பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 16, 2008

திருமங்கலம் காமெடிகள்

திருமங்கலத்தில் இடைத் தேர்தல் வர போகும் நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்க போகிறது என்று பல தலைவர்கள் நம்புகிறார்கள்.

அதிமுக பக்கம் கம்யூனிஸ்ட், திமுக பக்கம் (மீண்டும்) பாமக என்ற அரசியல் கணக்கு என்ன என்று பார்க்க எல்லோருக்கும் ஆவல் தான்.

நிச்சயம் கலைஞர் பயந்து போயிருக்கிறார் என்பது அவர் அறிக்கையிலிருந்து தெரிகிறது.


சில காமெடி பேச்சுக்கள்:
பெரியவர் காமெடி

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி என்ன சொல்லுகிறார். ஒரு பெரிய காவியத்தையே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் திங்கள் 26-ந் தேதியன்று முன்னாள் முதல்-அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டார்; காரசாரமாக என்னையும், கழக அரசையும் கண்டித்து!

அந்த அறிக்கையில் சாராம்சம் வருமாறு:- இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகு; வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களை மட்டும் கைது செய்தால் போதாது; அவர்களைப் போலவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் நான் ஒரு அறிக்கை வெளியிட்ட பிறகு திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப்போலவே இதே குற்றத்தை முதல்-அமைச்சர் கருணாநிதியும் செய்துள்ளார்- அதாவது ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் என்ற இரு தலைவர்கள் இறந்த போது அவர்களுக்காக இரங்கற்பா எழுதியுள்ளார். அதனால் அவரது ஆட்சியைக் கலைப்பதோடு, அவரையும் மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்று கோருகிறேன்''

இந்த அறிக்கை வெளிவந்து 50 நாட்கள் கூட முழுமையாக ஆகவில்லை. அம்மையாரின் கோரிக்கைப்படி கைது செய்யப்பட்டவர்களும் சில நாட்கள் சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார்கள். ஆனால் ஒன்று; வைகோவை ``பொடா'' சட்டத்தின்படி கைது செய்து ஓராண்டு காலம் சிறையில் பூட்டிப்போட்டதற்கு எந்தத் திருமங்கலம் நிகழ்ச்சியும் பேச்சும் காரணம் என்று சொல்லப்பட்டதோ; அந்தத் திருமங்கலத்தில் இப்போது இடைத்தேர்தல்!

இடைத்தேர்தலுக்கு காரணம், அந்தத் தொகுதியில் வென்று ம.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் வீற்றிருந்த வீர இளவரசன் திடீரென இளம்வயதில் மறைந்துவிட்டார் என்பதால்! அவரும் கூட வைகோவுடன் ``பொடா'' சட்டப்படி சிறைப்பட்டு தண்டனையை முழுமையாக அனுபவித்தவர்தான்!

அவர் மறைந்தார் எனக் கேள்வியுற்று நானும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன்- அது ஏடுகளில் வெளிவந்தது- அதை எப்படி வெளியிடலாம்; தமிழ்ச்செல்வனுக்கும், பால சிங்கத்துக்கும் இரங்கல் வெளியிட்டதே தவறு என்கிற போது- அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்ட வீர இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக; ``மத்திய அரசு, இந்தக் கருணாநிதியை கைது செய்து அவன் அரசையும் கலைக்க வேண்டும்'' என்று அம்மையார் கோரிக்கை அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக ஆத்திரப்படக்கூடிய- அல்லது குமுறக்கூடிய- உணர்வுள்ளவர்கள் ம.தி.மு.க. கூடாரத்தில்தான் யார் இருக்கிறார்கள்?

