பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 31, 2008

தைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம - ராமதாஸ் பேட்டி

தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்ததன் பின்னணி, தமிழக அரசின் செயல்பாடு மற்றும் பா.ம.க.வின் எதிர்கால அணுகுமுறை குறித்த கேள்விகளுக்கு "துக்ளக்'கிற்கு அளித்த இப்பேட்டியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரிவாகப் பதிலளித்திருக்கிறார்.

கேள்வி : "தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாது' என்ற முடிவை அறிவித்ததற்கு முக்கிய காரணமாக, காடுவெட்டி குரு பேசிய பேச்சை தி.மு.க. தலைமை சுட்டிக்காட்டியது. அதை பா.ம.க. பொதுக்குழு நிராகரித்தது. கூட்டணியை விட்டு பா.ம.க.வை வெளியேற்ற, உண்மையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் ராமதாஸ் : பொதுமக்கள் நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில்,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு எடுத்த சில முடிவுகளை நான்
விமர்சித்து வந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, பள்ளிக் கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை, சிமென்ட் விலை உயர்வைக் கண்டு கொள்ளாமல் இருந்தது, சுயநிதிக் கல்லூரிகளின் வரைமுறையற்ற வசூல், நதிநீர்ப் பிரச்சனைகளில் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியது – இப்படி பலவற்றை மக்கள் நலனை முன்னிறுத்தி சுட்டிக்காட்டி வந்தோம்.

ஆளும் கட்சியின் தோழமைக் கட்சி என்றால், நாலு காரியங்களைச் சாதித்துக்கொண்டு, முதலமைச்சருக்கு துதிபாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்த்தார். நாங்கள் அந்த மாதிரி ஏதாவது செய்திருந்தால், தேதி வாரியாகக் குறித்து வைத்துக்கொண்டு, சொல்லிக் காட்டுவார். நாங்கள் அப்படி இருக்கவில்லை.

சட்டசபையிலும், வெளியேயும் பொறுப்போடு செயல்பட்டோம். சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டுள்ளது? எத்தனை கொலை – கொள்ளைகள் தலைநகரிலேயே நடைபெறுகின்றன? இதைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

"பிரச்சனைகளைக் கொஞ்சம் மென்மையாகக் கூறுங்கள்; முன்கூட்டியே என்னிடம் சொல்லுங்கள்' என்று கலைஞர் என்னிடம் சொன்னது உண்மை. ஆனால், ஒவ்வொன்றுக்குமா அவரிடம் ஃபோனில் சொல்ல முடியும்? ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு மீறி மணல் கொள்ளை நடப்பது அவருக்குத் தெரியாதா?

அதன் பிறகு, அன்புமணியிடம், "அப்பாவிடம் கொஞ்சம் விமர்சனத்தைக் குறைக்கச் சொல்லுப்பா' என்றார். அன்புமணியும் என்னிடம் "பாவம், வயசானவருப்பா!' என்று சொன்னார். ஆனால் பா.ம.க., தி.மு.க.வின் கிளையாக இருக்க முடியாது அல்லவா?

ஆரம்பத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டியபோது, "தைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம்' என்றுதான் சொன்னார்; ஆனால், போகப்போக, தவறுகளைத் திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, கோபப்பட்டார். "கூட இருந்தே குழிபறிப்பவர்கள்' என்று என்னைத்தான் மறைமுகமாகச் சொன்னார். நான் பதிலுக்கு, "குழிபறிக்கும் கலை எல்லாம் எனக்குத் தெரியாது; நான் உழைத்து வளர்ந்தவன்' என்று கூறி, அவரைப் போல எனக்கு அந்த வேலை தெரியாது என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பதில் சொன்னேன்.

கேள்வி : காடுவெட்டி குருவின் பேச்சை நீங்கள் கண்டிக்கவில்லை; அவர் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை – என்பதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : இதுவும் தவறான தகவல். காடுவெட்டி குரு மீது போடப்பட்ட ஒரு வெடிகுண்டு வழக்கை – பொய் வழக்கை – வாபஸ் வாங்க வேண்டும் என்று எங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பலமுறை கலைஞரைப் போய் பார்த்து கேட்டார். அப்போது குருவின் இந்தப் பொதுக்குழு பேச்சை கலைஞர் சுட்டிக்காட்டி, "இப்படியெல்லாம் பேசுகிறாரே, இது சரியா?' என்று கேட்டார். அப்போது
ஜி.கே. மணி, "குருவை, டாக்டர் அழைத்து இதற்காகக் கண்டித்திருக்கிறார்; குருவையும் உங்களிடம் அழைத்து வந்து வருத்தம் தெரிவிக்கச் செய்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார்.

