பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 07, 2009

தமிழ் சிஃபி - தோ: 29.03.2000 - ம:06.02.2009

தமிழ் சிஃபி - தோ: 29.03.2000 - ம:06.02.2009 - நேசமுடன் வெங்கடேஷ்.
2000 மார்ச் 20ஆம் தேதி, திங்கட்கிழமை.
காலை 11.00 மணி

அண்ணா அறிவாலயத்துக்கு அருகே இருந்த சத்யம் இன்போவேஸ் நிறுவனத்தில் சவிதா கர்தம் என்ற பெண்மணியைச் சந்திக்கப் போனேன். அதற்கு முந்தைய சனிக்கிழமை அன்றுதான் கல்கி ஆசிரியர் சீதா ரவி என்னை இந்த நிறுவனத்துக்குப் போய் பார்க்கச் சொன்னார்கள்.

வாசலில் பெயர் எழுதிவிட்டு, மேலே போனேன். வாயில் காவலரிடம் பெயர் சொன்னேன். சில நிமிடங்களில் ஒரு அழகிய புன்னகையோடு பஞ்சாபி பெண் வந்தார். அவர்தான் என் வாழ்வில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தப் போகிறார், என் வளர்ச்சிகளுக்கு உந்துதலாக இருக்கப் போகிறார் என்று தெரியாமல், கைகுலுக்கினேன். உள்ளே தன் காபினுக்கு அழைத்துச் சென்றார்.

ஐந்து நிமிடங்கள் பேசியிருப்பேனோ? பத்து நிமிடங்கள் பேசியிருப்பேனோ? உடனே பிடித்துவிட்டது. என் ரெசியூமே பார்த்தவர் மனத்தில் நான் தான் சரியான நபர் என்று தோன்றியிருக்க வேண்டும்.

“சேரச் சொன்னால், எப்போது சேருவீர்கள்?

“உடனே”

“சரி, சேருங்கள்”

கையில் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வாங்கவில்லை, சம்பளம் என்னவென்று முடிவாகவில்லை. இருக்கை காட்டப்பட்டது. அந்தப் பெரிய ஹாலின் ஒரு மூலையில், ஒரு ஸ்கானர் இருந்தது. ஸ்கானரை ஒட்டி இருந்த கணினி எனக்கு வழங்கப்பட்டது. சவிதா கூட வந்து உட்கார வைத்தார். கூடவே ஜே சி என்று அழைக்கப்பட்ட ஜெயசந்திரன் வந்தார். கைகுலுக்கி, நான்தான் பிராஜக்ட் லீடர் என்றார்.

கொஞ்ச நேரத்தில் சவிதா, தமிழ் சேனல் சம்மந்தமான பைல்களைக் கொண்டு வந்து கொடுத்தார். படித்துவிட்டு வாருங்கள், மதிய உணவுக்குப் பின் உட்கார்ந்து பேசுவோம் என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒரு நிமிடம் என் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். வெண்மை பரவிய பெரிய ஹால். உடல் நடுக்கும் குளிர். வரிசை வரிசையாக கணினிகள். கணினி முன்னே பெண்கள், ஆண்கள். நான் உட்கார்ந்த வரிசையின் இறுதியில் வரிசையாக அறைகள். அந்த முனை அறைதான் நிறுவனத்தின் சி இ ஓ திரு ராமராஜ் அவர்களின் அறை என்று தெரியாது அப்போது.

சில நிமிடங்கள் ஆயிற்று. எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. நான் விரும்பினபடியே ஒரு ஆன்லைன் பத்திரிகையை நடத்தும் வேலை கிடைத்திருக்கிறது. வீட்டுக்கு டெலிபோன் செய்து என் மனைவியிடம் சொன்னேன். அவளால் நம்ப முடியவில்லை. அப்படியா அப்படியா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள்.

