பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 29, 2008

பொறுப்பற்றதனம்

தினமணி ஆசிரியர் சிறப்பு கட்டுரை


நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்து மயங்கிக் கிடப்பவர்கள் எத்தனை பேர் என்பது போகப்போகத்தான் தெரியும். மும்பையில் நேற்று நடந்திருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் தேசத்தையே நிலைகுலையச் செய்திருக்கின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் நடந்திருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை பதினொன்று. அதிலும், ஜெய்ப்பூர், ஆமதாபாத், புதுதில்லி, இம்பால் மற்றும் அசாமில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 500-க்கும் அதிகமான அப்பாவி ஜனங்களின் உயிர்களைப் பலி வாங்கி இருக்கின்றன. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல இப்போது மும்பையில் ஓர் அதிபயங்கரத் தாக்குதல், ஒரு தீவிரவாதக் கும்பலால், துணிந்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்றால், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்நோக்கும் திறமையும் சாமர்த்தியமும் இந்த அரசுக்குக் கிடையாது என்கிற பயங்கரவாதிகளின் நம்பிக்கைதான் காரணமாக இருக்க முடியும்.

இதற்கு முன்பு இல்லாதவகையில், தீவிரவாதக் கும்பல் கடல் வழியாக நுழைந்திருப்பது அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம். எம்.வி.ஆல்ஃபா என்கிற கப்பலில் இந்த பயங்கரவாதக் கும்பல் வந்திருக்கக்கூடும் எனக் கடலோரக் காவல் படையினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்னும் சில தகவல்கள் இந்தப் பயங்கரவாதிகளை ஏற்றிக்கொண்டு வந்தது ஒரு வியத்நாமியக் கப்பல் என்று தெரிவிக்கின்றன. அவர்கள் குஜராத்திலிருந்து வந்தார்கள் என்று சில செய்திகளும், இல்லையில்லை, பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதாக இன்னபிற தகவல்களும் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்தாலும், இதுவரை நடந்து வந்த எல்லை தாண்டிய தீவிரவாதம் இப்போது கடல் தாண்டிய தீவிரவாதமாக மாறி இருப்பது ஆபத்தான அறிகுறி. நீண்ட கடற்கரையுடைய இந்திய தீபகற்பத்தில் எல்லா பகுதிகளையும் கண்காணிப்பது என்பது இயலாத விஷயம். கடலோரக் காவல்படையினர் இரவு பகலாக வலம் வருகின்ற மும்பை துறைமுகப் பகுதிக்குள் துணிந்து நுழைந்து, நகரத்திற்குள் பயங்கரவாதிகள் அராஜகம் செய்திருக்கிறார்கள் என்றால், அரசின் புலன்விசாரணைத் துறையைவிட அவர்கள் சாமர்த்தியமானவர்கள் என்றுதானே அர்த்தம்?

தாக்குதல் நடந்த தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களுக்கு அருகில் இருக்கும் ஓர் உணவு விடுதியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளால் கொண்டு வரப்பட்டது என்று தெரிகிறது. அவர்களிடம் இன்னும் எத்தனை கிலோ இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த அளவுக்கு வெடிபொருள் துணிந்துகொண்டு வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றால் அவர்களது செயல்பாடுகள் அதைவிட அதிர்ச்சியைத் தருகின்றன.

ரயில் நிலையத்தில் நுழைந்து அப்பாவிப் பயணிகளைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். தெருவோரம் போய்க் கொண்டிருப்பவர்கள் மீது கிரானைடுகளை வீசுவதும், துப்பாக்கியால் சுடுவதுமாகத் தங்களது அட்டகாசத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களில் நுழைந்து தங்கி இருந்தவர்களைப் பிணைக் கைதிகளாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எந்த தைரியத்தில்? இதனால் அவர்கள் சாதிக்க இருப்பது என்ன?

பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதுதான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத்தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்? கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?

அது ஒருபுறமிருக்க, நமது தொலைக்காட்சி சேனல்கள் அரங்கேற்றிய பொறுப்பற்ற தனத்துக்கு அளவே இல்லை. ஹோட்டலின் உள்ளேயும், இன்ன பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது அரிச்சுவடிப் பத்திரிகை நிருபருக்குக்கூடத் தெரியும். மற்ற சேனல்களைத் தங்களது சேனல் முந்திக்கொள்ள வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில், இந்தியாவின் மூன்று பிரதான ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய பாதுகாப்புப் பின்னடைவுக்கு வழிகோலிய விதம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க இன்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், அதற்கேற்றாற்போல தங்களது அடுத்தகட்டத் திட்டங்களைத் தீட்ட முடிந்தது. தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் தப்பிக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டதைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கட்டடத்தையே தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நியூயார்க் நகரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு நம்மை மெச்ச வைத்தது. பாதுகாப்புப் படையினருடன் கைகோர்த்து செயல்பட்டனர் பத்திரிகையாளர்கள். தேசிய அளவில் பீதி ஏற்படாமல் காத்தனர். ஆனால் மும்பையில் நமது பத்திரிகையாளர்கள் வெறும் வியாபாரிகளாகச் செயல்பட்டார்களே தவிர, பத்திரிகையாளர்களுக்கு உரித்தான பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.

