பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 05, 2008

எது பெரிய பிரச்சனை ?

தமிழக தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். அறிக்கைகளை படித்தால் இவர்கள் பேசாமல் இருந்தாலே இலங்கை பிரச்சனை தீர்ந்துவிடும் போல் இருக்கிறது. கடந்த ஒருவார காலமாக ராமதாஸ் அறிக்கையும், கலைஞர் அதற்கு பதில் அறிக்கையும் பார்த்தால் நிச்சயம் இவர்களால் இலங்கை பிரச்சனை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.

இந்த வார கல்கியில் தலையங்கத்தின் கடைசி பகுதி எனக்கு இதில் 100% உடன்பாடு

இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களுக்குச் சமமாக உாிமைகள் பெற வேண்டும்; அவர் களுடைய துயரம் தீர வேண்டும் என்பதில் இரு
கருத்தில்லை. ஆனால், இது வன்முறையாலோ அதற்குத் துணை போகும் தமிழக அரசியலாலோ ஒருபோதும் நிகழாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து, விடுதலைப்புலிகளை ஆயுதம் துறந்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும். ராஜபட்சயவின் சொல் செயலுருப் பெறும் என்று உத்தரவாதம் பெற வேண்டும். இவை மூன்றும் ஒரு சேர நடக்க வேண்டும். இதில் தமிழக கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் இராது; ஆனால், ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.


கடந்த சில நாட்களாக ராமதாஸ் - கலைஞர் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் (படிப்பதற்கு வசதியாக கீழே போட்டிருக்கேன்). இலங்கை பிரச்சனை பற்றி இவர்கள் பேசவில்லை, ஆனால் இலங்கை பிரச்ச்னையை மையமாக வைத்து எல்லாவற்றையும் பேசியுள்ளார்கள்.
[ ராமதாஸ்
இலங்கையில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் எத்தகைய இன்னல்களுக்கு தமிழர்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்று பிரதமரிடம் மனு கொடுத்து முறையீடு செய்தோமோ அதே நிலைமை தான் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.

இலங்கை தமிழர்களை காப்பதற்கான முயற்சியில் இன்னமும் வெற்றிபெற முடியவில்லை. 40 ஆண்டு காலப்போர், இதற்கு 4 நாளில் தீர்வு காண முடியாது என்று சொல்லி நம்மை நாமே தேற்றிக் கொண்டிருக்கிறோம், இல்லை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி கடந்த 26-ந் தேதி சென்னை வந்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வகையில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார், திரும்பிச் சென்றார். அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

[ கலைஞர்

அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு பிரச்சினைகள் கிடப்பிலே போடப்பட்டு விடவில்லை என்பதற்கான அடையாளங்கள் தான், என்றைக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோ, அன்றைக்கே அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதும்- அதன் தொடர்ச்சியாக இலங்கை தூதுவரை அழைத்து மத்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும்- பிரதமர் இலங்கை அதிபருடன் தொலைபேசியில் பேசியதும்- மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தமிழகத்திற்கு அனுப்பி என்னுடன் பேச செய்ததும்- அனைத்து கட்சிகளின் சார்பில் இதுவரை நடைபெறாத அளவிற்கு சென்னை மாநகரத்தில் கொட்டும் மழையில் மிகப் பெரிய மனிதச் சங்கிலி நடைபெற்றதும் ஆகும்.

சென்னையில் தொடங்கி செங்கற்பட்டைத் தொடும் அளவிற்கு "கின்னஸ்'' புத்தகத்தில் இடம் பெறத் தக்கவகையில் நடைபெற்ற அந்த மனிதச் சங்கிலியில் பெய்கின்ற மழையிலே நனைந்தவாறு டாக்டர் ராமதாசும் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்ட நிகழ்வுமாகும்.

அது மாத்திரமல்ல- ராமேசுவரத்துக்கு நம்முடைய திரைப்படக் கலைஞர்கள் அணி திரண்டு சென்று அங்கே நடத்திக் காட்டிய பேரணியும், பொதுக் கூட்டமும் ஆகும்.

