பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 07, 2009

நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை!

நண்பர் கல்யாண் குமார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கே மீள் பதிவு...‘‘ தொடர்பு எல்லைக்கப்பால்...! ’’

வெங்கட் தாயுமானவன், சொந்த ஊரான காவேரிப்பட்டணத்திலிருந்து சென்னைப்பட்டிணத்திற்கு சினிமா கனவுகளோடு ஓடிவந்து, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன. உதவி இயக்குனராக சில வருடங்கள், அதில் வேலை இல்லாதபோது பகுதி நேர பத்திரிக்கையாளராக சில வருடங்கள், தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில மாதங்கள் என தன் கனவுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்!

கதை, கவிதைகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. இணையத்தில் வரும் யூத் விகடனில் இவரது கவிதைகளை அடிக்கடி பார்க்க முடியும். ‘நினைப்பதெல்லாம் நடந்து விடும்’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்ற சிந்தனைகளைக் கொண்டு அறிவாலயம் வெளியிட்ட ஒரு நூலுக்கு ஆசிரியரும், இந்த தாயுமானவன்தான்!

அதுமட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு, இதோ இன்னும் சில நாட்களில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையோடு, தன் முதல் படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணியில், தன் வீட்டிலேயே பரபரப்பாக இருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்! அவருக்கு உதவியாக கூடவே அவரது மனைவியும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் போகத் தயாராக இருக்கிற அவரது மகனும்!

ஆனால் இவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது.

ஆம்; இப்போது நாற்பத்தி மூன்று வயதாகும் இந்த வெங்கட் தாயுமானவனுக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கிற ஆயுள் நீட்டிப்பு, இன்னும் ஆறுமாச காலம் மட்டுமே!

‘’ ஆமாங்க. ஆறு மாசத்துக்குகப்பறம் என்னோட செல்போனில ரிங்க் டோனோ, என் குரலோ பதிலாகக் கிடைக்காது. அதுக்குப் பதிலா, நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் குரல் மட்டுமே கேட்கும். அந்த வாசகங்களுக்கு உண்மையான அர்த்தக்காரனாக நான் ஆகியிருப்பேன்’’ என்கிறார் எந்தவித மரண பயமும் இல்லாமல் சிரித்தபடியே!

கேட்கிற நமக்குத்தான் மனசு கனத்துப் போகிறது.

அப்படி என்னதான் ஆனது இந்த தாயுமானவனுக்கு?

இரண்டு வருடங்களுக்குமுன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவரின் வலது காதுக்கு அருகில் லேசாக வலி ஏற்பட்டிருக்கிறது. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் வேலையில் மும்முரமாய் இருந்திருக்கிறார். இரவு, வலியின் தன்மை கூடியிருக்கிறது. மறுநாள் காலை, எதோ காது சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்று அதற்கான ஒரு சிறப்பு மருத்துவரை அணுகியிருக்கிறார். அவரும் பரிசோதித்துவிட்டு வலி நிவாரணிகளைக் கொடுத்திருக்கிறார்.

வருவதும் போவதுமாக அந்த வலி இருக்க, மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் குளிக்கும்போது பார்த்தால் வலித்த இடத்தில் சின்னதாய், லேசான ஒரு கட்டி!

குடும்ப மருத்துவர் மூலம் சில பரிசோதனைகள். அவரது சந்தேகத்தின் பேரில் மேலும் சில பரிசோதனைகள் என படிப்படியாக பரிசோதனைகளில், அதன் இறுதி முடிவு சொன்னது இதுதான்:

அந்தக் கட்டி சாதாரண கட்டி இல்லை. உமிழ் நீர் சுரப்பியில் தோன்றி இருக்கும் புற்று நோய்கட்டி! பரோடிட் கான்ஸர் ( Parotid Cancer ) என்பது அதன் மருத்துவப் பெயர்!

ஏற்கனவே சாதாரணமான கட்டிக்கென எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு இப்போது அடுத்த சிகிச்சை ஆரம்பமானது, அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில்! மறுபடியும் அங்கே புற்று நோய்க்கான பலவித பரிசோதனைகள்...

‘’புற்று நோய் என்கிற அந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து போனது என்னவோ நிஜம்தான். ஆனாலும் அதை ஆபரேஷன் மூலம் அகற்றி விடலாம் என்ற மருத்துவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன.’’ என்கிறார் தாயுமானவன்.

