பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 08, 2009

நாகேஷ் - தொகுப்பு

நாகேஷ் - கமல் கட்டுரை, எதிர்நிச்சல், நீர்க்குமிழி சினிமா விமர்சனம்...

" உச்சம் தொட்ட மகா கலைஞன் " - கமல்ஹாசன்

வாலி அவர்கள் நாகேஷின் (கிட்டதட்ட) பால்ய நண்பர். அவர் என் ஆபீஸில் இருக்கும், எனக்கு ரத்த உறவில்லாத, நால்வரின் படங்களில் ஒன்றாய் இருந்த நாகேஷின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஏன்? என்று, பதில் தெரிந்தும் கேட்டார். பதிலும் சொன்னேன். அப்போது வாலி குரல் தழுதழுக்க நாகேஷைப் பற்றி சிலாகித்தார். " அவன் மகா கலைஞன். எதைச் செய்தாலும் உச்சம் தொடுவான். சீட்டாட்டம், டேபிள் சென்னிஸ், கவிதை, நடனம்....." என்று பாதி வாக்கியத்தில் வெறித்துப் பார்த்தபடி நிறுத்திவிட்டார் வாலி. அவர் நினைவில் அவரும், என் நினைவில் நானும் தனித்தனியே மிதந்தோம்.

நாகேஷ் என் வாழ்க்கையில் எப்போது கலந்தார் என்று நினைவு கூட இல்லை. இப்படி என்னைப் போல் பல கோடித் தமிழர்கள் உள்ளனர்.

நாகேஷ் அவர்களின் உடலைப் பார்த்துக் கண்ணீர்விட்ட கலைஞர்கள் பலரும் 10 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து அழவில்லை. நடுவில் அழுதபடியே, அவரை, அவர் நடித்த காட்சிகளைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்து, தமது அழுகைகள் சிரிப்பாக மாற, சங்கோஜப்பட்டு மெளனியாயினர்..... நான் உட்பட.

60, 70-களில் எல்லா கிராமங்களிலும், ஏன் எல்லா தமிழகத் தெருக்களிலும் நாகேஷ் பாணியில் பேசி களிப்பூட்டும் காமெடியன் ஒருவன் இருப்பான். அதேபோல் தோளைக் குலுக்கி, காலை சற்றே வளைத்துப் பின்னால் சாயும் அதீத அட்ரினலின் (Adreneline) பாயும் நாளங்களுடன் பல நூறு நாகேஷ்கள். எம்.ஜி.ஆர். போல் சட்டையை மடித்து விட்டுக் கொண்டவர், தொப்பி போட்டவர், சிவாஜி மாதிரி நடக்க முயல்பவர், நாகேஷ் மாதிரி கோமாளித்தனம் செய்ய முற்படுவர் என மூவர் தமிழகமெங்கும் வீதி தோறும் உலாவருவர், இன்றும்.

Most imited என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் நாகேஷ்.

நாகேஷின் ரசிகர் மன்றம் ரகசியமாக நடந்து வந்தது. அதன் விஸ்தீரணம் தமிழகத்தை விடப் பெரியது. இந்தியாவை விடக் கூடப் பெரியது. அது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர்களின், ரசிகர்களின் மனங்கள்.

வெளிப்படையாக விழா எடுத்து 'ஜே' போடாவிட்டாலும், மனதளவில் நாகே ஷூக்குக் கிடைத்த பாராட்டுக்கள் எந்த நடிகனையும் பொறாமைப்பட வைக்கும்.

சொந்த வீடு கட்டி வசதியாக வாழும் தமிழ், தெலுங்கு சினிமா காமெடியன்களின் வீட்டு அஸ்திவாரக் கல்லில் ரகசியமாய் நாகேஷின் பெயர் பொறித்து வைக்கப்பட்டிருக்கும்.

நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புக்களை ஏற்றிருக்கிறார்.

திரு. கே.பி.யுடன் என் சினிமா வாழ்க்கையை மறுபடி துவங்கியபோது, என் மாபெரும் மானசீக எதிரியாகவும் இருந்தவர் திரு நாகேஷ்.

திரு. கே.பி.யும் நாகே ஷூம் தற்காலிக மனஸ்தாபம் காரணமாகச் சேர்ந்து பணிபுரியாத இடைவெளியில் புகுந்து குளிர்காய்ந்த காமெடியன்களில் நானும் ஒருவன்.