அரசு தவறு செய்யலாம். காவல்துறை தவறு செய்யலாம். நீதித்துறை தவறு செய்யலாம். ஆனால் இவர்களது தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை பெற்ற பத்திரிகைகள் தவறிழைப்பதா? தங்களுக்கிடையே உள்ள வியாபாரப் போட்டிக்காக தேசநலனை, நாட்டின் பாதுகாப்பை, பொதுமக்களின் உயிரைப் பகடைக்காயாக்குவதா? வெட்கக்கேடு!

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கையாலாகாத்தனத்தைவிடக் கொடுமையானது டெலிவிஷன் பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம்!
- ஆசிரியர்
( நன்றி: தினமணி, 28.11.08)

8 Comments:

Krish said...

தனத்துக்கு அளவே இல்லை. ஹோட்டலின் உள்ளேயும், இன்ன பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது அரிச்சுவடிப் பத்திரிகை நிருபருக்குக்கூடத் தெரியும். மற்ற சேனல்களைத் தங்களது சேனல் முந்திக்கொள்ள வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில், இந்தியாவின் மூன்று பிரதான ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய பாதுகாப்புப் பின்னடைவுக்கு வழிகோலிய விதம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க இன்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். /////

இது ரொம்ப கேவலமான விஷயம். இந்த சேனல் கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த சேனல்களை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

KABEER ANBAN said...

//தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க இன்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், அதற்கேற்றாற்போல தங்களது அடுத்தகட்டத் திட்டங்களைத் தீட்ட முடிந்தது. தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் தப்பிக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டதைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கட்டடத்தையே தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.//

நமது தொலைக்காட்சி சேனல்களின் பொறுப்பற்றத் தன்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பயங்கரவாதிகள் தொலைக்காட்சி மூலம் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

முதல் காரியமாக பதுங்கு கட்டிடங்களுக்கு உள்ள தொலைபேசி மற்றும் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். அடுத்து மின்சார துண்டிப்பு. அவசியம் என்று கருதினால் சிக்னல் ஜாமிங் மூலம் அலை பேசி தொடர்பையும் செயலிழக்கச் செய்ய முடியும். இப்படி எல்லாவகைகளிலும் அவர்களை தனிமை படுத்த் வழிகளுண்டு. இவற்றை எவ்வளவு தூரம் செயல்படுத்தினார்கள் என்பது பின்னால்தான் தெரியவரும்.

KaveriGanesh said...

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கையாலாகாத்தனத்தைவிடக் கொடுமையானது டெலிவிஷன் பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம்!


முற்றிலும் உண்மை .பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம் மிக‌வும் க‌ண்டிக்க‌த‌க்க‌து.

M Arunachalam said...

Kabeer Anban,

You seem to be really ingenious (!). The terrorists have been using satellite phones and have been in constant touch with their counterparts in "other" locations including Karachi. so, anybody who is NOT in the hotel with whom these terrorists were in touch could have kept them informed of the latest developments & tactics as reported by these irresponsible news channels.

But, the current irresponsible behaviour of news channells are NOT the first. Already Sun TV has the distinction of informing TN Police's tactics to Veerappan by graphically describing all the police information as news.

Before arresting or killing the terrorists, the Govt. has to arrest these media bastards first & terrorists are far better than these blood-thirsty media.

Anonymous said...

Ok, But Dinamani support LTTE nowadays .It knows its evil design &lethal violence face.If useless 7 Sesless people supports LTTe same fate may occur Tn too. So, please change the LTTe support attitide

Anonymous said...

Ok, But Dinamani support LTTE nowadays .It knows its evil design &lethal violence face.If useless 7 Sesless people supports LTTe same fate may occur Tn too. So, please change the LTTe support attitide

paarvai said...

ஊடகங்கள் செயதது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. ஆனால் அருண் சொன்னபடி தீவிரவாதிகள் சாட்டலைட் போன்கள் உபயோகப்படுத்தி அவர்களின் சொந்தக்காரர்களான “அந்த மதத் தீவிரவாதிகளை” தொடர்புகொண்டு நிலைமை அறிந்து இருக்கலாம். ஐயா...அனானி...இதில் எங்கே வி.புலிகள் வந்தார்கள்? எதை எதற்கோ முடிச்சு போடுகிறீர்களே...இது ஓவரா இல்லை?

pattali said...

"போருக்குச் சமமாக தாக்குதல் நடைபெறும் வேளையில் தீவிரவாதிகள் ஹாயாக டிவி பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்டிருப்பார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களை விடாமல் கமாண்டோக்கள் துரத்திக்கொண்டிருக்கும்போது எங்கே உட்கார்ந்து டிவி பார்ப்பது? மிஸ்டர் பீன் காமெடியில் வேண்டுமானாலும் தீவிரவாதிகள் டிவி பார்த்துக்கொண்டு அதற்கேற்றபடி காய்கள் நகர்த்தலாம்."

"அப்படியென்ன நாட்டுக்குப் பெரிய சேதாரங்களை மீடியா ஏற்படுத்திவிட்டது என்று புரியவில்லை. தீவிரவாதிகள் தினமணி படித்துவிட்டு அதற்கேற்றாற்போல தங்கள் திட்டங்களை தீட்டினார்கள் என்று சொல்வது எவ்வளவு சொத்தையாக இருக்குமோ அதுபோலவே மேலுள்ள குற்றச்சாட்டும். "

More Replies to dinamani editor visit,
http://www.sanakannan.com/dinamani.html