பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 12, 2008

பழிவாங்கும் புத்தி கருணாநிதியின் ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று - ராமதாஸ்

ரிப்போட்டரில் வந்த ராமதாஸ் பேட்டி

சமீபகாலமாக உங்கள் கவனம் தென்மாவட்டங்கள் பக்கம் திரும்பி இருக்கிறதே? வன்னியர் சமுதாய பலம் இல்லாத இந்தப் பகுதிகளில் பா.ம.க.வை எப்படி வளர்த்து நிலை நிறுத்தப் போகிறீர்கள்?

``உங்கள் கேள்வியே தவறாக இருக்கிறது. இருந்தாலும் பதில் சொல்கிறேன். பொதுவாக அரசியல் கட்சிகள் என்பது மாவட்டங்களைத் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டு, இந்த மாவட்டம் இந்த அரசியல் கட்சி... அந்த மாவட்டம் அந்த அரசியல் கட்சி என்று நடத்துவது கிடையாது. பா.ம.க. என்பது தமிழகம் முழுமைக்கான கட்சி. ஜூலை 16-ம் தேதியன்று இருபது வருடங்களைப் பூர்த்தி செய்யப் போகிற தேசிய கட்சிபா.ம.க.! இந்த இருபது வருடங்களில் தமிழகம் முழுதும் செயல்படுகிற கட்சியாக பா.ம.க. பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. 98 - 99-ம் வருடங்களில் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடு நடத்தியிருக்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்திலும் அந்த மாநாட்டை நடத்தியிருக்கிறேன். இது வரலாறு. வேறு எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதுபோல் செய்தது கிடையாது. தவிர, தென்காசியில் உர விலை ஏற்றத்துக்கான போராட்டம், திருநெல்வேலியில் கார்னெட் பிரச்னைக்கான போராட்டம்... இவற்றிலெல்லாம் நானே நேரடியாகப் பங்கேற்று இருக்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கும் சென்று கொடி ஏற்றியிருக்கிறேன். சில கிராமங்கள் வேண்டுமானால் விடுபட்டுப் போயிருக்கலாம். ஆனாலும், ராமநாதபுரத்தில் மாநாடுகள் மற்றும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். மங்களம் ஏரியில் தூர் வாரும் பணியினை மேற்கொண்ட போது, அந்த ஏரியிலேயே இரண்டு இரவுகள் நான் படுத்து உறங்கி இருக்கிறேன். இது போன்ற விஷயங்களுக்காக ஒருவரைக்கூட வட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரவில்லை. இந்த மாவட்டத் தொண்டர்களைக் கொண்டே போராட்டம், சமுதாயப் பணிகளைச் செய்தோம். இப்படி படிப்படியாக தென் மாவட்டங்களில் பா.ம.க. வளர்ந்திருக்கிறது.''

காடுவெட்டி குருவின் கைது விவகாரத்தில் அவர் மீது புகார் கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் குணசேகரனும், பா.ம.க.வைச் சேர்ந்த செல்வி செல்வமும் குருவின் ஆட்களால் மிரட்டப்பட்டதால்தான் அவர்கள் இருவரும் வழக்கை வாபஸ் வாங்கியதாகச் சொல்லப்படுகிறதே?

``பொய்யான தகவல். குரு இதுவரை யாரையும் மிரட்டியதே கிடையாது. மிரட்டும் வேலைகளைச் செய்வதும் கிடையாது. குரு சின்னப்பொய் கூடச் சொல்ல மாட்டார். நேர்மைன்னா நேர்மைதான். கட்சியிலும் சரி, வெளியிலும் சரி. யார் தவறு செய்தாலும் காடுவெட்டி குருவுக்குப் பிடிக்காது. அந்த மாதிரியான ஆளுதான் குரு. அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகள் பொய் வழக்குகள் என்று கலைஞருக்கு நானே பலமுறை கடிதம் எழுதியிருக்கிறேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குரு மீதான பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று கலைஞரைச் சந்தித்து மனுவும் கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்தும் பலமுறை மனு கொடுத்து இருக்கிறார்கள். `மேலிடத்திலிருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை' என்றுதான் போலீஸ் உயர் அதிகாரிகளும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். குருவின் மீதான பொய் வழக்குகளைத்தான் நாங்கள் வாபஸ் வாங்கக் கோருகிறோமே தவிர, வழக்குகளை வாபஸ் வாங்கக் கோரவில்லை. அந்தப் பையன் குணசேகரனே, `குரு அண்ணன் எனக்குக் கடவுள் மாதிரி'ன்னு சொல்கிறான். நாங்கள் யாரும் `இப்படி சொல்லுப்பா'ன்னு சொல்லிக் கொடுக்கவில்லை.

