பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 01, 2008

குமுதம் - தமிழர்களின் இதயத் துடிப்பு

எவ்வளவு பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது இருந்தாலும் படிக்க சுவாரசியமான இருப்பதால் இங்கே...

( உயிர்மை ஆகஸ்ட் 2008 இதலில் பிரபஞ்சன் குமுதம் அனுபவங்களை எழுதியது )

.....சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது. ஆசிரியரை முதன் முதலில் பார்க்கும்போது, 'ஹரி ஓம்' என்று சொல்லி வணங்குவதே குமுத மரபு. வணக்கம் என்பதுக்குப் பதில் ஹரி ஓம். நாங்கள் ஹரி ஓம் என்றதும் அவரும் ஹரி ஓம் என்று வணங்குவார். முதல் நாள் ஆகையால், ஆசிரியர் எனக்கு பகவத் கீதை-திருச்சி திருப்பராய்த்துறைப் பதிப்பு-ஒரு பிரதியும், ஒரு ரைட்டர் பேனாவும் அன்பளிப்பு தந்தார்.

குமுதத்தில் ஒரு நாள் இப்படித் தொடங்கும். எனக்கும் முதல் நாள் இப்படித் தொடங்கியது.

முதலில் ஆசிரியர், பகவத் கீதையின், முதல் தொடக்கப் பாடல்களில் ஒன்றான 'ஓம் பார்த்தாயா பிரதி யோதிதா, பகவதாம்.. நாராயணேனஸ்வயம்' என்று தொடங்கும் பிரார்த்தனைப் பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு பக்தி பாவத்தோடு பாடுவார். ஆசிரியர் குழு தாமும் சேர்ந்து பாடும். பாட வேண்டும். நானும் சில நாட்களில் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பிறகு, முந்தைய இடத்தில் நிறுத்தி இருந்த பகவத் கீதை பாடல் வரியிலிருந்து தொடங்கி ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்குவார். ஆசிரியர் கீதைமேல் மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு சுலோகமாக, முதலில் சமஸ்கிருதம், அதன் பிறகு தமிழ்ப் பொருள் முதலானவற்றைச் சொல்லி விளக்க உரை ஆற்றத் தொடங்குவார் ஆசிரியர். நாலைந்து சுலோகத்தைப் படித்துப் பொருள் சொல்லிக்கொண்டு வரும் போது ஆசிரியர் குழுவினர் இடையிட்டு ஐயங்களைக் கேட்டுக் கொள்ளலாம். ஐயம் கேட்பவனே சிறந்த சாதகன். பெரியவர்களில் யாரேனும் ஒருவர், கர்மத்தைப் பண்ணிப்பிட்டு பலனை எதிர்பாராமல் இருக்கிறது பெரியவாளுக்கு சரி. சின்னவாளுக்கு எப்படிப் பொருந்தும் என்பதுபோல் கேள்வி எழுப்புவாரெனில், ஆசிரியர் நிஜமாகவே சாட்சாத் பரமாத்மா ஆகவே மாறிவிடுவாரென எனக்குத் தோன்றும்படி, ஒரு பரவசத்துடனும், மந்தகாசப் புன்னகையுமாக அழகான விளக்கங்களைச் சொல்லத் தொடங்குவார். நாங்கள் அர்ஜுனர்கள் இல்லை. அவர் கிருஷ்ணராக இருக்க என்ன தடை?

இடையில் பதிப்பாளர் பார்த்த சாரதியும் வந்து சதசில் கலந்து கொள்வார்.

பகவத் கீதை முடிந்த பிறகு திருக்குறள் வாசிப்பு தொடங்கும். திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ் உரைப்பதிப்பு ஆகியவைகளுடன் திருக்குறள் படிக்கத் தொடங்குவார் ஆசிரியர். முதலில் ஒரு குறள். அதன் சுருக்கமான, அகன்ற பொருள். மொழி பெயர்ப்பில் அதன் அர்த்தம், ஆராய்ச்சி என்று வகுப்பு தமிழ முதம் சொட்டச் சொட்ட நடைபெறும். இதில் ஐயம், சந்தேகம் உள்ளவர்கள் ஆசிரியரிடம் தெளிவு பெறலாம். ஐயம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்.

திருக்குறள்களில் சில படித்து முடித்தபின், சில வேளைகளில் ஒரு பிரார்த்தனை இப்படி இடம்பெறும்.

தொல்காப்பியர், சங்கப்புலவர், திருவள்ளுவர் முதலாகப் பாரதி வரையிலான புலவர்கள் ஆசிர்வாதம் காரணமாகக் குமுதம் சர்க்குலேஷன் அடுத்த ஆண்டுக்குள் . . . லட்சம் கூட வேண்டும் . . .

ஒரு வழியாகப் பத்தரை மணியளவில் இறை வணக்கம், பக்தி வியன்யாசம் முடியும். அதன் பின் நித்திய அலுவல். குமுதம் புகைப்படக் கலைஞர் கொண்டுவந்த சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மேசைமேல் பரப்பப்படும். ஒரு மாதிரியான படங்கள். அட்டைக்கும், 36-ம் பக்கத்து மூலைக்குமான படங்கள். அந்தப் படங்களில் பெரும்பாலும் பெண்கள் பக்கவாட்டில் காணப்படுவார்கள். குறைந்தபட்ச ஆடைகளுடன் இருப்பார்கள். குனிந்தபடி, அப்படி இப்படித்தான். ஆசிரியர், பகவத் கீதை படித்த அதே 'ஒருமை' உணர்வோடு படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்.