அது மாத்திர மல்ல நேற்றையதினம் (1-11-2008) கலையுலகின் அத்தனை நடிகர்களும் ஒன்று திரண்டு சென்னையிலே ஒரு நாள் முழுதும் உண்ணா நோன்பு இருந்ததும்- அந்த நிகழ்ச்சியிலே மட்டும் 45 லட்ச ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டதும் இலங்கை தமிழர்களுக்கான நடவடிக்கைகள் கிடப்பிலே போடப்பட்டு விட்டன என்பதற்கான சம்பவங்களா? இல்லவே இல்லை.

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கையில் இரண்டு வாரக் காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதும் ஒன்று!

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே, மத்திய அரசில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி விலகுவது பற்றிய தீர்மானத்திற்கு தங்களால் உடனடியாக சம்மதம் தெரிவிக்க இயலாது, டெல்லியிலே உள்ள தங்கள் தலைமையிடம் கேட்டுக் கொண்டு தான் சொல்லவேண்டுமென்று கூறி விட்டார்கள்.

அது போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலே வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாத நிலையிலே இருந்தார்கள். ஏன், தற்போது பேட்டி கொடுத்துள்ள டாக்டர் ராமதாசின் "தமிழ் ஓசை'' பத்திரிகையிலே தீர்மானத்தை வெளியிடும்போது கூட- தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மிகவும் எச்சரிக்கையாக மக்களவை உறுப்பினர்கள் என்று தான்வெளியிடப்பட்டது.

]

[ ராமதாஸ்

இலங்கை தமிழர்களுக்கு நிதி திரட்டல் என்பது மட்டுமே இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வாகாது. இந்த நிதி வசூல் பிரச்சினையை திசை திருப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உண்மையான நிவாரணம் அங்கே உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். கடந்த 14-ந் தேதி கோட்டையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளில் மிக முக்கியமானது. இந்த முக்கிய தீர்மானத்தின் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்த முக்கியமான அம்சத்தில் கோட்டை விட்டிருக்கிறோம்.

[ கலைஞர்
நிதி திரட்டல் பற்றியும் டாக்டர் ராமதாஸ் குறைபட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் பசியாலும், பட்டினியாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்- உணவு இல்லாமல், உடை இல்லாமல்- ஏன் குந்தக் கூட குடிசை இல்லாமல் இருப்பவர்களுக்கு நம்மாலான இந்த உதவியையாவது செய்யாமல் இருக்கலாமா என்ற எண்ணத்தோடு தான் அதுவும் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேதான் நிவாரண உதவிகளைக் செய்யும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம்.

ஆனால் அதற்கும் குறை கண்டால் என்ன தான் செய்வது? அந்த பணியிலே ஈடுபடாவிட்டால் அதை கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் நேரில் வந்த போது இந்திய அரசின் சார்பில் 800 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என்றும், தமிழக அரசும் அவ்வாறே சேகரித்து அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் நேரடியாக உதவி செய்யத் தான் போகிறோம். அதையும் எவ்வாறு வழங்குவது என்பதைப் பற்றி மத்திய அரசுடன் நமது தலைமை செயலாளர் பேசியிருக்கிறார்.

உணவுத்துறை சார்பில் எந்த அளவிற்கு அரிசி வழங்க இயலுமென்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் நிதி வசூல் நடைபெற்று வருகின்றது. திரைப்படக் கலைஞர்களும் நேற்று ஒரு நாள் உண்ணா நோன்பு நிகழ்ச்சியிலே பெரிய நடிகர்கள் முதல் அனைவரும் 45 லட்சம் ரூபாய்க்கு மேல் அறிவித்திருக்கிறார்கள்.

