பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 23, 2009

வார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா


வார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா

2008 ஏப்ரலில் தொடங்கப்பட்ட வார்த்தை இதழ் ஒரு வருடத்தை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது. இன்றைய சிற்றிதழ் சூழலில் வார்த்தை இதழ் மிக முக்கியமான ஒன்றாகிறது. வார்த்தை இதழ் தொடங்கப்பட்டபோது, இலக்கிய உலகில் இருந்து எழுந்த முக்கியமான கேள்வி, வார்த்தை இதழின் நோக்கம் என்ன என்பதே. உண்மையில் ஓர் இதழின் நோக்கம் என்பதை ஒரே வரியில் சொல்லிவிடமுடியும் அல்லது பல பக்கங்களிலும் சொல்லிவிடமுடியாது என்று சொல்லலாம். வார்த்தை இதழ் தொடங்கப்பட்டபோது வெளிப்படையான ஆதரவும் மறைமுகமான பிரசாரமும் ஒருசேர நடந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பிரசாரங்கள் வார்த்தையின் லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தவையே. ஆனால் வார்த்தை இதழ் தனக்கென லட்சியமாகக் கொண்டது, எந்த ஒரு நாகரிகமான கருத்தும் இடம்பெறவேண்டும் என்பதையே. கூடவே எளிமையான தமிழில் ஆழமான கருத்துகள் என்பதுவும்.

எந்த ஒரு நாகரிகமான கருத்தும் இடம்பெறலாம் என்கிற நிலையை ஒரு சிற்றிதழ் எடுத்தால் அதன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவாக இருக்கமுடியும் என்பதை நாம் எளிதில் யூகித்துவிடலாம். இது புதியதும் அல்ல. சொல் புதிது இதழ் மீது என்னவிதமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது தெரிந்ததுதான். திண்ணை இணைய இதழ் போல எந்த ஒரு கருத்தையும் வெளியிட்ட ஒரு இன்னொரு இணைய இதழையோ, அச்சு இதழையோ நாம் பார்க்கமுடியாது. ஆனால், இன்றைய சூழலில், திண்ணை என்பது ஒரு அதிகாரப்பூர்வமான ஹிந்துத்துவ இணையத்தளமாகவே குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னுள்ள கருத்துகளைக் கட்டுடைத்துப் பார்த்தால், தொடர்ந்து ஒரே கருத்தைச் சொல்லிச் சாகடிக்கும் வெற்றுப் பிரசார உத்தியைத் தவிர, எந்த ஓர் உருப்படியான கருத்தையும் நாம் கண்டடைந்துவிடமுடியாது. ஹிந்துவத்தின் எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்தை திண்ணை முன்வைக்கிறது என்று கேட்டுப்பார்த்தால், குற்றம்சாட்டுபவர்கள் சொல்லும் பதில், திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவவாதிகளின் கருத்துகளைப் பற்றியதாகவே இருக்கும். அதே இணைய இதழில், அதி தீவிர, வேறெந்த அச்சு சிற்றிதழிலும் வெளிவரும் அதே அளவு உக்கிரத்துடன், ஹிந்துத்துவ எதிர்ப்புக் குரலும் ஒலித்திருப்பதை குற்றம் சுமத்துபவர்கள் வசதியாக மறந்திருப்பார்கள். காரணம் மிக எளிது. எவ்விதத்திலும் ஹிந்துத்துவவாதிகளின் குரல்கள் வெளிவர வாய்ப்பிருக்கக்கூடாது என்பதுவே அது.

