பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 07, 2009

விஜயகாந்த் - கடவுள் : கூட்டணி சந்திப்பு

மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என்று கேப்டன் விஜயகாந்த் கூறியிருந்ததை இணையம் மூலம் அறிந்த கடவுள் அவரைத் தேடி பூலோகம் வருகிறார்.

கேப்டனை சந்திக்க விருத்தாசலம் செல்கிறார். அவரைப் பல வருடங்களாக அங்கு காணவில்லை என அறிந்ததும், கேப்டனைத் தேடி சாலிகிராமத்தில் அமைந்துள்ள அவர் வீட்டிற்குச் செல்கிறார்.

வாசலில் வாட்ச்மேனிடம்..

கடவுள் : நீங்க தான் கேப்டனா?

வாட்ச்மேன் : யார் நீங்க? பார்க்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மாதிரியே இருக்கீங்க.... ஏ.வி.எம் ஸ்டுடியோ அந்த பக்கமா இருக்கு.

கடவுள்: நான் அழகப்பன் இல்லை எல்லோருக்கும் அப்பன்.

வா.மேன்: பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி வேஷம் போடுவாங்க, நீ என்ன வடிவேலு மாதிரி வேஷம் போட்டுகிட்டு இங்கேயே வரிங்களா என்ன தில்லு?

கடவுள்: உங்களுக்கு சொன்னால் புரியாது நான் கேப்டனை பார்க்க வேண்டும்.

வா.மேன்: எந்தக் கட்சி? கூட்டணியெல்லாம் கிடையாது. அதெல்லாம் பேசி முடிச்சாச்சு. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி. போங்க.. போங்க..

கடவுள் : ஆ.. அதே வாக்கியம். மகா வாக்கியம். இந்த வாக்கியத்திற்குச் சொந்தமானவரைத்தான் தேடி இங்கு வந்தேன். அது சரி, கூட்டணிதான் பேசி முடிப்பார்கள் எனக் கேள்வி பட்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றும் கூடவா பேசி முடிப்பார்கள்?

வா.மே: (மனதிற்குள்)அய்யய்யோ.. இவர் நிலைமை புரியாம பேசுறாரே.. கூட்டணி வெக்காம இருக்கிறதுக்கு முதலாளி பொட்டி வாங்கிட்டருங்கிற புரளியை நம்பி விசாரிக்க வந்த ஆபீசரா இருப்பாரோ!

வாட்ச்மேனை உற்று நோக்கியவாரே..

கடவுள் : நான் யார் என்பது இருக்கட்டும். நீ யார்? இங்கு கேப்டன் என்பவர் வசிக்கிறாரா?

வா.மே: (நாம் மனதிற்குள் யோசிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது, சந்திரமுகி சரவணனோ என்று பயந்தபடி) ஐயா.. நான் தான் வாட்ச்மேன்.. அதாவது இந்த வீட்டின் காவலாளி.

கடவுள்: ஓ.. நீர்தான் இந்த வீட்டில் உள்ளவர்களைக் காப்பவரா? அப்படி என்றால் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நீர்தான் கடவுளோ?

வா.மே: அய்யய்யோ சாமி. என் பொழைப்புல மண்ணை அள்ளி போட்டுறாதீங்க. நான் இங்கே வேலை பார்க்குறவன். அவ்ளோதான். நீங்க வேணும்னா உள்ள போங்க சாமி.

வீட்டிற்குள் நுழைகிறார் கடவுள்..

அவரைப் பார்த்தவுடன், கேப்டன் எழுந்து நிற்கிறார்.

விஜயகாந்த் : (கும்பிட்டபடி) வணக்கம்.

கடவுள் : ஆ.. நீ ஞானி! என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டாயே!!

விஜயகாந்த் : நான் ஞாநி இல்லை.. ஓ போடுறவர் நான் இல்லை. அறிவாலயத்தில் இருந்து அவரைத் தூக்கிட்டு வர உங்களை அனுப்பியிருக்கிறார்களா? வீடு மாறி வந்துவிட்டீர்கள்!!

கடவுள் : சே..சே.. அடிப்பது என் தொழில் இல்லை. அரவணைப்பது மட்டுமே என் தொழில். ‘நான் கடவுள்’. நீ என்னைப் பார்த்து வணங்கியவுடன், என்னை அடையாளம் கண்டு கொண்டாயே என்பதற்காக உன்னை ‘ஞானி’ என விளித்தேன்.