இதன் பிறகு கலைஞருக்கு இதுபற்றி நானும் கடிதம் எழுதி, அவர் அதை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைந்ததாகப் பதில் எழுதி, பத்திரிகைகளுக்கும்
இக்கடிதங்கள் தரப்பட்டுள்ளன. ஆகவே நான் குரு பேச்சைக் கண்டிக்கவில்லை என்பதே தவறு. நான் சொன்ன மாதிரி, இது அவர்களுக்கு ஒரு சாக்கு.

கேள்வி : தி.மு.க. – பா.ம.க. உறவு முறிய சில அமைச்சர்களும் முக்கியக் காரணம் என்று, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி விளக்க முடியுமா?

பதில் : முதல்வரைச் சுற்றியுள்ள சில அமைச்சர்கள் அவருக்குத் தவறான தகவல்களைத் தருவதோடு, தவறான யோசனைகளையும், அணுகு முறைகளையும் சொல்கிறார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்கிறார். "மின்வெட்டு புகழ்' அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "உயர்கல்விக் கொள்ளை புகழ்' பொன்முடி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய துறைகளின் செயல்பாடு பற்றி நான் விமர்சித்ததை, இவர்களால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை. "வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் கல்லூரி, புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுகிறது' என்றார் ஆற்காடு வீராசாமி.

கடைசியில் 4 சென்ட் நிலம் புறம்போக்கு என்று ஒரு ஆதாரம் காட்டினார். அந்த ஆதாரமும் தவறானது என்பதை, சென்னையில் இருந்து நிருபர்களை அழைத்துச் சென்று, அந்த இடத்தையும், ஆவணங்களையும் காட்டி நிரூபித்தேன்.

வீராசாமிக்கு எங்கள் மீது என்ன கோபம் என்றால், அவருக்கு வேண்டிய தனியார் கம்பெனிக்கு ஆதரவாக, கடலூரில் நல்ல நிலங்களை கையகப்படுத்தி, மின்சாரத் திட்டம் கொண்டு வர முயன்றார். அந்தப் பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டார்கள். ஆகவே வேறு இடம் பாருங்கள் என்றேன். இப்படிப்பட்ட விஷயங்களால் என் மீது கோபம்.

கேள்வி : சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் – ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் என்ற விமர்சனம், உங்கள் மீது வைக்கப்படுவதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பதில் : முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக உள்ள எந்தக் கட்சியாவது, வேளாண் வளர்ச்சிக் கொள்கை, தொழில் கொள்கை, சென்னை பெருநகர போக்குவரத்து நெருக்கடிக்கான மாற்றுத் திட்டம், "தமிழ்நாடு 2020 – ஒரு தொலைநோக்குப் பார்வை' போன்ற அரசுக்கு ஆலோசனைகள் கூறும் அறிக்கை களையும், கடந்த 6 ஆண்டுகளாக "மாதிரி பட்ஜெட்'டுகளையும் அரசிடம் சமர்ப்பித்து வந்திருக்குமா?

விமான நிலைய விரிவாக்கத்தில் ஏன் எதிர்ப்பு வந்தது? மத்திய – மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் ஐந்தாயிரம் பேர், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில், இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்றதும், இடிந்துபோய் விட்டார்கள். அவர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தினர். அவர்கள் தைலாபுரத்திற்கு வந்து அழுதார்கள்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மாநகரங்களில், சர்வதேச தரத்தில் "கிரீன் ஃபீல்டு ஏர்போர்ட்' அமைக்க 1999லேயே திட்டமிடப்பட்டது. மற்ற இருமாநிலங்களிலும் இரண்டாண்டுகளில் அப்பணியை முடித்துவிட்டார்கள். 1999ல் இங்கு தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது? இதற்காக என்ன செய்தார்கள்?