திண்ணையின் மீதான குற்றச்சாட்டுகள் மிக வலுவாக வார்த்தையின் மீதும் இறங்கியிருக்கவேண்டும். ஆனால், திண்ணை போல, வார்த்தை என்பது பொது வெளி இல்லை என்பதாலும், பக்க, கால நிர்பந்தத்தாலும், அது அத்தனை உக்கிரமாக வார்த்தை இதழ் மீது இறங்கவில்லை. ஆனாலும் சிற்றிதழ்ச் சூழல் ‘ஹிந்துத்துவ இதழ்’ என்னும் பிரயோகத்தை பயன்படுத்தாமல் இல்லை. யமுனா ராஜேந்திரன் (கள்ள மௌனமும் இடி முழக்கமும் கட்டுரை, உயிர்மை அக்டோபர் 2008 இதழ்) தனது கட்டுரையில் சொல்கிறார், ‘தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் இந்துத்துவவாதிகள் இதுவரையிலும் ’வெளிப்படையாக’ தமது கலாசார அரசியலை முன்வைத்தது இல்லை. அதற்கான வெளியை, தமிழக அறிவுச் சூழல் மறுத்து வந்திருப்பது கலாசாரத் தளத்தில் மிகவும் ஆரோக்கியமானது’ என்கிறார். அப்சல் குரு போன்றவர்களின் குரல்கள் வெளிவந்த எந்த ஒரு சிற்றிதழையும் இவர் இதுவரை கேள்விகேட்டதில்லை. ஏனென்றால், சமூக மறுப்பும் அதற்கான வெளியும் முற்போக்குத்தனம் என்பதறிக. உண்மையில், ஹிந்துத்துவம் உட்பட, எந்த ஒரு குரலும் வெளிவர இடம் இருக்கக்கூடாது என்கிற சூழல் எப்படி அறிவுப்பூர்வமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கமுடியும் என்று புரியவில்லை. நிஜமான ஆரோக்கியமான சூழல் என்பது, சமூக பொதுப்புத்தியின் கருத்து உட்பட, அதன் மறுப்புக் கருத்துகள் வரையிலும், எதுவும் வெளிவரும் சூழல் உள்ள ஒன்றாகவே இருக்கமுடியும். ஆனால் யமுனாவின் கையறுநிலை கட்டுரை, வார்த்தை என்கிற ஓர் இதழ், எக்கருத்தையும் முன்வைக்கமுடியும் ஓர் ஊடக வெளியைக் கொண்டுவந்துவிட்டதே என்கிற ஆற்றாமையில் துவங்குகிறது ‘என்பது என் துணிபு!’ இந்த ஓர் உதாரணத்தை வைத்துக்கொண்டே, வார்த்தை எப்படி ஓர் துவக்கத்தை தந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இன்னொரு எடுத்துக்காட்டு, ‘உயிர் எழுத்து’ இதழில் ‘பொதிகைச் சித்தர்’ தன் பங்குக்கு, பிராமணியத்தில் தொடங்கி, எனி இந்தியனில் கலந்து வார்த்தையில் முடித்தது!

