பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 05, 2008

இசையைச் செதுக்கும் சிற்பிகள்

இசையைச் செதுக்கும் சிற்பிகள் என்ற கட்டுரை இந்த மாதம் நல்ல கட்டுரை என்று எழுதியிருந்தேன். அதன் soft copyயை எனக்கு அனுப்பிய மோகன்ராஜுக்கும் அதற்கு அனுமதி தந்த சேதுபதி அருணாசலதிற்கும் என் நன்றி...

இசையைச் செதுக்கும் சிற்பிகள்

ஒரு விமானப் பயணத்தின் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இத்தாலியருடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். இத்தாலியின் ஒரு பிரபலமான ஆடை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிபவர் அவர். பெங்களுரில் இருக்கும் ஒரு துணி உற்பத்தி நிறுவனத்தின் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காக இந்தியா வந்திருப்பதாகக் கூறினார்.

“பெங்களூர் மாதிரிகள் அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. சீனாவில் இதைவிடக் குறைந்த விலைக்கு ஆடைகள் கிடைக்கின்றன. இப்பயணத்தை முடித்துக்கொண்டு நான் சீனாவுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.

அவர் இப்படிச் சொன்னதைக்கேட்டு நான் வருத்தமுற்றதை கவனித்த அவர், “இதை நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். உலகம் நம்மைப் போன்ற தனிமனிதர்களைத் தாண்டி வேறெங்கோ சென்று கொண்டிருக்கிறது. இத்தாலியில் நான் பிறந்து வளர்ந்த சிறு நகரம் பல நூற்றாண்டுகளாக ஆடை உற்பத்திக்குப் புகழ் பெற்ற ஒன்று. என் குடும்பம் உட்பட, அந்நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமுமே, ஆடை உற்பத்தியில் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவையாக இருந்தன. இப்போது என் நகரத்திலிருக்கும் ஒரே ஒரு குடும்பம் கூட ஆடை உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.” என்றார்.

தன்னுடைய குடும்பத் தொழில் தொடர்பாகவே அவர் மேலாளராக இருந்தாலும், உற்பத்தி கையை விட்டுப் போனதன் வருத்தம் அவர் குரலில் தெரிந்தது. இத்தாலியின் அந்த சிறு நகரம் போலவே, தன்னுடைய உற்பத்தி இயந்திரத்தில் ஆதிக்கத்தை இழந்த இன்னொரு இத்தாலியச் சிறுநகரம் க்ரெமோனா (Cremona).

க்ரெமோனா என்ற இந்த சிறு நகரம் பல நூற்றாண்டுகளாக வயலின் தயாரிப்புக்காக உலகப்புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட வயலின்கள் இப்போதும் மேற்கு நாடுகள் முழுதும் பிரபலமாக இருக்கின்றன. ஆண்டானியோ ஸ்ட்ராடாவேரி (கி.பி.1644-1737) என்ற உலகின் மிகப்புகழ் பெற்ற வயலின் தயாரிப்புக்கலைஞர் பிறந்து, வளர்ந்து, வயலின் செய்வதில் தன்னிகரில்லாப் பெயரெடுத்தது இந்த ஊரில்தான். இன்றும் இந்நகரில் வயலின் தயாரிப்புக்கலையை கற்றுத் தரும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கிறது.

ஸ்ட்ராடாவேரியைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது எனக்குப் பிடித்த வயலின் இசைக்கலைஞரான ஷேன் ட்ரக்கர் (Gene Drucker) மூலம். ஒரு பேட்டியில் அவர் தன்னிடமிருக்கும் ஸ்ட்ராடாவேரியின் வயலினைப் பற்றி மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். அவர் மட்டுமல்ல தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசை மேதைகளான ஜோஷ்வா பெல், யோ-யோ மா (Yo-Yo Ma) போன்றோரும் ஸ்ட்ராடாவேரி வடிவமைத்த வயலினை வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஸ்ட்ராடாவேரி வயலினின் இன்றைய சந்தை மதிப்பு நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இவ்வளவு விலை மதிப்பு மிக்க வயலினை இசைக்கலைஞர்கள் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லத் தயங்குவதால் தங்களிடமிருக்கும் ஸ்ட்ராடாவேரியின் வயலினைப் போலவே ஒரு பிரதி எடுத்துக் கொள்கிறார்கள். ஸ்ட்ராடாவேரியின் வயலினைப் போலவே வடிவமைப்பது இப்போதிருக்கும் வயலின் வடிவமைப்புக் கலைஞர்களுக்கு மிகவும் சவாலான விஷயம்.