நடிகர் அஜீத், சுந்தர் சி, விவேக், நெப்போலியன், இளையராஜா, கருணாமூர்த்தி, இயக்குநர் ராம நாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, காவியக் கவிஞர் வாலி, நடிகைகள் நயன்தாரா, விஜய குமாரி, குஷ்பூ, நடன மாஸ்டர் கலா, ஆர்த்தி, கணேஷ்கர் போன்ற கலையுலகைச் சேர்ந்தவர்கள் என்னிடமே நிதி அளித்திருக்கிறார்கள்.

மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அனைத்து அலுவலர்கள் 85,355 ரூபாய் நிதியினை என்னிடம் அளித்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பிலும், திராவிடர் கழகம், எம்.ஜி.ஆர். கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதியநீதி கட்சி, ஜனநாயக முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகளும் நிதி அளித்துள்ளன. இதனை அனைவருமே வரவேற்கின்ற ஒரு நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திலே கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற முழு மனதோடு ஒப்புக் கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்- இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உறுதி என்று கேள்வி கேட்கிறார்.

நமது தீர்மானத்தில் தெளிவாக செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக அனுப்பப்படும் என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இலங்கை அரசு மூலமாக அனுப்புவோம் என்று குறிப்பிடவில்லை.

இது பற்றி எல்லாம் தொடர்ந்து மத்திய அரசோடு நமது அரசு; மணிக்கு மணி தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறது. என்னென்ன பொருட்களை அவர்களுக்கு வழங்கிட முடியுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

[ ராமதாஸ்

ஈழத் தமிழர்களின் துயரங்களைத் துடைப்பதற்காக நிதி திரட்டும் வேலையில் தமிழக அரசும், முதல்-அமைச்சரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதும், அதற்காக நிதி திரட்டுவதும் அவசியம் தான். உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் இதற்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அதே நேரத்தில் அது ஒன்றே நிரந்தர நிவாரணமாகிவிடாது. ஈழத் தமிழர்களுக்கு அமைதியும், சக வாழ்வும் நிரந்தரமாக அமைய வேண்டும். அதற்கு அங்கே சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். ஆனால், நிதி திரட்டல் என்ற இப்போதைய நடவடிக்கை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நமது முதன்மையான கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி நீண்ட விளக்கமளித்திருக்கிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தோம். இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இலங்கை அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேசினார். வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினார். சென்னையில் வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ராமேசுவரத்தில் திரைப்படக் கலைஞர்களின் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றன. சென்னையில் அனைத்து நடிகர்களும் ஒன்று திரண்டு உண்ணா நோன்பு இருந்தார்கள்.

இவையெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன என்பதற்கான சம்பவங்களா? இல்லவே இல்லை என்று முதல்-அமைச்சர் வாதிட்டிருக்கிறார். ஆனால், இவற்றால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இலங்கையில் சண்டை ஓய்ந்திருக்கிறதா? ஈழத் தமிழர்கள் அமைதியாக வாழும் சூழல் உருவாகியிருக்கிறதா? இல்லவே இல்லை. மேலும் இத்தகைய நடவடிக்கைகளெல்லாம் இன்றுமட்டுமா நடக்கின்றன.

]

]

[ ராமதாஸ்
போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி செயல்பட வைப்பதில் தோற்று போய்விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். கிழக்கு பாகிஸ்தானில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா எப்படி தலையிட்டதோ, அதைப்போல இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு இங்குள்ள 7 கோடி தமிழர்களுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. தலையிட வேண்டும் என்றால், ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்பதல்ல, இந்தியா எச்சரித்தாலே போதும். சண்டையை நிறுத்துங்கள் என்று அறிக்கை விடுத்தாலே போதும். போதனை செய்வதை விட்டுவிட்டு அறிவுறுத்த வேண்டும்.

[ கலைஞர்

மத்திய அரசில் எப்படி தி.மு.க. ஒரு அங்கமோ, அதைப் போலத் தான் பா.ம.க.வும் அதிலே ஒரு அங்கம். அவருடைய புதல்வரே அதிலே முக்கிய அமைச்சராகத் தான் இருக்கிறார்.