விஜய : என்னது! கடவுளா?

கடவுள் : ஆம்.

விஜய : வாங்க சாமி. உட்காருங்கள். இது தேர்தல் நேரம். அதனால் யாரைப் பார்த்தாலும் கும்பிடுவோம். தவறாக நினைத்துவிட்டீர்கள்!

கடவுள் : எவரையும் வணங்குவீரா?

விஜய : ஆமாம் சாமி. அதற்குப் பெயர்தான் ‘வாக்கு சேகரிப்பு’.

கடவுள் : இருக்கட்டும். அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. உமது இயற்பெயர்?

விஜய : விஜயராஜ் சாமி. மக்கள் என்னை கேப்டன் என்று அழைப்பார்கள்.

கடவுள் : ஓ.. கேப்டன்! சென்ற வாரம் கூட சில பத்திரிகைகளில் கேப்டன் கங்குலி என்பவரின் பல் பிடுங்கப்பட்டதைப் படித்தேனே! அவரா நீர்?

விஜய : அது கிரிக்கெட் கேப்டன் கங்குலி. பிரபுதேவா ஒருவருக்கு தொப்புளில் ஆம்லெட் போட்டாரே.. நக்மா.. அந்த நக்மாவுடைய முன்னாள் காதலர். நான் மக்களுக்கு கேப்டன். நான் ஆம்லெட் போட மாட்டேன். பம்பரம்தான் விடுவேன்.

கடவுள்: பம்பரம் ? பம்பரம் விட வைகோவிடம் பர்மிஷன் வாங்கினீரா ?

விஜய: சாமி அது அரசியல் பம்பரம். நான் சொல்லுவது சினிமா பம்பரம்.

கடவுள் : ஓ.. ஆம்லெட்.. பம்பரம்.. இதெற்கெல்லாம் கூட தொப்புள் பயன்படுகிறதா? அடக் கண்றாவியே..

விஜய : ஆமாம் சாமி. உங்களுக்கு ஆம்லெட், பம்பரமெலாம் போட மாட்டோம். நெத்தியில் நாமம்தான். ஸ்ரீரங்கத்தில் போய் பாருங்கள்..

கடவுள் : அது சரி.. கேப்டன்? அது ஆங்கிலச் சொல்தானே.. கேப்டன் என்றால் அணித் தலைவன் என்றுதானே பொருள்? நீர் எந்த அணிக்குத் தலைவன்?

விஜய : நான் எந்த அணியிலும் இல்லாதவன். தனியே நிற்பவன். மக்களுடனும், கடவுளுடனும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி.

கடவுள் : என்னது கடவுளுடனா? என்னோடு எப்போது கூட்டணி சேர்ந்தீர்கள் கேப்டன்? என்னிடம் நீங்கள் கேட்கவே இல்லையே?

விஜய : அதனால்தான் உங்களோடு கூட்டணி. உங்களிடம் மட்டும்தான் கேட்கத் தேவையேயில்லை. ஊரில் எத்தனையோ பேர் உங்கள் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வருகிறார்கள். சிலர் தன்னைக் கடவுளின் தூதன் என்கிற ரேஞ்சுக்கு சொல்லிக்கொள்கிறார்கள். சிலர் “நான் கடவுள்” என்று தன்னையே கடவுளாகச் சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் வீரமாக உங்களையே இல்லை என்று சொல்லி Money சேர்க்கிறார்கள். யாரைக் கேட்க வேண்டும்? நீங்களும், பொதுமக்களும்தான் இப்படி யார் எதைச் சொன்னாலும் ரியாக்சன் காண்பிக்காமல், பங்கு கேட்காமல் கூட்டணியில் இருப்பீர்கள். அதனாலதான் உங்களோடு கூட்டணி.

கடவுள் : அடப்பாவிகளா.. பூமியில் இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றனவா?

விஜய : ஆங்.. இன்னும் நிறைய நடக்கிறது சாமி. கூட்டணி வைத்தால் ஒரு ரேட்டு. கூட்டணி வைக்காவிட்டால் ஒரு ரேட்டு. அவ்வளவு ஏன், தனியாக நிற்பதற்குக் கூட கோடி கோடியாகக் காசு தருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடவுள் : அபசாரம்.. அபசாரம்.. இன்னும் என்னென்ன கண்றாவிகள் நடக்கின்றன?