துணை நகரம் அமைப்பதிலும் எங்கள் எதிர்ப்பு நியாயமானதுதான். திருப்போரூர் அருகே 140 கிராமங்களில் வீடுகளில் குடியிருப்போர், நிலம் வைத்திருப்போரை எல்லாம் வெளியேற்றி விட்டு, ஐம்பதாயிரம் ஏக்கரில் துணை நகரம் என்றால், அந்த மக்கள் எங்கே போவார்கள்? அங்கே, கடும் மக்கள் எதிர்ப்பு உருவானவுடன், சட்டசபையில் முதல்வர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் ஒரு அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இருப்பதையும் அழித்துவிட்டு, ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு மாநில அரசு புரோக்கர் வேலை பார்க்கக்கூடாது. அதை முன்னேற்ற நடவடிக்கை என்றால் அதை ஏற்கவும் முடியாது.

தமிழக அரசின் திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, தமிழகத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர், மாதம் 571 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது; அதாவது சுமார் 25 சதவிகிதம் பேரின் நிலை இது. இன்னொரு 20 சதவிகிதம் பேருக்கு சுமார் 1000 ரூபாய்தான் மாத வருமானம். இவர்களைப் பற்றி அரசு கவலைப்படுகிறதா?...

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக என்ன அம்சங்கள் தேவை? சாலைகள், தரை மற்றும் இதர வழியானப் போக்குவரத்து வசதிகள், தட்டுப்பாடற்ற குடிநீர் மற்றும் மின்சார வசதி. இதுதான் அவசியமான உள்கட்ட மைப்பு. ஐந்து தடவை முதலமைச்சராக வந்தவர், இவற்றை பூர்த்தி செய்து சாதனை படைத்திருக்கிறாரா?

மது விற்பனை அதிகரிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இலவசத்
திட்டங்கள், மது, ஓட்டுக்குப் பணம், சினிமா கவர்ச்சி – இதை வைத்தே மக்களிடம் ஓட்டைப் பறித்துவிடலாம் என்று அரசியல் நடத்துகிற இவர்களா, நாங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்வது?


கேள்வி : சில பகுதிகளில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் எதிரிக் கட்சியினர் மாதிரி நடந்து கொண்டார்கள் – என்கிற தி.மு.க.வின் விமர்சனம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில் : ஆளும் கட்சியினரின் அடாவடித்தனத்தை, பா.ம.க. கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதுதானே என்கிறார்களா? 20 அடி, 30 அடி அளவு ஆழத்துக்கு ஆற்றில் மணல் அள்ளி, நீர் ஆதாரத்தையே அடியோடு சேதப்படுத்துவதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எங்கள் எம்.எல்.ஏ.க்கள் உயிரைப் பணயம் வைத்து, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அதை படமெடுத்து வந்தார்கள். அங்குள்ள
மக்கள் – ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பெயரைக் கூறி, இவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்றார்கள். அந்தப் பெயர்களை நாங்கள் கூறவில்லையே? இதைத் தடுத்து
நிறுத்துங்கள் என்றோம். அந்த மணல் கொள்ளையில் பங்கு எங்கெங்கோ போகிறது. அதனால் தடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அதேபோலத்தான் லாட்டரி விற்பனை. ஜெயலலிதா அம்மையார் அதை தடை செய்தார். நான் வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். இப்போது தடை ஏட்டளவில் இருந்தாலும், ஆங்காங்கே விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி வியாபாரி ஒருவர் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி. அவர் ஒரு அமைச்சரின் நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இன்னொரு லாட்டரி அதிபர் பத்திரிகை நடத்துகிறார். லாட்டரி விற்பனையும், கஞ்சா விற்பனையும் அமோகமாக நடப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாங்கள் அதை பார்த்துக்கொண்டு பேசாமல்
இருந்தால், எங்களை நல்லவர்கள் என்பார் முதலமைச்சர்.

கேள்வி : பா.ம.க.வுடன் கூட்டணி முறிந்தபோது, "அன்புமணியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு கோருவீர்களா?' என்று கேட்டபோது, "அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு' என்று கலைஞர் சொன்னார். அன்புமணிக்கு அவரது துறையில் சில நெருக்கடிகள் ஏற்பட்டபோது தி.மு.க. பக்கபலமாக இருந்ததா?

