பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2008

அரசியல் சங்கலி அறிக்கை/பேச்சுக்கள் நல்ல தமாஷ்

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு கண்டனம் என்று ஆரம்பித்த பிரச்சாரம் இப்ப தீபாவளி பட்டாசு போல வெடிக்க கிளம்பியுள்ளது.
நிச்சயம் இந்த பிரச்சனை கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். யார் தனிமை படுத்தப்படுவார்கள் என்று பார்க்க வேண்டும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்பது போக போக தான் தெரியும்.வைகோ என்ன பேசினார்

“நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம், ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்திச் செல்வான் (கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் ஆயுதம் ஏந்தத் தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் தயார் என்று பதில் அளித்தனர்). ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இளைஞர்களை திரட்ட முடியும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். அங்கேயுள்ள ஒருமைப்பாட்டை காப்பாற்ற இங்கேயுள்ள ஒருமைப்பாட்டை இழக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறேன். டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அந்த ஆட்சியை நாங்கள் எதிர்ப்போம்”

நேற்று: பாரதிராஜா கலைஞரை சந்தித்தார்

நேற்று மாலை இயக்குனர் பாரதிராஜாவும், செல்வமணியும் முதல்வர் கருணாநிதி திடீரென சந்தித்தனர். முதல்வரின் சிஐடி நகர் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது ராமேஸ்வரம் பொதுக் கூட்டம் குறித்து பாரதிராஜா விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.

இன்று: காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் இப்படி சொல்லுகிறார்

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறோம் என்று திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் ஆகியோர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துக்களை வெளிப்படையாக பேசி பிரபாகரனை ஒரு ஹீரோ போன்று சித்தரித்துள்ளனர்.

இவர்கள் 5 பேரும் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றமாகும். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று 3 நாட்களுக்கு முன்பே நான் கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால், இன்று வரை அவர்களை கைது செய்யாமல் தமிழக அரசு இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொன்ன வைகோவை கைது செய்ய வேண்டும் என்று பேசினேன். அப்போது முதல்வர் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தோம்.

உடனே ஆற்காடு வீராசாமி போன்ற அமைச்சர்கள் எங்களிடம் வந்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறியதையடுத்து சபைக்கு வந்தோம்.

அப்போது, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொன்ன முதல்வர். சட்டத்தை கடமையாற்ற அனுமதிக்காமல் விட்டு விட்டார்.

பின்னர், சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன், விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதையும் சுட்டிக்காட்டினேன் சட்டமன்றத்தில் பேசினேன்.

சட்டம் இதுவரை அவரை கைது செய்யாமல் விட்டு விட்டது. அதன் விளைவு இன்றைக்கு வைகோ ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று இந்திய திருநாட்டில் தனித்தமிழ்நாடு என்றும் பேசியுள்ளார்கள் என்றால் பிரிவினை வாதத்திற்கு இவர்கள் இன்று தோல் தட்டி புறப்பட்டுவிட்டார்கள். இதுபோல், பல அரசியல் கட்சிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாசும் விடுதலைப்புலிகள் போராளிகள் என்று புதிதாக ஒரு அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம். ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். இதற்கு ஆதரவாக பல பேர் புறப்பட்டு வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல். மதுரையில் இரண்டு ரெயில் பெட்டிகள் எரியும் அளவுக்கு போய் இருக்கிறது. தமிழகத்தில் இனி எங்கெங்கு எது எரியும் என்று தெரியவில்லை.

வைகோ, கண்ணப்பனை கைது செய்து விட்டு சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் போன்ற வரை கைது செய்யாதது ஏன்?

திமுக கூட்டணியில் இருந்துவரும் திருமாவளவனும் இன்றுவரை கைது செய்யாதது ஏன்?

அதைவிட கொடுமை என்வென்றால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய திரைப்பட இயக்குனர்கள் நேற்று முதல்வரை சந்தித்துள்ளனர். இந்த இயக்குனர்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும் என்று தமிழக மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுகின்ற பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிற இவர்கள் போர்க்கால அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும்.

உடனடியாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரையும் தமிழக அரசு கைது செய்து தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும்.

இன்று: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு

"தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும்"

வைகோ கைது ஜெ கருத்து

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான தேச விரோத கருத்துக்களை தெரிவித்த திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்ற தேச விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நான் வெளியிட்ட அறிக்கை முதல்-அமைச்சரை வெகுவாக தாக்கியிருக்கிறது.

அதனால்தான் திடீரென்று நடவடிக்கை எடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பனை கைது செய்திருக்கிறார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோர் பேசுவதற்கு முன்பே, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த சீமான், அமீர், பாரதிராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ராம நாராயணன் போன்றோரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்களை ஏன் கைது செய்யவில்லை?

அதே போன்று, 25.01.2008 அன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து திருமாவளவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? விடுதலை புலிகளுக்கான ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னிய அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, தேசப்பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது தற்போதைய செயல்பாடுகளில் இருந்து தெளிவாகிறது.


வைகோ கைது கலைஞர் பேட்டி
“சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது” என்று கூறியுள்ள முதலமைச்சர், அந்தக் கடமை மேலும் தொடருமா? என்று கேட்டதற்கு, “தெரியாது” என்று பதிலளித்து, சட்டத்திற்கு தான் அளித்துள்ள சுதந்திரத்தைப் பறை சாற்றியுள்ளார்.

கைது - வைகோ கருத்து
காங்கிரஸ்காரர்களை திருப்தி படுத்த என்னை கைது செய்து உள்ளார் கருணாநிதி. இதன் மூலம் மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையும் காட்டுகின்ற கருணாநிதியின் முகத்திரை கிழிந்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுகிறது ?

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 (ஏ): பிரிவினையை தூண்டுகிற வகையில் பேசினாலோ, எழுதினாலோ, அச்சிட்டு மற்றவர்கள் பார்வைக்கு தெரியும்படி செய்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 3 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்கலாம். கடுமையான அபராதமும் விதிக்கலாம் என்கிறது சட்டம். சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967, பிரிவு 13 (1) பியின் படி சட்ட விரோத செயல்களில் பங்கேற்றாலோ, அதற்கான ஆலோசனை வழங்கினாலோ அல்லது வாதிட்டாலோ, சட்ட விரோதமாக கூடுவதற்கு தூண்டினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கும் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

கடைசி செய்தி:
மதுரையில் சுப்பிரமணிய சுவாமி அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி பேசி வருவதை கண்டித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன என்பது தான் உண்மை. வைகோ கைது அரசியலே தவிர, தேசப்பற்றுச் சார்ந்த நடவடிக்கை அல்ல.

2 Comments:

Kalaikovan said...

இலங்கை தமிழர் பிரச்சனை,
புலிகள் ஆதரவு ...,
புலிகளை ..,
சிலர் வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.
சிலர் அரசியல் சார்ந்து ஆதரிக்கின்றனர்.
ஆனால்
எப்போதும் பலிகெடா - வைகோ தான்

Anonymous said...

//திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன என்பது தான் உண்மை.// அதற்காக வைகோவை கைது செய்தால் //வைகோ கைது அரசியலே தவிர, தேசப்பற்றுச் சார்ந்த நடவடிக்கை அல்ல//