ஷேன் ட்ரக்கர் இப்போதிருக்கும் வயலின் வடிவமைப்புக் கலைஞர்களில் மிகவும் சிறந்தவரான அமெரிக்காவின் ஸாம் ஸிக்மண்டோவிச்சிடம் (Sam Zygmuntowicz) ஒரு வயலின் செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தார். ஏற்கனவே ஸ்ட்ராடாவேரியின் வயலினை வாசித்துக் கொண்டிருக்கும் ட்ரக்கர், அந்த வயலினை கைவிட்டு நிரந்தரமாகத் தன்னுடைய வயலினையே எப்போதும் வாசிக்க வைக்க வேண்டுமென்று சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு வயலினை வடிவமைத்தார் ஸிக்மண்டோவிச். அந்த வயலின் தயாரிப்பைக் கூடவே இருந்து பார்த்து ஜான் மார்சேஷ் (John Marchese) எழுதிய “The violin Maker” என்ற சுவாரஸ்யமான புத்தகத்தைப் படித்தேன்.

எத்தனையோ முயற்சி செய்து வயலினை வடிவமைத்தும் ஸிக்மண்டோவிச்சின் வயலின் ட்ரக்கருக்கு அவ்வளவு திருப்தி தருவதாக இருக்கவில்லை. “ஒரு வயலின் அதை வாசிப்பவரின் காதுகளுக்குக் கீழ் எழுப்பும் ஒலி அவர் மனதுக்கு மிக நெருக்கமாக உணரப்படுகிறது. அந்த வயலின் எழுப்பும் ஒலியும், அது வாசிப்பவரின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகளும் கற்பனைக்கெட்டாத அலாதியான விஷயங்கள். ஸ்ட்ராடாவேரி வயலின் ஏற்படுத்தும் துல்லியமான, பலம் குறையாத ஒலியும், அதிலிருக்கும் அழகும், எனக்கு வேறெந்த வயலினை வாசிக்கும்போதும் கிடைப்பதில்லை” என்கிறார் ட்ரக்கர். ஏதோ ட்ரக்கர் மட்டும் ஸ்ட்ராடாவேரி வயலினைப் பற்றி சிலாகிப்பாகச் சொன்னால் ஏதோ அது அவர் மனநிலை சார்ந்த விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் கிட்டத்தட்ட அத்தனை இசை மேதைகளுமே இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ட்ராடாவேரி வயலினுக்குத் தனிப்பட்ட சிறப்பம்சத்தைத் தரும் காரணத்தைக் கண்டுபிடிக்க அவர் வடிவமைத்த வயலின்களை பல வருடங்களாக ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு ஆய்வு ஸ்ட்ராடாவேரி பயன்படுத்திய வார்னிஷில் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று சொல்கிறது. இன்னொரு ஆய்வு அவர் வயலின் செய்யப் பயன்படுத்திய மரங்களைக் காரணமாகச் சொல்கிறது.

ஒரு விதத்தில் ஸ்ட்ராடாவேரி வயலினுக்குப் பின்னால் ஏதோ ரகசியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதைத் தேட முயற்சிப்பதே ஸ்ட்ராடாவேரியைப் போன்ற தரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மிகச்சிறப்பான வயலின்களை வடிவமைத்த உன்னதமான கலைஞனுக்கு இழைக்கப்படும் துரோகம். ஒலியுடன் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பின் உச்சம் ஸ்ட்ராடாவேரியின் வயலின்கள். சமீபத்தில் ஸிக்மண்டோவிச் அளித்த ஒரு பேட்டியில் சொல்கிறார் - “எந்த ரகசியமும் இல்லை என்பதுதான் ஸ்ட்ராடாவேரி வயலின்களின் ரகசியம்” (The secret behind Stradivari’s violins is that there is no secret).

