பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 25, 2008

கடுகு

கடுகு, அகஸ்தியன் என்ற புனைபெயரில் எழுதும் பி.எஸ்.ரங்கநாதன் விரல்விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை எழுத்தாளார்களில் ஒருவர். 75 வயது ஆகும் இளைஞர்.

இவரின் கேரக்டரோ கேரக்டர் என்ற புத்தகம் நிறைய பேருக்கு கண்ணில் பாடாமல் எல்லா புத்தக கடையிலும் ஒளிந்துக்கொண்டு இருக்கும். என்னிடம் இரண்டு காப்பி இருக்கு. இரண்டையும் சில தடவை படித்திருக்கிறேன்.

கடுகுக்கு 'பேஷ்' என்று சொன்னவர்களின் பட்டியல்:

- 'பேஷ்' என்று ராஜாஜி இவருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார்
- இவர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு 'பேஷ்' என்று பாராட்டினார் கல்கி
- இவர் எழுத்தை பாராட்டி எஸ்.ஏ.பி ஒரு கடிதம் எழுதி தந்துள்ளார்
- சாவி இவரை நிறைய பாராட்டியுள்ளார்.

இவரும் இட்லிவடை வாசகர் என்பது சில நாட்கள் முன்பு தெரிந்து அதிர்ச்சி ஆனேன்.

இந்த தீபாவளிக்கு இட்லிவடைக்கு ஸ்பெஷலாக இவர் கட்டுரை எழுதி தருமாறு கேட்டுள்ளேன். பார்க்கலாம்.

கடுகு பற்றி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் அண்ணா நகர் டைம்ஸில் எழுதிய கட்டுரை கீழே...


கடுகு

சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ்.ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம். சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.

டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச்
செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைப் பெயரே நிரந்தரமாகி விட்டது.

குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லOEமணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமான போது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்தபோது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப்
பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64ம் வருடவாக்கில்.

அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அவரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.

அஞ்சல் துறையை விட்டு விலகிய பின் ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில சேர்ந்து பல வருடம் பயிற்சி பெற்றதால் ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்ட கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு ‘எழுத்துரு’ செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (கணினி பற்றி நான் சுத்த சுயம்பிரகாச ஞான சூன்யம். ‘எழுத்துரு’ என்றால் என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுவிடாதீர்கள். கீழே விழுந்து விடுவேன்.)

டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, கடுகு மூன்று பேரும் பால்ய நண்பர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் இவரைப் பார்ப்பதற்காக பெஸன்ட் நகர் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். காரில் உட்கார்ந்தபடிய பேசினாராம். உடல் நலம் குன்றி, பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஸ்ரீதரின் மனைவி அவர் சொல்வதை விளக்கிச் சொன்னாகவும் கடுகு வருத்தத்துடன் சொன்னார்.
கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’. சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய ஒரே புத்தகம் இதுதான் என்றும், இது ஒரு ரத்தினம் என்றும் சுஜாதா எழுதினார். (இரண்டு பாகங்கள்; விலை: நூறு ரூபாய். நந்தினி பதிப்பகம், 12/6, வெங்கடேஸ்வரா ·ப்ளாட்ஸ், வெங்கடேஸ்வரா நகர், முதல் தெரு, அடையார், சென்னை - 20.)

இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு (‘சுரபி’) என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர்.தான் கை கொடுத்தார். அவருடைய மகள் ஆனந்தி - அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி - அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ்பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய
மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும், தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது. கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்கு தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)

- ரா.கி.ரங்கராஜன்
( நன்றி: Anna Nagar Times - 24th August 2008 )

12 Comments:

S.K said...

adanga matteengaLa idly vadai.. ellarum konjam overstatement dhan kodukkaranga-nnu ungaLukku puriyalaiya(konjam vanathu-la irunthu erangi vaa thalaiva)?

unakku yemba ippadi oru (** ketta)pozhappu?

idly vadai ooosippoga aarambikkrathukku ariguriyaa ithu?

ippadi ellam review postings (i mean perumai peetral)pottuttu iruntha(neenga avLo pramadhama ethuvum pannalai,just copy paste panreenga), ungaLukku varugira audience ellam kaduppavaanga-nnu theriyalaiya? (naanga news padikka dhan inge varOm..yenna we don ve time to visit all the news pages, we get all the copy pasted the pages here)

idlyvadai-ya pathi-na image ellam poi pOla.. hmm kazhudha theinju katterumbu aagum pola..