இவர்கள் பார்வையில் வார்த்தை செய்த தவறுகள் என்ன? முற்போக்கு என்ற போர்வையில், இந்தியத்துவம் அனைத்தையும் நிராகரிக்கும் ஒரு போக்கைத் தொடங்கி, அது மட்டுமே சரியானது என்கிற கருத்தை வலுவாக ஊன்றச் செய்துவிட்ட ஒரு சூழலில், வார்த்தை அதை அசைக்கப்பார்த்தது. இந்திய வெறுப்பு என்பதே முற்போக்குத்தனம் என்கிற கருத்தை அது உடைக்கப்பார்த்தது. முற்போக்கு எழுத்தாளர்கள் என்றறியப்பட்டவர்களின் எழுத்துகள் தீவிரமான மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர்கள் பிராமணர்கள் அல்லாத, இந்தியத்துவத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பது இன்னும் சிக்கலாகிப் போனது. கட்டுரைகள் என்றாலே புரியாத வாசிப்பு என்று பழக்கப்படுத்தி வைத்திருந்ததை, ’புரியும்படி எழுதுவது தவறல்ல’ என்கிற எண்ணத்தை வார்த்தை முன்வைத்தது இன்னும் சிக்கலானது. ஏனென்றால், இதுவரை வெளிவர இயலாத கருத்துகள், அதுவும் புரியும் வண்ணம் வெளிவருவதில் அதிக சிக்கல் உள்ளது இயல்புதானே! வார்த்தை அத்தகைய கட்டுரைகளை வெளியிட்டது. கூடவே அதன் மீதான மறுப்புக் கருத்துகளையும் அப்படியே வெளியிட்டது! ‘இட ஒதுக்கீடு’ குறித்த நான்கு விதமான கட்டுரைகள் ஒரே இதழில் வெளிவந்தன. அதன் மீதான எதிர்ப்பும் அடுத்த இதழிலேயே பதிவு செய்யப்பட்டது. அண்ணா, சீகன்பால்க் போன்ற பிம்பங்களின் மீதான விமர்சனங்கள், மிகத் தெளிவாகவும், ஆதாரத்தோடும் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிராகரிக்கவும் முடியாது, பதிலளிப்பதும் கடினம் என்னும்போது, ‘ஹிந்துத்துவ முத்திரை’ என்னும் எளிமையான ஆயுதம் தேவையாயிற்று. சென்னை புத்தகச் சந்தையில், வேறொரு இதழாசிரியரைப் பார்த்து ஒருவர் இப்படிச் சொன்னார். ‘தொடர்ந்து சிற்பமா அட்டையில போடறீங்க... நிச்சயம் ஹிந்துத்துவ இதழாத்தான் இருக்கும்.’ ஹிந்துத்துவத்துக்கும் தனக்கும் துளி சம்பந்தம் கூட இல்லை என்று நினைத்துக்கொண்டிந்த, அந்த இதழின் ஆசிரியர் ஒரு நிமிடமாவது ஆடிப்போயிருப்பார். இந்தியக் கலையின் உன்னதமான சிற்பங்களை நீங்கள் அட்டையில் வெளியிட்டால், ஹிந்துத்துவ இதழாக இல்லாமல் எப்படி அதைச் செய்ய முடியும் என்பது அந்த வாசகரின் எளிய புரிதல். இதன் வேர், இதுவரை வெளிவந்த சிற்றிதழ்கள் உருவாக்கியிருந்த சித்திரத்துள் அடங்கியிருக்கிறது.

உண்மையில், வார்த்தை தனது தலையங்கம் முழுவதிலும் விடாமல் ஹிந்துத்துவத்தைத் தாக்கியே எழுதிவந்துள்ளது. ஆனால் இதுவெல்லாம் போதுமானதாக இல்லை. ‘ராமன் நம்மவனும் இல்லை, நல்லவனும் இல்லை’ என்கிற ‘நடுநிலையான’ தலைப்பில் கட்டுரைப் போட்டிகளையெல்லாம் நடத்தத் தயாராக இல்லாத ஓர் இதழை என்னவென்று வேண்டும்? ஹிந்துத்துவ இதழ் என்றுதான்!

வார்த்தை இதழ் இந்த ஓராண்டு காலத்துக்குள் செய்தவை என்ன என்று பட்டியலிட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது மிக நல்ல ஒன்றாக இருந்திருக்கிறது. எளிமையான தமிழில் ஒரு சிற்றிதழ் வரமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. எந்தவிதமான கருத்தையும் நாகரிகமாக எழுதினால் அது ஓர் இதழில் நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய புதிய கவிஞர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும் இடம் தந்திருக்கிறது. இணையத்தில் மட்டுமே எழுதி வந்தவர்களுக்கு அச்சு இதழில் ஓர் இடத்தைத் தருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ’ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ இன்றைய சூழலில் இன்னொரு சிற்றிதழில் வருமா என்பது ஐயமே.

அதே போல் இந்த ஓராண்டில் வார்த்தை சறுக்கியது என்னவென்றும் பார்க்கலாம்.

