பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 30, 2008

அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு....

28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை..

ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது.

26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில்,

"தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார்.

இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்."

- என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்.

ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை.

ராமர் குடிப்பார்

அவருக்கு

குடிப்பழக்கம் உண்டு

என்று ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரே கூறியிருக்கிறார். வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டத்தில் ஸர்க்கம் 37ல் -

ராமருக்குக்

குடிப்பழக்கம்

உண்டு

என்று வால்மீகியே கூறியிருக்கிறார் என்றுதான் கலைஞர் எடுத்துக்காட்டியிருந்தாரே தவிர - தமது சொந்தக் கருத்தாக ராமர் பற்றி அப்படியெல்லாம் கூறவில்லை.

28.9.2007 தேதியிட்ட ‘முரசொலி’யில் ‘சுந்தரகாண்டம் சொல்வது என்ன?’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினார். அதிலே -

"இராமனைக் கருணாநிதி இழித்துரைத்தார் இராமன் மது அருந்தியதாகக் கூறுகிறார் - அதனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பதவி துறக்கவேண்டும் என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். ‘வால்மீகி’" எழுதிய ராமாயணம் என்ன சொல்கிறது? மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற ராமாயண ஆய்வு நூல் என்ன சொல்கிறது?

அவற்றில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காகப் பயன்படுத்த விரும்பவில்லை இதோ -

"சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோகவனத்தில் கண்டு, அவளைப் பிரிந்த இராமன் படும் துன்பத்தை இதோ; ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்.

"தேவியாரைப் பிரிந்த நிலையில் இராமருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது தேகம் அலுத்துத் தூங்கினாலும் ‘சீதே’ என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக்கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை விட்டுவிட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்குகளையே சாயங்காலத்தில் புசிக்கிறார்"

"உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்; அதைப் பிடித்துக்கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் - அம்மையின் பிரிவால் அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டுவிட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!"

- என்று வால்மீகி முனிவரின் வாக்குமூலமே ராமர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை விளக்கியிருந்தார்.

வால்மீகி ராமாயணத்தின் சுந்தரகாண்டம் ஸர்க்கம் 37ல் அப்படியெல்லாம் இல்லை என்று இன்று வரை எந்தக் கொம்பனும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது!

வால்மீகி குறிப்பிட்ட ‘மது’ என்ற சொல்லுக்குத் ‘தேன்’ என்றுதான் அர்த்தம். மது என்று அர்த்தமல்ல என்று துக்ளக் சோ மழுப்பினார் பதில் என்ற பேரில்.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட கழகத் தமிழ் அகராதியில் தேன் என்றாலும் மது, கள் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது.

ராமனின் அயோத்தி மக்களே குடிப்பழக்கம் உள்ளவர்கள். ஆண்கள் மட்டும்தானா பெண்களும் குடிகாரர்களாகத்தான் இருந்தார்கள் என்று கம்பராமாயணம் கூறுகிறது.

ஜெயலலிதாவின் ஆர்.எஸ்.எஸ். நகல் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பெயர்.

கட்சிக்கொடியிலும் அண்ணாவின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அண்ணா ‘கம்பரசம்’ என்ற நூலில் அயோத்தி மக்கள் குடிகாரர்கள் - ராமனுக்கு காம உணர்ச்சி அதிகம் என்பதை கம்பராமாயணத்திலிருந்தே டோஸ் - டோசாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் என்ற செய்தி அயோத்தி மக்களிடையே பரவுகிறது. அந்தச் செய்தி அவர்களது சிந்தை எல்லாம் மகிழ்ச்சி மயமாக்குகிறது! அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்; எப்படி?

குடித்துக்

கும்மாளமிட்டு!

உண்டாட்டுப் படலத்திலே உவகை பொங்கிட - கம்பர் அந்தக் குடிகாரர்களின் நிலையையும் - அவர்களது கொண்டாட்டத்தையும் வர்ணித் திருக்கிறார். எப்படி?

அதை அண்ணாவின் வாயாலேயே கேட்போம்:-

"வெண்ணிலா தன்னொளி பரப்பிற்று; இராமனுடைய தூயமனம் போலவா - தசரதனுடைய வெண்கொற்றக் குடைபோலவா - அல்ல, அல்ல, காமம் மிக்கு ஒழுகிற்று என்ன என்று அறிவிக்கிறார் அரிதாசர், பளிச்செனப் புரியவேண்டும் என்பதற்காக, காமம் மிக்கு ஒழுகிற்று என்று கூறியதுடன் கள் வெள்ளம் புரண்டு வருவதுபோல என்றார்.