அதே போல் எங்கள் கட்சியைச் சேர்ந்த செல்வி செல்வத்திடமும், அவரது வீட்டில் குரு குண்டு வீசியதாக பொய்ப் புகார் வாங்கி, அதில் ஏழாவது குற்றவாளியாக குருவை, போலீஸ் எஃப்.ஐ.ஆரில் சேர்த்திருப்பதும் எனக்குத் தெரியவந்தது. செல்வி செல்வத்தின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டதாக போலீஸ் சொன்ன நாளில், குரு தைலாபுரம் தோட்டத்தில் நான் நடத்திய பயிற்சி முகாமில் இருந்தார். அப்படியே குரு சொல்லித்தான் குண்டு வீச்சு நடந்தது என்று சொன்னால், போலீஸ் என்ன செய்து இருக்க வேண்டும்? அப்போதே குருவை உடனடியாகக் கைது செய்து இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லையே? ஆகவே, இரண்டுமே தி.மு.க. அரசின் தூண்டுதலின் பேரில் போலீஸ் ஜோடித்த பொய் வழக்குகள் என்பதால்தான் குணசேகரனும், செல்வி செல்வமும் தங்களுக்கும் அந்தப் புகாருக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார்கள். வழக்கை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்.''

மத்திய அமைச்சர் ராசாவை மிரட்டியதாகவும் குரு மீது தனி வழக்கு சுமத்தப்பட்டிருக்கிறதே?

``அவரை குரு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? மத்திய அமைச்சர் மீது குரு சொன்ன வார்த்தைகள் எல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் பேசியவை. பொதுக்குழு என்றாலே யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். இது எல்லாக் கட்சியின் பொதுக்குழுவிலும் நடப்பதுதான். குளித்தலையில் நடந்த ம.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத்தை குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. மேடையேறித்தாக்கியிருக்கிறார். மறுநாள் பதில் மேடை போட்டு அமைச்சர் நேரு உள்பட பலரும் ம.தி.மு.க.வினரை `வெட்டுவேன். குத்துவேன், நாக்கை அறுத்து விடுவேன்' என்று வெறித்தனமாக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியிருக்கிறார்கள். அப்படிப் பேசிய அவர்கள் மீது இன்றுவரை போலீஸ் ஒரு எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யவில்லை. சட்டம் என்றால் எல்லாருக்கும் பொது தானே? குருவுக்குத் தனிச்சட்டம்... குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குத் தனிச்சட்டம் என்று இருக்கிறதா என்ன? இதற்கு முதல்வர் கருணாநிதி எனக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.''

தி.மு.க.வுடன் தோழமையோடு இருந்தபோது காடுவெட்டி குரு விவகாரத்தில் அமைதி காத்த தி.மு.க. அரசு, நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தான் பழிவாங்கும் நோக்கத்தோடு குருவைக் கைது செய்துள்ளதாகக் கருதுகிறீர்களா?

``கண்டிப்பாக. பழிவாங்கும் புத்தி கருணாநிதியின் ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தன்னைஎதிர்ப்பவர்களை, தன்னோடு இணங்காதவர்களை அரசியல்ரீதியாகப் பழிவாங்குவது கருணாநிதியின் தனித்துவமான பாணி. இதனை கட்சி பேதமில்லாமல் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மனசாட்சியோடு ஒப்புக் கொள்வார்கள். காடுவெட்டி குருவின் கைது என்பது கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சகட்டம். இன்னும் கூட பல விவகாரங்களில் எங்களைப் பழி வாங்கும் நடவடிக்கைகளை கருணாநிதி முடுக்கி விட்டிருப்பதாக எனக்குத் தகவல் வருகிறது. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.''