இசைக்கலைஞர்களுக்கு எந்த விதத்திலும் திறமையிலோ, இசை ஈடுபாட்டிலோ இசைக்கருவிகளை வடிவமைக்கும் கலைஞர்கள் குறைந்தவர்கள் இல்லை. இதுவரை ஸ்ட்ராடாவேரியைப் பற்றி 55 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. வயலினுக்கென்றே நடத்தப்படும் புகழ் பெற்ற பத்திரிகைக்கு பாக், மொஸார்ட் போன்ற இசைக்கலைஞர்கள் பெயர் வைக்கப்படவில்லை. மாறாக ‘The Strad’ என்று ஸ்ட்ராடாவேரியின் பெயரால்தான் நடத்தப்படுகிறது. தான் இறந்து முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் உலகெங்கிலும் இருக்கும் வயலின் இசைக்கலைஞர்களுடன் தன் சம்பாஷனையைத் தொடர்ந்து வருகிறார் ஸ்ட்ராடாவேரி. இப்போதிருக்கும் வயலின் வடிவமைக்கும் கலைஞர்கள் தாண்ட முடியாத பெரிய மலையாக அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் அவர். “நான் பார்த்த ஒரு வயலினில் ‘என்னுடைய 91-ஆவது வயதில் வடிவமைக்கப்பட்ட வயலின் இது’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார் ஸ்ட்ராடாவேரி. ‘இத்தனை வயதிலும் என்னால் இவ்வளவு துல்லியமான வயலினைச் செய்ய முடியும்’ என்று அவர் என்னிடம் சொல்வது போலிருந்தது” என்று சொல்கிறார் ஸிக்மண்டோவிச்.

கிட்டத்தட்ட ஒரு இதய மருத்துவரளவுக்கு கவனமாக இருக்க வேண்டியவர்கள் இப்படிப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான இசைக்கருவிகளைப் பிரித்து சரி செய்பவர்கள். “ஒவ்வொரு முறை ஒரு ஸ்ட்ராடாவேரி வயலினைச் சரி செய்வதற்காகவோ, அதைப் பிரதியெடுப்பதற்காகவோ பிரித்துப் பார்க்கும்போது நான் ஸ்ட்ராடாவேரியுடன் பேசுவதைப் போல் உணர்கிறேன். ஒவ்வொரு வயலினிலும் தன் ஆன்மாவை இழைய விட்டிருக்கிறார் அவர்.” என்கிறார் ஸிக்மண்டோவிச்..

ஸ்ட்ராடாவேரி பிறந்து, வளர்ந்த க்ரெமோனாவில் ஸ்ட்ராடாவேரி மட்டுமில்லாமல் வேறு பல முக்கியமான வயலின் வடிமைக்கும் கலைஞர்களும் இருந்தார்கள். இப்போதும் க்ரெமோனாவில் வயலின்கள் செய்யப்பட்டாலும் முன்பிருந்த உற்சாகமும், பெருமிதமும் இல்லை. உலகின் பெரும்பாலான வயலின்கள் இப்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த அலையில் க்ரெமோனாவும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இப்புத்தகத்தைப் படித்துவிட்டு நாதஸ்வரம், மிருதங்கம், கஞ்சிரா போன்ற நம் நாட்டு இசைக்கருவிகளைப் பற்றியும், அதை உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியும் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். நம்மூரிலும் எத்தனையோ ஸ்ட்ராடாவேரிகளும், ஸிக்மண்டோவிச்களும் வாழ்ந்து மறைந்திருக்கலாம். அவர்களைப் பற்றிய முறையான வரலாறு எதுவும் நம்மிடம் இல்லை.

நாதஸ்வரத்தின் ஒரு வகையான, பாரி நாதஸ்வரத்தை உருவாக்குபவர்கள் கும்பகோணம் அருகிலிருக்கும் நரசிங்கப்பேட்டையைச் சேர்ந்த ரங்கநாத ஆசாரி என்பவரின் குடும்பத்தினர். “ரெங்கநாத ஆசாரியைப் போல சுத்த மத்யமம் சுத்தமாகப் பேசும் நாதஸ்வரத்தை வேறு யாராலும் செய்ய முடியாது. இவரை அரசாங்கம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் நாதஸ்வரக்கருவிகளை நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான சில குடும்பத்தினர் மட்டுமே செய்து வருகின்றனர். ஸ்ட்ராடாவேரியைப் போல் உலகப் புகழ் பெறுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் இந்திய அரசு கைவினைக் கலைஞர்களுக்குத் தரும் விருது கூட இதுவரை இவர்களுக்குத் தரப்படவில்லை.

