பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 21, 2009

மாற்றம்... ஏமாற்றம்... - தினமணி தலையங்கம்

மாற்றம்... ஏமாற்றம்... - தினமணி தலையங்கம்

இன்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி ஓய்வு பெறுகிறார். இந்தியா சந்தித்த 15 தேர்தல் ஆணையர்களில், தேர்தல்கள் நடைபெறும்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவது இதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. யாரைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அவர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தாரோ அவர் நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்க இருக்கிறார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் சம்பிரதாயப்படி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோபாலசுவாமி, தனது பரிந்துரை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட உடன் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று கூறி பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றி இருக்கிறார். அதேநேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதற்கான அதிகாரம் உண்டு என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோபாலசுவாமி கூறியிருக்கும் இன்னொரு கருத்து, தனிநபர் தேர்தல் ஆணையத்தைவிட, பல உறுப்பினர்கள் அடங்கிய ஆணையம்தான் நன்றாகச் செயல்பட முடியும் என்பது. இன்னும் பல பிரச்னைகளில் தனது செயல்பாடுகள் பற்றியும் கருத்துக் கூறியிருக்கும் கோபாலசுவாமியின் மூன்றாண்டுத் தலைமை முடிவடைகிறது. சில விஷயங்களில் துணிவுடனும், சில விஷயங்களில் கண்டும்காணாமலும் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற விமர்சனத்துடன் ஓய்வு பெறுகிறார் அவர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றிக் குறிப்பிடும்போது, சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் என்று அந்த ஆணையத்தின் சரித்திரம் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எத்தகையது, என்னென்ன என்பது டி .என். சேஷன் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகுதான் நாடு தெரிந்துகொண்டது. சேஷனின் கெடுபிடிகளும், தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஆளும் கட்சியால் தனது அதிகார பலத்தைப் பிரயோகிக்கவோ, பணபலம், அடியாள் பலம் உள்ள வேட்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தவோ தடையாக இருந்தன. சேஷனின் கெடுபிடிகளால் மிரண்டுபோன மத்திய அரசு, மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை உருவாக்கி, ஒருவருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற சிறப்பு அந்தஸ்தும், அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அதிகாரமும் வழங்க முடிவெடுத்தது. அன்று முதல் இன்று வரை, ஆளும் கட்சிக்குச் சாதகமான அதிகாரிகள் மட்டுமே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றாலும், ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மை மூலம் முடிவு செய்யப்படுவதால் ஓரளவுக்கு நியாயமாகவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். அதேநேரத்தில், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது என்பது ஆணையத்தின் செயல்பாடுகளில் நடுநிலைமை கடைப்பிடிக்கப்படுமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல், மத்திய தகவல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அரசியல் சட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைமை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பின் பரிந்துரைப்படி ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. 1993-ல் அன்றைய தேர்தல் கமிஷனர் டி .என். சேஷனின் அதிகார வரம்புக்குக் கடிவாளம்போட, மூன்று பேர் அடங்கிய தேர்தல் கமிஷனை அன்றைய நரசிம்மராவ் அரசு ஏற்படுத்தியபோது, மேலே குறிப்பிட்ட கோரிக்கையை, பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சியில் இருந்த பல மாநிலக் கட்சிகள் முன்வைத்தன. அன்று கோரிக்கை வைத்த கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தபோது, இதே கோரிக்கை காங்கிரஸ் தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தால் அதிகாரப் பகிர்வுக்கு யாரும் தயாராக இல்லை என்பதற்கு இதுவேகூட ஓர் உதாரணம். தவறான பின்னணிகள் உள்ள ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட இருக்கிறாரே, இதனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. சரியான மனிதர்கள் இருந்தபோது தவறுகள் நடக்கவில்லையா என்ன? அதுபோல, தவறான மனிதர்களின் தலைமையில் நல்லதுகூட நடக்கலாம். அதுவல்ல பிரச்னை. அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும். தேர்தல் ஆணையர்களின் தேர்வு, பாரபட்சமில்லாமல் நடத்தப்பட வேண்டும். தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தரப்பட வேண்டும். மாநில அரசின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாத அளவுக்கு அதிகாரம் பெற்ற அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட முடிய வேண்டும். கூடவே, தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த அடிப்படை மாற்றங்கள் ஏற்படாதவரை, தலைமைத் தேர்தல் ஆணையராக யார் இருந்தால்தான் என்ன? தேர்தல் ஒரு திருவிழாவாக இருக்குமே அன்றி பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது!

(நன்றி: தினமணி)

4 Comments:

கிரி said...

ஏங்க இட்லி வடை! பத்தி பிரித்து போடக்கூடாதா.. ரொம்ப சிரமமா இருக்கு படிக்க

Anonymous said...

@கிரி
usual-ஆ இட்லிவடை "பிரிச்சு"தான் போடுவாரு. இன்னிக்கு ஒரு "மாற்றம்" இருக்கட்டுமேன்னு இப்டி போட்டார். அது உங்களுக்கு "ஏமாற்றம்" ஆகிவிட்டதா?

பரவாயில்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க இந்த வாட்டி!
:-D :-)

Krish said...

இந்தியா - இத்தாலி இடையேயான உறவுகளை மேம்படுத்த சிறப்பான பங்காற்றியதற்காக, இத்தாலிய அரசின் மாஜினி விருதையும் பெற்றுள்ளார் நவீன் சாவ்லா.....Chawla --> Italy --> Sonia :-)

R.Gopi said...

//மானஸ்தன் said...
பரவாயில்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க இந்த வாட்டி!//

*************

கிரி, மானஸ்தன் சொல்றது ஒரு விதத்துல சரிதான். கோழி மொடமா இருந்தா என்ன, கொழம்பு ருசியா இல்லையான்னு கேக்கறாரு............

கொழம்பு ருசிதான்......... கொஞ்சம் ஏன், ரெம்பவே அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்.........