ஆனால் அந்த ஆறுதலும் சில மாதங்களுக்குத்தான் செல்லுபடியாகி இருக்கிறது. அந்தக் கட்டி, ஆபரேஷனுக்கு ஏற்றதாக இல்லாமல் கல் போல மிகவும் கெட்டியாக இருப்பதால், அதை அறுவை சிகிச்சைக்கென இலகுவாக்க ரேடியேஷன் தெரபி நாற்பது நாட்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வாரத்தில் ஐந்து நாட்கள் என எட்டு வாரம் அந்த சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர் ஒன்றரை மாத இடைவெளிவிட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அந்த ஒன்றரை மாதம் கடந்து பார்த்த பின்னரும், கட்டி அதே நிலையில்தான் கல்லாய் இருந்திருக்கிறது! இன்னும் கூடுதலாய் இரண்டு மாதங்கள் பொறுத்திருக்கச் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அப்போதும் அது அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

மீண்டும் சீரியஸான பரிசோதனைகள். முடிவில் இதை ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லி வெங்கட் தாயுமானவனுக்கான ஃபைலை மூடி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.

குழம்பிய நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேறு சில மருத்துவர்களை அணுகியபோது மிகவும் சிக்கலான இடத்தில் கட்டி இருப்பதால் ஆபரேஷன் தவிர்க்கப்பட்டிருக்கும் காரணத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே விட்டால் என்னவாகும்?

‘வெடித்து வெளியே வரும்’ – என்பது பதிலாக வந்திருக்கிறது. மிகவும் கலங்கி நின்ற நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்லியிருக்கிறார்கள்.

சில நண்பர்கள் உதவியோடு அங்கேயும் போயிருக்கிறார் இவர்.

அவர்களோ இவரை பரிசோதித்துவிட்டு ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லையேல் உயிருக்கு ஆபத்து‘ என்று அறிவித்திருக்கிறார்கள்!

எதை நம்புவது?

மேலும் குழப்பத்திற்கிடையே முகச்சீரமைப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசித்தபோதுதான் அவர் உண்மையான நிலவரத்தைத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

காதுக்கு அருகே வளர்ந்த அந்த புற்று நோய்க்கட்டி, கழுத்து வழியாக மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்பினை பின்னிப் பிணைந்து உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த நரம்பு தொந்தரவு செய்யப்பட்டால், அது மூளையை பெருமளவில் பாதித்து ரத்தப்போக்கை அதிகரித்து அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்து விடும். பிறகு மரணத்திற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் அவரது அந்த விளக்கம்.

சரி இதற்கான சிசிக்கைதான் என்ன?

மருத்துவர்களின் அறிவுரைப்படி வலி தெரியாமல் இருப்பதற்கு மருந்து மாத்திரைகளும், அந்த கட்டி என்கிற குட்டி பிசாசுவின் மூலம் நோயின் தன்மை உடம்பின் மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு சில மாத்திரைகளும் எழுதித் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும், கூடவே உயிருக்கு உத்திரவாதம் இன்னும் ஆறு மாசம்தான் என்பது இன்றைய நிலை!

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள, ஆங்கில மருந்துகளோடு மாற்றுமுறை சிகிச்சைகளையும் பார்த்திருக்கிறார் வெங்கட் தாயுமானவன். இப்படி அனைத்து மருந்து மாத்திரைகளோடு சத்தான உணவுகளையும் சாப்பிடும் வகையில் அவரின் ஒருநாள் செலவுக்கு மட்டுமே சுமார் எழுநூறு ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது! அதற்கு நிதி நிலைமை கைகொடுக்காததால்,

‘’எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப் போட்டுட்டு, வலியை அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். இருக்கவே இருக்கார் கடவுள்! அவருகிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். ஆனா அதுக்காக சோர்ந்து போய் ஒரு நோயாளியா மூலைல முடங்கிக் கிடக்காம, என்னோட சினிமா கதைல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.... ரெண்டு வருஷமா சிகிச்சைக்கும் மருந்துக்கும் நடுவுல அலைஞ்சதுல, அப்படி இப்படின்னு இப்பதான் ஒரு ப்ரொடியூஸர் கதையை ஓக்கே பண்ணியிருக்காரு. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மூணு மாசமா கதையை மெருகேத்துனதுல வலி பெருசா தெரியலை....’’

என்று சொல்லிமுடித்த தாயுமானவன் ஒரு சின்ன இடைவெளிவிட்டு, மெலிதாய் ஒரு பெருமூச்சோடு மேலும் பேசுகிறார்...