கட்டுரைகளில் இருக்கும் தரம், வார்த்தையில் வெளிவரும் கதைகளிலும், கவிதைகளிலும் இல்லை என்றே சொல்லவேண்டும். எளிய தமிழில் கட்டுரைகள் என்று படிக்கும்போது திடீரென்று குழம்படிக்கும் தமிழவனின் கட்டுரை வருகிறது. துகாராமின் ஒரு கட்டுரையும், வெளி ரங்கராஜனின் கட்டுரைகளும் தமிழவனுக்கு இணையான தமிழில் இருந்தன. ஜெயகாந்தன் வார்த்தையையும் வார்த்தையின் வாசகர்களையும் ஓட ஓட துரத்தினார். ஜெயஸ்ரீயின் (ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அல்ல!) கட்டுரைகளைப் படித்தால், உடனே தூக்கம் வந்துவிடும். கே.எம். விஜயனின் தமிழைப் புரிந்துகொள்ள குட்டிக்கரணம் அடிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு இதழிலும் ஒரே மாதிரியான லே-அவுட் அலுப்பைத் தந்தது/தருகிறது. இந்த லே-அவுட் விஷயத்தில் வார்த்தை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஒரே மாதிரியான அட்டையும் லே அவுட்டும் அலுப்பைத் தரும். இதற்கு நிகழ்கால உதாரணங்கள் உயிர்மையும், தீராநதியும். இந்த விஷயத்தில் இன்றைய சிற்றிதழ் சூழலில், காலச்சுவடுடன் போட்டி போட ஆளில்லை என்றே கூற வேண்டும். அதேபோல், வார்த்தையின் இன்னொரு பலவீனம், எழுதப்போகும் 18 எழுத்தாளர்களுள், 9 பேர் யாராக இருக்கமுடியும் என்பது இதழ் வெளிவருவதற்கு முன்பே தெரிந்துவிடுவது. இது ஓராண்டுக்குத் தொடர்ந்தது! இந்த விஷயத்திலும் காலச்சுவடு எடுத்துக்கொள்ளும் கவனம் பாராட்டுக்குரியது. இன்னொரு விஷயம், நாவல் பகுதி. உடனடியாக நாவல் வெளிவராத நிலையில், இந்த நாவல் பகுதியின் பயன் என்னவென்று புரியவில்லை. நாவல் பகுதி எழுதப்பட்டு ரொம்ப நாளாக சும்மா கிடக்கிறது என்பதாலேயே அதற்கு வார்த்தை இடம் தந்துவிடக்கூடாது. அசோகமித்திரன் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய நாவலின் ஒரு பகுதியை இப்போது ஒரு வாசகன் ஏன் படிக்கவேண்டும்? இன்னுமொரு விஷயம், அரசியல் விமர்சனங்களில் தோழர்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் அளவுக்கு, ஹிந்துத்துவவாதிகள் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் அளவுக்கு ஏன் கருணாநிதியின் மீதும், திமுகவின் மீது வைக்கப்படுவதில்லை என்பது. அண்ணா பற்றிய கட்டுரை (திராவிட இயக்கத்தின் கோர்பச்சேவ், கோ.ராஜாராம்) இப்போது வந்துகொண்டிருக்கிறது. இதில் கருணாநிதியும் தொடர்ந்து விமர்சிக்கப்படலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்படி நிறைய குறைகளைக் கூற முடிந்தாலும், வார்த்தையின் இருப்பே அதன் வெற்றிக்கு அடையாளம். வார்த்தை இதழ் தொடர்ந்து வரவேண்டியது முக்கியம்.

இதுவரை வாசிக்காதவர்கள், வார்த்தையின் ஓராண்டு இதழ்களையும் படிக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம். எல்லா தலையங்கத்தைப் படிப்பதற்கும், தலையங்கம் நீங்கலாக எல்லாவற்றையும் படிப்பதற்கும் ஒரே கால அளவுதான் ஆகும். தலையங்கம் அந்த அளவுக்கு இரத்தினச் சுருக்கம்.


