பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 01, 2009

தேர்தல் 2009 தூத்துக்குடி யாருக்கு ?

அனைவருக்கும் வணக்கம்!!!!
முதலில் நான் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இட்லிவடையாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்....
என்னடா இட்லிவடை டீமில் இருக்கிறோமே? இதுவரையில் நாம் களப்பணியாற்றவில்லையே என நினைத்து வருந்தி 2 நாட்கள்
விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி சென்று விட்டென். அங்குள்ள எனது நண்பர்களின் உதவியால் இந்த முயற்சி நடந்தது.
சரி....
விஷயத்திற்கு வருவோம்!!!!!


தொகுதியின் பெயர்: தூத்துக்குடி
மாவட்டம்: தூத்துக்குடி
மாவட்டத் தலைநகரம்: தூத்துக்குடி
அமைப்பு: மாநகராட்சி
மொத்த சட்டமன்ற தொகுதிகள் மற்றும் உறுப்பினர்கள்: 6

அவை:
தூத்துக்குடி- அமைச்சர் கீதா ஜீவன் (தி.மு.க.,)
திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.,)
கோவில்பட்டி - எல்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.,)
ஒட்டப்பிடாரம் (தனி)- மோகன் (அ.தி.மு.க.,)
விளாத்திகுளம் - சின்னப்பன் (அ.தி.மு.க.,)
ஸ்ரீவைகுண்டம்- செல்வராஜ் (காங்.,)
(நீக்கப்பட்ட சாத்தான்குளம் தொகுதி)- ராணி வெங்கடேசன் (காங்.,)

மொத்த வாக்காளர்கள்: 9,39,711
அதில்
ஆண்: 4,60,262
பெண்: 4,79,449
[ இந்தத் தொகுதியைப் பொருத்தவரை பெண்கள் வாக்கு அதிகமாக இருப்பதால், அவர்களைப் பொருத்துதான் முடிவு அமையும் ]


வேட்பாளர்கள் விபரம்:(முக்கிய வேட்பாளர்கள் மட்டும்)
[1] திரு.எஸ்.ஆர்.ஜெயதுரை [தி.மு.க]
[2] திருமதி.சிந்தியா பாண்டியன் [அ.தி.மு.க]
[3] திரு.சுந்தர் [தே.மு.தி.க]

தொழில்கள்:
[1] விவசாயம்
[2] உப்பளம்
[3] மீன் பிடித்தல்
[4] ஏற்றுமதி இறக்குமதி
[5] தீப்பெட்டி மற்றும் பட்டாசு
[6] இரசாயணத் தொழில்கள்
[7] டெக்னிக்கல், லாஜிஸ்டிக்ஸ் சம்பந்தப்பட்டத் தொழில்கள் [உதாரணம்: லாரி,மினிவேன்]

சரி,
இனி சட்டமன்ற தொகுதிகள்வாரியாக ரவுண்ட் அப் வரலாம்.....

இந்த பாராளுமன்றத் தொகுதியைப் பொருத்த வரை....
இது புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி,
இது புதிதாக அறிவிக்கப்பட்ட பாராளுமன்றத் தொகுதி என புதிய உற்சாகத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

[1] தூத்துக்குடி:

இதுதான் மாவட்டத்தின் தலைநகரம் என்றாலும், அடிப்படை வசதிகள் இன்னமும் சரிவர செய்து முடிக்கவில்லை என்பதை நாம் பழைய பேரூந்து
நிலையத்தில் இறங்கி உடனேயே கண்டுபிடித்து விடலாம். இறங்கும் போது ஒரு கைகுட்டை கட்டாயம் அவசியம். திருநெல்வேலிக்கு மேலும்
ஒரு இரயில், சென்னைக்கும் கூடுதலாக ஒரு இரயில் என மக்களின் கோரிக்கை முதலிலேயே ஆரம்பம். சரக்குப் போக்குவரத்திற்க்கு
சாலை வழியை மட்டுமே நம்பி இருக்கவேண்டியுள்ளது சிறு வியாபரிகளின் மனத்தாங்கலாகவே உள்ளது. இந்தத் தொகுதியில்
இந்தத் தொகுதியில் விவசாயம், உப்பளம், மீன் பிடித்தல், ஏற்றுமதி இறக்குமதி, இரசாயணத் தொழில்கள், டெக்னிக்கல்
சம்பந்தப்பட்டத் தொழில்கள்
ஆகிய தொழில்கள் உட்பட பல தொழில்கள் உள்ளன. SPIC, TAC, HWP போன்ற முதல்நிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதை
நம்பி இருந்த தொழிலாளர்கள் பல பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்[ இதில் அடியேனது தகப்பனாரும் ஒருவர் ].
இதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காதது பல பேரது மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மேலும் கூடி வரும் விலைவாசி,
இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் மாட்டிக்கொண்டு விழித்தல், இறங்கி வரும் பொருளாதாரம் மந்தநிலை, கடும் மின்வெட்டு,
மாநகராட்சியானவுடன் வரியைக் கூட்டியது போன்றவற்றால் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிறது.
மேலும் இங்குள்ள திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, லோக்கல் மினிஸ்டர் கீதாஜீவன் (பெரியசாமியின் மகள்) ஆகியோரது
நடவடிக்கைகளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருக்க வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. நல்ல சாலை, நல்ல குடிநீர், தடையில்லா மின்சாரம்,
நல்ல பேருந்து வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த தொகுதியில் தேவைப்படுகின்றன. இங்கு தேர்ந்தெடுக்கப்படும்
உறுப்பினர் இதையெல்லாம் சரி செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வாக்களிக்க உள்ளனர் இந்த தொகுதி மக்கள்.

[2] திருச்செந்தூர்:
திருச்செந்தூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முதலில் முருகன் பின் கடல். ஒரு ஆன்மீக ஸ்தலத்திற்க்கு வந்திருக்கிறோம் என்று
நினைத்து இறங்கினால் அங்கு காத்திருக்கிறது, அடிப்படை வசதிகளற்ற, துர்நாற்றம் மிகுந்த, ஒரு ஊருக்கு வந்திருக்கிறோம் என்று.
போன முறை இந்த தொகுதியில் பரிதாப(ஜாதி) ஓட்டில் ஜெயித்து எம்.பி. ஆகி, பின் அமைச்சரும் ஆகிய திருமதி.ராதிகா செல்வி எதுவுமே
செய்யவில்லை என்ற கருத்து பரவலாக அனைத்து மக்களிடமும் உள்ளது. தொகுதி பக்கம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை என்கின்றனர்
சிலர். சில விவரம் தெரிந்த மக்களோ “போப்பா, அவங்க எங்க தொகுதிக்காக பாராளுமன்றத்தில பேசக்கூட இல்லை” எனும் போது அவர்கள்
கண்கள் எதையோ நினைத்து இழந்த ஏமாற்றம். சரி விஷயத்திற்கு வருவோம். இந்த தொகுதியில் மீன் பிடித்தல், விவசாயம்(புஞ்சை, நஞ்சை),
உப்பளம் உட்பட பல தொழில்கள் உள்ளன. கள் இறக்க அனுமதி கேட்டு போராடி வரும் நாடார் சமுதாய மக்கள், சேதுசமுத்திர திட்டத்தை
எதிர்க்கும் மீனவ சமுதாயம், அடிப்படை வசதிகளை நாடும் அனைத்து தரப்பினர் என இந்த தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிரம்ப
உள்ளன. அஇஅதிமுகவைச் சார்ந்த எக்ஸ் மினிஸ்ட்ர் திரு.அனிதா.இராதாகிருஷ்ணன் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில்
இப்போது அது சற்று மங்கியதாக தெரிகிறது. கடந்த ஐந்து கால ஆட்சியில் இந்தத் தொகுதில் நடந்த ஒரே விஷயம் சென்னைக்கு இரயில்
விட்டதுதான். அடிப்படை வசதிகள், ஒரு தொழிற்சாலை, சரியான சாலை வசதி என இந்த தொகுதி எதிர்நோக்கி இருக்கும் விஷயங்கள் பல.

[3] கோவில்பட்டி:
முறையாகப் பார்த்தால் இதுதான் மாவட்டத் தலைநகராகி இருக்க வேண்டும், அந்தளவுக்கு தொழிலுக்கும், வியாபாரத்திற்கும் பெயர் வாய்ந்த
ஊர். தீப்பெட்டி, பட்டாசு தயாரித்தல், விவசாயம் சார்ந்த தொழில்கள் உட்பட பல தொழில்கள் உள்ளன. நிறைய பேருக்குத் தெரிய
வாய்ப்பில்லை, தெரிந்து கொள்ளுங்கள் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு பேமசான ஊர்(திருநெல்வெலி அல்வா மாதிரி). கம்யூனிஸ்ட்டுகள்
நிறைந்த தொகுதி இது.எனவே எந்த கூட்டனியில் கம்யூனிஸ்ட்டுகள் இருந்தாலும் இந்த தொகுதியை அவர்களுக்குத் தருவது கழகங்களின்
வழக்கம். தண்ணீர் வசதி, சாலை வசதி என இந்த தொகுதிக்கு தேவை நிரம்ப இருக்கிறது.