பதில் : எள்ளளவும் உதவிகரமாக இல்லை. அஐMகு பிரச்சனையிலும் சரி, ஜிப்மர் விவகாரத்திலும் சரி – அன்புமணிக்கு ஆதரவாக ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. எதிராக வேண்டுமானால் வேலை செய்திருக்கிறார்கள். "மருத்துவ மாணவர்கள் மூன்று மாதங்கள் கிராமப்புறத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டும்' என்று ஒரு கருத்து, பேச்சளவில் வந்தது. மத்திய அரசு, ஜி.ஓ. போடவில்லை; மசோதா கொண்டுவரவில்லை. பேச்சுதான் எழுந்தது. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதைத் தடுக்காமல், வேடிக்கை பார்த்து, தூண்டிவிட்டதே கலைஞர்தான். இதுதான் அன்புமணி மீது அவருக்கிருந்த அன்பின் அடையாளம்.


கேள்வி : தேசிய அளவில் இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைத்துள்ளனர்.
இருந்தாலும், தமிழகத்தில் இடதுசாரிகள், தி.மு.க.வோடுதான் என்று கலைஞர் கூறுகிறாரே! இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?


பதில் : "மூன்றாவது அணியில் தி.மு.க. இல்லை என்று இடதுசாரிகள் சொல்லவில்லையே' என்று கலைஞர் கூறியிருக்கிறார். அதாவது மூன்றாவது அணிக்கும் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். இது ஒருபுறம். மூன்றாவது
அணியினர், மாயாவதியை முன்னிறுத்திச் செயல்படத் தொடங்கியுள்ளனர். உடனடியாக அடுத்தத் தேர்தலில் மூன்றாவது அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதுதான் எங்கள் கருத்து.

கேள்வி : வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவாக வேண்டும். அந்த அணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தி.மு.க.வை உதறிவிட்டு காங்கிரஸ் வருமா? இது சாத்தியமா?

பதில் : 40 வருடங்களாக திராவிடக் கட்சிகளின் தலைமையிலான அணியிலேயே
காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆகவே, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியை உருவாக்கலாம் என்பது எங்கள் யோசனை. தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுக்கு அதிக இடங்களை மாநிலக் கட்சிகள் தந்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அதிக இடங்களை
மாநிலக் கட்சிகள் பெற்று வந்ததுபோய், இப்போது நாடாளுமன்றத் தேர்தலிலும்
மாநிலக் கட்சிகள் அதிக இடம்பெற முனைந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட, தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு தி.மு.க. 10 தொகுதிகளைத்தான் ஒதுக்கியது. இதனால் மாநிலக் கட்சிகளை, தேசியக் கட்சிகள் சார்ந்து ஆட்சி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமற்ற தன்மையும் உருவாகிறது.

ஆகவேதான், தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மாற்று அணி அமைத்தால், பா.ம.க. அதில் இடம்பெறும் என்கிறோம். தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. இதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. பா.ம.க.வைப் பொறுத்தவரை, தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது. ஆகவே, கூட்டணி குறித்து இப்போது அவசரப்படவோ, கவலைப்படவோ இல்லை.

( நன்றி: துக்ளக் )நேற்று கலைஞர் பேச்சு:
மத்திய அரசும், மாநில அரசும் ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்களை போல அமைந்து இணைந்து இருந்தால் தான், சேர வேண்டிய இடத்திலே பயணிகள் போய் சேர முடியும். குறிக்கோள் நிறைவேறும்.

இந்த கூட்டணி ரயில் மத்திய அரசையும், மாநில அரசையும் இணைக்கின்ற ரயில். அந்த கூட்டணி என்கிற அந்த ரயிலை திமுக என்கிற என்ஜின் இழுத்துச் செல்லும்.

நிச்சயமாக நான் என்ஜினாக இருந்து அவற்றை கொண்டு செல்வேன். வழியிலே எங்கும் தடம் பிறழாமல், கவிழாமல் இந்த என்ஜின் இந்த கூட்டணியை கொண்டு வந்து சேர்க்கும்

'என்ஜின்' கருணாநிதி என்றால் ராமதாஸ் ?

0 Comments: