பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 10, 2009

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

இந்த வாரம் விகடனில் வந்த கடிதம். முரசொலியில் பதில் வரலாம். காத்திருப்போம்

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்...

''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...

''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள் ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத் தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின் னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதி களாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதைஎல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?

இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ''அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.''

பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந் தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங் கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பாஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக் கூடாதா?'' என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக்கழித்தீர்கள். ''போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக் கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?

''மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.''

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?

''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து''.

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?

''ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.''

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? 'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?

''நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடி யும்?'' என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத் திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறை யாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்க ளது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என் றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணா வும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர் கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந் தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரை முருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

''பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகைஈரமா கவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது...

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,
அரசியல் அறியாத் தமிழன்!
( நன்றி: விகடன் )

19 Comments:

Anonymous said...

சட்டசபையில் இன்று(10th July 2009)

ஜி.கே.மணி (பாமக): தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 லிட்டர் தண்ணீரே 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் விலை அதை விட குறைவாக உள்ளது

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): மாட்டுக்குத் தேவையான பருத்தி விதை கிலோ ரூ.13 விற்கிறது. புண்ணாக்கு ரூ.24. ஆனால் பால் விலையோ ரூ.13. இது உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கிறது


முதல்வர் கருணாநிதி:
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பால் உற்பத்தியாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை எங்களுக்கு சட்டமன்ற பணிகள் உள்ளன. அதற்கு பிறகு அமர்ந்து பேசி............
ரத்தத்தை கண்டே பயப்படாத நாங்கள் பாலை கண்டா பயப்பட போகிறோம்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

CM have to remember/read Swami Vivekananda saying "Do or Die"

Swami said...
This comment has been removed by the author.
Anonymous said...

ரொம்ப சூடான கட்டுரை/கடிதம்.
"SSVM" இருந்தா "சம்பந்தப்பட்டவர்" நாக்க புடுங்கிக்கணும்.

ஓ....... மறந்தே போச்சே!!!! சம்பந்தப்பட்டவருக்கு "பல" நாக்கு இருக்கே, எப்டி வேணும்(னாலும்) (நாலும்) பேச!

so, no problem. let (me) us continued to be the "ஈர விறகு".

Anonymous said...

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழக மக்களை முதல்வர் தன் மக்கள் போல அல்லவா வளர்கிறார்
(மாணாட மயிலா...)
(மது மாது...)

I am pity on Tamil People, who still believes his words.

"Even a correct decision is wrong when it is taken too late"

... என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும்ஞாயிறு பிறக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Anonymous said...

I think Vikatan sales is down.
That is why they have started
this topic.
Or - probably MK has got a good
new "paarpaan" archanai - as a build up he has requested AV to publish this first.

Rajaraman said...

He wants to be sensible at least during his last phase of his life is it wrong.What does AV wants go to war with Srilanka
Now is the time for reconciliation. Possibl;y that is what MK is trying to emphasis.

வால்பையன் said...

//ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?//


இந்த விசயம் வாரிசுகளுக்கு தெரியுமா!?

தெரிஞ்சா இன்னேரம் கொலை விழுந்துருக்க்குமே!

Krish said...

இதெல்லாம் முதல்வருக்கு சாதாரணம். இது மாதிரி எதனை பேர் கிட்ட வசை வாங்கியிருப்பார்?

"பார்ப்பன பத்திரிக்கை என் மீது பழி சுமத்துகிறது. நான் கீழ் சாதியில் பிறந்தவன் என்பதால்...." என்று ஒரு அறிக்கை விட்டால் போதும்.

அந்த அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை!

Kameswara Rao said...

என்ன ஒரு துணிவு தமிழனுக்கு, யாரால் வந்தது, எப்படி வரலாம்,

கழக (குடும்ப) ஆட்சியால் தமிழகம் படும் பாடு போதாது என்று, தன் திரை கதையினால் தமிழர்களை பதம் பார்க்கும் கலை அரசரை ப்பார்தா இந்த கேள்வி? தன் மந்திரிகளே விற்பனை வித்தர்கலாகி போர்கழி திரட்ட இன்னும் ஒரு வாய்ப்பு அளித்திருக்கும் வள்ளல் அல்லவா தாம் உங்களை ப்பார்த்து எப்படி ஒருவன் கேள்வி கேட்க்கலாம் கழக தந்தையே !

தாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் பேசியது இன்று வினயாகல்லவா முடிந்திருக்கிறது. வயதின் மூப்பு காரணமாக தாங்கள் மறந்தாலும் .. இதையெல்லாம் கிளறி கிண்ட யார் இவருக்கு அதிகாரம் அளித்தது

எந்த கேள்விக்கும் வெளிப்படையாக பதில் அளித்து பழகாதவரை இன்னும் புரிந்து கொள்ளாமல் ... தங்களது சரித்தரத்தில் சகதியை தெளிப்போரை என்ன வென்று சொல்வது

கழக வாழ்க்கையில் தங்கள் உடன் வந்தோருக்கு உள்ளத்தில் இடம் கொடுத்து, வீட்டில் உள்ளோருக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கும் தங்கள் பண்பை பார்த்த பின்னுமா இந்த கேள்விகள் ... அப்படியானால் யாம் அரசியல் அறியா தமிழன்தாம்

25 ஆண்டுக்கு முன்னால் தாங்கள் மேடையில் அரங்கேற்றிய ஓர் நாடகத்திற்கு இன்று
தங்களிடம் கேள்வி கேக்கும் இந்த வெள்ளேந்தி தமிழனை மன்னியுங்கள் தங்களை திருவிளையாடலில் இதுவும் ஒன்று என அறியாமல் இருக்கும் அப்பாவிகளை என்னவென சொல்ல

தங்களின் "சுயாட்சி" மற்றும் "கூட்டாட்சி" கொள்கைகளை அறியாமல் தங்களிடம் வாதம் செய்வோரை மறப்போம் மன்னிப்போம். தங்களின் நடவடிக்கைகளை கழக கண்மணிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் தங்கள் கூட்டணி கட்சி தலைவர் கனகச்சிதமாக புரிந்து கொள்கிறார்...

தங்கள் அண்ணாவையும், பெரியாரையும் என்று விட்டு வைத்தீர்கள், இறந்தும் தங்கள் கேடயமாய் இருப்போரை இந்த அரிசயல் அறியா தமிழனுக்கு என்ன தெரியும்' "யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்" இந்த பழமொழி பொய்க்காமல் இருக்க தாங்கள் அவர்களை பயன்படுத்துவது பாழாய் போன தமிழனுக்கு என் உறுத்துகிறது ..

எவ்வளவு துணிவு இருந்தால் தங்கள் ராஜதந்திரத்தை, கேள்வி குறி ஆக்கியிருக்கிறான் இந்த தமிழன் ... இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமா தாங்கள் அதை செய்கிறீர், கடிதம் எழுதுவது, தந்தி அடிப்பது, மனிதச்சங்கிலி, ஆர்பாட்டம், அனைதுகட்சிக்கூட்டம், சட்டசபையில் தீர்மானம் என்பது தாங்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து எடுத்துக்கொண்ட அணுகுமுறை அல்லவா..

அப்படி தாங்கள் என்னதான் கூறிவிட்டீர்கள் என்று இப்படி வீறுகொண்டு கிளம்புகிறான் தமிழன்
"எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல!"

தங்களின் வனவாச காலத்தில் தாங்கள் செய்த செயல்கள் எதையம் புரிந்து கொள்ளாமல் தங்களை கேள்வி கேட்கும் மூடர்களை என்ன சொல்ல இலங்கையில் 80,0000 தமிழர்கள்ளுக்கு சாவு மணி அடிக்க்பட்டதற்கு தங்களின் அணுகுமுறை, தங்கள் வித்திட்ட வினை என்று கூசாமல் கூறி தங்களுக்கு கடிதம் எழுதியவனின் அறியாமை என்ன சொல்ல, அவர்கள் யார் ? அவர்களில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் உண்டா ? அல்லது அங்கு உங்கள்ளுக்கு சொத்து இருக்கிறதா தங்கள் கவலை பட ? இதுபோல் சிந்தித்து செயல்படாதவன் கண்டிப்பாக இளிச்சவாய் தமிழன் தான் ?

தங்களின் பதிலை முரசொலியில் ஆவலுடன் எதிர்பார்க்கும் அரசியல் அறியா தமிழர்களில் நானும் ஒருவன்

காமேஷ்

Erode Nagaraj... said...

யாருக்குத் தெரியும்... திடீரென முக்கியத்துவம் பெறும்
இளந்தலைவர்களின் ஜாடையோடு பையனின் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படுங்கள்!

Krish said...

Kamesh!

Nice post!

♫சோம்பேறி♫ said...

:-) Excellent post.. I like it..

Anonymous said...

இன்னுமா உலகம் அவரை நம்புது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

As there is no issue in Tamil Nadu, the media/press are covering un-wanted issues for maintaining the sales.