யசோதர காவியம் என்று சமண சமயக் கதையொன்று உண்டு. அதில் ``அமிர்தமிதி'' என்ற ஒரு ராணி- அவளை மணந்தவன், அந்த நாட்டு மன்னன் ``யசோதரன்'' என்பவன்- சுந்தரரூபன்- சுகுமாரன்-

ராணியின் மனமறிந்து மகிழ்ச்சி அளிக்கும் மன்னன்தான் அந்த யசோதரன். அத்தகைய செங்கோலேந்தியின் சிற்றின்பக் கூடாரத்தை அலங்கரிக்கக் கூடிய பாக்கியம் அந்தச் சிங்கார ராணி அமிர்தமிதிக்குக் கிடைத்திருந்தது. மன்னவனின் மஞ்சத்து மயில் என்றால் சாதாரணமா? தாதிகள் உண்டு; தயவு கேட்டு நிற்கப் பல சேவகர் உண்டு! தங்கம் கலந்த உணவை உண்டு- அங்கம் பூரிப்பு கொண்டு- காதல் மிஞ்சுவதே சேடி காவலனைக் கூப்பிட்டு வாடி! என்று அழைத்த கணமே அவர்கள் ஓடி, ஆடிப்பாடி அரசனை அழைத்து வருவர்.

ஆனைமேல் அம்பாரியா? அணி தேர்ச்சவாரியா? பூனைரோமத்தால் மிதியடியா? புலிப்பாலா! புரவிக் கொம்பா? எது கேட்பினும் தருவர்- அதற்கெனவே எடுபிடிகள் ஏராளமாக உளர். இந்தச் செல்வாக்கின் மத்தியிலே செல்ல நடைபோடும் சேயிழையாள் அந்த அமிர்தமதி!''

``அழகி அமிர்தமதியும், அரசன் யசோதரனும் ஒருநாள் அந்தப்புரத்தில் இன்பக்கேளிக்கையில் ஈடுபட்டனர். கட்டிற்காவியம் எழுதி முடித்தனர்- கண் அயர்ந்தனர். அரசன் தூங்கும் சமயம், ராணி கண் விழித்தாள். ஆமாம்! மலர் விழித்துக் கொண்டது; வண்டோ தூங்கிக் கொண்டிருந்தது. விழிந்த சமயம் அந்த இரவில் ஒரு பாடல், ராணியின் காதில் ஒலித்தது! அந்தப்பாடல் வந்த பக்கம் கருத்தை செலுத்தினாள். அந்தப்பாடல் இசைத்தவனைக் கட்டித் தழுவ வேண்டும் என்று துடித்தாள்''

``மறுநாள் தன் தோழி குணவதியை அனுப்பினாள். அர்த்த ராத்திரியிலே பாடியவன் யாரென்று அறிந்துவர தோழியும் போய் அவனைக் கண்டாள். இசையை எழுப்பியவன் ஒரு யானைப்பாகன். அவன் எப்படிப்பட்ட அழகுடையவன் தெரியுமா? தோழி வாயிலாக யசோதரக் காவியக் கவிஞர் கூறுகிறார். அது இது!

``நரம்புகள் வசித்த மெய்யன், நடையினிற் கழுதணிந்தோன், திரங்கிய விரலன், கையன், சிறுமுகன், சினவன், சீறிற்குரங்கினை யனையன், கூனன், குழிந்து புக்கழிந்த கண்ணன்!''

``இன்னும் பலவாறாக அவனது விவகாரங்களை வர்ணித்து அவன் மீது ஆசை வைப்பது தகாது என்று ராணியிடம் தோழி கூறுகிறாள். அமிர்தமதியோ `அவன் எப்படியிருந்தாலும் கவலையில்லை. அவனை அணைத்து மகிழத்தான் வேண்டும்' என்று துடிக்கிறாள். `கனியிருப்பக் காய் பறிக்கலாமா அம்மா? சகல அழகும் பொருந்திய அரசர் பெருந்தகையின் மனைவியாகிய நீங்கள், கேவலம் குரங்கைப் போன்ற - ஒரு சாக்கடை மனிதனைக் கொஞ்சிக் குலவ விரும்பலாமா தாயே!'' என்றெல்லாம் குணவதி தடுத்தாள்.

