பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 18, 2008

இந்து முன்னணியை தடை செய்தால் வரவேற்பேன் - ராமகோபாலன்

ஒரிஸா, கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் சில இடங்களில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது விஷமிகள் சிலர் கல்லெறிந்தனர். ``பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் கலைஞர் எச்சரித்தார்.``இப்பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி, இந்து முன்னணி அமைப்பைத் தடை செய்து, என்னைக் கைது செய்து சிறையிலடைக்க சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்'' என்று கலைஞர் மீது பகீர் புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், இந்து முன்னணியின் மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.

இந்து முன்னணியைத் தடை செய்யப் பார்க்கிறார் என்று எதை வைத்து கலைஞர் மீது பழி போடுகிறீர்கள்?

``கூட்டணியை விட்டு ஒரு கட்சி பிரிந்து சென்றால் அவர்களை மிரட்டும் நோக்கில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது கலைஞருக்கே உரிய கைவந்த கலை. ஒரிஸா, கர்நாடகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் விழுப்புரத்தில் கிறிஸ்துவர்களின் கல்லறைத் தோட்டத்தில் யாரோ கல்லெறிந்து தாக்கினார்கள் என்று சொல்லி, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலரைக் கைது செய்தார்கள்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியவர், அந்தப் பகுதி தி.மு.க.வைச் சேர்ந்த வார்டு மெம்பர் கண்ணன் என்று பின்னர் தெரியவந்தது. அதே போல் சென்னை, திருமங்கலத்தில் ஒரு சர்ச்சில் கல்லெறிந்தார்கள் என்று எங்கள் அமைப்பினர் மீது புகார் கூறப்பட்டது.

அதைச் செய்தவர்கள் அந்த சர்ச்சில் வேலை செய்தவர்தான் என்று தெரியவந்தது. அந்த சர்ச் பாதிரியாரைப் பழிவாங்கும் நோக்கில் கல்லெறிந்து இருக்கிறார், அவர். அந்தச் சம்பவம் நடந்ததும் `முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் இணைத்து இந்து முன்னணியினரை எதிர்த்துப் போராட்டம் நடத்துவேன்' என்று கூறிய அந்தப் பாதிரியார், ஒரு கிறிஸ்துவர்தான் அதைச் செய்தார் என்று தெரிந்ததும் மௌனமாகிவிட்டார்.

ஓசூர் அருகே ஒரு கிராமத்திலும் இதே போல் சர்ச் மீது தாக்குதல் நடத்தியது ஒரு கிறிஸ்துவர்தான் என்று தெரியவந்துள்ளது. கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்களில் இந்து முன்னணியைக் கோத்துவிடும் வேலையில் கம்யூனிஸ்டுகளும் திராவிட கழகத்தினரும் ஆளும் கட்சிக்குத் துணையாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, `சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் மதவாத அமைப்புகளைத் தடை செய்வோம்' என்று கனிமொழி மிரட்டுகிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்து முன்னணி அமைப்பைத் தடை செய்ய கருணாநிதி சதித் திட்டம் தீட்டியிருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.''

கலைஞருக்கும், உங்களுக்கும் அப்படி என்ன தனிப்பட்ட விரோதம்?

``ஹிந்து மத விரோதி கருணாநிதி. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்து மதக் கடவுளை கிண்டல் செய்யாமல் அவரால் தூங்க முடியாது. ஹிந்துக்கள் தாக்கப்பட்டாலும், கோயில் நிலத்தை யாராவது அபகரித்தாலும் குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு, இந்து முன்னணிதான். ஹிந்துக்களுக்கு யாரும் பரிந்து பேசுவதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியாது. பெங்களூரூ, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, அகமதாபாத் என முக்கிய நகரங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களால் இஸ்லாமிய பயங்கரவாதம் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. இந்த நிலையில், இஸ்லாமியரின் ஓட்டு வங்கியைக் குறி வைத்து, இந்து முன்னணிக்குத் தடை விதிக்கப் பார்க்கிறார், கருணாநிதி.''

அப்படியென்றால் ஒரிஸா, கர்நாடகத்தில் நடக்கும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகிறீர்களா?

``ஒரிஸாவில் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த லக்ஷ்மணானந்தா சுவாமிகள் கொல்லப்பட்டதுதான் (அதைச் செய்தது தாங்கள்தான் என்று மாவோயிஸ்டுகள் கூறிய போதிலும்) கிறிஸ்துவர்கள் மீதான வன்முறைகளின் தொடக்கம். வன்முறையை யார் செய்தாலும் அது தவறானதுதான். அதே சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, காளி, கிருஷ்ணன், ராமர் போன்ற ஹிந்து கடவுள்களை ஒழுக்கக் கேடானவர்களாகச் சித்திரிக்கும் போக்கை என்னைப் போன்ற வயதானவர்கள் வேண்டுமானால் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், இளைஞர்கள் இதுபோன்ற அவதூறுகளை சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

ஒரிஸாவில் நடந்த வன்முறைகளில் 12 ஹிந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டன. அவற்றைப் பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இவ்வளவு ஏன்? கர்நாடகத்திலும், ஒரிஸாவிலும் நடப்பது பா.ஜ.க. அரசு என்பதால், வன்முறையைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைப்போம் என மத்திய அரசு மிரட்டுகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வன்முறைகளே நடப்பதில்லையா? விவசாயிகளின் நிலங்களை அபகரித்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்கத்தில் நடக்காத வன்முறைகளா?''

