி வாங்கீருக்கு.... பஞ்சர் ஒட்டுனா மட்டும் பத்தாது..... பட்டி பாத்து....... டிங்கரிங் பன்னுனாதான் நல்லாருக்கும்....!!

R.Gopi said...

என்ன சொல்லி என்ன பண்ண.....

ஆட்சில இருக்கறவங்க பெரிய லெவல்.... இவிய்ங்க எல்லாம் சின்ன லெவல்...

அட்லீஸ்ட் பஞ்சர் போட்டு வண்டிய திருப்பி கொடுத்தாங்களே.... அதுக்கே அவங்களுக்கு ஒரு ஐம்பது ரூபாய் அடிஷனலா தரணும்....

வண்டிய புடுங்கி வச்சிக்கிட்டு ஒரு பத்தாயிரம், ஐயாயிரம், மூவாயிரம் குடுத்தாதான் திருப்பி தருவேன்...இப்படியெல்லாம் சொல்லாம குடுத்தாங்களே...

Santhanam said...

To avoid such incidents, it is better to keep a Portable/Handy Air Pump(Costing around Rs 600). Also i remember a TV Ad. for a solution for fixing the puncture temporarily, so that we can go to our familiar puncture shop.

singainathan said...

Read abt Puncture Basha who got a network all over chennai mobile mechanics.

See this blog
http://expertdabbler.com/2008/09/30/mobile-puncture-basha/

His mobile number is 9382819164.He will send a near by mechanic to you.Came to know from Motor Vikatan

அன்புடன்
சிங்கை நாதன்