ஆனால் அரசியோ, அவன் எப்படியிருந்தால் எனக்கென்ன; அவன் அணைப்பிலேதான் சுகம் இருப்பதாக நான் உணர்கிறேன் என்று கூறியதோடு, அந்தப் பாடல் கற்ற யானைப்பாகனையும் வலிய வரவழைத்து, வாரி அணைத்து மகிழ்ந்தாள். நாளொரு மேனியாக, அந்த நாய்க்காதல் வளர ஆரம்பித்தது. ஒருநாள் அரசனே அவர்களது.... காதல் களியாட்டத்தைத் தூர நின்று பார்த்து விட்டான்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா? அரசன் எந்தக் காட்சியை கண்டான் தெரியுமா? வழக்கமாக யானைப்பாகன் அட்டபங்கன் என்னும் பெயருடைய அந்த அவலட்சணம், அமிர்தமதியின் அழகுக் கருங்கூந்தலைக் கையால் இழுத்து எறிந்து, அவளைக் கீழே தள்ளி, இரு கால்களாலும் நையப்புடைத்து `ஏன் காலம் தாழ்த்தி வந்தாய்?' என்று கனல் கிளம்பக் கேட்கிறான்''.

``கட்டளையிட்டால், யோசனை என்ற தூரம் ஓடிக் காரியமாற்றிடும் பணியாளர்களின் தலைவி- மண்டலாதிபதியின் மனைவி- ஓர் அழுகிய உடல் படைத்த யானைப்பாகன், தன்னைத் திட்டி உதைத்து அடிப்பதிலே சுகம் காண்கிறாள்''

``அவள் மலர்ப்பாதங்களை அர்ச்சிக்க ஆயிரம் பேர் காத்திருப்பர்- அவள் அந்த பாகனின் கால்களைக் கண்ணில் ஒத்திக் கொண்டு காலந்தாழ்மைக்கு மன்னிப்புக் கோருகிறாள்''

இதுதான், யசோதர காவியத்தின் சுவையான (?) சுருக்கம்.

இதைப்படிக்கும்போதும், படித்த கதையை நினைத்து, நெற்றி சுருக்கி சிந்திக்கும் போதும்; ``அமிர்தமதி'' போல சில கட்சித்தலைவர்கள் நமக்கு காட்சியளிக்கிறார்கள் அல்லவா!

யானைகளில் வீரர்கள் அமர்ந்து காவல்புரியும் அரண்மனை- அந்தப்புரம்- அங்கே அரசனின் அரவணைப்பு- இவற்றைவிட; யானைப்பாகன் ஒருவன்; அதிலும் அழுகிப்போன மேனி- அதிலும் தாமதமாக ஏன் வந்தாய் என்று அவளைக் காலால் உதைத்து உதைத்து தண்டனை கொடுத்துவிட்டு; அதன்பிறகு அவளுடன் சல்லாபிக்கிறான்; அதைத்தான் அமிர்தமிதி அடங்காத வேட்கையுடன் விரும்புகிறாள்- இப்படி சில ஜென்மங்கள்- சில அரசியல்வாதிகள்- என்று முணுமுணுக்கத் தோன்றுகிறதல்லவா?

அடித்தால் என்ன; உதைத்தால் என்ன; அமிர்தமதிக்கு அந்த யானைப்பாகனைத்தான் பிடிக்கிறதென்றால்- யார்தான் குறுக்கே நிற்க முடியும்?

பெரியவர் காமெடி - 2
திருமங்கலம் தேர்தல் ஏன் இந்த அவசரம் ? எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்றால் திருமங்கலத்தில் ம.தி.மு.க. வேட்பாளரையே நிறுத்தி இருக்கவேண்டும் என்று கலைஞர் சொல்லுகிறார். அறிக்கை கீழே...

மதுரை-திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர இளவரசன் கடந்த நவம்பர் 8-ம் நாள் காலமாகிவிட்டார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நான் செய்தி வெளியிட்டிருந்தேன். ம.தி.மு.க.வை சேர்ந்த அவர் மறைந்து இத்துடன் 2 மாதம் கூட முடியவில்லை.

எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால் - காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அ.தி.மு.க. காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது- அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார். தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத்தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி- அதற்கேற்பவே; காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோன இடத்தில்; இடைத்தேர்தலில் அந்த இடத்தை காங்கிரஸ் வேட்பாளருக்கே வழங்கி; அவரது தேர்தல் வெற்றிக்காகவும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.தி.மு.க. வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் ம.தி.மு.க. நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அ.தி.மு.க. தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான பாதுகாப்புப் பணிகளை, நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதே; ``திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி- எனவே வசதிப்படுமா?'' என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- பாராளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும் - பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால்- அப்படி பாராளுமன்ற தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை. அதற்காக இப்படி ``விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!'' என்று கிராமத்துப் பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில்; தேர்தல் ஆணையத்தின் வாயிலாகப் பெற்றுள்ள ஆணையின்படி; கழகத்தின் 13-வது பொதுத் தேர்தல் - கிளைகள் முதல் தலைமைக்கழகம் வரையில்; வருகிற டிசம்பர் 27-க்குள் நடந்தாக வேண்டும் - அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க இயலாது - இவ்வாறு ஏற்கனவே ஆணையத்துக்கு உறுதி கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல்; ஜனவரி 14-ந் தேதி வாக்கில் வருகிறது; அதற்கு முன்கூட்டியும் - பின்னரும் சில நாட்கள் மக்கள் அந்தப் பொங்கல் ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அப்போதுதான் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவடையும் நேரமாக இருக்கும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு; பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால்; அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.

இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை. உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும் - அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும் - இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.

எல்லோரிடமும் ஏக்கம்

பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால்; அந்த உற்சாகம் - நம்பிக்கை பாராளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.

உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.

ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.

ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் - தி.மு.க.வைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.

மறவாமலும்- மன திடத்துடனும் - பாகு மொழி - பசப்பு மொழி - பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட; ``எஸ்மா'', ``டெஸ்மா'' சட்டங்களை நீட்டியவர்களை உற்றுநோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்; அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.

நம் நெஞ்சில் நெருப்பு மூட்டிடுவோர் உனக்கு உருவாக்கியுள்ள ஆத்திரம் - அதன் விளைவைக் காணத்தான் நான் அச்சம் கொண்டு; அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என அழைக்கிறேன்.

ஜெ காமெடி

கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் வன்முறை, அராஜகப் போக்கு மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கலந்து பேசி அவரது பரிபூரண ஒப்புதலுடன் 9.1.2009 அன்று நடைபெற இருக்கும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தேன்.

என்னுடைய அறிவிப்பைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் தொடர் வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் கழன்று ஒரேயொரு பெட்டி மட்டும் எப்பொழுது கழன்று கொள்ளலாம் என்ற ஊசலாட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில் 14.12.2008 அன்று யார்தான் குறுக்கே நிற்க முடியும்? என்ற தலைப்பில் யசோதர காவியக் கதையைச் சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டார். விரக்தியின் விளிம்பில் இருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

கருணாநிதியால் குறிப்பிடப்படும் யசோதர காவியத்தில் வரும் யானைப் பாகனின் குணங்கள் அனைத்தும் கருணாநிதிக்கு உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும் கருணாநிதியின் குணங்களை அறிந்து கழன்று கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனக்கு பொருந்தக் கூடிய யானைப் பாகனின் குணங்களை சுட்டிக்காட்டியது போதாது என்று நேற்று திருமங்கலம் தேர்தலும், திடீர் அறிவிப்பும் என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புலம்பல் புராணத்தைப் பாடியிருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அறிக்கை என்னை குற்றம் சாட்டுவதாக, என்னை குறை கூறுவதாக உள்ளது.

திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு திடீரென்று வெளியிடப்பட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர் கருணாநிதி. அப்படி இருக்கும் போது என்னை கேட்டுக் கொண்டா இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்? கருணாநிதி மத்தியில் உள்ள தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை ஏன் குறை சொல்கிறார் என்று புரியவில்லை.

அடுத்தபடியாக நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அந்த உற்சாகம், நம்பிக்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று நான் கணக்குப் போடுவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் என்று அறிவித்துவிட்டால் அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றுதான் அனைத்துக் கட்சிகளும் நினைக்கும். அந்த வகையில் அதிமுக இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன குற்றத்தை கருணாநிதி கண்டார் என்று எனக்கு புரியவில்லை.