அப்போதெல்லாம் மூச்சுக்கு மூச்சு திரு. கே.பி., நாகேஷின் புகழ்பாடுவதைக் கேட்டு என் வயிறு பற்றி எரியும். நான் சுமாராகச் செய்தால், "நாகே ஷா இருந்தா இந்த சீனை எப்பிடி பின்னி எடுத்திருப்பான்? சரி ஒ.கே. ஒன்னளவுக்கு நீ செஞ்சிருக்கே" என்பார்.

நான் நன்றாகச் செய்த காட்சிகளைப் பார்த்து, "கிட்டதட்ட நாகேஷ் மாதிரி இருக்கு. ஆனா, நாகேஷ் மாதிரி வராது" என்பார். இதை நாகேஷிடமே சொல்லிக் குமுறியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் நாகேஷ் இறந்துவிட்டதாக வந்த சேதி கேட்டு, மலர் வளையத்துடன் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அழுதுகொண்டே ஓடினேன். கூட என் உதவியாளர் சே ஷாத்ரி மலர் வளையம் சுமந்தபடி ஓடி வந்தார். நான் சற்று வேகமாக ஓடியதால் நாகேஷ் உடல் இருப்பதாகச் சொன்ன அறையை முதலில் அடைந்தேன். நாகேஷ் குற்றுயிருடன் இருந்தார். மரணச் சேதி வெறும் வதந்திதான் என்பதுணர்ந்து அந்த மலர்வளையத்தை மறைக்க நான் செய்த அசட்டு யுக்திகளை, நானே பிறகு நாகே ஷுக்கு நடித்துக் காட்ட, இருவரும் சிறித்தோம்.

"தசாவதாராம்" ஷூட்டிங்கில் கூட அதுபற்றி பேசிச்சிரித்தோம். சிரிப்போடு சிரிப்பாக நாகேஷ், "அந்த மலர்வளையத்தை என்ன செஞ்சே?" என்றார்.

"சந்தோஷமா தூக்கிப் போட்டுட்டேன் அண்ணா" என்றேன்.

"அய்யய்யோ, வச்சிருந்தா கூடிய விரைவில் பிரயோஜனப்பட்டிருக்குமே " என்றார்.

இருவருமே அந்த நகைச்சுவையை ரசிக்க முற்பட்டுத் தோல்வியடைந்தோம்

"தசாவதாரம்" கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு ஆஸ்பத்திரியிலிருந்து எழுந்து வந்து நடித்துக் கொடுத்துவிட்டு, " என் கடைசிப் படம் நல்ல படம். I am Honouredடா கமல் " என்று என்னை கெளரவித்த அந்த ஒல்லியான குண்டுராவ் மாதிரி இனி நிழல்தான் ஆடும்.

" Last of the mohicans " என்று ஒரு ஆங்கில நாவல் உண்டு. அந்தத் தலைப்புதான் நினைவு வருகிறது எனக்கு.

இவர் போல் இனி இல்லை.

நன்றி : குங்குமம், 12.02.2009சினிமா விமர்சனம்: நீர்க்குமிழி ( விகடன் : 14.11.1965 )
நர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட வீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர் கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திரு மணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.

சேகர் - சந்தர்

சேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்?

சந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத் திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

சேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா?

சந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில் அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களி டம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி?

சேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக் கிறார் கோபால கிருஷ்ணன்.

சந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.

சேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.


சினிமா விமர்சனம்: எதிர் நீச்சல் ( விக்டன் : 29.12.1968)
மாடிப்படி மாது பட்டு மாமி கிட்டு மாமா நாயர்...


இவர்களெல்லாம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபல மானவர்கள். 'எதிர் நீச்சல்' நாடகத்தின் மூலம் அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள், ஏதோ நம்முடன் நடமாடும் பாத்திரங்களோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட் டன.

நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், இப்போது திரை உலகில் வீர நடை போடுகின்றனர்.

மத்தியத் தரக் குடும்பத்தின் சூழலில் பின்னப்பட்ட இந்தக் கதையில், நவரசங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பல இடங்களில் சிரிக்கிறோம்; பல இடங்களில் கண்கலங்குகிறோம்.

