பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 04, 2008

ஒரு பாராட்டு; சில கேள்விகள் ! - துக்ளக் தலையங்கம்

ஒரு பாராட்டு; சில கேள்விகள் ! - நன்றி துக்ளக்.

தமிழக முதல்வர் – "சமுதாயத்தின் போக்கை வழி நடத்துபவர்களுக்குத் தேவையான திறமையும்; நடைமுறை நிர்வாகக் கலையுடன் கூடிய தார்மீகத் தொலைநோக்கும்; நிதானமும்; விருப்பு, வெறுப்பற்ற உயர்ந்த மன உறுதியும் கொண்டவர். அவர் சிறந்த ராஜீயவாதி – ஸ்டேட்ஸ்மேன்; நிர்வாகத் திறனுக்கும், விவேகத்திற்கும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு அனைவரும் ஏற்கும் விதத்தில் தீர்வு காண்பதில் லாகவமான திறமைக்கும் பெயர் பெற்றவர்'.

– இவை, கலைஞருக்கு நாள்தோறும் நடந்து வருகிற பாராட்டு விழாக்கள் ஒன்றிலோ – ஒரு கவிஞரின் கவிதையிலோ – திரைப்படத்துறையினர் அவருக்காக நடத்திய விழாவிலோ தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அல்ல. சென்னை ஹைகோர்ட்
நீதிபதி ரகுபதி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள், ஏதோ ஒரு நிகழ்ச்சியில் அவரால் தெரிவிக்கப்பட்டவையும் அல்ல. நீதிபதி ரகுபதி, தனது உத்திரவு (இவை தமிழில் வழக்கமாகத் "தீர்ப்பு' என்றுதான் குறிப்பிடப்படுகின்றன) ஒன்றில்தான், தமிழக முதல்வரைப் பற்றி இவ்வாறெல்லாம் எழுதியிருக்கிறார்.

தன்னிடம் வந்த ஒரு முன்ஜாமீன் வழக்கில் நீதிபதி ரகுபதி போலீஸ் துறையைக் கடுமையாகச் சாடினார். "சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில், ஏராளமான புகார்கள் கொடுக்கப்படுகின்றன. இங்கு, விசாரணை அதிகாரி, விசாரணை என்ற பெயரில் மனுவை வாங்குவார். ஆனால், வழக்குப் பதிவு செய்யமாட்டார். நமது
மாநில வழக்கறிஞர்கள் கூறுவது போல, அனைத்து மாவட்டங்களிலும்,
காவல் நிலையங்களில், பஞ்சாயத்து நடத்தப்படுகிறது. புகார் கொடுத்தவர், மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர், இருவரிடமும் லஞ்சம் பெறும் நோக்கோடு, புகாரைப் பெற்றுக்கொண்டு, நிலுவையில் வைக்கின்றனர்.

"...இருதரப்பிலும் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த வழக்கில் கூட, "புகார் கடுமையானது அல்ல; விசாரணை நடந்துகொண்டிருக்கிறது' என்று அரசு வழக்கறிஞர் கூறியது கூட, போலீஸ் அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான். இது நீதிமன்றத்தைத் திசை திருப்பும் செயல். காவல்துறைத் தலைவரும், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனரும், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு கேலிக்கூத்தாகிவிடும்...'

இப்படி நீதிபதி, சட்டம் – ஒழுங்கின் நிலை பற்றியும், மாநிலத்தில் எல்லா
மாவட்டங்களிலும், காவல் நிலையங்களில் நிலவுகிற ஊழல் பற்றியும் கடுமையாகப் பேசி – மாநிலம் முழுவதிலும், பணம், சொத்து விவகாரங்கள் தொடர்பாக வந்த புகார்கள் மீதான விசாரணைகள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, போலீஸுக்கு உத்தரவிட்டார்.

சுமார் ஒரு வாரம் கழித்து, நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் "சொத்து தகராறு, விலை மதிப்பு உயர்ந்து வரும் நில பேரங்கள், நில மாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளிலும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் ஈடுபடவே கூடாது – என கடந்த காலங்களில் நான் கூறியவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்' என்று
பேசினார்.

இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு வாரம் கழித்து, நீதிபதி ரகுபதி அவர்கள், வழக்கை மீண்டும் எடுத்துக்கொண்டபோது – போலீஸ் சார்பில், மாநிலம் அளவிலான
விவரங்கள் அல்லாமல் – சென்னை நகரம் பற்றிய விவரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவரங்கள் தாக்கல் ஆனது, முதல்வரின் பேச்சினால்தான் என்று தீர்மானித்து, நிர்வாகம் "அசாதாரணமான விழிப்புணர்வுடன் செயல்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை அளிக்க முன்வந்துள்ளது' என்று கூறி நீதிபதி, முதல்வரைப் பாராட்டினார். (நீதிமன்றம் ஆணையிட்டபடி
மாநிலம் முழுவதிலும் உள்ள நிலை பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்ய, அரசு தரப்பு அவகாசம் கோரியது – என்பது கவனிக்கத்தக்கது).

இத்துடன் தனது பாராட்டுக்களை நீதிபதி அவர்கள் நிறுத்தியிருந்தால் – "சரி; மாநில அளவில் விவரங்களைத் தருமாறு நீதிமன்றம் கூறியபோது – ஏதோ சென்னை நகர விவரங்களையாவது தந்தார்களே! இது கூட முதல்வரின் குறுக்கீட்டினால்தான்
நடந்திருக்கிறது' என்று நினைத்து, நீதிபதி முதல்வரைப் பாராட்டியதாக எடுத்துக்கொண்டிருக்கலாம். நீதிமன்ற உத்திரவு மதிக்கப்பட்டது என்ற திருப்தியைப் பெற்று, நீதிபதி கருத்து தெரிவித்ததாக, மக்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், நீதிபதி அவர்கள், இந்த நிகழ்ச்சி தொடர்பாக மட்டும் அல்லாமல், பொதுவாகவே முதல்வருக்கு ஒரு பாராட்டை வழங்க முன்வந்தார்.

"முதல்வரின் உடனடி நடவடிக்கையும் செயலும் – அவருக்கு நீதித்துறை மீதுள்ள மரியாதையையும், மதிப்பையும்; சமுதாயத்தின் நலன்களுக்காக மிகச் சிறந்த
முறையில் செயலாற்ற அவருக்குள்ள ஆர்வத்தையும் காட்டுகின்றன... முதல் அமைச்சர், தனது கையில் சாட்டையை எடுத்துள்ளதால், அவர் மீது நான் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, இத்தலையங்கத்தின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பாராட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

"கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது என்று கடந்த காலத்தில் நான் கூறியதை நினைவுபடுத்துகிறேன்' என்று முதல்வர் கூறியது, இப்போது அவர் கையில் எடுத்த "சாட்டை'யா? இதுவா
நீதித்துறை மீது அவருக்குள்ள மரியாதையைக் காட்டுகிறது? இதுவா சமுதாய நலனுக்காகச் சிறந்த முறையில் செயலாற்ற அவருக்குள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது? நமக்குப் புரியவில்லை.

ஆனால், நீதிபதி அவ்வாறு நினைத்திருக்கிறார். அதனால்தான், தனது தீர்ப்பிலேயே, முதல்வரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். நீதிபதியே, தனது ஸ்தானத்தில்
அமர்ந்து அளித்த தனது தீர்ப்பில், முதல்வருக்குப் பாராட்டுகளைத்
தெரிவித்திருப்பதால், அந்தப் பாராட்டுகளுக்கு ஏதோ ஆதாரம் இருக்க வேண்டும். அதைப் புரிந்துகொள்வது நம் கடமை.

முதல்வரின் திறமைகளையும், குணாதிசயங்களையும் நீதிபதி பட்டியலிட்டிருப்பதைப் பார்த்தால், அவர் வெகுகாலமாக தமிழக முதல்வரின் செயல்பாட்டைக் கவனித்து
வந்து, இப்போது கருத்து தெரிவித்திருப்பதாகவே தோன்றுகிறது.