வெப்பம் கொண்டு இருபாலரும் விடுதி திரும்பினர் - அவர்களை நிலவு மகிழ்விக்க வந்தது - அந்த நிலவொளி எங்ஙனமிருந்ததென்றால், காமம் மிகவும் வெளிப்பட்டது போலவும், கள்வெள்ளமாக ஓடியது போலவுமிருந்தது, மதி நிறைந்தது, மதுக்குடம் தெரிகிறது. காமுற்ற இரு பாலரிடம் கட்குவளைகள்! உண்டாட்டுப் படலத்தில் முதற் பாடலே இது; அவர்கள் இனி உண்ணப் போவது என்ன, ஆடப் போவது எவ்விதம் என்பதை எடுத்துக்காட்டுவது போல, இனி அவர்கள் கள்ளைக்குடித்துவிட்டு காமக் கூத்தில் ஈடுபடப் போகிறார்களென்பதைச் சுட்டிக் காட்டியாகிவிட்டது - முதற்பாட்டிலேயே; அந்தக் கூத்து நடந்து தொலைக்குமட்டும் கவி, வேறு பொருள்பற்றிக் கூறிடலாகாது; இதை இனியும் காணவல்லேன் அல்லேன்; என்று கூறியபடி மதி எனும் மங்கை நல்லாள் மறைந்திடக் கண்டான், சுடுகிறேன் அவர் தமை என்று சூளுரைத்துமே கதிரவன் எழுந்தான் காணீர் - என்று ஒரே பாடலோடு முடிந்திடலாகாதா! நம்மைக் கூறுவர், சரியப்பா! காமச் சுவை இருக்கிறது என்று ஒரு வரியோடு விட்டுத் தொலைக்காமல், துளைத்துத் துளைத்துக் காட்டுவதா - என்று வெட்கத்தால் தாக்குண்டவர்கள். கம்பர் இந்த உண்டாட்டுப் படலத்தில் 67 பாடல்கள் பாடி இருக்கிறார். அவ்வளவும் ரவிவர்மா கை வண்ணத்தோடு வெளிவந்தால், உலக உல்லாசக்கூடக் கண்காட்சியில் முதலிடம் பெறும். அவ்வளவு ‘ரசம்’!!

மகளிர் கள்ளைக் குடிக்கும்போதே, வழி நடந்த களைப்புத் தீரவேண்டும் என்றோ, அலுத்து உறங்க வேண்டும் என்றோ எண்ணவில்லை! பஞ்சைகளன்றோ அவ்விதம் எண்ணுவர்! இவர்கள் கொஞ்சுமொழிப் பாவையர், எனவே, தங்களை ‘யுத்தத்துக்கு’த் தயாரித்துக் கொள்ளவே, குடிக்கிறார்கள்.

குடித்தார்கள், குடித்தார்கள் என்று குறை கூறாதே, அவர்கள் குடித்தது, தேன் அல்லது, மலரும் வாசனைப் பொருள்களும் சேர்ந்த சுவைமிகு பானம் - கள் அல்ல! என்று வாதாடிப் பார்க்கிறார்கள் சிலர்.

பைத்தியக்காரி! இது ஏதோ உடலுக்குக் கெடுதல் என்று எண்ணுகிறாள்! இது அவ்வளவும்! பிளட் (க்ஷடடிடின) டானிக்!" என்று, ‘இழந்த காதல்’ நாடகத்தில் ஒரு கட்டம் வரும்; அதுபோலச் சிலர், அயோத்தி அணங்குகள் போதை சாப்பிடவில்லை என்று கூறுவர்! உள்ளதை மறைக்க வெகு பாடுபடுகிறார்கள்!!

கண் சிவக்கிறது, நிலை தடுமாறுகிறது, ஒரு பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது, எதிரில் இருப்பது இன்னது என்று தெரியவில்லை, பாத்திரத்தில் பானம் இருப்பதும் தீர்ந்து போனதும் புரியவில்லை. நிலவுக்கும் கள்ளுக்கும் மாறுபாடு தெரியவில்லை. நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நாக்குக் குழறுகிறது. வார்த்தைகள் பொருளற்று உருள்கின்றன. காரணமற்றுச் சிரிப்பு, கைகொட்டி ஆடுவது - இது தேன் உண்டதின் இலட்சணமா!!