இந்தியாவிலும் எத்தனையோ க்ரெமோனாக்கள் கண்டு கொள்ளப்படாமலே, வரலாற்றின் பக்கங்களில் பதிவாகமலே மறைந்திருக்கலாம். மேற்குலகின் இசைக் கருவிகளாவது இன்று சீனாவில் செய்யப்பட்டுத் தொடர்ந்த இசை நிகழ்வை உறுதி செய்வதாய் இருக்கின்றன. நம் இசைக்கருவிகள் அப்படிப்பட்டவை அல்ல. உதாரணமாக நாதஸ்வரத்தின் சீவாளி, காவிரிப் படுகைகளில் கிடைக்கும் ஒருவித நாணல் புல்லில் இருந்து செய்யப்படுகிறது. இன்று ஒரு சில கிராமங்களில் இருக்கும் ஒரு சில குடும்பங்களே இதைத் தொடர்ந்து செய்து வருகின்றன. இன்றைய இந்திய இசைக்கருவிகள், இது போன்ற தொடர்ந்த பாரம்பரியம் கொண்ட குடும்பங்களால்தான் நம்மிடையே இருக்கின்றன. இந்தப் பாரம்பரியம் உடைபட்டு இவர்கள் தொலையும்போது நம் இசையும் தொலையும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் எந்தப் பிரக்ஞையோ, கவலையோ இல்லாமல் இது உன் இசை, இது என் இசை என்று அடித்துக் கொள்ளும் முட்டாள்தனமே நம் நாட்டில் எங்கும் காணக்கிடைக்கிறது.

சமீபத்தில் சோழர் கோவில்களைப் புகைப்படமெடுப்பதற்காக கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்றிருந்தேன். கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலின் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான தேருக்கு அருகிலேயே ஒரு புரோட்டா கடை இருக்கிறது. அக்கடையிலிருந்து கொண்டு மக்களையும், கடைவீதியின் பரபரப்பையும் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். இரவில் நானும், என் நண்பனும் அக்கடையின் பின்னணியில் புகையடித்துப் போயிருக்கும் அந்தத் தேரைப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தோம்.

“ஃபோட்டோ எடுக்க வந்தீங்களா?” என்று என் கையிலிருந்த கேமராவைப் பார்த்துக் கொண்டே என் அருகில் வந்தார் சுமார் எழுபது வயது மதிக்கத்தக்கதொரு முதியவர். நைந்து போன தேகம். பழுப்பேறிய வெள்ளை வேட்டி, சட்டை. அவரைப் பார்த்ததும் அந்தக் கடை ஊழியர்கள் முகத்தை சுளித்தனர். ‘யாரோ வேண்டப்படாதவர் போல’ என்று நினைத்து நான் அதிகம் ஈடுபாடு காட்டாமல் அவர் கேட்ட கேள்விக்கு மையமாகத் தலையாட்டி வைத்தேன்.

“ராமஸ்வாமி கோயிலுக்குப் போணீங்களா? சிற்பங்கள்லாம் ரொம்ப அழகா இருக்கும். கோவிந்த தீக்ஷிதர் கட்டினது. தஞ்சாவூர் வீணையை அந்த வடிவத்துக் கொண்டு வந்தவர் அவருதான்...” என்று பேச ஆரம்பித்தார். விஷயம் தெரிந்தவராக இருக்கிறாரே என்று நானும் அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

“எனக்கு இசைக்கருவிகள்லாம் ரிப்பேர் பண்ணத் தெரியும். அதை வச்சுதான் ஜீவனம் நடத்திக்கிட்டு இருந்தேன். பழங்காலத்து வீணையெல்லாம் தொட்டு சரி செஞ்சிருக்கேன். ஹார்மோனியப் பெட்டியையும் பிரிச்சு பளிச்சுன்னு சத்தம் கேக்கற மாதிரி செய்வேன். கொஞ்சம் சங்கீதமும் தெரியும். சுத்துப்பக்கங்கள்ல இருக்கற கிராமங்களுக்குப் போய் பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பேன். இப்போல்லாம் யாரும் பாட்டு அவ்வளவா சொல்லிக்கறதில்ல.. இசைக்கருவிகளும் முந்தி மாதிரி எல்லார் வீட்டிலயும் இருக்கறதில்லை. எனக்கும் வயசாயிடுச்சு. அலைய முடியறதில்ல.. ஆனால் இன்னும் சாரீரம் போகல.. இன்னும் நான் பிரமாதமாப் பாடுவேன்”

தியாகராஜ பாகவதரின் பாடல் ஒன்றைப் பாடிக்காட்டினார்.