எனவே மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு என்னைப் போல அவருக்கும் உண்டு. மத்திய அரசிடம் என்னை விளக்கம் கேட்குமாறு டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். நான் விளக்கம் கேட்டதால் தான் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு என்று உள்ள அதிகாரங்களின் அடிப்படையிலே தான் அவர்களும் இயங்க வேண்டியுள்ளது.

[ ராமதாஸ்
இதனை மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள் என்று சொன்னால், பா.ம.க.வை நோக்கி கையை நீட்டுகிறார் முதல்-அமைச்சர். மத்திய அரசில் எப்படி தி.மு.க ஓர் அங்கமோ அதைப்போலத்தான் பா.ம.க.வும் ஓர் அங்கம், மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு என்னைப் போலவே அவருக்கும் உண்டு என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

பா.ம.க. மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியாக இருக்கலாம். ஆனால், மாநிலத்தில் யாருடைய ஆட்சி நடக்கிறது. டெல்லியிலிருந்து வருகிற வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி என்றாலும் சரி, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என்றாலும் சரி, யாரைச் சந்தித்துவிட்டுப் போகிறார்கள். தமிழகத்தின் முதல்-அமைச்சர் கருணாநிதியைத் தானே அவர்கள் சந்திக்கிறார்கள்.

தமிழகம் என்றால், தமிழக அரசு என்பது பொருள். அதன் அடிப்படையில் தான் முதல்-அமைச்சரைச் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். எனவேதான், தமிழகத்தின் சார்பில் நீங்கள் வலியுறுத்துங்கள் என்று சொல்கிறோம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது முதல், பல்வேறு அறிவிப்புகளுக்கெல்லாம் சொந்தம் கொண்டாடுகிற கருணாநிதி, இதில் மட்டும் பா.ம.க.வை நோக்கிக் கையை நீட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

[ ராமதாஸ்

"பல்வேறு அறிவிப்புகளுக்கெல்லாம் சொந்தம் கொண்டாடுகிற கலைஞர் இதில் மட்டும் பா.ம.க.வை நோக்கி கையை நீட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்றும் ராமதாஸ் கேட்டுள்ளார்.

[ கலைஞர்
எந்த அறிவிப்புக்கும் சொந்தம் கொண்டாட நான் தயாராக இல்லை. அப்படிக் கூறிக் கொள்வதும் கிடையாது. மற்றவர்கள் கூறுவதற்கு நான் பொறுப்பல்ல. பா.ம.க.வை நோக்கி கையை நீட்டுவதற்கும் நான் தயாராக இல்லை.
]
]

[ கலைஞர்
இன்னொரு நாட்டுப் பிரச்சினையிலே பக்கத்து நாடு ஓரளவிற்குத் தான் நேரடியாகத் தலையிட முடியும். அனைத்து கட்சி தீர்மானத்தில் இந்திய அரசு முன் வராவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று நிறைவேற்றினோம்.

ஆனால் இந்திய அரசு முன்வராமல் இல்லை. அவர்கள் முன்வரவில்லை என்று கூறி தமிழக தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் பதவி விலகி, மற்றவர்கள் விலகாவிட்டால், அப்போது மட்டும் தீர்மானம் தோல்வி இல்லை என்றாகி விடுமா? மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? நாம் இந்த அளவிற்கு தீர்மானம் நிறைவேற்றியதால் தான் மத்திய அரசு அதன் சக்திக்கேற்றவாறு உதவி வருகின்றது.

தீர்மானத்தில் கூறியவாறு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, மத்திய அரசும் கவிழ்ந்து விடுமேயானால் - அப்போது நிலைமை என்னவாகும்? இலங்கை அரசை இந்த அளவிற்குக் கூடத் தட்டிக் கேட்டு தமிழர்களுக்கு உதவிட முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா? இல்லையா? அல்லது டாக்டர் ராமதாஸ் கூறுவது போல அப்படியே கிடப்பிலே போட்டு விட்டதா?.