எனது ரசனையின் அடிப்படையில், ஓராண்டு வார்த்தையில் டாப் 5: (இந்தப் பட்டியலை இட்லிவடையின் தொல்லை தாங்காமல் தருகிறேன்!)

05. திராவிட இயக்கத்தின் கோர்ப்பச்சேவ் – கோ.ராஜாராம் – மார்ச், ஏப்ரல் 2009.
04. இசையின் விதையும் விதையின் இசையும் – சேதுபதி அருணாசலம் – ஜூலை 2008 இதழ்
03. உ.வே.சாவின் சமயம் கடந்த தமிழ் புத்தக விமர்சனம் – கோ.ந. முத்துக்குமார சுவாமி – ஜூலை 2008 இதழ்
02. சீகன்பால்க் – கிறித்துவ ஞானி, ஹிந்து அஞ்ஞானி – ஆகஸ்ட் 2008
01. காவலன் காவான் எனின் – நாஞ்சில் நாடன் – செப்டம்பர் 2008


ஹரன் பிரசன்னா ஏன் கமல் கவிதை பற்றி எதுவும் எழுதவில்லை ?


தொடர்புடைய பதிவு: "வார்த்தை" - 'ஜெஜெ' ன்னு இல்லை

16 Comments:

Anonymous said...

Kamal Hassan's poem published in 'Vaarthai' Apr 09

நண்பன்

கண்ணை எட்டாது வாய் வரை சிரிப்பு
கருவிழிக்குள்ளே ஆழ்ந்த சோகம்

ஜாதிக் குறிபோல் நெற்றியில் கவலை அவன்
சகித்த வலிகளின் வடுவாய் முகம்

நிதமும் காலை பல் துலக்கியபின்
நனைந்த முகத்துடன் எனையே பார்ப்பான்

சவரம் முடித்து முழுமுகம் தடவி
சிராய்ப்புக்குப் படிகாரம் தேய்ப்பான்

முகஞ்சுளித்து ஒரு பாட்டும் முனகி
மீசை நுனியை மெலிதாய்சீவி

தேமல் போல் ரஸம்கெட்ட பிரதி
தனதா என்று புருவஞ் சுளிப்பான்

வெகுநாள் பரிச்சயம் பேசா நட்பு
வேறாருடனும் இதுபோல் வருமோ.

(கமல் ஹாசன்)

http://www.eramurukan.in/tamil/magazines.php

குருபிரசாத் said...

பிரசன்னா,

ஒருமுடிவோடுதான் இருக்கீங்க போல? :-) உண்மையில் இந்திய தேசிய எதிர்ப்பு இல்லாத ஒரு சிற்றிதழைப் படிப்பதே ஒரு மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது.

தலையங்கங்கள் ஒரு சில சமயங்களைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில்லாம் மிகப்பெரிய அறுவையாக இருந்தது. இரா.முருகன் கட்டுரைகள் மிகப்பெரிய சோதனை... வார்த்தை இதழின் மற்ற கட்டுரைகளைப் படித்திருந்தாலே அவர் கட்டுரை (அ) பத்தி எழுதுவதை நிறுத்தியிருந்திருப்பார்.

வார்த்தை இதழ் எனக்கு அறிமுகப்படுத்திய இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் சுகா, சேதுபதி அருணாசலம். சுகாவின் கட்டுரைகள் எளிமையானவை. ஆனால் சுவாரசியமானவை. வெளிப்படையானவை. அல்ப அறிவுஜீவித்தனம் அவர் கட்டுரைகளில் இல்லை. சுகா ஒருவருடம் தொடர்ந்து எழுதினாலும், சேதுபதி எழுதுவதை ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை. மிக அருமையாக இசை பற்றிய கட்டுரைகளை எழுதினார். வார்த்தை கட்டுரைகளுக்குப் பின் இவர் சாருவின் ட்ரவுசரை சிந்தனைகளில் கழட்டியதைத்தான் படித்தேன். வேறெதுவும் சிறுபத்திரிகைகளில் எழுதுகிறாரா?