-by
S.K
-idlyvadai vasagar-


// naanum review dhan kodukren..naanum 2 varushama idlyvadai-ya padikkiren..ithaiyum oru posting-a pottu paru thala.

S.K said...

innum vitta..yana,gudhura ellathu kittayum appraisal vanguveenga pola..hmm.. vetti bandha waste machi.

-S.K(naane DHan)
-unga review posting-aal kaduppana vasagar-

lok said...

பி.எஸ்.ரங்கநாதன் எழுதிய புஸ்தகத்தை online-la வாங்க முடியுமா? bangalore-la கிடைக்குமா ?

Anonymous said...

You may write a postcard to Nandhini Pathippakam, 189/C Kanta Brindhavan, Gandhi Kamarajar salai, Neelankarai Chennai 60041 and ask for catalogue. They will send the books post free.

Balaji Agencies, Chennai 600090

Vijay said...
This comment has been removed by the author.
பாரதி மணி said...

திரு. எஸ்.கே. அவர்களே, இப்படி சகட்டுமேனிக்கு சாடல் தேவையா? இட்லிவடை யாராக இருந்தாலும்,சாமர்த்தியமாக ஐந்து வருடங்களுக்கு தொய்வில்லாமல் கட் அண்ட் பேஸ்ட் இருந்தாலும்,நுனிவாழையிலையில் ருசியாக நமக்கெல்லாம் தந்ததை பாராட்டாமல் இதில் காழ்ப்புணர்ச்சி தேவையா? அவரென்ன ‘தொண்டர்கள்’ பணத்தில் வினைல் பானரோடு,ஆளுயர மாலை மலர்க்கிரீடம் கேட்டாரா? ‘வலை’நிறைய பாராட்டுவோமே!

எனக்கு பி.எஸ். ஆரை அவர் தில்லியில் தபால் தந்தி அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்து தெரியும். பார்லிமெண்ட் வீதியில் எங்கள் அலுவலகங்கள் எதிரெதிரே. அப்போது புகழ்பெற்ற யூ.என்.ஐ.கான்டீனில் நாங்கள் மதியவேளையில் ஆஜராகாவிட்டால், மற்றவர்களுக்கு சாப்பிட்டது ஜீரணமாகாது! என் ‘உயிர்மை’ கட்டுரையில் இதையும் பதிவு செய்திருக்கிறேன்.

எங்கள் தக்‌ஷிண பாரத நாடக சபாவின் உறுப்பினர். எங்களுக்காக Lord Arthur Saville's Crime என்ற ஆங்கில நாடகத்தை, தமிழில் ‘பாவம் பூபதி!’ என்ற பெயரில் மொழிபெயர்த்துதந்தார். நாடகக்குழு பம்பாய், சென்னை வரும்போது உடன் வருவார். அவர் தான் எங்கள் ஆஸ்தான விகடகவி. அவர் பேசப்பேச நாங்கள் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம்.

1986-ல் நான் முதல் கம்ப்யூட்டர் வாங்கியபோது, தில்லியில் இவர் தான் என் ஆசான்.

மற்றவர்களை புண்படுத்தாமல்,சிரிக்கச்சிரிக்க பேசுவார். என்றும் என் இனிய நண்பர்! அவருக்கும் கமலாவுக்கும் என் வாழ்த்துகள்!

நல்லதந்தி said...

அப்படியா? இது உங்களுக்கு நிஜமாகவே பெருமைதான் 80 களில் அகஸ்தியனின் கட்டுரைகள்,சிறுகதைகள் சாவியில் அதிகமாக வெளிவந்தன.அதை நான் படித்து இருக்கிறேன்.

நல்லா நகைச்சுவை எழுத்தாளர்.சாவியைப் போல!

நல்லதந்தி!

நல்லதந்தி said...

