பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 21, 2008

மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன் - விஜயகாந்துக்கு குமுதம் பதில்

உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்பவன்தான் மனிதன். மறைப்பவன் திருடன். மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன். இதை திரு. விஜயகாந்த் புரிந்து கொண்டு, அவர் மிகச் சிறந்த தலைவராக வளர வேண்டும் என்பதே நமது ஆசை!


என்று குமுதம் விஜயகாந்துக்கு பதில் தந்துள்ளது.கடந்த 13.7.2008 ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்து, மிகப் பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்குபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, நான் அங்கு பேசாததைப் பேசியதாக விஷமத்தனத்தோடு வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20.7.2008 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன் ``ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும்!'' என்று நான் பேசியதாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட்பகுதியில் வந்துள்ள செய்தியிலும் ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று நான் முழக்கமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல; எங்குமே பேசக்கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நான் பேசாத சிலவற்றை இராமேசுவரத்தில் பேசியதாகச் செய்தி வெளியிட்டிருப்பது, வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்து வெளியிட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதாகவும் நாட்டு மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. பத்திரிகை விற்க வேண்டும் என்கின்ற வெறும் வியாபார நோக்கில் மட்டும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக நான் கருதவில்லை.

கடந்த 6.7.2008 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் கூட இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தைப் போட்டு, ``தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த்!'' என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை, நடந்தது போல் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்தப் பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுக்கட்டி வெளியிட்டு, பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்தப் பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால், பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதையும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதையும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்ப முயலுவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதால், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்குத் தொடர்வதற்கு அந்தப் பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

-இப்படி கடந்த 16-ம்தேதியன்று எல்லா தினசரிகளுக்கும் `பத்திரிகைச் செய்தி' என்கிற தலைப்பில் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார் என்றாலும் ஓரிரு மாலை நாளிதழ் தவிர, வேறு எந்த நாளிதழும் இதைப் பிரசுரிக்கவில்லை.

திரு.விஜயகாந்த் தமது மறுப்பு அறிக்கையை இதுவரை நமக்கு நேரடியாக அனுப்பாவிட்டாலும், நம்மைப் பற்றியே எழுதியிருப்பதால்தான் அதற்கு நாம் இங்கே பதில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. அதில், முக்கியமாகச் சொல்வது, அவர் பேசாத ஒன்றை நாம் தலைப்புச் செய்தியாக்கிப் பிரசுரித்துள்ளோம் என்பது; அதனால் கலவரத்தைத் தூண்டி, பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலை நாம் செய்திருப்பதோடு, பத்திரிகை தர்மத்தையும் மீறிவிட்டோம் என்பது. மேலும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில்,கடந்த 13-ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. விஜயகாந்த் பேசாத ஒன்றைத்தான் நாம் பிரசுரித்திருக்கிறோமா? இதை வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திரு.விஜயகாந்த் அன்று பேசியவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம்:

``...நேத்தோ முந்தா நேத்தோ விண் டிவி பார்த்தேன். அதுல மீனவ சங்கத்தலைவர் போஸ் பேசுறாரு. `எல்லா முதலமைச்சரையும் பாத்தோம். யாரும் ஒண்ணும் செய்யலை'னு எங்க செய்வாங்க? எல்லாம் வாங்கிக்கிட்டே இருக்காங்க. யாருய்யா செய்யப் போறாங்க? பிடிக்கிற மீனுக்கு லஞ்சம் குடுக்குறீங்களா? சொல்லுங்க, குடுத்தீங்கன்னா உடனே கொண்டு வந்து போட்டுடுவாங்க மிலிட்டரிய... ஒரு மீனுக்கு ரெண்டு ரூபாலஞ்சம் குடுக்குறீங்களா?

...(இலவச) டி.வி.ய விக்கிறாங்க. உடனே அரசாங்கம் சட்டம் போடுது... கலெக்டரே `போலீஸே டி.வி.ய வித்தா புடிச்சு உள்ள போடு'ன்னு... அடுத்து அரிசி... அரிசிய ரெண்டு ரூபாக்கு குடுக்குறோம். உடனே அரிசியக் கடத்துறாங்க. அ.தி.மு.க.வுல லாரியில அரிசியக் கடத்துனாங்க. ஆனா இவங்க ரெயில்லயும் கப்பல்லயும் கடத்துறாங்க...

...அதுதான் சொல்றேன். சாது மிரண்டா காடு கொள்ளாது. ரொம்ப நோண்டாதீங்கடா, ரொம்ப நோண்டாதீங்க. இருபது போலீஸ வச்சு கேக்குறாங்களாம். நேரடி ஒலிபரப்பு பண்றாங்க போலீஸு. ஏதாவது தப்பா பேசுனா புடிச்சு ஜெயில்ல போட்டுடுவேன்னு சொல்றாரு. எதுலயாவது போடுங்கறேன். எதுக்காகப் போடப் போற... என் மக்களுக்காகப் பேசுனதுக்காகத்தானே. நீ புரியாம பேசுற... நடிகன்னா, மெரட்டுனா பயந்துடுவான்னு. ஆனா இந்த விஜயகாந்த் பயப்புட மாட்டான். இது அவருக்குப் புரிய மாட்டேங்குது. புரியாம மெரட்டிப் பாக்குறாங்க...