ஜெயகாந்தன் பக்கம்தான் வார்த்தையின் மிகப்பெரும் பலவீனம்! அதை விட்டொழித்து, கொஞ்சம் சிறிய தலையங்கம் எழுதினால் வார்த்தை ஒரு மிகச்சிறந்த சிற்றிதழாக மலரும் வாய்ப்புள்ளது.

வாழ்த்துக்கள்,
குருபிரசாத்

Erode Nagaraj... said...

wishes to vaarthai. I like uyirmmai than vaarthai.

Anonymous said...

கமலின் கவிதையையாவது மன்னித்துவிடலாம். தமிழச்சி தங்கபாண்டியன் என்கிற மூன்றாம் தர கழகப் பேச்சாளர் ஒருவரை அறிவுஜீவியாக காட்ட முயன்று, இரண்டு இதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட பக்கங்களை வீணடித்ததே வார்த்தையின் மாபெரும் சறுக்கல்.

Anonymous said...

//பிரசன்னா ஏன் கமல் கவிதை பற்றி எதுவும் எழுதவில்லை ?//

:)) அந்தக் கவிதை இன்னொரு(வரின்) இணையதளத்திலும் வெளியிடப்பட்டதினால் வந்ததினால் அடக்கி வாசிக்கிறாரோ என்னவோ. யாராவது ‘முருக’கிட்டு சண்டைக்கு வந்துட்டாங்கன்னா?

நல்லாவே விமர்சனம் செய்திருக்கிறார். வார்த்தை இணையத்தில் வாசிக்க கிடைக்கிறதா?

மானஸ்தன் said...

திரு. பிரசன்னாவிற்கு ஒரே ஒரு வார்த்தை:

"வாழ்த்துக்கள்".

Anonymous said...

'எழுதப்போகும் 18 எழுத்தாளர்களுள், 9 பேர் யாராக இருக்கமுடியும் என்பது இதழ் வெளிவருவதற்கு முன்பே தெரிந்துவிடுவது. இது ஓராண்டுக்குத் தொடர்ந்தது'

9 அல்ல 15/16 என்று சொல்லலாம்.
வார்த்தையின் பலவீனம் அதே ஆசாமிகள், மாதாமாதம் திண்ணையில் உட்கார்ந்து கதை
பேசுவது போல் இருப்பதுதான்.

ஹரன்பிரசன்னா said...

கமல் விஷயம் பற்றி எழுத நினைத்திருந்தேன், மறந்துவிட்டேன். இதுவரை வார்த்தை இதழில் எத்தனையோ கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். எல்லோருக்கும் கவிதைப் பக்கத்தில் மட்டுமே இடம். ஆனால் கமலுக்கு பிரத்யேகமான இடம். இதை வார்த்தை போன்ற இதழ் செய்திருக்கக்கூடாது. கமல் ஒன்றும் புனித பிம்பம் அல்ல, கவிதையில் அவருக்கென ஒரு தனியிடத்தை ஒதுக்கித் தர. தேவதேவனின் கவிதைகள் இப்படி தனியொரு இடத்தில் இடம்பெறவில்லை. விக்ரமாதியத்னின் கவிதை தனியிடத்தில் இடம்பெறவில்லை. இதே விஷயத்தை கமலின் கவிதை விஷயத்திலும் வார்த்தை கடைப்பிடித்திருக்கலாம்.

அடைப்படத்தில் கமல் படம் வந்தது தவறில்லை. தொடர்ந்து அட்டைப்படத்தில் பல்வேறு ஆளுமைகளுக்கு வார்த்தை இடம் கொடுத்து வந்திருக்கிறது.

R.Gopi said...

வாழ்த்துக்கள் பிரசன்னா

லவ்டேல் மேடி said...

அன்புத் ் தோழரே பிரசன்னா ,

உங்கள் ் படைப்பு மென்மேலும் ஓங்கி... " நீரும் " , " வார்த்தையும் " நீடூடி வாழ எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்........ ..." வாழ்க வளமுடன்........"

R.Gopi said...

நான் யார் என்பதை எப்போதும் நான் அறிய முடியாததால், அவ்வப்போது என்னை எனக்கு உணர்த்த, எனக்கு நானே எழுதிக்கொண்ட ஒரு பா..... இது படிப்பறியா பாமரனின் பா ......... படித்து மகிழுங்கள் - கமல தாசன்

***************

சித்தாந்தமும் வேதாந்தமும்
கூடி கை கோர்த்து
கும்மி அடிக்கும் நேரத்தில்
மொத்தமாக வை
பத்து முத்தமாக வை
அதையும் சத்தமாக வை

ஒரு துளி வெண்மை
உறைத்தது என் ஆண்மை
மலர்ந்தது பெண்மை
இதை கண்டோர்கெல்லாம்
புரிந்தது உண்மை

சாத்திரத்தின் சூத்திரத்தை
ஆத்திரம் அறியாது
ஆத்திரத்தின் சூத்திரத்தை
பாத்திரம் அறியாது
பாத்திரத்தின் சூத்திரத்தை
சொன்னாலும் புரியாது

நிரம்ப பேசும் உலகில்
ஊமைக்கு இல்லை மதிப்பு
ஊமைகள் உலவும் உலகில்
பேச்சாளிக்கு வரிவிதிப்பு

அமர் said...

காலச்சுவடு, தீராநதி மற்றும் உயிர்மை படிக்கிற என்னால் வார்த்தை இதழை படிக்கவே முடியவில்லை. இது வெளியீட்டார்களை காயப்படுத்த குறிப்பிடவில்லை. இன்னும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவிக்கிறேன்.
நன்றி

Boston Bala said...

---எந்தவிதமான கருத்தையும் நாகரிகமாக எழுதினால் அது ஓர் இதழில் நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.---இதற்கு....

---எழுதப்போகும் 18 எழுத்தாளர்களுள், 9 பேர் யாராக இருக்கமுடியும் என்பது இதழ் வெளிவருவதற்கு முன்பே தெரிந்துவிடுவது. இது ஓராண்டுக்குத் தொடர்ந்தது---

இது முரண்.

ஆஸ்தான எழுத்தாளர் இருப்பது உயிர்மையில் அயர்ச்சியை ஏற்படுத்துவது போல் வார்த்தையிலும் எதிர்ப்பார்ப்பின்மையை கூட்டியது. ஆனால், விஜயன் கட்டுரையின் வழக்குகளின் அறிமுகம் போன்ற துறை சார்ந்த, சினிமா/புத்தகம் ஆகிய வழக்கமான சிறு பத்திரிகை நிரப்பல்கள் இல்லாத பக்கங்கள் சுவாரசியம்.

கார்ட்டூன் கவனத்தைக் கவர்ந்தது. ஜெயஸ்ரீயின் பூனை கட்டுரை எனக்குப் பிடித்திருந்தது. முதல் ஆறு பக்கம் வேஸ்ட் என்றால் கடைசி ஆறு பக்கம் அதற்கு பிராயசித்தம்.

செய்திகளுக்கு கருத்து எழுத வேண்டுமே என்று வலிந்து எழுதியது போல் திணிக்கப்பட்ட தலையங்கத்திற்கு பதில் -- அனுபவ கட்டுரையாகவோ; டிவியில் அதிகம் அடிபடாத விஷயங்களின் அலசலாகவோ பிகே சிவகுமார் பத்திக் கட்டுரை எழுதியிருந்தால் முதற்பக்கத்தின் மதிப்பு கூடியிருக்கும்.

இதுவரை வெளியான இதழ்களின் உள்ளடக்கத்தை pie chart மாதிரி போட நினைத்திருந்தேன்.

மாதம் ஒரு பேட்டி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு தலைப்பு கவனிப்பு (ஸ்பெஷல் இதழ்) என்பதெல்லாம் சம்பிரதயாமான பத்திரிகை கலாச்சாரம்.