இந்தப் பின்னூட்டத்தை எங்கே போடறதுன்னுத் தெரியலை!.கடைசியா வந்தப் பதிவில
போட்டுறலாமே அப்படிங்கிற எண்ணத்தில இங்கப் போடுறேன்!


இட்லிவடை என்னுடைய அதர்ஷ வலைப்பூ .பிராமணவாடை இருக்குதா
சரி விடுங்க அபிமான வலைப்பூ. ஓ..இதிலேயும் சமஸ்கிருதம் இருக்கா?
ஒகே.என்னுடைய ஃப்வரைட் வலைப்பூ ஒகேவா!.அப்பாடா இப்படி நல்ல தமிழில்
எழுதி நாளாச்சி!.

இட்லிவடையைத்தான் நான் முதன் முதலில் இணையத்தில் கண்டது,எனக்கு அப்போ
ரொம்போ ஆச்சரியமா இருந்தது.தமிழ் கூட இணையத்தில் வருதேன்னுட்டு!.அதுக்காக
அஞ்சி வருட ஃப்ளாஷ் பேக் தேவையில்லை.6 மாசத்துக்கு முன்னாடி நடந்ததைத்தான் நான்
சொல்லிக்கிட்டு இருக்கேன்.

அப்புறம் நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க நினைக்கும் போது நமக்குதான்,எதுவுமே பெருசா எழுதிக்
கிழிக்கத் தெரியாதே!(இதை எதுவுமே எழுதத் தெரியாதே அப்படின்னு தான் நீங்க வெச்சிக்கணும்!)
அப்படினு நினைச்சபோ வந்த ஆபத்பாந்தவர்தான் இட்லிவடை!.அவர்தான்
எங்களைப் போன்ற கும்பல்களுக்கு கட் அண்ட் பேஸ்டைச் சொல்லிக் கொடுத்தவர்.

இன்னிக்கும் என்னோட கேப்ஷனில் வெட்ட மட்டுமல்ல ஒட்டவும் செய்வேன் அப்படி
சொன்னதிற்க்கு காரணமே இட்லிவடைதான்.

சரி விடுங்க நீளமா எழுதறதாலே நீங்க உங்க ப்ளாகில கட்டுரையாப் போடப் போறதில்லை!.

நான் கடைசியா சொல்லுறது இட்லிவடையை அடையாளம் காட்டாதிங்க.அவர் எங்க
அபிமானமான ஒருத்தர்.சில விஷயங்கள் மர்மமா இருக்கணும் சினிமாவைப் போல அப்பதான்
ஆர்வம் இருக்கும்.

இட்லிவடையின் அபிமான இரசிகன்.

நல்லதந்தி

Anonymous said...

Bharathi Mani is right. Theu Idly Vadae he is ( they are)not project himself/themselves.
Most of entries in maay blogs are pure unadulterated tripe only. Idly Vadai is doing good service by bringing reports from newspapers to which most os us do not have access. Idly Vadai comments are in good and clean light humor.
What is wrong in writing about a writer? Even if there is some over statement!
idly Vadai should also make forays into literature, our carnatic music, our saints and sages and great kings.

Dear Idly Vadai,
More strength to your keyboard!

KR

Anonymous said...

For those of you who want Kadugu's books: plese write to Nandhini Pathippakam, 189/C kanta brindavan, Gandhi Kamarajar Salai, Neelankarai,Chennai 600041. Payment can be made after the books are received by you. Ten percent discount and post free within India.

Balaji Agencies, Chennai 600 090

paarvai said...

அருமை. இட்லி வடையின் புதிய வாசகன் நான். வலைப்பதிவிற்கும் புதியவன். இவ்வாறு அமையப்பட்ட பதிவுகளைப் படிக்க படிக்க திகட்டவில்லை. நன்றி. மென்மேலும் இட்லி வடை வளர(அதன் சுவை குறையாமல்) வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

இந்த இடுகையை இன்றுதான் பார்த்தேன் (Rip Van Winkle is my alias!).

இங்கு ஒருவர் "S.K" என்ற பெயரில் மறுமொழி இட்டிருக்கிறார். அந்தப் பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; அதை கேட்க நான் யார்! ஆனால் அந்த மறுமொழிகளை எழுதியது நான் இல்லை என்பதை மட்டும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

எஸ்.கே