பைல்களைப் புரட்டத் தொடங்கினேன். சிறிது நேரத்துக்கெல்லாம் ஜேசி வந்து உங்கள் மெயில் ஐடி அனுப்பப்பட்டுள்ளது. அதை செட் பண்ணித் தருகிறேன் என்று உட்கார்ந்து லோட்டஸ் நோட்டஸை திறந்து என் ஐடியை அமைத்துத் தந்தார். திறந்தால், ஹெச்.ஆர்.டிப்பார்ட்மெண்டில் இருந்து வரவேற்பு மெயில்.

மதியம் மீண்டும் சவிதாவோடு சந்திப்பு. அப்புறம் இரவு பகல் பாராமல், பல ஆண்டுகள் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். சத்யம் ஆன்லைன் சைட்டுக்கு தமிழ் சைட் தொடங்கவேண்டும். ஏற்கனவே ஜேசி அதில் வேலை செய்துகொண்டு இருக்கிறார்.அடிப்படை கட்டமைப்பு செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் என்ன உள்ளடக்கம் போடவேண்டும், அதை எப்படிப் போடவேண்டும், எப்படி எழுதப்பட வேண்டும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள். மாலைக்குள் உள்ளடக்கத் திட்டத்தோடு வாருங்கள்.

அவ்வளவுதான். அடுத்த இரண்டு மணிநேரங்களில், ஜேசியுடன் உட்கார அடிப்படை கட்டமைப்பைக் காண்பித்தார். நான் என் வழக்கம்போல் காகிதம் எடுத்து, உள்ளடக்க திட்டம் போட்டேன். ஜேசியுடன் பேசினேன். இதையெல்லாம் கையில் எழுதக்கூடாது. மெயிலில் எழுது. சவிதாவுக்கு மெயில் அனுப்பு. கையில் ஒரு பிரிண்ட் அவுட் வைத்துக்கொள். இரவில் பேசிவிடுவோம்.

பேசினோம். பேசினோம். உற்சாகம் மிதக்கும் பேச்சு. அன்று முதல் ஒவ்வொரு இரவும் 12 அல்லது 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். கடகடவென உள்ளடக்கத் தயாரிப்பு, அதை சைட்டில் ஏற்றுவது, சரி பார்ப்பது, ஷோகேஸ் செய்வது.

இப்படி முதன் முதலில், செய்திகள், சினிமா, இலக்கியம் என்ற மூன்று பகுதிகளோடு சைட் வலையேறியது மார்ச் 29 விடிகாலை 4.30 மணி. அப்போது அந்த சைட்டுக்குப் பெயர், தமிழ். சத்யம்ஆன்லைன்.காம். பின்னர் மூன்றாண்டுகள் கழித்தே அது தமிழ். சிஃபி.காம் ஆயிற்று.

விடிகாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வண்டி ஓட்டிக்கொண்டு கிளம்புகிறேன். மவுண்ட் ரோடின் மஞ்சள் ஒளி மிகவும் குளிர்ச்சியாக உடலெங்கும் பரவுகிறது. தூக்கம் இல்லை. அசதி இல்லை. மனமெங்கும் உற்சாகம். மவுண்ட் ரோடில் கையை விட்டுவிட்டு பைக் ஓட்டுகிறேன். தன்னால், வாயில் விசில். வழியில் தென்படும் எல்லாரையும் நிறுத்தி, போய் என் சைட்டைப் பாருங்கள் என்று சொல்லவேண்டும் என்று உந்துதல். எப்போது வீடு வந்தேன், எப்படி வந்தேன் என்று நினைவே இல்லை.

அதுதான், இன்றைக்கு மூடுவிழா கண்ட தமிழ் சிஃபியில் ஜனன தினம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமை, ஒவ்வொரு கோணம், ஒவ்வொரு முயற்சி. என் சைட், மக்களின் பேராதரவுடன், அவர்களின் விருப்பங்களை நிறைவு செய்வது மாதிரி இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்குதான் நான் உழைத்தேன். சைட் வளர்ந்தது, கூடவே நானும் வளர்ந்தேன். கற்றுக்கொண்டேன்.

