பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 27, 2008

போதுமடா டில்லி ! - கடுகு

எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்.

தீபாவளி ஸ்பெஷலாக எழுத்தாளர் கடுகு( அகஸ்தியன், பி.எஸ்.ரங்கநாதன்) எழுதிய 'போதுமடா டில்லி ! - நகைச்சுவை கட்டுரை கீழே...

போதுமடா டில்லி ! - கடுகு

நான் டில்லியில் சுமார் 40 வருஷங்கள் இருந்தேன். இதை ஏதோ மாபெரும் சாதனை மாதிரி பெருமை அடித்துக்கொள்கிறேனே என்று கேட்காதீர்கள்! டில்லியில் இருந்த போது நான் பட்டபாட்டைச் சொன்னால் ஒரே மூச்சில் நாலு எபிசோட் கஸ்தூரி, மெட்டி ஒலி, ஆனந்தம் பார்த்த மாதிரி உங்கள் கண்ணில் நீர் ஆறாகப் பெருகும்! எழையின் சிரிப்பில் இறைவனைக் காணாதவர்கள் கூட என் கண்ணீரில் சிரிப்பைப் பார்ப்பார்கள்!

சரி, விஷயத்துக்கு வருகிறேன். டில்லியில் இருந்த போது தபால்காரரைக் கண்டால் எனக்கு அலர்ஜி. யார், என்ன உதவி கேட்டு எழுதப் போகிறார்களோ என்ற பயம் தான்! டில்லியிலிருந்து இன்ன சாமான்கள் வாங்கி அனுப்பு என்று கேட்பதற்கு வரைமுறையே கிடையாது.

மோடா, ரொட்டிக்கல், மண்கிண்ணம் செட், மடக்குக் கட்டில், ஒன்றரை பேண்ட் டிரான்ஸிஸ்டர் என்று பல பொருள்கள் மீது சென்னைவாசிகளுக்கு மோகம் இருந்ததன் விளைவு எனக்கு செலவு, அலைச்சல், சோகம். போதாதென்று கெட்ட பெயரும் வந்துவிடும்.

''வாங்கி அனுப்பு. கிடைத்தவுடன் பணம் அனுப்புகிறேன்' என்பார்கள். நானும் அவர்கள் கேட்பதை வாங்கி அனுப்புவேன். ஆனால் இதுவரை யாரும் பணம் அனுப்பியதே கிடையாது. அவர்கள் ஊரில் வங்கி ஸ்ட்ரைக் விடாமல் நடந்து கொண்டிருக்கிறதோ என்னவோ! எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன்.

சில பேர் "என்னப்பா, டிரான்ஸ்சிஸ்டர் வாங்கி அனுப்பி இருக்கறே? திருச்சி ஸ்டேஷன் சரியாகவே வரவில்லை... ஒரு சாமான் வாங்கினா பார்த்து வாங்கணும்னு தெரிய வேண்டாமா? ...ஹும்" என்று சலிப்புடன் கடிதம் எழுதுவார்கள். அதன் பிறகு பணம் கேட்டு எழுதுவதற்கு நான் என்ன பைத்தியக்காரனா ?
+ + +

சில கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கும். "அன்புள்ள நண்பனுக்கு, என்னை உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முப்பது வருஷத்துக்கு முன்பு உன்னோடு கோலி விளையாடின கோபால் எழுதுகிறேன். அடுத்த மாசம் டில்லிக்கு வருகிறேன். ஹரித்வார், சிம்லா எல்லாம் போகணும். நான் பதினேழாம் தேதி சென்னைக்கு வர நாலு டிக்கட் ரிசர்வ் பண்ணிடு. நடு பர்த் வேண்டாம். கடைசி பர்த் வேண்டாம். பாத்ரூம் போறவங்க வரவங்க. கதவு திறந்து டமால்னு மூடற சப்தம், டிக்கெட் இல்லாத ஆக்கிரமிக்கறவங்க தொல்லை எல்லாம் இருக்கும். முடிந்தால் கிச்சன்-கார் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் ரிசர்வ் பண்ணவும்!... 17'ம் தேதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள், இரண்டு நாள் முன்னே பின்னே வாங்கிவிடு. அப்பறம் ராஷ்டிரபதிபவன், பார்லிமெண்ட் போய்ப் பார்க்க பாஸ் எல்லாம் வாங்கிவைத்துவிடு என்று ஏதோ ஹோட்டலில் "தோசை முறுகலாக இருக்கட்டும்; சாம்பார் வேண்டாம், சட்னி மட்டும் போதும்" என்று ஆர்டர் கொடுப்பது போல எழுதுவார்கள்! ஆனால் பணத்தை பற்றி மறந்தும் கூட எழுத மாட்டார்கள். (அல்லது எழுதுவதற்கு ஞாபகமாக மறந்துவிடுவாகள்.)