R.Gopi said...

ஐயோ........... மறுபடியும் தொடர் விரச கவிதை..... கேள்வி பதில் ஆரம்பமாகுமா??

இவை அனைத்தையும் தாங்கும் மன உறுதியும், ஸ்டீல் பாடியும் தருவாய் என்று அந்த பாடிகாட் முனீஸ்வரனை வேண்டுவோம்...

Anonymous said...

I Know This Is One Of The "Paarpana Soozhchi". The Paarpangal Won't Tolerate That A Backward's Ruling Tamilnadu. We Will Not Be Carried Away By These Accusations. We Totally Negative It.
Sivanesachelvan , 12-07-'09 India

mazhai said...

முரசொலியின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

Anonymous said...

hello,

Stop this bullshit about "paarpan and backward caste". Gone are those days when you can safely use that argument if you don't have any other answers. I don't think karunanithi can sell the same 'paruppu" anymore.

Baski, Chennai said...

வாசிக்கும் போது எரிச்சலாக தான் இருக்கிறது. அது என்னப்பா அப்படி பொங்குறீங்க?

இந்த உணர்ச்சி ஒரு சக மனிதனுக்காக ஏற்பட்டால் நல்லது தான்.
ஆனால் "தமிழன் தமிழன்" என ரொம்ப உணர்ச்சி வசபடுவது உங்களைதான் லூசாகிவிடும்.

இப்போ ஜாதி, மதம், நிறம் தாண்டி "மொழி வெறி" பரவிகொண்டிருகிறது.

தயவு செய்து இதை (தமிழை) ஒரு மொழியாக மட்டும் பார்க்கவும்.

இதற்க்கு வித்திட்டு அரசியல் பண்ணியவர்கள் மேலே போய் சேர்ந்து விட்டார்கள். (மு.க. போன்ற சிலர் தவிர). ஆனால் இதை வைத்து அரசியல் (சீரழிவு) ரொம்ப நாள் ஓடும் போல தெரியுது.

இப்ப என்ன பண்ணியிருக்கணும் என இந்த அனானி சொல்லுறாரு.

இந்திய ராணுவத்தை (திரும்ப) இலங்கைக்கு மத்திய அரசு அனுப்பி இருக்கணுமோ?
வேண்டாம் தானீ. அதற்காக தானே ராஜிவ் கொல்லப்பட்டார்.

இந்தயா சிறிலங்காவிற்கு உதவி செஞ்சுதாம்.... எந்த சூழ்நிலையில்?
சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஸ்ரீலங்கா விற்கு உதவ ஆரம்பிச்சா பெரிய பிரச்சனையாகி இருக்கும் (இந்தியாவிற்கு).

பிரபாகரன் ஆண்ட இந்த இருபது வருடங்களில் ஈழத்தில் என்ன வளர்ந்தது?
என்ன வேலை வாய்ப்பு வளர்ந்தது ??
ஒரு வேளை பிரபாகரனுக்கு தனி நாடு கொடுத்து விட்டால் இந்தியா சொல்கிற படி கேட்பாரா ? (கண்டிப்பாக இல்லை)
என்ன ........ கு இந்தியா செய்தது தப்பு என சொல்கிறீர்கள்.

நான் ராஜபக்ஷேவை ஒரு ரத்த வெறி பிடித்த மிருகமாக பார்க்கிறேன். பிரபாகரனையும் கூட.
திவிரவாதத்தை நம்பிய மக்களுக்கு இது மிக கடுமையான தண்டனை தான்.

உணர்ச்சிவசப்படும் மக்கள் இருக்கும் வரை இது மாதிரியான மட்டமான அரசியல் சும்மா சக்க போடு போடும்.

மு.க வும் , ஜெ.ஜெ வும் , வை.கோ. வும் அண்டா அண்டா வாய் புழுகுவார்கள். நம்பியது/நம்புவது நமது முட்டாள் தனம்.

கேக்குறவன் கேனையாய் இருந்தால் ..................?

பி.ஜெ.பி யை மதவாத கட்சி என நான் வெறுக்கும் சமயம், இந்த திராவிட கட்சிகளை மொழிவாத/இனவாத கட்சி என நான் வெறுக்கிறேன்.

நான் இந்து / திராவிடன். அதற்காக எனது புனிதமான ஓட்டு ஒருபோதும் இந்த மட்டமான அரசியல் செய்யும் கட்சிகளுக்கு கிடையாது.

நம்பிக்கையுடன் நல்ல வருங்காலத்தை முன்னோக்கி.
இந்தியன்.