...விலைவாசி ஏறிப்போச்சுன்னு சொன்னா உடனே கலைஞர் சொல்றாரு, வாங்குற சக்திய அதிகமாக்கணும்னு. உங்களுக்கு வாங்குற சக்திய அதிகமாக்கியிருக்கு... (தணிந்த குரலில்) லஞ்சம் வாங்க. எங்களுக்கு தாங்குற சக்தி இல்லையே...

...நான் நிறையப் பேசணும்னு நெனைக்கிறேன். உளவுத்துறை டேப் பண்ணிக்கிட்டிருக்கு. வேற ஒண்ணும் கெடையாது. கோபம் வருது. சத்தியமா, மக்கள ஏமாத்துனா ரொம்பக் கோபம், வெறி வருது. சுட்டுக் கொல்லணும்... பூராபேத்தையும். (தணிந்த குரலில்) ஆட்சியில இருக்குறவங்கள..''

- இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார். அவர் அங்கே 43 நிமிடங்களும் 42 வினாடிகளும் பேசியிருக்கிறார். அப்படிப் பேசியபோது 33-வது நிமிடத்தில்தான் `சுட்டுக் கொல்லணும்......பூராத்தையும்' என்று உரத்த குரலிலும் `ஆட்சியில் இருக்குறவங்கள....' என்பதைத் தணிந்த குரலிலுமாகப் பேசியிருக்கிறார்.

ஆக, `சுட்டுக் கொல்லணும்' என்று அவர் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்-மெய்மறந்த நிலையில் பேசியிருந்தாலும் நாம் அதைப் புரிந்து கொண்டு, `கொல்லணும்' என்பதைத் `தள்ளணும்' என்று வேகத்தைக் குறைத்துத்தான் வெளியிட்டிருக்கிறோம். ஒருவர் தன்னை மறந்த நிலையில் வாய்தவறிப் பேசியதை அப்படியே பிரசுரிப்பது பத்திரிகை தர்மமாகாது என்பதால்தான் அதை நாம் மாற்றிப் பிரசுரித்திருக்கிறோம். சொல்லப் போனால் நாம் பிரசுரித்ததைவிட பிரசுரிக்காமல் விட்டதே அதிகம்.

எனினும், தாம் அன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதை உணர்ந்துதான் இப்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் என்பதை நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவில் அவரை நாம் மனமார பாராட்டுகிறோம். அதற்காக அவர் குமுதம் ரிப்போர்ட்டர் மீது பழிபோடுகிறாரே என்பதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதையே இப்படி மறுக்கிறாரே என்பதிலும் தான் நமக்கு வருத்தம். இப்படியிருந்தால், அவரது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதே நமது கவலை.

உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்பவன்தான் மனிதன். மறைப்பவன் திருடன். மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன். இதை திரு. விஜயகாந்த் புரிந்து கொண்டு, அவர் மிகச் சிறந்த தலைவராக வளர வேண்டும் என்பதே நமது ஆசை!


குமுதம் மீது விஜயகாந்த் வழக்கு


ரிப்போட்டர் கவர் ஸ்டோரி - வெடித்த விஜயகாந்த் பதிவு...


7 Comments:

sathappan said...

Idly sir,

Everybody knew Vijayakanth always in 'மெய்மறந்த நிலை'.

'''ஆனா இந்த விஜயகாந்த் பயப்புட மாட்டான்'''-
We have to laugh not thro' mouth..he he eh ehe eh.

sathappan

Anonymous said...

இந்த வார தெஹல்காவின் விகா பேட்டி.

Anonymous said...

தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்வன் தலைவனா?
என்ன லாஜிக் சாமி இது :(.
விஜயகாந்திற்கு நாவடக்கம்
தேவை.கட்சிக்குள் ஒரு வெற்றிகொண்டானை வைத்துக் கொண்டு மேடையில் தான் இல்லாத
போது இப்படி பேசச்சொல்லிவிட்டு பின் கண்டித்து அறிக்கை விடும்
கலைஞரின் தந்திரமாவது
தெரிய வேண்டும். இப்படியே
போனால் விகா தேற மாட்டார்.
எங்காவது உளறி மோசமாக
மாட்டிக் கொள்வார்.
இட்லிவடை கொஞ்சம் ஒங்க
தலைக்கு எடுத்துச் சொல்லுங்க.

Anonymous said...

பிளாஷ் நியுஸ்
வலைப்பதிவர்(கள்) இட்லிவடையை கட்சியின் அதிகாரபூர்வ செய்தி
தொடர்பாளராக விஜயகாந்த் நியமித்திருக்கிறார் :)

Kalyan said...

I cant believe that Kumudam supports DMK.. Every article Kumadam tries to attack the government.. So i think VK should know whom to attack and whom not.. he cant attack everybody then he wont have any support..

Anonymous said...

"கடைசியாக திட்டியவர்கள்" பகுதியை மீண்டும் கொண்டுவரவும்.

vipoosh said...

பேச முடிகிறது, பேசி விட்டார்..........இது உண்மை நிலை தெரிந்தவர்களின் கருத்தாகும்....தேவையில்லாத பிரச்சனைகள்.........யாருக்காக பேசுகிறார் மக்களுக்கு தானே.....வளர விடுங்கள் ..எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்....மூப்பனார் ,வைகோ வரிசையில் விஜயகாந்தை சேர்க்க வேண்டாம்.......