[ ராமதாஸ்

போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கையை இந்தியப் பேரரசு உடனடியாக மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று அக்டோபர் 14-ந் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அறைகூவல் விடுத்த முதல்-அமைச்சருக்கும், மத்திய அரசின் நிலையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா? இன்னொரு நாட்டுப்பிரச்சினையிலே பக்கத்து நாடு ஓரளவுக்குத்தானே, நேரடியாகத் தலையிட முடியும் என்று கேட்டு அடங்கிப் போக நினைக்கும் கருணாநிதிக்கும் இடையே எத்தனை இடைவெளி என்பதை தமிழர்கள் அனைவரும் நிச்சயம் எண்ணிப்பார்க்கத் தவறமாட்டார்கள்.

இடையில் அக்டோபர் மாதம் 17-ந் தேதி சென்னையில் செய்தியாளர்களுடன் ஒரு நேர்காணல் நடந்துள்ளது. இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் அண்டையிலே உள்ள நாடு குறுக்கீடு செய்ய முடியுமா? என்பது செய்தியாளர்கள் எழுப்பியிருக்கும் கேள்வி. ஏன், பங்களாதேஷ் எப்படி வந்தது? இது அந்த கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்.

[ கலைஞர்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது - மத்திய அரசின் அதிகார எல்லை முதல்வருக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறார். நன்றாகத் தெரியும். தெரிந்து தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல, பதவி விலகல் குறித்து வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் கூறாத நிலையில் நான் தான் அந்தக் கருத்தினை முதன் முதலாகத் தெரிவித்தேன்.

அப்போது கூட - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு எம்.பி., நாம் அனைவரும் பதவி விலகி விட்டால், மத்திய அரசு அங்கே இருப்பதே கேள்விக் குறியாகிவிடும், பிறகு யாரிடம் நம்முடைய வேண்டுகோளை வைப்பது என்றெல்லாம் கேட்டார். இருப்பினும் நாம் அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் காரணமே - அப்போதுள்ள சூழ்நிலையில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு பதவி விலக நேரிடும் என்று தான் கூறியுள்ளோம்.

அவ்வாறு நாம் தீர்மானம் நிறைவேற்றி அதனையொட்டி கழகத்தின் சார்பில் பதவி விலகல் கடிதங்கள் என்னிடம் தரப்பட்டதும் தான் இந்த அளவிற்கு வேகமாக, நம்முடைய மற்ற தீர்மானங்களை எல்லாம் ஏற்கக் கூடிய அளவிற்கும் போர் நிறுத்தம் என்ற தீர்மானத்தைக் கூட வலியுறுத்திக் கூறுவதற்கும் காரணமாக அமைந்தது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பங்களாதேஷ் உதாரணத்தை நான் சொன்னதையும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் உருவான போது அன்றைய சூழ்நிலையில் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மையை பெற்று யாராலும் கேள்வி கேட்க முடியாத தலைவராக இருந்தார். தற்போதுள்ள நிலைமை அப்படியா உள்ளது?
]
]

]

[ ராமதாஸ்
இனப்படுகொலை நடத்திய மிலோசுவிக் மீது ஐக்கிய நாடுகள் சபையின் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதைப் போல இலங்கையில் ஒரு லட்சத்திற்கு அதிகமான அப்பாவி தமிழர்களை கொன்று இனப் படுகொலை நடத்தி வரும் ராஜபக்சே மீதும் வழக்கு தொடருவதற்கு அனைத்து முகாந்திரங்களும் இருக்கின்றன. இப்படி வழக்கு தொடருவோம் என்றும், அதற்கான முயற்சியை ஐ.நா. சபை மூலம் மேற்கொள்வோம் என்றும் இந்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

அத்தகைய எச்சரிக்கைவிட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும். தேவைபட்டால் ஐ.நா.சபைக்கு தந்தி கொடுக்கும்படி கருணாநிதி சொல்ல வேண்டும்.