‘’ஆனா இப்ப கொஞ்ச நாளா, முகத்தின் வலது பக்கத்தை அசைக்கறது சிரமமா இருக்கு. எதோ ஒரு தடை இடைஞ்சலா இருக்கு. வலது கண்ணை மூட முடியாத நிலையும் சமீபமா ஏற்பட்டிருக்கு...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் தாயுமானவனின் காது அருகே இருந்த அந்த அழிச்சாட்டியமான கட்டி, இப்போது உடைந்து புண்ணான நிலையில் இருக்கிறது!

அடுத்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்கிற அந்த ரகசியக் கோட்டைக் கடந்து, தாயுமானவன் தனது லட்சியக் கனவின் வெற்றி முகடைத் தொட வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையாய் இருக்கிறது! கூடவே உங்களது பிரார்த்தனைகளும் மருத்துவக் கூற்றுகளை புறந்தள்ளி, அவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் பாலமாக அமையட்டும்!

பிரார்த்தனைகளுக்கு இணையான வலிமை வேறு எதற்கும் இல்லை. அவைகள் ஒருபோதும் வீணாவதுமில்லை என்கிற நம்பிக்கை, நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே?
- கல்யாண்குமார்

--------------------------------------------------------------------------

-இந்தக் கட்டுரையை எழுதி விகடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நண்பருக்கு அனுப்பி திரு. தாயுமானவனுக்கு மருத்துவ ரீதியில் உதவுமாறு ஒரு பத்திரிக்கையாளனாகவும் எழுத்தாளனாகவும் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரின் பணி நிமித்தம் அவரிடமிருந்து ஒரு மாதமாகியும் பதில் இல்லை. திரு. தாயுமானவனின் உடல் நிலையின் அவசரம் கருதி இன்று (ஜூலை ஏழு) எனது வலைப்பக்கத்தில் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன்.

திரு.தாயுமானவன், அவரது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலாலும் அவர்களின் உதவியாலும் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் கீமோ தெரபி என்கிற சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். சுமார் எட்டாயிரம் மதிப்புள்ள ஒரு சிறப்பு மருந்து, ஊசி மூலமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஒருமுறை அவரது உடலில் செலுத்தப்படுகிறது. மொத்தம் பத்து ஊசிகள் செலுத்தினால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது இந்த மருத்துவர்களின் கணிப்பு.

ஒரு அன்பு நண்பராக அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பும் உள்ளங்கள் அவரது 9840279035 என்ற் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ செலவுகளுக்கு பொருளாதார ரீதியில் அவருக்கு உதவ விரும்பும் அன்பு உள்ளங்கள் கீழ்கண்ட எனது வங்கிக் கணக்கில் உங்களது உதவிகளைச் சேர்க்கலாம். நேரில் சந்தித்துத் தர விரும்புபவர்கள் எனது 9382151621 என்ற் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். நம் மூலமாகச் சேரும் ஒரு கணிசமான தொகை அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நன்றி.
எனது வங்கி எண்:
ICICI SB AC NAME – M.KALYANKUMAR, AC NUMBER – 000901122481. BRANGE – NUNGAMBAKKAM, CHENNAI.

(Source: http://kalyanje.blogspot.com/2009/07/blog-post.html )

8 Comments:

kggouthaman said...

Dear kalyankumar
Just now sent Rs100 to your ICICI account.
My prayers for Shri Venkat Thayumaanavan.

K G Gouthaman.

Anonymous said...

வெங்கட் தாயுமானவன் அவர்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்

Gayathri said...

என்னால் முடிந்த பணத்தை தங்கள் accountல் சேர்த்துள்ளேன்
தாயுமானவன் நீடுடி வாழ பிரார்த்தனை செய்கிறேன்
அவரின் விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் வெற்றி கிட்டட்டும்

Change said...

Mr. KlayanKumar,
An Amount has been credited towards this cause on your account on 15-07-09 @ 18:30 Hrs.

Anonymous said...

This has come as a detailed article in recent Ananda Vikatan. Hope Mr.Venkat Thayumanavan gets good support and help due to these initiatives.

Keep up good work.
- Mahesh

IdlyVadai said...

//This has come as a detailed article in recent Ananda Vikatan. //

Can you tell me in which AV it has come and under what heading.

Anonymous said...

Last week's AV issue - titled "Kathai thiraikkathai Iyakkam - Venkat Thayumanavan" on right side page (when you hold the book on both hands. (I do not have the book in hand now to mention page number). Totally 3 full pages of coverage - including a box titled "Ponnoviam" - short interview.

- Mahesh

Anonymous said...

Page 40, 41, 42 of last week AV issue

- Mahesh