ஏண்டா, சின்ன வயசில் கோபாலுடன் கோலி விளையாடின பாவத்தைச் செய்தேனோ என்று விதியை நொந்துக்கொண்டு, எதைச் செய்யாவிட்டாலும் ரிடர்ன் டிக்கட்டை, நாலுமணி நேரம் கியூவில் நின்றாவது வாங்கிவைத்து விடுவேன். ஆரம்ப நாட்களில் அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு பதிவு செய்து வந்தேன். பின்னால் புத்திசாலித்தனம் வந்ததால் 'முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை' என்று எழுதுபவர்களுக்கு இரண்டு நாள் முன்னேயே திரும்பும்படி நான் ரிசர்வ் செய்ய ஆரம்பித்தேன். அவர்கள் கூடுதலாக இரண்டு நாள் இருந்தால், எனக்கு தானே கூடுதல் செலவு, தொல்லை மற்றும் அலைச்சல். அவர்கள் டில்லிக்கு வந்த பிறகு சாந்தினிசௌக், கரோல் பாக், சரோஜினி நகர் மார்க்கெட்,செங்கோட்டை என்று பல இடங்களுக்கு அழைத்து போய் நான் பட்ட அவதிகளைச் சொன்னால் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்!

+ + +

சரி, நண்பர்களை தட்டி கழித்துவிடலாம், உறவினர்களை எப்படி சமாளிப்பது? பல சமயம் கடிதங்களுக்குப் பதிலே போட மாட்டேன். செல் போன் இல்லாத பொற்காலம் அது. இல்லாவிட்டால் தப்பித்திருக்க முடியுமா? ஆனால் மாமனார் கடிதம் போட்டால் அதை ஒதுக்க முடியுமா?

ஒரு சமயம் என் மாமனார் டில்லிக்கு வந்திருந்தார். சாந்தினிசௌக் சண்டே மார்க்கெட் மிகவும் பிரபலம். டில்லிக்குச் சுற்றுப்பயணம் வருபவர்கள், சாந்தினிசௌக் மார்க்கெட்டில் சூப்பராய் காட்சி அளிக்கும் - ஆனால் உண்மையிலேயே சர்வ அடாஸ் பொருளை- வாங்கி ஏமாறுவார்கள். தாம் பெற்ற ஏமாற்றம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கையின்படி மற்றவர்களிடம் தாங்கள் வாங்கிய பொருளை பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அவர்கள் வாங்கிய பொருளை பற்றி பெருமை அடித்துக்கொள்ள முடியுமே தவிர உபயோகிக்க முடியாது!

சாந்தினி சௌக்கிற்கு போகாவிட்டால் ஏதோ தெய்வ குற்றம் என்கிற மாதிரி இரயிலைவிட்டு இறங்கியதும் இறங்காததுமாக என் மாமனார் 'மாப்பிளை, முதல் வேலையாக என்னை சாந்தினிசௌக் அழைத்து போங்க. மற்ற இடமெல்லாம் பார்த்தாலும் ஒன்று தான்,பார்க்காவிட்டாலும் ஒன்று தான்' என்றார். அவ்ர் சொன்னதை நான் மனைவியிடம் சொல்லிவிட்டு "இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கே அழைத்துக்கொண்டு போகிறேன் என்ன வேண்டுதலோ என்னவோ!" என்று சொன்னேன்.

"ஏன், உங்கமாவை அழைச்சிண்டு போனபோது இப்படி கேட்கலை. உங்க சித்தப்பா பொண்ணு பயங்கர பாமா, பெரியப்பா பிள்ளை 'ரம்மி' ராமசாமி, உங்க அக்கா பேரன் 'வால்' வரதுக்குட்டியை அழைச்சிண்டு போனீங்களே, அதெல்லாம் அவங்க வேண்டுதலா, இல்லை உங்க வேண்டுதலா?" என்று ஆரம்பித்து என் அருமை மனைவி கமலா சொன்ன பழிப்புரையை பொழிப்புரையாக எழுதினாலும் இக்கட்டுரை குறுநாவல் அளவிற்கு வளந்துவிடும்!
+ + +

இடம்: சாந்திசௌக். மாமனாரும் வாய் செத்த மாப்பிள்ளையான நானும் நடைப்பாதைக் கடையில் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்

"மாப்பிளை, இந்த ஏர் -பேக் நல்லா இருக்கு. இதுமாதிரி கிட்டன் வாங்கிண்டு வந்தான். என்ன விலை கேளுங்கோ" என்றார் மாமனார். அவருக்கு ஹிந்தி தெரியாது என்பதாலும், அந்தப் பொருளுக்கு விலை படிந்தால் பணம் கொடுக்க வேண்டியது நான் என்பதாலும் விலை கேட்க்கும்படி சொன்னார். "ஏக் ஸௌ பச்சாஸ். ஏக் தாம்" என்று கடைக்காரர் சொல்லிவிட்டு, காதில் வைத்திருந்த பீடியை எடுத்து புகைக்க ஆரம்பித்தான்.