“கீர்த்தனை ஏதாவது பாடறீங்களா?” என்றேன்.

அப்படியெல்லாம் அந்தப் பெரியவரிடம் யாராவது கேட்டே நீண்ட நாட்களாகி இருக்க வேண்டும். கண்களில் உற்சாகம் மின்ன, தன்னுடைய பிசிறடிக்கும் குரலில், “நனு பாலிம்பா...” என்ற மோகன ராகக் கீர்த்தனையைப் பாடினார்.

அவர் பாடி முடித்ததும் சட்டைப் பையில் துழாவி பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ கொடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக அதை வாங்கிக் கொண்டு மறைந்து போனார்.

“The violin maker” புத்தகத்தைப் படிக்கும் வரை எனக்கு இசைக்கருவிகள் செய்யும் கலைஞர்களைப் பற்றியோ, அவற்றைப் பழுது பார்க்கும் கலைஞர்களைப் பற்றியோ எந்த கவனமும் இருந்திருக்கவில்லை. நான் கும்பகோணத்தில் சந்திக்க நேர்ந்த அந்த வீணை பழுது பார்க்கும் கலைஞரின் பெயரைக் கேட்கவோ, அவரை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென்றோ கூட எனக்குத் தோன்றவில்லை என்று நினைக்கும் போதெல்லாம் கூசிப்போகிறேன். சொந்த ஊரில் செல்வாக்கு இல்லாமல் சந்திக்க நேரும் புதியவர்களிடம் பழம்பெருமை பேசி அங்கீகாரம் எதிர்பார்க்கும் அக்கலைஞரின் நிலைமை ஒரு விதத்தில் நம் பாரம்பரிய இசை மற்றும் இசைக்கருவிகள் செய்யும் கலைஞர்களின் நிலைமையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

அந்தப் பெரியவர் என்னிடம் பாடிக்காட்டிய கீர்த்தனையின் ஆரம்ப வரிகளின் அர்த்தம் - “ராமா, என்னைப் பார்த்து ஆசிர்வதிப்பதற்காக என்னைத் தேடி நீ இத்தனை தூரம் நடந்தே வந்தாயா?!” உண்மையில் அவரைப் பார்த்து நான் சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகள் இவை.

( நன்றி: வார்த்தை, அக்டோபர் 2008 )

கட்டுரை பற்றி உங்க கருத்தை பின்னூட்டதில் சொல்லாம்....

14 Comments:

Sri said...

மிகவும் அருமையான கட்டுரை. மனது கணக்கிறது.

srinivasan said...

Thank you, Idlyvadai, for the article"isayai sethukkum sirpigal".My heart grew heavy and eyes turned misty when i finished reading the article.

srinivasan rajagopalan(dubai)

இலவசக்கொத்தனார் said...

இது போன்ற வித்தியாசமான கட்டுரைகளையும் தர வேண்டும். அருமையான கட்டுரை!

ராஜப்பா said...

கட்டுரை அருமை

Krish said...

We, Indians, never preserve any monuments. We never give importance to artist! Thats the sad story. I known't who has to take lead on this, but everyone one of us should take responsibility

Subbaraman said...

Excellent one.Thanks for posting this.

மடல்காரன் said...

Very Good article.
Obama wins election. Any IV punch post?

anbudan, Balu K

Anonymous said...

நல்லதொரு கட்டுரை

இதே போல இந்தப் பகுதியை தொடரவும்

கி அ அ அனானி

Bharath said...

Class

யோசிப்பவர் said...

Really a nice article IV!!

Sunny said...

Really nice one... good job.. keep going... writting method is something different and make interest to read.

Anonymous said...

Please share that Softcopy to me.please send it to tonagu@gmail.com

Nagarajan said...

Please share that softcopy. Please send it to tonagu@gmail.com

IdlyVadai said...

Natarajan you can take the softcopy from the blog itself.