ஒரு சேனலை நிர்வகிக்க வந்த நான், 2005 செப்டம்பரில் வெளியேறும்போது, கிட்டத்தட்ட 18 சேனல்களை நிர்வாகம் செய்யும் நிர்வாகியாகி இருந்தேன். எடிட்டோரியலையும் பிசினஸ்ஸையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளும் உயரத்துக்கு வளர்ந்திருந்தேன். எனக்கு ரிப்போர்ட் செய்யும் ஒரு பெரிய எடிட்டோரியல் குழு உருவாகி இருந்தது. பல ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பையும் படைப்பு முயற்சிகளையும் முற்றிலும் வெட்டிக்கொண்டு, இந்த வலைதளத்துக்கு மட்டுமே உழைத்திருக்கிறேன். லீவு போட்டதே இல்லை. அம்மா திவசம் கூட, காலையில் முடித்துவிட்டு அலுவலகம் வந்து உட்கார்ந்துவிடுவேன்.

எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டுமில்லையா? இன்று மதியம், இனி இந்த சிஃபி மொழிகளை நடத்த முடியாது என்று நிறுவனம் முடிவு செய்து தமிழ் உட்பட அனைத்து மொழிகள் சேனல்களையும் மூடிவிட்டார்கள்.

இன்றும் என் மனத்தில் நிற்பவர்கள், இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட கல்கி ஆசிரியர் சீதா ரவி, வயலின் வித்வான் பூர்ணா சிவா (இப்போது பூர்ணா வைத்யநாதன்), சவிதா கர்தம்.

வலியும் வேதனையும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். என் வலி சொல்லமுடியாததாக இருக்கிறது.

நடிகை நமீதா சிறப்பிதழ் டிக்கர் டக்கரா ஓடிக்கொண்டிருக்கிறது. அதை படிக்கும் முன்பு எடுத்துவிட்டார்கள். என்ன செய்ய நாம் கொடுத்து அவ்வளவு தான் :-)

( நன்றி: நேசமுடன் வெங்கடேஷ் )

8 Comments:

மாயவரத்தான்.... said...

உமது கட்டுரையை விட (இ.வ. லிஸ்ட்டில வெங்கடேஷ் உண்டு தானே?) கடைசி மஞ்சள் வரி சூப்பரு!

Anonymous said...

tamil.sify.com is still alive, but I am not sure about Namitha's pics there :).

KaveriGanesh said...

யாருப்பா இந்த வெங்கடேஷ் ?

Krish said...

ரொம்ப கஷ்டமான விஷயம். ரெண்டு வருஷம் ஒரு கம்பனியில வேலை பாத்துட்டு, தீடீரன்று ஒரு நாள் resign பன்னபோவே ரொம்ப கஷ்டமா இருந்தது. இது ரொம்ப கொடுமை

அறிவிலி said...

ஏஏன்... நல்லாத்தானே போயிட்டிருந்துது. ஓ அவுரா நீயி?

ராமலிங்க ராஜு, நமீதா சிறப்பிதழை எல்லோரும் பார்த்துட்டாங்களான்னு விசாரிச்சுட்டு உண்மையை விளம்பியிருக்கலாம்.ஹ்ம்ம்ம் என்ன பண்றது.

அமுதப்ரியன் said...

நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன்....படித்து முடித்தவுடன் கண்ணீர் எட்டிப் பார்த்தது.....

--- அமுதப்ரியன்

கொடும்பாவி-Kodumpavi said...

வெங்கடேஷுக்கு வேலை போனது பற்றி வருத்தம். உமக்கு நமீதா படம்(கட்டுரையா?) வராதது பற்றி வருத்தம். அவரவர் வருத்தம் அவரவருக்கு. இந்த மாதிரி கொடுமைய யார்கிட்ட சொல்ல? கடவுள் புண்ணியத்துல வலைப்பதிவுன்னு ஒன்னு இருக்கு. இங்கன தான் இத கொட்ட முடியும்.
-கொடும்பாவி

Boston Bala said...

நன்றி!