"என்ன சொன்னான்? ஒரு இழவும் புரியலையே" என்றார் மாமனார்
கொஞ்சம் ஜாஸ்தியாக சொல்ற மாதிரி இருக்கிறது 150 ரூபாய் சொல்கிறான் என்று பயந்து பயந்து சொன்னேன். என்னவோ நான் தான் அதிக விலை சொல்லுவது போல் நினைத்துக்கொண்டு
என் மாமனார் "என்னது 150 ருபாயா ? கிட்டன் 30 ருபாய்க்கு வாங்கிண்டு வந்தான்..."என்றார் மாமனார்

"எப்போது" என்று கேட்கவில்லை. மாமனார் தொடர்ந்து "சரி போகட்டும். விலைவாசி எல்லாம் ஏறிண்டே இருக்கு. ஒரே விலை கேளுங்கோ, 38 ரூபாய்க்கு தருகிறானா என்று" என்றார்.

இதை கேட்டதும் என் நாக்கு உலர்ந்துவிட்டது வாயை திறக்க முயற்சித்த போது என் முதுகில் யாரோ டின் கட்டுவது போல் பிரமை ஏற்பட்டது!

முற்பகல் அவரது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால், இப்போது பிற்பகல் விளைகிறது! விதியை நொந்துக்கொண்டு மெதுவாகக் கடைக்காரரிடம் "ஒரே விலை கேட்க சொல்லுகிறார். 35 ரூபாய்க்கு தரமுடியுமா?" என்று ஹிந்தியில் கேட்டேன். உடனே கடைக்காரர் தன் மூன்றாவது கண்ணை திறந்துக்கொண்டு பேச... அதாவது கத்த ஆரம்பித்தார்.
"என்னையா நான் என்ன திருடிக் கொண்டுவந்த பொருளையா விக்கறேன்? உனக்கு நாக்குல நரம்பு இருந்தா இப்படி கேட்பியா ? மூளை, கீளை இருக்குதா? சரியான பைத்தியக்காரனா இருக்கே. சாவுகிராக்கி" என்பது போன்ற பல ஹிந்தி வசவுகளை மளமளவென்று அடுக்கி என்னை வைது தீர்த்தான்
"மாப்பிளை, என்ன சொல்றான்?" என்று மாமனார் கேட்டார்
"கொடுக்க முடியாதாம். திட்டறான்."
"என்ன திட்றான்? காரே புரே என்று ஹிந்தியில் ஏதோ கத்தினான். புரியலையே!"
விதி! அவனிடம் வாங்கிய திட்டுகளை செந்தமிழில் மொழிபெயர்த்து சொன்னேன்!
"அவன் திட்டறான், முட்டாள், அயோக்கியன் சாவுகிராக்கி, கஸ்மாலம்னு"
"என்னது நாலு திட்டுதானா? அவன் ஐந்து சொன்னா மாதிரி இருந்தது" என்று மாமனார் சொன்னார். மாப்பிளை வாங்கிய திட்டுகளை முழுமையாக தெரிந்துகொள்ளுவதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம்! விட்டு போன திட்டை சொன்னதில் அவருக்கு முகத்தில் திருப்தி ஏற்பட்டது!
சட்டென்று முகத்தை கடுமையாக்கிக்கொண்டு, "அவன் அப்படி திட்டினதும், பதிலுக்கு அவன் கிட்ட "ஏண்டா, 30-40 ரூபாய் சாமானுக்கு 150 ரூபாய் கேட்கிறது கொள்ளை இல்லையான்னு' உறைக்கிற மாதிரி கேட்கறது. ஹும், உங்களுக்கு ஒண்ணும் பவிஷு போறாது" என்றார். அதை தொடர்ந்து அவர் செய்த அர்ச்சனைகளை எல்லாம் எழுதி என்னை அவமானப் படுத்திக் கொள்ளப்போவதில்லை!