இவ்வளவு வருகிறது, கம்பர் கவிதையில் தெளிவாக, உண்டாட்டுப் படலத்தில்.

மலரணை! மலர் சூடிய மங்கையர்! மதுக்குடம் இப்படித்தான் ஆரம்பமாகிறது; உண்டாட்டுப் படலம் ஆறாம் பாடல். களவிப்போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, களித்திடவேண்டும் என்ற கருத்துடனேயே பருகுகிறார்கள் - பஞ்சை பராரிகள் அல்ல. எனவே புளித்துப்போன கள்ளை மண் பாண்டத்தில் வார்த்துக் குடிக்கவில்லை - பொற்கிண்ணத்தில் புதிய மதுவை ஊற்றிக் குடிக்கிறார்கள். உண்ட கள் காமத்தை மூட்டுகிறது! கவிதை 9. ஓமகுண்டத்திலே நெய்யை ஊற்றினதும் தீ மேலே எழுவது போல, உள்ளே மது சென்றதும், மூண்டு கிடந்த காமம் மேலே எழுகிறது.

வெம் காமம் கனலினை

கனற்றிக் காட்டிற்று

சாதாரணக்குடி அல்ல! பட்டதும், வெடித்தெழுகிறது காமம்! இராமபாணத்தின் சிறப்பைப் பிறகு பாடலாம் இப்போது இந்த ரசபானத்தின் சிறப்பைக் கூறி முடிப்போம் என்று கம்பர் விரிவாகவே, அதனால் ஏற்பட்ட சேட்டைகளைக் கூறுகிறார்.

மதுவிலே தெரியும் உருவு கண்டு, அதனைத் தோழி என்று எண்ணுகிறாள் ஒருத்தி, மதுவிலே தன்முகம் தெரிகிறது, போதை ஏறிய நிலையில் இருப்பதால் வேறு யாரோ ஒருத்தி, தன்னிடம் உள்ள மதுவைப் பருக வருகிறாள் என்று எண்ணிக் கொள்கிறாள். இவள் குவளையில் ஒன்றுமில்லை நிலவொளி அதிலே வீசுகிறது. அதைக் கள் என்று எண்ணிக் கொண்டு குடிக்க முயல்கிறாள், இன்னொருத்தி. ஒருத்தி வள்ளலாகி விடுகிறாள். வானத்து நிலவு வட்டிலில் தெரிகிறது, வா! வா! வந்து நீயும் கொஞ்சம் பருகு, அஞ்சாதே வா! என்றே அழைக்கிறாள். ஒருத்தி எங்கே அந்த மனுசன்! நேரம் நினைப்புத் தெரியாத ஆசாமி! "போடி! அழைத்து வா ஓடு!" - என்று தூது அனுப்புகிறாள். ஒருத்தி பஞ்சணையில் படுத்திருந்த தன் பதியைப் பாதத்தால் உதைத்து, பதைப்புறு காதல் கொள்ளும்படி செய்கிறாள், மன்மதனே களிப்படைகிறானாம், அவர் தம் சொல்லைக் கேட்டும், செயலைக் கண்டும்!!

குளித்தது கூடியது போலவே இருந்தது என்று கூறினது போலவே, குடித்ததும் கலவி போன்றே இன்பளித்தது என்றார்; எதுகை மோனை மட்டுமல்ல, எல்லா ரசபாவங்களும் அனுபவ பூர்வமாகத் தெரிந்திருக்கவேண்டும், அல்லது அத்தகைய சுகானுபவத்தைப் பெற்றவர்களின் தோழமை இருந்திருக்கவேண்டும், இவ்விதம் கவிதை இயற்ற; சும்மா வராது!"

- என்று கம்பராமாயணத்து காமவெறி கள்வெறி ஆகியவைகளை அண்ணா சுட்டிக் காட்டி யிருக்கிறார்.

‘யதாராஜா - ததாபிரஜா’ என்பது வடமொழியில் வழங்கும் பழமொழி.

‘மன்னன் எவ்வழி - மக்களும் அவ்வழியே’ என்பது இதன் பொருள்!