அந்த நேரம் பல முறை அவர் முகத்தை நான் கவனித்து இருக்கிறேன். எங்கேயாவது, கேலி, கிண்டல், விகடம், நகை ஆகியவற்றின் ஒரு ரேகையாவது தென்படுகிறதா என்று கூர்மையாக நான் கவனித்து இருக்கிறேன். இல்லை.

நிஷ்காம்ய கர்மம் என்பது இது தானோ?
( நன்றி: உயிர்மை ஆகஸ்ட் 2008 )

[துகாராம் கோபால்ராவ் வார்த்தை இதழில் இதற்கு எதிர்வினையாக அக்டோபர் 2008 இதழில் நான்கு பக்கம் எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை இந்த வாரம் குமுதம் இதழ் அரசு பதில்களில் வந்துள்ளது.]


குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பியை விமர்சித்து ஒரு எழுத்தாளர் கடுமையாக எழுதியிருந்ததைப் படித்தீரா?


"ஒரு உண்மையான தமிழ்ப்பத்திரிகை என்றால் அது குமுதமாகத்தான் இருக்க முடியும். அது குடும்பத்தில் உள்ள சிறுவர்களிடம் இருந்து பெரியவர்வரை படிக்கக் கூடிய பத்திரிகை. ஆழத்தில் இந்திய தேசிய உணர்வும், தமிழ்க் கலாச்சார உணர்வும் கொண்ட பத்திரிகை. காமத்தையும் காதலையும் ஒதுக்காத பத்திரிகை. சுய கிண்டலையும், தமிழ் மக்களிடம் உள்ள இயல்பான நகைச்சுவை உணர்வையும் பரிணமிக்க வைத்த பத்திரிகை. நவீனத்தை அரவணைத்துக் கொண்ட, அதற்காகப் பழமையை இழக்காத , மூடநம்பிக்கைகளை கிண்டல் செய்யத் தயங்காத பத்திரிகை. பெண்களின் ஓவியங்களும், வண்ணப்படங்களும் தமிழ் கலாச்சாரத்தையோ அல்லது கீதை சொன்ன கிருஷ்ணனையோ இழிவுபடுத்தி விடுமா? பெண்களின் ஓவியங்களும் வண்ணப்படங்களும் இலக்கியத்தரமில்லாதவையா?

கீதை சொன்ன கண்ணன், காதலிலும் காமத்திலும் ஈடுபடக்கூடாது என்று சொன்னானா? அல்லது திருவள்ளுவர்தான் காமத்துப்பால் படிக்கக் கூடாதுஎன்று சொன்னாரா? எதனால் கீதையையும் திருக்குறளையும் படிக்கும் ஒருவர் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கவோ பிரசுரிக்கவோ கூடாது?

ஜனரஞ்சக இலக்கியம் ஒரு ஜனநாயக இலக்கியம். மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதனைக் கொடுப்பதோடு, அதோடு சேர்ந்து மிகச் சிறிய அளவில் எல்லைகளை விஸ்தரித்துக் காட்டும் இலக்கியம். அதனாலேயே குமுதம் ஆசிரியர் தன்னை மக்களில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

குமுதம் இதைத்தான் பிரசுரிக்க வேண்டும் என்று சொல்வது கலாச்சார பாஸிஸம். குமுதத்தைப் பிரதி எடுக்க முயற்சி செய்து பல பத்திரிகைகள்தோல்வியுற்றதும், அதன் தனித்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாகும். குமுதம் போன்ற ஜனரஞ்சக கலாச்சாரத்தின் இடையீடும், தொடர்ந்த இருப்பும்தான் நமது நாட்டை ஜனநாயக நாடாக வைத்திருக்கும். இவற்றிற்கு எதிரான வெறுப்பு வளர்த்தெடுக்கப்பட்டால் நாம் சீனாவாகவோ, சவூதி அரேபியாவாகவோ மாறி விடக்கூடும்.'' (துகாராம் கோபால்ராவ் எழுதிய கட்டுரை `வார்த்தை' சிற்றிதழிலிருந்து)

( நன்றி: குமுதம், வார்த்தை )
[வார்த்தை இதழ் கட்டுரை முழுவதும் போட ஆசை தான், ஆனால் 4 பக்கமும் டைப் அடிக்க எனக்கு பொறுமை இல்லை. யாராவது அனுப்பினால் போடுகிறேன் :-)]

குமுதம் அட்டையில் எழுதியிருப்பது- தமிழர்களின் இதயத் துடிப்பு - பிரபஞ்சன் கட்டுரையை படித்து அதிகமாக துடித்தது என்று நினைக்கிறேன் :-)

2 Comments:

Sampath said...

சூப்பரப்பு .....

வல்லிசிம்ஹன் said...

பிரமாதம். நோ கமெண்ட்ஸ்:)