ஏர் பேக் வாங்காமல் ஊருக்கு போய்விட்ட மாமனார் ஒரு வாரம் கழித்துக் கடிதம் எழுதினார். "மாப்பிளை, அந்த ஏர் பேக் இங்கே 200 ரூபாய்க்கு விற்கிறது. அதனால்
அவன் சொன்ன 150 ரூபாய் பரவாயில்லை. ஒண்ணு வாங்கி அனுப்புங்கள்" என்று எழுதிவிட்டார். மறுபடியும் சாந்தினிசௌக் போய் கேட்டபோது ஒரே விலை 200 ரூபாய் என்று சொன்னான். ஏன் பதிலுக்குக் கேட்கப்போகிறேன்! பேசாமல் 200 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டு வந்து, கமலாவிடம், "150 ரூபாய்க்கு தரமாட்டேன் என்றான் கடைக்காரன். அடித்து பேசி வாங்கிவந்துவிட்டேன்" என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன்!
+ + +

இப்படி, பல நூறு அனுபவங்கள் டெல்லி வாழ்க்கையில்! எழுதி மாளாது!

ஆனால், இப்போதெல்லாம் தபால்காரரைக் கண்டால் நான் பயப்படுவதில்லை. செல்போன் மணி அடித்தால் தான் நான் பயத்தில் அலறுகிறேன்.

தினமும் "ஆண்டவா என்னை டில்லியிலிருந்து எப்போது கருந்தட்டாங்குடிக்கு மாற்றப் போகிறாய்?" என்று தான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!

தீபாவளி ஸ்பெஷல் கட்டுரை எழுதித் தந்த கடுகுக்கு இட்லிவ்டையின் நன்றி.

15 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

:-}

மாயவரத்தான்.... said...

So kaduguthaan idlyvadaiyaa?!

Selva said...

only those who are outside the country can understand what Kadugu has written. Only one difference. what he expereinces in Delhi we experience in Europe

ப்ரியா said...

ellam sari....eppo photo poda poreenga?

மணிகண்டன் said...

பிரியா, நீங்க இன்னும் போட்டோ அனுப்பல. வெறுமன உங்களோட புகழார கட்டுரை மட்டும் தான் அனுப்புனீங்க.

Anonymous said...

Oh, it is real homely humour. Age has not diminished his flair for humour.

நாகு (Nagu) said...

அருமையான டில்லிவாசி அனுபவங்கள். இங்கே நியூயார்க் நகர் அருகில் வாழ்பவர்களின் கதை இது போலதான். அதற்குத்தான் ரிச்மண்ட், பண்ருட்டி மாதிரி ஊரில் இருக்க வேண்டும். வருபவர்கள் நம்மை பார்க்கத்தான் வரவேண்டும் :-)

Krish said...

Nice one!

Anonymous said...

இப்படித்தான் யாரையும் புண்படுத்தாத, கல கல என்று நகைச்சுவை இருக்க வேண்டும்.
-- டில்லி பல்லி

பாரதி மணி said...

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, நீர்த்துப்போகாமல், தொடர்ச்சியாக எழுதுவது ஆச்சரியம்!

அவரது மின்னஞ்சல்களும் இதே நகைச்சுவையுடன் இருக்கும்.

அவர் மகள் ஆனந்தி, அமெரிக்காவில் புற்றுநோய்க்கான நிரந்தர நிவாரணத்துக்கு பலவருடங்களாக ஆராய்ச்சி செய்துவருகிறார்.

தில்லியில் இவர் வீடு அமிதாப் பச்சன் வீட்டுக்கருகில். இதைப்பற்றியும் நகைச்சுவையாக குறிப்பிடுவார்.

மொத்தத்தில், பேராசையில்லாத நிறைவான குடும்பம் இவரது!

பாரதி மணி

Chennai Vennai said...

Nalla irundhundhunga... enna, idha padikkumbodhu, Sujatha sir nyabagam varadha thadukka mudiyaala!

Oru velai, are we too "sujathistic" in our thoughts :)

Anonymous said...

பணம் அனுப்புவது எப்படி?http://www.icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/m2i.htm

Anonymous said...

I thought kadugu was no more. Dont blame me for such thought. Because it was a long time ago I saw his skits and stories in popular Tamil magazines.

It is a pleasant surprise he is still with us. May he live long and delight us with his skits and stories more and more.

He belongs to the rare breed of humourous writers in Tamil who are not found nowadays.

Convey my deep respects and regards to him.

P.Vinayagam

Anonymous said...

For those of you who want Kadugu's books: plese write to Nandhini Pathippakam, 189/C Kanta Brindavan, Gandhi Kamarajar Salai, Neelankarai,Chennai 600041. Payment can be made after the books are received by you. Ten percent discount and post free within India.

Balaji Agencies, Chennai 600 090

Anonymous said...

Dear Mr Vinayagam,
I just saw your comments about my article in Idly-Vadai. I am a devotee of Amarar Kalki. Once long back in 1954, I handed over an article to him personally. He read the article then and there in my presence and said only one word of appreciation: "Besh" That word is still acting as catlyst. I always considered that he was the rarest of rare writer. I am happpy you have said that I belonged to that rare breed of humorous writers. As I type this, tears trickle in my eyes. If you are in India I can snd you some of my books ==
Kadugu.