மாடிப்படி மாதுவுக்காக, சபாபதி தன் வீட்டு வாசலிலேயே தட்டேந்தி நிற்கும் போதும், நாயர் தன் கடிகாரத்தை மாதுவின் கையில் கட்டி அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போதும் கலங்கும் நாம், கால் உடைந்து பரீட்சை எழுத முடியாமல் வீடு திரும்பிய மாதுவை, சபாபதி தோளில் தூக்கிக்கொண்டு போகும்போது, சோகத்தையும் மீறி ஒரு நிறைவைப் பெறுகிறோம்

இந்தப் படத்தில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

குறிப்பாக, நாகேஷ் மாதுவாகவே மாறிவிடுகிறார். நகைச் சுவையில் தேர்ந்த நடிகர்கள் எந்தப் பாத்திரத்தையும் சிறப்புற நடிக்கமுடியும் என்பதற்கு, ஒவ்வொரு காட்சியிலும் சான்று கூறிக் கொண்டிருக்கிறார் நாகேஷ்.

சுந்தரராஜன் அதே மிடுக்கு; அதே சிறப்பு!

கிட்டு மாமாவாக ஸ்ரீகாந்தும், பட்டு மாமியாக சௌகார் ஜானகி யும் வெளுத்து வாங்குகின்றனர். ஜானகிக்குத்தான் அந்த மடிசார் என்னமாகப் பொருந்துகிறது!

நாயர் வேஷத்தை முத்துராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அசல் நாயர்தான். அவர் பேசுவது மலை யாளம்தான்; ஆனால், எவ்வளவு சுலபமாகப் புரிகிறது, தெரியுமா?

பயித்தியக்காரப் பெண்ணாக வரும் ஜெயந்தி, பார்ப்பதற்கு அழ காக இருப்பதுடன், பளிச்சென்றும் பேசி நடித்திருக்கிறார். அசட்டு மாதுவை அவர் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே, அது ஒன்று போதும்!

படம் முழுவதும் வசனத்தில் நகைச்சுவையுடன் ஒரு கருத்தாழத் தையும் காண முடிகிறது. இது பால சந்தருக்குக் கை வந்த ஒரு கலை! சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார் இந்த இளம் டைரக் டர்.

நாடகங்கள் மூலம்தான் நல்ல நடிகர்கள் உருவாக முடியும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதே போல், சிறந்த நாடகங்கள் நல்ல திரைப் படங்களையும் உரு வாக்கும் என்பதற்கு, எதிர் நீச்சல் சிறந்ததோர் உதாரணம்!


இயக்குநர் கே.பாலசந்தர்:

''தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். 'அனுபவி ராஜா அனுபவி' படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் 'சர்வர் சுந்தரம்'. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார். 'சர்வர் சுந்தரம்' முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. 'நீர்க்குமிழி' படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கி னேன். நாகேஷூக்கும் எனக்கும் 'வெள்ளிவிழா'படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் 'தேங்காய்' சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. 'பூவா தலையா?' படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், 'இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு' என்றதும் செட்டில் எல் லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக். டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம். 'இனி நாகேஷ் இல்லை' என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. 'நீர்க்குமிழி' பாடலின் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!'' பாலசந்தரிடமிருந்து கனத்த பெருமூச்சு!

'ஆச்சி' மனோரமா:

''நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் 'நாகமலை அழகி'. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். 'அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி... நிச்சயம் பெரிய ஆளா வருவார்'னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல 'தெய்வத்தின் தெய்வம்' படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் 'நாகேஷ் டான்ஸ்'னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.

பாலசந்தர் சாரின் 'நவக்கிரகம்' படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, 'இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு'னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். 'ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்'னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, 'ஆனா நீங்க நடிச்ச 'வைத்தி', 'தருமி' கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது'ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.

ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக் குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ'ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!'' கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.


16 Comments:

Anonymous said...

nagesh digest changed to nagesh thogupu?

அறிவிலி said...

தருமி, மாது, மோகன், சுந்தரம்...
புன்னகை மன்னன் சார்லி சாப்ளின்,
ஏன் "மகளிர் மட்டும்" படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல்...
ஹ்ம்ம்ம்ம்.... அதெல்லாம் மறக்க முடியுமா?

ப்ரியா கதிரவன் said...

IV,
Reader's request.
பயாஸ்கோப் பலராமனை 'நான் கடவுள்' படத்திற்கு அனுப்பி, சீக்ரம் விமர்சனத்தை போடுங்க. ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

Babu Kumararasamy said...

http://www.tamilsforobama.com/Slow_Genocide.html

http://www.tamilsforobama.com/sign/usersign.html

if you can please sign in

Anonymous said...