ஒருவேளை மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன் திமுகவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரசார் தீட்டிய சதித்திட்டமாக இருக்கும் என்று கருணாநிதி சந்தேகப்படு கிறாரா? என்று தெரியவில்லை.

கருணாநிதியின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அவர் தேர்தலைக் கண்டு பயப்படுகிறார், அச்சப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல் பேச்சு.


காங்கிரஸ் காமெடி

திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து கட்சியின் முன்னணி தலைவர்கள், அனைத்து நிலையில் உள்ள தலைவர்களை அழைத்துப் பேசி கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பண்பாடு உண்டு. கூட்டணி கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வரவேற்போம். அத்தகைய நல்ல பண்பாடு, நாகரீகத்துடன் திகழ்வோம். - தங்கபாலு

ராமதாஸ் காமெடி
திரும‌ங்கல‌‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌‌ல் யாரு‌க்கு ஆதரவு அ‌ளி‌‌ப்பது குற‌ி‌த்து க‌ட்‌சி‌யி‌ன் பொது‌க்குழுவை கூ‌ட்டி முடிவு எடு‌க்க‌ப்படு‌ம் - ராமதாஸ்

விஜயகாந்த் செய்யும் காமெடி
அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது போல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் - விஜயகாந்த்

பா.ஜ.க செய்யும் காமெடி
தேர்தல் சீர்திருத்தக்குழு புதிய தொகுதி வரைவு பட்டியலை தயாரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டது. இந்த நிலையில் காலாவதியான திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது விந்தையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் திருமங்கலம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவதில்லை - இல.கணேசன்

சூப்பர் காமெடி - வேற யாரு ?

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். தனது தந்தையை ஆதரித்து நடிகர் சிம்பு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

எது எப்படியோ திருமங்கலம் சிலருக்கு மங்களம் பாட போகிறது

4 Comments:

Sethu Raman said...

1967ல் தி.மு.க.வெற்றி பெற்றதன் காரணம் மக்கள் தி.மு.க.வை விரும்பியதால் அல்ல!
இவர்களால் குல்லூகபட்டர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜி அவர்கள் செய்த இமாலயத் தவறால் தான். அவர் முன்னின்று மக்களைக் காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.விற்கு வோட்டு போட சொல்லியது மு.க.விற்கு மறந்திருக்கலாம்.. மக்கள் மறக்க மாட்டார்கள்!

Anonymous said...

Tamil Nadu Ranks 1st in Top e-Governance State & 1st Choice of Business

Destination in INDIA for the Second Consecutive Year!!! – DATAQUEST

http://dqindia.ciol.com/content/top_stories/2008/108121004.asp

Tamil Nadu seems to be a hot favorite destination for businesses; Bihar

stands at the complete opposite end of the spectrum. Relatively smaller

states like Himachal Pradesh and Chhattisgarh too seem to be attracting

businesses. Gujarats holistic e-governance agenda seems to be paying off.

The state is also the first state in Asia to implement e-connectivity

network in all 590 village councils.

In terms of overall business satisfaction, the top ranking state has been

Tamil Nadu which has outperformed on almost all parameters namely License &

Permits; Financial Assistance; Incentives & Grants; Sales Tax; Municipal

Corporation, etc. Incidentally business registration and power utility are

the only two categories where Tamil Nadu does not feature with Assam

leading at 77.4 and Karnataka and Orissa following with scores of 75 and

74.1 respectively.

In the Government Tenders/Contracts category while Tamil Nadu scores the

highest, close on the heels are Gujarat and Chhattisgarh at 74.9 and 74.7

respectively. Even as the state claims to have a business-friendly

environment, Gujarat was ranked third in the license and permits parameter,

way behind Tamil Nadu and Himachal Pradesh.

Nilofer Anbarasu said...

எது எப்படியோ, திருமங்கலத்தில் கரண்ட் கட் அடுத்த ஒரு மாதத்திற்கு இருக்காது :)

கிரி said...

//Nilofer Anbarasu said...
எது எப்படியோ, திருமங்கலத்தில் கரண்ட் கட் அடுத்த ஒரு மாதத்திற்கு இருக்காது :)//

:-)))