சரி. அப்படியானால், ஒவ்வொரு பாராட்டுக்கும், ஒரு அடிப்படை இருக்க வேண்டுமே? இருக்கும். அப்படி இல்லாமலா, நீதிபதி தனது தீர்ப்பில் இந்தப் பாராட்டையெல்லாம் கூறியிருப்பார்!

"நடைமுறை நிர்வாகக் கலையுடன் கூடிய, தார்மீக தொலைநோக்கு' கொண்டவர்
முதல்வர் என்பது ஒரு பாராட்டு. இதற்கு என்ன ஆதாரம்?... உம்... ஆ!... "கூட்டணி தார்மீக' தொலைநோக்குடன், கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸிற்கு உதவுவதற்காக, ஹொகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தாரே, முதல்வர் – அதற்காகவோ, இந்தப் பாராட்டு! இருக்கலாம்.

"நிதானம் கொண்டவர் முதல்வர்' என்று நீதிபதி பாராட்டியிருப்பது? நிருபர்கள் சற்று இடைஞ்சலான கேள்விகளைக் கேட்டபோது, "நீதாண்டா கொலைகாரன்... நான் அடிச்சா தாங்குவியா...?', "வர்றீயா... கொளுத்திக்கலாமா...?' என்றெல்லாம் முதல்வர் பதில் கூறினாரே, அதில்தான் "நிதானம்' தெரிகிறது போலிருக்கிறது.

"விருப்பு, வெறுப்பற்ற உயர்ந்த மன உறுதி கொண்டவர்' என்றும் நீதிபதியின் தீர்ப்பில் பாராட்டுப் பெறுகிறார், முதல்வர். இதற்கு என்ன அடிப்படை என்று திகைக்க வேண்டியதில்லை. ஹிந்து மத நம்பிக்கைகள் மீது விருப்போ, மற்ற மதங்களின் நம்பிக்கைகள் மீது வெறுப்போ இன்றி, மன உறுதியுடன் ஹிந்து மத நம்பிக்கைகளை அடிக்கடி தாக்கிப் பேசுகிறாரே முதல்வர்! அதுதான் விருப்பு, வெறுப்பற்ற மன உறுதி.

அடுத்த பாராட்டு, "சிறந்த ஸ்டேட்ஸ்மேன்'. காவிரி நீர் பிரச்சனை தீராதபோது, அதைத் தீர்த்து வைத்ததற்காக சட்டசபையில் பாராட்டுப் பெற்றுக்கொண்டாரே முதல்வர் – அது என்ன சாதாரண வேலையா? இன்னமும் காவிரி நீர் பிரச்சனையும் தீரவில்லை; கூடவே முல்லைப் பெரியாறும் சேர்ந்துகொண்டது. ஆனால், தமிழகத்தின் நலன்களை முதல்வர் பாதுகாப்பதாக அவரே சொல்லிக்கொள்கிறார்! ஆகையால், ஸ்டேட்ஸ்மேன்தான்!

"சமுதாயத்தின் போக்கை வழிநடத்துபவர்களுக்குத் தேவையான திறமை கொண்டவர் முதல்வர்' – என்பது நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்து. ஒருவேளை, சேதுசமுத்திரத் திட்டத்தை சமுதாயம் ஏற்க வேண்டும் என்பதற்காகவே
– ராமன் குடிகாரன், சீதைக்கு ராமன் சகோதரன்... அவன் எந்த எஞ்ஜினியரிங்
கல்லூரியில் படித்தான்? என்றெல்லாம் பேசினாரே – அந்தத் "திறமை'யை நீதிபதி சொல்கிறார் போலிருக்கிறது.