Hi,

Can you please fix the thuglak cartoon? It has always been a problem.

Anonymous said...

Thank you sir.
Thanks for the wonderful homage to our beloved Nagesh.He will live forever in the mindes of people.
- UK Tamizhan.

Anonymous said...

கமலின் அஞ்சலிக் கட்டுரை உண்மையாக இருக்கிறது.

அவரின் நடிப்புத்திறமையை கடைசியாக யாருமே பயன்படுத்தவில்லை என்பதுதான் கசப்பான நிஜம்.

Unknown said...

கொழுஞ்சிவாடி டு சென்னை (குண்டுராவ்) -
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி (நாகேஷ்)

Anonymous said...

HI IV,
Off topic i am pasting this article which has come in cracked.com.


Who Was He?
Yogendra Singh Yadav was a member of an Indian grenadier battalion during a conflict with Pakistan in 1999. Their mission was to climb "Tiger Hill" (actually a big-ass mountain), and neutralize the three enemy bunkers at the top. Unfortunately, this meant climbing up a sheer hundred-foot cliff-face of solid ice. Since they didn't want to all climb up one at a time with ice-axes, they decided they'd send one guy up, and he'd fasten the ropes to the cliff as he went, so everyone else could climb up the sissy way. Yadav, being awesome, volunteered.
Half way up the icy cliff-o'-doom, enemies stationed on an adjacent mountain opened fire, shooting them with an RPG, then spraying assault-rifle fire all over the cliff. Half his squad was killed, including the commander, and the rest were scattered and disorganized. Yadav, in spite of being shot three times, kept climbing.

When he reached the top, one of the target bunkers opened fire on him with machine guns. Yadav ran toward the hail of bullets, pitched a grenade in the window and killed everyone inside. By this point the second bunker had a clear shot and opened fire, so he ran at them, taking bullets while he did, and killed the four heavily-armed men inside with his bare hands.
Meanwhile, the remainder of his squad was standing at the top of the cliff staring at him saying, "dude, holy shit!" They then all went and took the third bunker with little trouble.
For his gallantry and sheer ballsiness, he was awarded the Param Vir Chakra, India's highest military award. Unlike the Medal of Honor, the Param Vir Chakra is only given for "rarest of the rare gallantry which is beyond the call of duty and which in normal life is considered impossible to do." That's right, you actually have to break the laws of reality just to be eligible.

And we imagine the medal looks like two, brass testicles.
It has only been awarded 21 times, and two thirds of the people who earned it died in the process. It was initially reported that Yadav had as well, but it turns out that they just mistook him for someone less badass. Or they just figured no real human being could survive a broken leg, shattered arm and 10-15 fresh bullet holes in one sitting.

butterfly Surya said...

மாபெரும் நடிகன்.. அவருக்கு நிகர் அவரே.

பல செய்திகளை தேடி தேடி தொகுப்பது சூப்பர்.

வாழ்க இட்லி வடை..

Anonymous said...

Dear Idlyvadai,

வேறு ஒரு வலைப்பூவில் (http://raviswaminathan.blogspot.com) நான் இட்ட பின்னூட்டம் கீழே:

அன்புள்ள ரவி,

மிகவும் ரசிக்கத்தக்க சிறுகட்டுரை! நானும் சில படங்களை நினைத்துப் பார்த்தேன்!
1.' அபூர்வ ராகங்கள்': சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் ஓரு டாக்டர் இரவில் குடிகாரனாய் மாறுவதும், பழியைத் தன் கற்பனைத் தம்பியின் மீது போடுவதும் சூப்பர்!
2. அவர் முதல் முறை வில்லனாய் நடித்த கமலின் 'அபூர்வ சகோதரர்கள்'. வில்லனாய் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்களே என்று அவர் தயங்கியதாகவும் கமல் அவரை ஊக்குவித்ததாகவும் கேள்வி!
3. கோமலின் 'சாதிக்கொரு நீதி ' (ஒரிஜினல் நாடகம் ' செக்கு மாடுகள்') யில் வரும் புரட்சிக்கார சாஸ்திரிகள் பாத்திரம். 'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி ' என்ற பாரதியின் வரிகள் இவர் நடிப்பில் உண்மையிலேயே உயிர்த்தெழும்!
4. வேறு ஒரு படம், பெயர் நினைவில்லை. தன் மகனை குண்டர்களிடம் இழந்த அவர் அவர்களின் தலைவனை ஒரு மலைக்கோயிலின் படிகளில் எதிர் கொள்ளும்போது உடம்பெல்லாம் துடிப்பது பார்க்க வேண்டிய காட்சி. 'மஹாத்மா காந்தி கையில தடிக்கு பதிலா ஒரு AK 47 இருந்திருந்தா எதிராளி சலாம் போட்டுட்டுப் போயிருப்பாண்டா! '
5. மற்றும் சில கிரேசியின் படங்கள் : 'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்சதந்திரம்' போன்றவை
6. வேறு ஏதோ ஒரு பழைய Black & White படத்தில் வசிய மருந்தைத் தவறாக முழுங்கி விட்டுக் குமாரி சச்சுவின் அண்ணன் இவரை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த பிறகும் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு 'மாலுவைக் கொஞ்சம் ஜன்னலண்டை வரச்சொல்லு!' என்பது!
7. 'ஜீவனாம்சம்' படத்தில் வரும் விவாகரத்தில் நம்பிக்கையில்லாத ஒரு divorce லாயர்!
8. 'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு ' (படம் என்ன 'பத்தாம் பசலி' யா ?)
9. 'இரு கோடுகள்' இல் பாரதியார்!
10. கமலின் 'கடல் மீன்கள்'

