பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 06, 2008

துரோகி ! - பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி கண்டனம்

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி கண்டனம். நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையின் ஒரு பகுதி...

கேள்வி :- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை நீங்கள் எடுத்துச் சொன்னவுடன், அதற்கு அவர் அளித்த அநாகரிகமான பதிலை வேறு எந்த ஏடும் வெளியிடாத நிலையிலே ஒரேயொரு ஏடு மட்டும் அதனை வெளியிட்டிருக் கிறதே?

பதில்:- "துரோகி''யின் பதில் மற்றொரு "துரோகி'' ஏட்டிலே வெளிவருவது தானே பொருத்தமாக இருக்கும். பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தகைய துரோகி என்பதை ஏ. கோவிந்தசாமி மரணப் படுக்கையில் கழக முன்னணித் தலைவர்களிடம் கூறியதைப் பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன். அவர் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்த போது, செய்த மற்றொரு அநாகரிக செயலுக்கான உதாரணம் - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழா நடைபெற்ற போது, அந்தச் சிலைக்குக் கீழே நின்று அண்ணா, நான், எஸ்.எஸ். வாசன், திலீப் குமார், ஏ.எல். சீனிவாசன், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அது அனைத்து ஏடுகளிலும் அப்போது வெளிவந்தது.

பிறகு சில ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அமைப்பாளராகக் கொண்டு ஒரு மலர் தயாரிக்கப்பட்டபோது, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவிலே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்த மலரிலே வெளியிட்டார்கள்.

அப்போது அந்தப் புகைப்படத்திலே இருந்த என்னுடைய உருவத்தை மட்டும் மிகுந்த சிரமத்தோடு கத்தரிக்கோலால் வெட்டி விட்டு, மற்றவர்களின் புகைப் படத்தை ஒட்டி அந்த மலரிலே வெளியிடச்செய்த யோக்கிய சிகாமணிதான் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அவர் செய்த இந்தத் தில்லுமுல்லுவும் அப்போதே ஏடுகளில் வெளிவந்து, அன்றைய முதல்- அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரே இவரை அழைத்து கடிந்து கொண்டதும் உண்டு. அவரது நண்பர்களே அவரை "குடிலன்'' என்றும், "சகுனி'' என்றும், "ஆந்திராவின் பாஸ்கர ரெட்டி'' என்றும் தான் அழைப்பார்கள். "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது'' என்று சொல்வார்களே, அதைப்போல இவர் எங்கே சென்றாலும் அந்தக் கதிதான் என்றும் அவர்களே கூறுவார்கள்.

ஐ.நா.வில் அவர் பேசியதை நான் ஏதோ தவறாக வெளியிட்டு விட்டேன் என்று அவர் சொல்லி யிருக்கிறார். அவருடைய பேச்சு 22-10-1983 தேதிய "தினமணி'' பக்கம் 4இல் வெளிவந்திருப்பதை அவரே எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


பன்ருட்டி அப்படி என்ன தான் பேசினார் ? யாருக்காவது தெரியுமா ?


பன்ருட்டி என்ன பேசினார் ?
இன்றைய தலைமுறையை திசை திருப்ப, பழைய சம்பவங்களை திருத்தி, நினைத்ததை எல்லாம் எழுதுவது நெஞ்சுக்கு நீதியாகாது’ என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஐ.நா. சபையில் நான் பேசியதை முதல்வர் கருணாநிதி திரித்து வெளியிட்டிருக்கிறார். ஐ.நா. சபையில் பேசுவதற்கு சில வரைமுறைகள் உண்டு. ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்னையில், இன்னொரு நாடு தலையிடக் கூடாது.
இருப்பினும், இலங்கையில் இருந்து அகதிகள் அன்று இந்தியாவிற்கு வந்ததால், அதை சாக்காக வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்னை எழுப்பப்பட்டது. அகதிகள் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னையை எழுப்ப நுழைவாயிலாக பயன்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர் படுகொலை பற்றி குறிப்பிட்டு, இலங்கைத் தமிழர்கள் முழு சம உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும், அவர்களுடைய பாதுகாப்புக்கும், நியாயமான உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் நம்பத்தகுந்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தினேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. சபையில் 21-10-1983ம் தேதி நான் பேசியதில், இடையிலே ஒரு சில வாக்கியங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, கருணாநிதி இப்பொழுது குறை சொல்கிறார். கருணாநிதியை பிஞ்சிலேயே பழுத்தவர் என்று அண்ணா சொன்னதைத்தான் இது நினைவுபடுத்துகிறது.
ஐ.நா. சபையில் இலங்கை அரசுடன் நேரடி விவாதத்தில் தமிழக அரசு ஈடுபட வழிவகுத்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, நான் டெல்லி திரும்பியதும் பாராட்டியதும், எம்.ஜி.ஆர் பாராட்டியதும் தமிழ்நாட்டின் வரலாறு. பழைய உண்மை சம்பவங்களை திருத்தி, இன்றைய தலைமுறையை திசை திருப்ப, கருணாநிதி நினைத்ததை எல்லாம் எழுதுவது நெஞ்சுக்கு நீதியாகாது. தூங்காது செயல்படும் அவரது அரசின் லட்சணம் மக்களுக்கு மின்சார வசதி செய்து தருவதிலேயே தெரிகிறது.
( நன்றி: தினகரனில் எங்கே வந்திருக்கிறது என்று சொன்ன வெண்பூவிற்கு நன்றி )

2 Comments:

வெண்பூ said...

தினகரன் இ பேப்பர் (அல்லது ப்ரிண்ட்டர் பேப்பரில்) அக்டோபர் 5ம் தேதி இதழின் 9ம் பக்கம் பார்க்கவும். :)))

Anonymous said...

ஆமாமா அவரும் துரோகிதான் நீங்களும் துரோகிதான்...