"நிர்வாகத் திறன்' என்ற பாராட்டுக்கு, வேறு எங்கும் ஆதாரம் தேட வேண்டாம். நீதிபதி ரகுபதி அவர்களே, "மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும், காவல் நிலையங்களில் புகார் கொடுத்தவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரிடமும் லஞ்சம் பெறப்படுகிறது. சட்டம் – ஒழுங்கே கேலிக்கூத்தாகி விடும்...' என்று சொன்னாரே! அப்படிப்பட்ட நிர்வாகம்! பாராட்டுக்கு அதுதான் காரணமோ!

அடுத்த பாராட்டு "விவேகம்'. எதிர்க்கட்சித் தலைவரின் புகாருக்கு "யாரோ ஊற்றிக் கொடுத்ததால் உளறுகிறார் போலிருக்கிறது' என்று கவிதை எழுதினாரே முதல்வர்
– அதனால் அவர் இந்தப் பாராட்டுக்குரியவர் ஆகிறார் போலிருக்கிறது.

"சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு, அனைவரும் ஏற்கும் விதத்தில் தீர்வு காண்பதில், லாகவமான திறமை கொண்டவர்' – என்ற பாராட்டுக்குக் காரணம்? இருக்கிறது. காரணம் இருக்கிறது. சன் டி.வி.யின் சுமங்கலி கேபிளை ஒழித்துக் கட்டுவது எப்படி என்ற பிரச்சனைக்கு, அனைவரும் ஏற்கிற மாதிரி, லாகவமாக, "மலிவாக அரசு கேபிள்' என்ற தீர்வு கண்டாரே முதல்வர்! அதுதான் லாகவம். அதுதான் அனைவரும் ஏற்கிற தீர்வு!

கட்டப்பஞ்சாயத்தில் காவல்துறை ஈடுபடக்கூடாது என்று, தான் ஏற்கெனவே சொல்லியிருப்பதாக முதல்வர் சொன்னது, "சாட்டையைக் கையில் எடுத்த நடவடிக்கை' எனப் பாராட்டி, அது "நீதித்துறை மீது அவருக்குள்ள மரியாதையையும், மதிப்பையும்' காட்டுவதாக நீதிபதி பாராட்டி யிருக்கிறார். இதுமட்டும்தானா, நீதித்துறை மீது முதல்வருக்கு இருக்கிற மரியாதையையும், மதிப்பையும் காட்டுகிறது?

அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "முதல்வரை விமர்சிப்பதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது; தமிழ்நாட்டை அவர்களே (நீதிபதிகளே) ஆள வேண்டும் என்று நினைப்பதா?' என்றும், வேறுவார்த்தைகளினாலும், நீதித்துறையை எச்சரித்தபோது, அவரைப் பாராட்டி, "பூனைக்கு மணி கட்டியாகிவிட்டது' என்று முதல்வர் திருப்தியுற்றுப் பேசினாரே – அது காட்டவில்லையா அவருடைய மரியாதையை!

நீதிபதி தனது தீர்ப்பில் முதல்வரைப் பற்றிக் கூறியுள்ள பாராட்டுகளுக்குக்
காரணங்களைக் கூறாததால், நாமே கஷ்டப்பட்டு முயற்சித்துக் காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறோம்.

முதல்வரின் நிதானம், விவேகம்; சமுதாய நலனில் அவர் காட்டுகிற அக்கறை; ஆர்வம்; பிரச்சனைகளைத் தீர்க்கிற லாகவம்; விருப்பு வெறுப்பற்ற செயல்பாடு
– ஆகியவற்றையெல்லாம் நீதிபதி அவர்கள் இவ்வாறு பாராட்டிய பிறகு, நாளையே அவர் முன்பு ஒரு வழக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். முதல்வரின் சமுதாய விரோத நடவடிக்கை, அல்லது விருப்பு வெறுப்புடன் கூடிய செயல்பாடு
– போன்ற ஏதோ ஒன்றை மையமாக வைத்து ஒரு வழக்கு வந்தால், என்ன ஆவது? சொல்லப்போனால், முதல்வரின் நிர்வாகத்தை இவ்வளவு தூரம் பாராட்டிவிட்ட
நீதிபதி முன்பு, தமிழக அரசுக்கு எதிரான வழக்கு வருவது கூடச் சரியாக இருக்குமா?