விஜய : அட.. அதை விடுங்கள் சாமி.. எல்லாவற்றையும் கேட்டீர்கள் என்றால் என்னோடு கூட்டணி வைக்க நீங்களும் காசு கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

கடவுள் : கவலைப்படாதீர்கள் கேப்டன். நான் அப்படிப்பட்டவன் கிடையாது.

விஜய : இப்படித்தான் சில மக்கள் என்னைப் பத்தியும் நினைக்கிறார்கள் சாமி. அங்கேதான் உங்களுடைய அருள் எனக்கு இருக்கிறது. நீங்கள் என்னுடன் இருக்கும்வரை யாரும் என்னை அசைக்க முடியாது சாமி.

கடவுள் : மானிடா.. அப்படியெல்லாம் ஆணவத்தில் பேசக் கூடாது. அடக்கம் அவசியம்.

விஜய : அய்யய்யோ சாமி.. அப்படிச் சொல்லாதீர்கள். என்னுடைய பலமே வாய்க்கு வந்தபடி ஒருவர் விடாமல் எல்லோரையும் திட்டுவதுதான் சாமி.

கடவுள் : அது தவறு மானிடா. மற்றவர்களைப் பழிக்கும் உரிமையை நான் எந்த மானிடனுக்கும் கொடுக்கவில்லை.

விஜய : (மனதுக்குள்)உங்ககிட்ட கேட்டா நான் உங்களோட கூட்டணி சேர்ந்தேன்.. இதையும் கேட்கிறதுக்கு.

கடவுள் : நீ இவ்வாறு நினைப்பதும் தவறு மானிடா.. என்னையே அவமதிக்கிறாயே.. என்ன செய்வது? நான் சொல்லி யார் கேட்கிறீர்கள்?

விஜய : சாமி.. மனதிற்குள் நினைப்பதை எல்லாம் கூட கண்டுபிடித்துவிடுகிறீர்களே! நல்ல வேளை.. மக்களுக்கு இந்த மாதிரியான சக்தியில்லை. இருந்திருந்தால் நம்கதி அதோகதி தான்.

கடவுள் : என்னது நம்கதியா? ஏன் மானிடா.. என்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறாய்?

விஜய : பின்னே.. சேர்க்காவிட்டால் எப்படி? நாம் இரண்டுபேரும் ஒரே கூட்டணிதானே!

கடவுள் : இல்லை மானிடா.. இவ்வளவையும் கேட்ட பிறகு மனிதர்களுடன் கூட்டணி வைக்க நான் தயார் இல்லை. இங்கே தேர்தலை நடத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார்?

விஜய : அந்த அதிகாரம் படைத்த இடத்தின் பெயர் “தேர்தல் கமிசன்”. அது தில்லியில் இருக்கிறது சாமி. ஏன் கேட்கறீங்க?

கடவுள் : நான் அங்கே சென்று முறையிடப் போகிறேன் மானிடா. எந்த மானிடனுடனும் எனக்குக் கூட்டணியில்லை என முறையிடப் போகிறேன்.

விஜய : ஹா.. ஹா.. அது நடக்காது சாமி! தனியாக நிற்பதற்கு ஒரு ரேட்டு என்று சொன்னேனே.. அதில் கோடிகளோடு சேர்த்து, கட்சிச் சின்னம், நவீன பலம் எல்லாமே அடக்கம். போங்கள், உங்களால் எல்லாம் இதில் இனி எதுவும் செய்யமுடியாது. வேண்டுமென்றால் முதலமைச்சரானால் அறநிலையத்துறை வேண்டுமென்றால் தருகிறேன். ஆமாம், நீங்கள் எந்த மதம் சாமி? சரி எதாகவும் இருந்துவிட்டுப் போங்கள். இந்துமதக் கோயில்களுக்கு எந்த மதக் கடவுளும் என்றில்லை, கடவுளே இல்லை என்று சொல்பவர்கள்கூட அதிகாரிகளாகவும் மந்திரியாகவும் இருக்கலாம். தமில்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் 637. கட்டுப்பாட்டில் இருந்தும் கட்டுப்படாத கோயில்கள் 274. கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் கட்டுப்பட வேண்டியவர்களுக்குக் கட்டுப்பட்டு....