சொல்லிக் கொண்டே போகலாம்

நன்றி!

சினிமா விரும்பி

deesuresh said...

நாகேஷ் என்ற இன்னொரு நடிக இமயம் மறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் ஆளுமை செய்த ஒரு சிறந்த நடிகரைத் தமிழ்ப் படவுலகம் இழந்துவிட்டது.

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் , பிணம் எனக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே மாறிய தன்மை நாகேஷுக்கு உரியது.

நடிப்புலக ஜாம்பவான்கள் கூட சற்று அசந்தால் நாகேஷ் தூக்கிச் சாப்பிட்டு விடுவார்.

உதாரணத்திற்கு தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி, டி.எஸ்.பாலையா, பத்மினி, நம்பியார், மனோரமா என அனைவரையும் மிக அநாயசமாக நடிப்பில் விஞ்சியிருப்பார் நாகேஷ்.

அவருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருது பெற்றுத் தந்த நம்மவரிலும், அந்தக் கடைசிக் காட்சியில் நடிக்காமல் நடித்திருப்பார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, தொடங்கி, ரஜினி, கமல் எனத் தொடர்ந்து, அஜீத் விஜய் என விரிந்து, இன்று ஜீவா, சிம்பு காலம் வரை நடித்துக் கொண்டிருந்தவரைக் காலம் கொண்டு சென்று விட்டது.

முக்கியமாகக் கமலின் பல படங்களில் அவருக்கு அமைந்த வேடங்கள் அருமையானவை.

அபூர்வ ச்கோதரர்கள் வில்லன், நம்மவர் பஞ்சவர்ணத்தலை ப்ரொபசர், அவ்வை சண்முகி மேக்கப் மேன் ஜோசப், மைக்கேல் மதன காமராஜன் அவிநாசி, மகளிர் மட்டும் பிணம், பஞ்ச தந்திரம் யூகிசேது மாமனார், வசூல் ராஜா எம்பிபிஎஸ் கமல் தந்தை எனப் பல பரிமாணங்களில் கமல் படங்களில் பரிமளித்தார்.

அவருடைய இடம் நிரப்பப் பட முடியாத ஒன்று.

ரிஷபன்Meena said...

தில்லானா மோகனாம்பாள் வைத்தி கேரக்டர்- ஐ எத்தனை லாவகமாக செய்திருப்பார். மதன்பூர் மஹாராஜாவிடம் குழைவதாகட்டும், சண்முகசுந்தரத்தை வேறுப்பேற்றுவதாகட்டும் எத்தனை அழகாக செய்திருப்பார். இப்போதைய பத்மஸ்ரீ அவர் அருகில் கூட வரமுடியாது.

Anonymous said...

Truly a very sad news..
Eventhough he was awsome in the more famous movies like Thriuvilaiyadal,KN..etc. my fav.is Soappu seeppu kannadi..
The opening train scenes are probably the most enjoyable scene in tamil comedy films..

Anonymous said...

http://mokkai-kavithaigal.blogspot.com/ for funny kavithai's

Varatharajan said...

nageshum kamalum nagamum sathiyum pola....uyrielathu ponatu kamalukum sari enakum sari uyir ponathu pole unargiren