[4] ஓட்டப்பிடாரம்:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் என விடுதலை வேந்தர்கள் நிறைந்த பூமி இது. ஆனால் படிப்பறிவு, விவசாயம்,
தொழில்கள் என அனைத்து தரப்பிலும் பின்தங்கிய தொகுதி இது. சில பகுதிகளுக்கு பஸ் வசதி, மின்சார வசதி கிடையாது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.எங்கள் மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் என்றால் பெண்ணே தரமாட்டார்கள், அந்தளவுக்கு அடிப்படை வசதிகளற்ற ஊர்.
இந்த தொகுதி மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் ஏராளம், ஏராளம். ஓட்டப்பிடாரத்தில் டீக்கடையில் உட்கார்ந்திருந்த முருகனை
அணுகிய போது, “என்ன சார், தேர்தல்ன்னு வந்தாதான் நீங்களே வர்றீங்க, அப்புறம் ஜெயிச்சவன் எப்படி வருவான், போன தடவை ஜெயித்த
எம்.பி. எங்க தொகுதி பக்கம் வரவேயில்லை, நானும் ஒரு 40 வருஷமா ஓட்டு போட்டுக்கிட்டுதான் வாரேன், ஓட்டப்பிடாரம் அப்பிடியேதான்
இருக்கு, போங்க தம்பி, போய் வேற வேலையைப் பாருங்க ” என்றார். தண்ணீருக்காக 4 மைல் கால் கடுக்க நடந்து வந்து திண்ணையில்
உட்கார்ந்த சித்திரையிடம் போன போது “வாப்பு, உட்காரு, மோர் குடிக்கியா,என் பேரு கம்ப்யூட்டர்ல வருமா?
ம்ம்ம்ம்....பாட்டில் தண்ணி குடிக்கிறவங்களுக்கு
எங்க கஷ்டம் தெரியது, மழைதான் ஏமாத்திடுச்சுன்னு நினைச்சா,இந்த பாழாய்ப்போன கவர்ன்மெண்டும், எங்களை ஏமாத்திக்கிட்டேதான்
இருக்காவ, தேர்தல்ன்னு வந்தா, எனக்கு சேர்த்தி எங்க வீட்டில இருக்கிற 4 ஓட்டுக்கும் 200 ரூபா கொடுப்பாவ, அதை வாங்கிட்டு, அவிய
எதுல சொல்லுதாவளோ, அதுக்கு போட்டுருவேன்” என்றார் அப்பாவியாய்.தண்ணீர் இல்லாத கரிசல்காடு, கொழுத்தும் வெயில், அடிப்படை
வசதிகள் என்றால் என்ன என்று கூட தெரியாத அப்பாவி மக்கள் என இருக்கும் இத்தொகுதியை விட்டு நகர்ந்து விளாத்திகுளம் செல்வோமா?

[5]விளாத்திகுளம்:
கிட்டத்தட்ட 2 மணி நேரம் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஒரு பஸ் வந்தது, 100 பேர் இருப்பார்கள் போல,இதுவும் கிட்டத்தட்ட ஓட்டப்பிடாரம்
மாதிரியேதான். “அட போப்பா, இந்த ஊருக்கு சரியா பஸ் கூட கிடையாது” என்றார், நான் பஸ்சில் பயணிக்கும் போது என் அருகில் இருந்த
முதியவர். ”நிலம்லாம் கொடுக்கிறாங்கன்னு சொன்னாங்க ஒண்ணும் தரலை, டீவின்னு ஒன்ணு தந்தாங்க,ரெண்டே நாள்ல்ல சோலி முடிஞ்சு
போச்சு. எங்க ஊருக்கு தண்ணி கொடுத்துருவேன்னு சொன்னவருக்கு போன தடவ நான் என் தோட்டத்திலேர்ந்து இளநீ கொடுத்து, எலக்சன்
வேலை எல்லாம் பார்த்து, எல்லாம் செஞ்சேம்யா, தண்ணியிம் வரல, அந்த ஆளும் வரல” என்றபோது அந்த அப்பாவி தங்கையாவின் கண்ணில்
கண்ணீர்.