கடவுள்: என் பெயரை சொல்லி என்னையே முட்டாள் ஆக்கிவிட்டார்களே

விஜயகாந்த்: ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!. இப்ப நீங்க முட்டாள், மக்களும் முட்டாள் அதனால் தான் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்... ஆங்

கடவுள் விட்டு விடுதலையாகி தலைதெறிக்க ஓடுகிறார்.

- மிளகாய் பொடி

14 Comments:

Anonymous said...

காரமே இல்ல மிஸ்டர் மொளகாப்பொடி! :-( காமடியும் கொஞ்சம் கம்மிதான்! :-(
"very disappointing"..

ரெண்டு கேள்வி.

(1) தனியா நின்னு ஓட்ட பிரிக்க எவ்ளோவு கோடி??

(2) கடைசி ரெண்டு லைன் "பஞ்ச்" சூப்பர்!
இப்போ "கடவுள்" ஓடி எஸ்கேப் ஆயிட்டருன்னு சொல்றீங்க கடைசியில. அப்போ "மக்கள்"? மொத்ததுல கேப்டன் கதி என்ன? அதையும் கொஞ்சம் விலாவாரியா போட்டுருங்க!

சந்திப்பு said...

கலக்கிட்டீங்க இட்லி வடை,

Anonymous said...

God has not performed his duty. He does not know what is happening in Earth.

mazhai said...

ம்ம் .... என்ன பண்ணுறது அவங்க தெளிவாதான் இருக்காங்க (சம்பாதிக்கிறதுல) ... கடவுள் பார்த்துப்பார்

R.Gopi said...

"தல" கலக்கிடீங்க .............

தொப்புள், பம்பரம், ஆம்லெட் மேட்டர் எல்லாம் சூப்பர்.

எல்லாம் ஓகே.

முடிவு தெரியலியே??

கீ - வென் said...

அய்யய்யோ..நமுத்து போன பட்டாசு மாதிரி..மொக்கையா இருக்கே..இ.வ...

சாரி...கிச்சு கிச்சு மூடினாலும் சிரிப்பு வரல்ல...உங்க ஏர்டேல் சூப்பர் சிங்கர் தான் பெஸ்ட்..

Anonymous said...

நவீன பலத்துக்கு என்ன ரேட்டு ?

M Arunachalam said...

IV,

FUNtastic post. If God can't do anything with our politicians, who can be with us or save us?

I thought Nagma's "Ex" was Sharath Kumar. Don't create a new controversy between the two "big" parties of TN as to who "owned" her earlier.

Pl keep on rocking.

Anonymous said...

ராமதாஸ் மாதிரி அடிக்கடி கூட்டணி மாறினாலும் பிடிக்காது! திருமா, வைக்கோ மாதிரி மானம் கெட்டு கூட்டணி வைத்தாலும் பிடிக்காது.
ஒருத்தன் கூட்டணி வேண்டம் தனிய நின்னாலும் பிடிக்காது! என்ன தாய பண்றது?

Baski said...

I am not a blind supporter of any party. I think Captain is innocent.
He should be given a fair chance.

May be you guys appreciate if he would have joined BJP or ADMK.

This election is not going to be like Tirumangalam., and will give fair chance to show his % of votes.

I wish him a good luck,
And like to see his party getting good %% of votes.

That will encourage him to stand alone in state election as well...

And let him make the state as Non Corrupt State.

ஹரன்பிரசன்னா said...

பெரிய அறுவையா இருக்கு!

Anonymous said...

வா.மேன்: எந்தக் கட்சி? கூட்டணியெல்லாம் கிடையாது. அதெல்லாம் பேசி முடிச்சாச்சு. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி. போங்க.. போங்க..

கடவுள் : ஆ.. அதே வாக்கியம். மகா வாக்கியம். இந்த வாக்கியத்திற்குச் சொந்தமானவரைத்தான் தேடி இங்கு வந்தேன். அது சரி, கூட்டணிதான் பேசி முடிப்பார்கள் எனக் கேள்வி பட்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றும் கூடவா பேசி முடிப்பார்கள்?

--- Excellent!
Cheers!
Raja

கும்மாச்சி said...

சூப்பர் கலக்கல். நல்ல கற்பனை. இட்லி வடை சும்மா தூள் கிளப்புரிங்க.

லவ்டேல் மேடி said...

நல்லாத்தான் இருக்குதுங்கோ தம்பி......!!!! இருந்தாலுமும் கொஞ்சம் மொக்கைய போட்டுருக்கீங்க......!!!!!