இந்த மாதிரி கேள்விகளுக்கு அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பது – ஒரு துரதிருஷ்டம். நீதித்துறையைப் பொறுத்த அளவில் – பல காலமாகக் காப்பாற்றப்பட்டு வருகிற மரபுகள்; இது சரி, இது கூடாது என்கிற ஒரு ஒழுங்கு முறை (ப்ரொப்ரைட்டி); யாவரும் மதிக்கத் தகுந்த கண்ணியம் – ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், நீதித்துறைக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே ஒரு அக்கறை உண்டு. அந்த அக்கறையினாலும், பத்திரிகைத்துறைக்கு இவ்விஷயத்தில் உள்ள பொறுப்பினாலும்தான், நாம் இந்தத் தலையங்கக் கருத்துக்களைக் கூறுகிறோம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க – ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நீதிபதியின் இந்தப் பாராட்டுக்கு முன்பாக – வழக்கமாக முதல்வர் மீது பாராட்டு மழை பொழிகிற கவிஞர்களும், திரைப்படத் துறையினரும், தங்கள் தோல்வியை மரியாதையாக ஒப்புக்கொண்டு – கலைஞரின் திரையுலக வசன பாணியில் கூறுவதானால்
– பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடவேண்டியதுதான்!

முதல்வரைப் பாராட்டுவதில் சற்றும் சலிப்பின்றி, பெரும் சாதனை படைத்து வருகிற, கவிஞர்களும், இலக்கியவாதிகளும், நடிகர்களும், அமைச்சர்களும், உடன் பிறப்புகளும் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்! வெற்றி
நீதிபதியினுடையதே!

8 Comments:

நாரத முனி said...

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பவன் இல்லை இந்த நாரத முனி. அதை அப்படியே ஏற்று கொள்பவன்.

என்ன எப்பவாவது ஆர்காட் வீராஸ்வாமி மூலமா " வானத்துலேந்து குதிச்சங்களா, பூமிக்கி அடில மொலச்சாங்கலானு" statement விடுவோம் அவ்ளோதான்.

Anonymous said...

Well said, Mr.CHO. The judge in question ought to have known his
position and spoken with caution.

Anonymous said...

Well said, Mr.CHO. The judge in question ought to have known his
position and spoken with caution.

Anonymous said...

ஒருத்தர பாராட்ரதுல என்ன தப்பு? அதுக்கும் ஒரு கட்டுரை எழுதிறதா? இப்படில்லாம் தப்பு சொல்ல ஆரம்பிச்சா எந்த அரசியவாதியவும் யாரும் பாராட்ட முடியாது. சோ எளுதியிருக்கரதுக்கு பெயர் வயித்தெரிச்சல் தான். அவர நக்கல் பண்ணறதுல இருக்கற ஆர்வம், அவர் பண்ண நல்ல விசயங்கல பத்தி சொல்லரதுளையும் இருக்கனும்.

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Anonymous said...

Mr. Cho has been attacking Kalaigar constantly with prejudice. we will have to take this, one such article. you can praise Advani or Amma it doen't matter to Cho. But, if someone prasies Kalaigar, Cho cannot sleep unless he give reply to that article. Cho degrading himself by behaving like this and if he continues Soooo, people with forget him and treat him as a real joker.

ChamathuSiva said...

The "observations" shared by some of the readers may not be true in case of Mr.Cho. I have been reading his magazine 'Thuglak" for quite sometime and I feel that Mr.Cho takes every politician for a ride purely on issue-basis and never on the party-lines. I believe Mr.Cho will continue this stand for the times to come in the future.
I believe his comments regarding the judgement are fairly balanced in the sense that this is an alarm message to the State judiciary to ensure impartiality in their judgements and I believe no-one would expect kudos for something that the CM has been elected to "serve the people who elected him", not playing to the gallery of CM's party people or his family members.