[ கலைஞர்

ஐ.நா. சபைக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று நான் சொல்ல வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். பிரதமருக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தவனே நான் தான். ஏன், அய்யா டாக்டர் எழுதியிருப்பதைப் போல 1983-ம் ஆண்டிலேயே ஐ.நா. மன்றத்திற்கு ஒரு கோடி கையெழுத்துக்களை இந்தியத் தமிழர்களிடமிருந்து பெற்று அதனை நேரடியாக வழக்கறிஞர் டி.பி.ராதாகிருஷ்ணன் மூலமாகவே அனுப்பி வைத்த அனுபவமே நமக்கு உண்டு.

]

[ கலைஞர்
தமிழ் மக்களிடம் பொதுவாக இந்த ஐயப்பாடுகள் எழும் என்பதற்காகவும், அந்த மக்களின் ஐயங்களைப் போக்கிட என்னிடமிருந்து விளக்கம் தரப்பட வேண்டுமென்ற நல்ல எண்ணத்தின் காரணமாகவும், டாக்டர் ராமதாஸ் இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவே நான் கருதிக் கொண்டு- இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்த ஒற்றுமையைக் கட்டிக் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள அனைத்து கட்சியினரையும், தமிழ் மக்களையும் வேண்டுகிறேன்.

[ ராமதாஸ்
இந்த விளக்கமெல்லாம் இங்கே நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல; இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் எதிர்பார்த்திருந்த ஓரளவு ஒற்றுமை இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒற்றுமையைக் கட்டிக்காப்போம் என்று முதல்-அமைச்சர் முன்மொழிந்துள்ளதை நான் வழி மொழிகிறேன்

[ கலைஞர்
பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசின் நீண்ட அறிக்கையிலே கூட இறுதியாக ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டுமென்று நான் முன் மொழிந்ததை வழி மொழிகிறேன் என்று கூறியிருப்பது பெரிதும் ஆறுதலைத் தருகிறது.

டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டதால் அவருக்கு பதில் சொல்ல நேரிட்டதே தவிர, அவருடைய அறிக்கைக்கு நான் பதில் தருவதும், எனக்கு அவர் பதில் தருவதும் வேண்டாத வேலை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, இங்கே ஒருவருக்கொருவர் பதில் கூறிக் கொண்டிருப்பது அல்ல.
]

]

]
.

எது எப்படியோ நாங்க கரண்ட் பிரச்சனையை மறந்துவிட்டோம் :-)

2 Comments:

வாழவந்தான் said...

கரண்ட் பிரச்சனையை மட்டுமா மறந்துட்டோம்???

அய்யா இட்லிவடை...
எங்கே மற்ற பிரச்சனைகளை ஒன்று, இரண்டு என வரிசைபடுத்து..

அப்பறம்.. இந்த அறிக்கைய எல்லாம் பாத்தா கலைஞர் குடுத்த கெடுவுக்குள்ள(2 வாரம்) போர்நிறுத்ததுக்கு இந்திய அரசு நிறையா முயற்சி எடுத்துடிச்சுனு தோனுது (இல்ல தோற்றத்தை ஏற்படுத்தியாச்சு)..
அதனால நம்ம எம்.பி எல்லாம் ராஜினாமா பண்ணாம நல்லாட்சிய(???) தொடருவாங்களா???

Anonymous said...

இட்லிவடை ,கல்கியின் தலையங்கத்தின் கடைசி பகுதியோடு தங்களுக்கு 100% உடன்பாடு வந்ததையிட்டு சந்தோசம். விடுதலைப்புலிகளை ஆயுதம் துறந்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி இலங்கை தமிழர்களில் அக்கறை உள்ளதாக சொல்லி கொள்ளும் யாருமே கேட்பதில்லை என்பது தான் கவலையானது.