[6] ஸ்ரீவைகுண்டம்:
”திருவைகுண்டம்” என்று தான் சொல்ல வேண்டுமாம், இதுக்குத்தான் கவர்ன்மெண்ட் லாயக்கு. பஸ்ஸ்டாண்டில் இறங்கியவுடன், நம்மை
வரவேற்கிறது பன்றிகள் கூட்டம். தாலுக்காபீஸ், கிளைச்சிறை, ட்ரெஷரி ஆபிஸ் மூன்றும் சேர்ந்த காம்ப்ளெக்ஸ். பேட்மாநகரம் இஸ்லாமிய
சகோதரி பேகம் வேப்பமரத்தடி நிழலில் நின்று மோர் அருந்திக் கொண்டிருந்தார். “என்னக்கா? இங்க நீக்கீங்க?” என்றேன். “அட போப்பா!,
நானும் பட்டா மாத்தறதுக்காக 10 நாளா வரேன் ஒன்னும் நடக்கலை, அதுக்குள்ளாற மூன்றுவா(3000) வாங்கிப்புட்டாவ” என்றார். அங்கிருந்து
அருகில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்றால் கணஜோராக சீட்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. “என்னன்ணே, உங்க
கூட்டனியைச் சேர்ந்த DMK ஆள் நிக்காங்க நீங்க போலையா” என்றேன். “அதாவது அண்ணே, எங்க அண்ணன் தனுஷ்கோடிக்கு சீட்டு
குடுக்காததால எங்கள போவ வேண்டாம்ன்னு சொல்லிப்புட்டாவ” என்றார் ஒரு ஒன்றியப் பிரமுகர்.நவதிருப்பதி ஸ்தலங்கள் இந்த தொகுதியில்தான்
உள்ளன.


இரவுண்ட் அப் முடிந்தது.

இனி...
இதுவரை நடக்காதவை(ஏமாற்றங்கள்):

[1] அடிப்படை வசதிகள்
[2] சரியான குடிநீர் வினியோகம்
[3] ரேஷன் பொருள் கடத்தல்
[4] மண் கடத்தல்
[5] கள்ள சாராய விற்பனை
[6] தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகள்
[7] மேலும் ஒரு இரயில்
[8] வாழைநார் தொழிற்சாலை
[9] ஸ்ரீவைகுண்டத்தில் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்தல்
[10] ஏரலில் ஒரு தடுப்பணை
[11] தீப்பெட்டி தொழிலுக்கு காப்புரிமை
[12] சரியான பேருந்து வசதி
[13] கள்ளகடத்தலைத் தடுத்தல்
[14] நவதிருப்பதியை சுற்றுலாத் தலமாக அறிவித்தல்
[15] சரியான சாலை வசதி
[16] முறையான மின் வினியோகம்
[17] இலவச வீட்டு மனைப் பட்டாவை சரியான முறையில் வழங்குதல்
[18] தொகுதியிலுள்ள குளங்களை தூர் வாருதல்
[19] தொகுதி முழுக்க பரவியுள்ள லஞ்சத்தைத் தடுத்தல்
[20] சில உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக ஆக்குதல்
[21] பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க உதவி செய்தல்
[22] லஞ்ச ஒழிப்பு
என பட்டியல் தொடர்கிறது........
மேற்பட்டவை எல்லாமே ஒவ்வோரு முறையும் ஓட்டு வாங்க வரும் வேட்பாளர்கள் சொன்னது.


இனி....
மண்ணின் மைந்தனா? கல்வியின் சிகரமா?
இந்த தொகுதி முழுக்க இரவுண்ட் அப் செய்ததில், அஇஅதிமுகவுக்கும், திமுகவுக்கும் போட்டி கடுமையாக நிலவுகிறது. 1998ல் நடந்தது போல
திமுக தலைமைக்கு எதிராக பெரியசாமி வேலை செய்யலாம் என திமுகவினரே பேசுகின்றனர். மண்ணின் மைந்தனான ஸ்ரீவைகுண்டம்
அருகிலுள்ள மொட்டச்சிக்குடியிருப்பைச் சார்ந்த ஜெயதுரை(திமுக) வெற்றி பெருவதில் சிக்கல் இருக்கும். அதே வேளையில் முன்னாள்
துணைவேந்தரான சிந்தியா பாண்டியன்(அதிமுக) அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருப்பதுடன், கூட்டணியும் பலமாக இருப்பதால்
இங்கு அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

இப்படிக்கு,
அமுதப்ரியன், இட்லிவடை டீம்.