ஒருவேளை இந்து முன்னணி அமைப்புக்குத் தடை விதித்தால் என்ன செய்வதாக உத்தேசம்?

``இந்து முன்னணி அமைப்பைத் தடை செய்தால், அதை வரவேற்போம். அதன் மூலம் எங்கள் அமைப்புக்குக் கூடுதல் பாப்புலாரிட்டிதான்(!) கிடைக்கும். இந்த அமைப்பை வேண்டுமானால் தடை செய்யலாம். எங்கள் கொள்கையை யாராலும் தடை செய்ய முடியாது. தி.மு.க. அரசின் கைதுச் சம்பவங்களால் ஆத்திரம் அடைய வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மின்தடையால் தமிழகமே இருண்டு கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு நான்கு கிலோ அரிசி போட்டாலும், கருணாநிதியால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்கிற நிலையில், அரசியல் லாபத்திற்காகவும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கைப்பற்றவும் இந்து முன்னணியைத் தடை செய்ய முயல்கிறார்.''

கிறிஸ்துவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும் உங்களது போக்கால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதே?

``அற்புத எழுப்புதல் கூட்டங்கள் என்ற பெயரில் ஊமைகளைப் பேச வைக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; காது கேளாதவர்களை கேட்க வைக்கிறோம் என்கிறார்கள். இதற்காக பணம் கொடுத்து ஆட்களைத் தயார் செய்து, பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். இது உண்மையென்றால், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளே இருக்கக் கூடாது அல்லவா? இந்தியாவில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான `மேஜிக் மெடிசன்' தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மோசடி நடக்கிறது. ஹிந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை எதிர்த்துப் பேசும் கருணாநிதி, கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களில் உள்ள இதுபோன்ற மூடப்பழக்கங்களைக் கண்டிப்பாரா? மதமாற்றம் தான் வன்முறைக்கு வித்திடுகிறது என்பதுதான் எங்களுடைய வாதம்.''

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதற்கான ஆதாரம் கம்பராமாயணத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறதே?

``மத்திய அரசின் அறிக்கை ஒரு புளுகு மூட்டை. அப்படியொரு கருத்து ராமாயணத்தில் இல்லை. இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ராமாயணத்தை எழுதிய பத்திரிகையாளர் சோ கூட ராமர் பாலத்தை ராமர் இடித்ததற்கான ஆதாரம் இல்லை என்று மறுக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த பச்சோரி கமிஷன் ஆய்வு நடத்தி வரும் நிலையில், இப்படியொரு அறிக்கையைக் குறுக்குவழியில் தாக்கல் செய்திருக்கிறார்கள். முன்பு `ராமரே இல்லை' என்று அவசர அவசரமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து அதை திரும்பப் பெற்று அவமானப்பட்டதை மத்திய அரசு மறந்துவிட்டது போலும். மொத்தத்தில் தி.மு.க.வை திருப்திப்படுத்த இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது'' என்று முடித்துக் கொண்டார், ராம.கோபாலன்.

( நன்றி: ரிப்போட்டர் )

2 Comments:

Sakthi said...

*****///அற்புத எழுப்புதல் கூட்டங்கள் என்ற பெயரில் ஊமைகளைப் பேச வைக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; காது கேளாதவர்களை கேட்க வைக்கிறோம் என்கிறார்கள். இதற்காக பணம் கொடுத்து ஆட்களைத் தயார் செய்து, பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். இது உண்மையென்றால், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளே இருக்கக் கூடாது அல்லவா? இந்தியாவில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான `மேஜிக் மெடிசன்' தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மோசடி நடக்கிறது. ஹிந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை எதிர்த்துப் பேசும் கருணாநிதி, கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களில் உள்ள இதுபோன்ற மூடப்பழக்கங்களைக் கண்டிப்பாரா? மதமாற்றம் தான் வன்முறைக்கு வித்திடுகிறது என்பதுதான் எங்களுடைய வாதம்.///*****

charmlee said...

அந்த நர்ஸ் கர்ப்பழிக்கப்பட்டதுகூட பொய்யான செய்தியாக இருக்ககூடும் -- ஜபுவாவில் நடந்தது போல.
. அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை !
எல்லாம் அந்த ராமனுக்கே வெளிச்சம் !