அவை தவிர்க்கப்பட்டாலும், திண்ணையில் ஏற்கனவே வெளியான க்ளாசிக்ஸை 'பழசு ஆனால் புதுசு' போல் ஏதாவது தலைப்பில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். திண்ணை விவாத களத்தைப் புதுப்பித்து அப்போதைய மின்னஞ்சல்களை புதுப்பித்து தொகுப்பார்களாக்கும் என்றும் ஆசைப்பட்டேன்.

பாவண்ணன் போன்ற சமகால ஜாம்பவான்களிடமிருந்து இன்னும் நிறைய உள்ளடக்கம் இடம்பெறும் என்று நினைத்தேன். யுவன் போண்றோர் எப்போதாவது எட்டிப்பார்த்தாலும், இந்தியாவில் இருந்து இயங்காத நிலை இதற்கு இடையூறாக இருந்தது என்பதை பிகேயெஸ் முதலாமாண்டு பூர்த்தி இதழில் குறிப்பிட்டிருந்தார். (இந்தத் தலையங்கம்தான் அவர் எழுதிய ஓராண்டில் மனநிறைவைக் கொடுத்தது)

வேறு ஜோலி பார்த்துக் கொண்டே மாதா மாதம் வெளியிடுவது பெரிய விஷயம். அதற்கும், நம்பிக்கை அளிக்கும் ஆரம்பத்திற்கும், மகிழ்ச்சி கலந்த வரவேற்பு சொல்லிடறேன்.

ஹரன்பிரசன்னா said...

//
---எந்தவிதமான கருத்தையும் நாகரிகமாக எழுதினால் அது ஓர் இதழில் நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.---இதற்கு....

---எழுதப்போகும் 18 எழுத்தாளர்களுள், 9 பேர் யாராக இருக்கமுடியும் என்பது இதழ் வெளிவருவதற்கு முன்பே தெரிந்துவிடுவது. இது ஓராண்டுக்குத் தொடர்ந்தது---

இது முரண்./

இதில் முரணொன்றும் இல்லை. முதல் விஷயம் கொள்கை. இரண்டாவது விஷயம் தொடர்ந்து ஒருவரே எழுதவேண்டுமா என்கிற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் சொல்ல வருவது, அவர்கள் எளிமையாக நாகரிகமாகத்தானே எழுதுகிறார்கள் என்று. அதாவது கருணாநிதி அழகிரியும் ஒரு திமுக தொண்டர்தானே, அவருக்கு ஏன் எம்பி சீட் கொடுக்கக்கூடாது என்பதுபோன்றது. :-) தொடர்ந்து அவர்கள் மட்டுமே எளிமையாகவும் நாகரிகமாவும் எழுதினார்கள் என்பதை நீங்கள் ஏற்றால் அதை நான் முரண் என்று சொல்லமாட்டேன், கூட ஒரு டு சேர்த்துக்கொள்வேன். நன்றி.

Anonymous said...

--அதை நான் முரண் என்று சொல்லமாட்டேன், கூட ஒரு டு சேர்த்துக்கொள்வேன்.--

இது சூப்பர். பாஸ்டன் பாலா பதிலுக்கு ஒரு சிரிப்பான போட்டுட்டு அடுத்த டாப் 10 போடப் போயிடுவார்னு எதிர்பார்க்கப் படுகிறது.

வெயிட்டிங் பார் பிகேஎஸ். வாங்க சீக்கிரம்.

Anonymous said...

திண்ணை இந்துத்துவ இதழாக அறியப்படுவதை பூசி மெழுக வேண்டாம் பிரசன்னா சார்.

நிறைய இந்துத்துவ வாதங்களுக்கான எதிர்ப்புக் கட்டுரைகள் நாகரீகமாக இருந்தும் அங்கே கண்டுக்கொள்ளப்படாமல் போயிருக்கின்றன என்பதே உண்மை. ராஜாராமின் மனசாட்சி அறியும்.