வடமாவட்டங்களில் அசைக்க முடியாத கட்சியாக பா.ம.க. இருக்கிறது என்பது உங்களால் தொடர்ந்து `ஃபோகஸ்' செய்யப்பட்ட பிரசாரம்தான் என்றும், காடுவெட்டி குருவைக் கைது செய்தால் பெரிய அளவில் வடமாவட்டங்களில் பாதிப்புகள் இருக்காது என்று உளவுத்துறையினர் முதல்வருக்கு விளக்கிக் கூறிய பிறகு தான் குருவை கைது செய்யும் நடவடிக்கைக்கு அனுமதி கிடைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

(பெரிதாகச் சிரித்தபடி) ``மத நல்லிணக்கம் என்ற பெயரில் இதுவரை பதினாறு மாநாடுகள் நடத்தியிருக்கிறேன். அதில் மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ ஒரு துளி ரத்தம் கூட இந்தப் பூமியில் சிந்தக் கூடாது என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். பதினாறாவது மாநாட்டைஅரியலூரில் நடத்தினோம். அதற்குத் தலைமை வகித்தது கருணாநிநிதான். இப்படி மாநாடுகள் மூலமாகவும், தைலாபுரம் தோட்டத்தில் நான் நடத்தும் பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் பல விஷயங்களை வலியுறுத்தி வருகிறேன். வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது, மறியல் செய்யும்போது சாலைகளை மறித்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. பொது சொத்துக்களை நாசம் பண்ணக்கூடாது என்று `அரசியல் சீரழிவுகள்' என்ற தலைப்பில் இருபத்தைந்து விஷயங்களைப் பட்டியலிட்டு வகுப்பு எடுக்கிறோம். அதன் மூலமாக எங்கள் கட்சியினரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். குருவின் கைதைக் காரணம் காட்டி, வட மாவட்டங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கேவலமான செயலை, எங்கள் கட்சித் தொண்டர்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால் தான் அது பா.ம.க. என்பது ஒரு மோசமான வாதம். அவற்றை செய்யாததாலேயே எங்கள் கட்சி வட மாவட்டங்களில் செல்வாக்கை இழந்துவிட்டது என்று தி.மு.க.வினர் பிரசாரம் செய்வார்களேயானால், அது கேவலமான செயல் என்றுதான் சொல்லுவேன்.

வன்முறைச் செயல்களை வைத்துத்தான் ஒரு கட்சியை எடை போட வேண்டும் என்றால், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டார்களே. அதை வைத்து தி.மு.க.வை எடை போட முடியுமா? வடமாவட்டங்களில் பா.ம.க.வை வெறுமனே நான் `ஃபோகஸ்' செய்துகொண்டிருக்கிறேன் என்பதும், அங்கே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதும் தி.மு.க.வின் திட்டமிட்ட விஷமப்பிரசாரம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சின்ன அசம்பாவிதம்கூட நடக்கக் கூடாது என்று குருவிடமும், அந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் கூறி அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.''

தி.மு.க. கூட்டணியில் தோழமையுடன் இருந்தபோது, முதல்வரையும் அவர் முன்னெடுத்து வைக்கும் மக்கள் நலத்திட்டங்களையும் கடுமையாகவிமர்சித்து வந்த நீங்கள்,கூட்டணியை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, அடக்கியே வாசிக்கிறீர்களே, அது ஏன்?

``தினம் ஒரு அறிக்கை கொடுத்து, விமர்சனங்கள் என்ற பெயரில் ஆளும் தி.மு.க. அரசின் மீது சேற்றை வாரிப் பூசுவது போன்ற காரியங்கைளக் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் செய்யவில்லை. அதனை `தைலாபுரத்திலிருந்து எனக்குத் தைலம் வருகிறது' என்று கருணாநிதியே பாராட்டியும் இருக்கிறார். அந்த அளவுக்கு அவருடன் அனுசரணையாக நாங்கள் நடந்து கொண்டோம். அதே சமயம், மக்களுக்கு விரோதமான திட்டங்கள் வருகிறபோது, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படவும் செய்தோம். வரம்பு மீறிய விமர்சனங்களை ஒரு போதும் நான் செய்ததும் இல்லை. கூட்டணியில் இல்லாத இந்த நிலையிலும் தயவு தாட்சண்யமில்லாமல் விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காக தினமும் விளம்பர நோக்கத்தோடு `கருணாநிதி இப்படி அப்படி' என்ற ரீதியான மலிவான விமர்சனங்கள் செய்வதை நான் ஒரு போதும் விரும்புவதும் கிடையாது. நான் அப்படிப்பட்டவனும் கிடையாது.''

நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விஷயத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்று யோசித்து வைத்திருக்கிறீர்கள்?

``இப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கட்சியோடு அதாவது, காங்கிரஸோடு தனிக்கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம் என்ற திட்டம் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த நாற்பது வருடங்களாக காங்கிரஸுக்கு ஒரு முழுமையான அதிகார பலம் இல்லாமல் இருக்கிறது. மத்தியில் காங்கிரஸைப் பலப்படுத்தவும், இந்தக் கூட்டணிக்குத் தயாராகும் வேறு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மூன்றாவது கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று இருக்கிறோம்.''

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உங்கள் சம்பந்தி கிருஷ்ணசாமி நீடித்திருந்தால் நீங்கள் சொல்கிற மூன்றாவது கூட்டணி ஒருவேளை சாத்தியப்பட்டிருக்கலாம்.இப்போது தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது சாத்தியமா?

``கிருஷ்ணசாமி இருந்தால் என்ன? தங்கபாலு வந்தால் என்ன? காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் இருந்தாலும் அவருடன் கூட்டணி விஷயங்கள் குறித்துப் பேசுவேன். கிருஷ்ணசாமி காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தால் கூட்டணி விஷயங்கள், வியூகங்கள் சுலபமாக ஈடேறும் என்றோ, தங்கபாலு வந்து விட்டதால் அவை தடைப்படும் என்றோ நான் நினைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அதற்கான திட்டங்களை, யோசனைகளை நிச்சயமாக முன்னெடுத்துச் செல்வேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது!''

4 Comments:

amuthapriyan said...

பொய்யான தகவல். குரு இதுவரை யாரையும் மிரட்டியதே கிடையாது. மிரட்டும் வேலைகளைச் செய்வதும் கிடையாது. குரு சின்னப்பொய் கூடச் சொல்ல மாட்டார். நேர்மைன்னா நேர்மைதான். கட்சியிலும் சரி, வெளியிலும் சரி. யார் தவறு செய்தாலும் காடுவெட்டி குருவுக்குப் பிடிக்காது---------------hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi..ore kushtammappa...

Anonymous said...

//ஆனால், ஒன்று மட்டும் உறுதி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது!//

எனக்கு சிரிப்பு வருதுங்கோ!!!

Bleachingpowder said...

அதல்லாம் உடுங்க நேத்து பா.ம.க நடத்து மது ஒழுப்பு போராட்டம்ற பேர்ல நடந்த காமெடிய பாத்தீங்களா.. பாக்கலைனா இந்த லிங்க க்ளிக் பண்ணுங்க...

http://onlysuperstar.blogspot.com/2008/07/blog-post.html

முதல்ல இந்தாள் மது ஒழிப்பை கட்சில அமுல் படுத்தட்டும் அப்புறம் தமிழ் நாட்டை திருத்தட்டும்

Anonymous said...

"அரசியல் அநாதை" ராமதாஸ் பேட்டி சுடச்சுட அப்டேட், ஒ.கே.

"ரவுடிச் சக்கரவர்த்தி" மதுரை தாதா "அஞ்சா நெஞ்சன்" அவர்களின் 'தவப்புதல்வி" கயல்விழி அவர்கள்தான் ராமதாஸை
"அரசியல் அநாதை" என்று சொல்லி குமுதத்தில் பேட்டி கொடுத்துள்ளார். நீங்க இன்னும் படிக்க வில்லையா?

அதையும் அப்டேட் செய்ங்க.

ஒரு விஷயம் "பிற்படுத்தப்பட்ட தந்தைக்கும்" & "தாழ்த்தப்பட்ட" தாய்க்கும் பிறந்த கயல்விழி மிகவும் அழகாக இருக்கிறார். போட்டோக்கள் சூப்பர். ஆனால் அவருக்கு திருமணமாகிவிட்டது என்று நண்பன் சொல்கிறார்.

என்ன இழப்பு? அவர் சொல்லியதுபோல "அரசியல் அநாதை" ராமதாஸ்தான் ! 100% உண்மைதான்.

வாரிசு அரசியலில் இவங்களை அடிச்சிக்கிற ஆளே இல்லைங்க.