வடமொழியின் இந்தக் கூற்றுப்படி பார்த்தால் ராமர் குடிப்பழக்கம் உள்ளவர் - என்று வால்மீகி சுந்தரகாண்டத்தில் சொன்னதையும், ராமராஜ்யத் துப் பிரஜைகள் குடிகாரர்கள் என்று கம்பர் எழுதியிருப்பதையும் யாரே மறுக்கமுடியும்!

ஜெயலலிதா மறுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு செக்கு எது என்றும் தெரியாது; சிவலிங்கம் எது என்றும் தெரியாது என்பதன்றி வேறு என்ன?

ராமன் - பெருமாள் காமவெறியர் என்று கலைஞர் இப்போது கண்டுபிடித்துள்ளார் என்கிறார் ஜெயலலிதா!

இப்போதல்ல; அப்போதே 1925ல் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலமுதலே பெருமாளும் பெருமாளின் அவதாரமான ராமரும் எப்படிப்பட்ட காமாந்தகாரர்கள் என்பது மேடைகள் தோறும் ஏடுகள்தோறும், நூல்கள்தோறும் அலசி ஆராய்ந்து ஆதாரங்களோடு புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள்!கம்பராமாயணத்திலும் ராமனின் காமவுணர்வு எத்தகையது என்பதை விளக்கி கம்பன் காமரசம் சொட்டச் சொட்ட எழுதிய பாடல்களை எல்லாம் அண்ணா தமது ‘கம்பரசம்’ நூலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

அதை எல்லாம் இங்கே மறுபிரசுரம் செய்து விட்டால்தான் என்ன?

ஆரியநாரிமணி ஜெயலலிதா - படித்துத் திருந்தி விடுவாரா அல்லது தனது சொந்த ஆர்.எஸ்.எஸ். கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவின் பெயரையும் அண்ணாவின் உருவத்தையும் அகற்றிவிடப் போகிறாரா?

இதைத்தான் ஜெயலலிதாவின் பிதற்றல்களை - பித்தலாட்டங்களை தகர்த்துத் தரைமட்டமாக்கும் வகையில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு விடுத்துள்ள அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஜெயலலிதாவுக்கு ஓர் அறைகூவல் என்பது போலவே அடுக்கடுக்கான வினாக்கள் வடிவில் கேட்டிருக்கிறார்.

அவை வருமாறு:-

1. ராமன் - இராமாயணம் பற்றிய தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துக்களை எதிர்க்கிறீர்களா?

அப்படியென்றால் அய்யா, அண்ணா கொள்கைகளுக்கு விரோதமானதுதான் அண்ணா தி.மு.க. என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

2. அதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், கட்சியிலிருந்தும் கொடியிலிருந்தும் அண்ணாவை அகற்றி விடுவீர்களா?

திராவிட இயக்கச் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும் போக்கும் உங்களுக்கு இருக்கிற காரணத்தால், ‘திராவிட’ என்ற இன கலாச்சார வரலாற்றுப் பெயரையும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவீர்களா?

இந்த இரு கேள்விகளுக்கும் உரிய பதிலை சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்த பின்னர்தான் ராமனுக்கும் - ராமாயணத்துக்கும் வக்காலத்து வாங்கவேண்டும் - அதுதான் அறிவு நாணயமும் நேர்மையும் ஆகும்"

- என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் வீரமணி!

பதில் சொல்வாரா ஜெயலலிதா? அறிவு நாணயத்துக்கும் நேர்மைக்கும் ஜெயலலிதா வுக்கும் வெகுதூரமாயிற்றே!

4 Comments:

Anonymous said...

Is there a truth in this? Can some learned persons (in Kamba Ramayan) provide necessary response/rebuttals or perhaps have an open debate.

IdlyVadai said...

ராமர் குடிகாரர் - துக்ளக் தலையங்கம்
http://idlyvadai.blogspot.com/2007/09/blog-post_27.html

Mani-bahrain said...

Why the comments are coming always about hindu religion? Is there any other religion or not? MK always talk about hindu kadavul only. Getting very much fed-up reading all this bulshits. Kadavulai patri avathooraga pesa nammakku enna arukathai irukku...MK should think about this before talking about hindu's god.

2nd point, this oldguy is always talking about tamil names let him change his son name first (stalin name) instead of chaning poor people names (oru thirumanavilala manamagan peraiye maathuna Paathagan..) IV can help me to give pinnoottam.

MK's target is postion and money only. Nammathaan alertaa irukkanum

Anonymous said...

There is only emotional outbursts.Why not submit a research based response.