அமுதப்ரியன் அவர்களுக்கு இட்லிவடையின் நன்றிகள். மற்றவர்களும் இதே போல் எழுதி அனுப்புவர்கள் என்று நம்புகிறேன் :-)

12 Comments:

Anonymous said...

திரு அமுதப்ப்ரியன்!
மிகவும் நன்றாக அலசி எழுதப்பட்ட கட்டுரை!! இந்த மாவட்டத்தின் பல கிராமங்களின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியதருக்கு பாராட்டுக்கள். தேர்தலின் முடிவு எப்படியோ, இங்கு சுட்டிக்காட்டிய குறைகள் களையப்பட்டால் சந்தோஷம்!
உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

யோசிப்பவர் said...

அதிகம் திட்டுபவர்கள் விட்ஜட்டில் அனானிமஸும், இட்லிவடையும் தேவையா?

IdlyVadai said...

//அதிகம் திட்டுபவர்கள் விட்ஜட்டில் அனானிமஸும், இட்லிவடையும் தேவையா?//

அதை எப்படி எடுப்பது என்று தெரிந்தால் நான் என்றோ எடுத்திருப்பேன் :-)

Anonymous said...

அந்த widget-ஐ மொத்தமா தூக்கிடலாமே! மானஸ்தனின் மானம் போறது! :-D :-)

(ரொம்ப வெட்டியா, regular-aa வந்து திட்டிகொண்டு இருக்கேன்னு ஊருக்கே வெளிச்சம் போட்டுக்காட்டறது!)

:-(

சரவணகுமரன் said...

சின்சியரா உழைத்து எழுதியிருக்கீங்க, அமுதபிரியன்... வாழ்த்துக்கள்...

Baski said...

நல்ல கோர்வையான அலசல். நுணுக்கமான விசயங்களை/பிரச்சனைகளை, தெளிவாக சொல்லிருக்கிறார்.

நன்றி.

Krish said...

Well Done! What about DMDK?

மடல்காரன்_MadalKaran said...

கலக்கலான அலசி, ஆராய்ந்த பதிவு.

அன்புடன், மடல்காரன்.

Inba said...

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
யார் வெற்றி பெற்றாலும்
இதுவரை நடக்காதவை எல்லாம் இனிமேலும், என்னாளும்
நடக்காது

அப்படி நடந்து,முன்னேறிவிட்டால்
ஜாதி அரசியலை நம்பிருக்கும்
தமிழக அரசியல்வாதிகள் எல்லாரும்
தலையில் துண்டுபோட்டுகிட்டு
போகவேண்டியதுதான்

Anonymous said...

super - நல்ல ஆராய்ச்சி. Quantitative மற்றும் qualitative கட்டுரை.

தூத்துக்குடி தமிழன் said...

பல வருடங்களாக கெட்டப்பட்டு வரும் தூத்துக்குடி மேம்பாலம் குறித்து கூறியிருக்கலாமே தலைவா................!!!!

prakash said...

பிரியன் , கோவில்பட்டி முழுவதும் CPI கையில் இல்லை. CPI-CPM மோதல்கள் , சரியான வேட்பாளரை நிறுத்தாது போன்ற பல குறைகள். கோவில்பட்டி சுவர்க்க பூமி அல்ல , உள்ளத்திலே குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள இடம். ஆதிக்க சாதியினர் வ்யாபரத்தில் கை ஓங்கி இருப்பதும் , தொன்னூறுகளில் எட்டயபுரம் போன்ற இடங்களில் தலித்துகளுக்கு எதிராக ஏவி விடப்பட்ட வன்முறையும் ஏராளம். ( Courtesy : Dalits in dravidian land , S,Viswanathan). இப்பொழுது ராதாகிருஷ்ணன் எளிமையானவராக உள்ளதால் , கோவில்பட்டி ரத்தத்தின் ரத்தங்கள் வசம் தான். எட்டயபுரத்தில் இன்னும் கணிசமான இடதுசாரி ஓட்டுகள் உள்ளன. ஓட்டபிடாரத்தை பொறுத்தவரை அடிப்படை மருத்தவ வசதிகள் இல்லாதது பெரும் குறை. தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

You have done an in-depth analysis , ofcourse!