பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 31, 2008

குசேலன் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்

குசேலன் படத்தை ரஜினி ரசிகர்கள் ஒட வைத்துவிடுவார்கள் என்கிறது குமுதம் - அப்படியா ?

ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்சன், மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல்.

மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "கத பறயும் போள்" கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல்.

சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வமான பல நாள் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.


* அரசியலில் சேருவேன் என்று சொல்லிவிட்டு சும்மா டபாய்க்கிறீர்களே ஏன்?

* நீங்கள், கமல் எல்லாம் ரொம்ப பந்தா பண்ணுகிறீர்கள?

* அடிக்கடி இமயமலை போகிறீர்களே. இங்கே இல்லாத எது அங்கே உங்களுக்குக் கிடைக்கிறது? இப்படி சுவாரசியமான கேள்விகள். பதில்களை வெள்ளித் திரையில் காண்க.


ரஜினி அழுவதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. "ஆறிலிருந்து அறுபது வரை"யை ஞாபகப்படுத்தும் நடிப்புத் திறமை இத்தனை மசாலா பார்முலாக்களைத் தாண்டி வந்தும் அவரிடம் அப்படியே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் அவர் கண் கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

ரஜினியின் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கண்ணில் தெரியமாட்டார்கள். ஆனால், அதையும் மீறி மனதோடு, மண் மணத்தோடு ஒட்டிக்கொள்க்றார் பசுபதி. சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று மற்றவரெல்லாம் மதிக்கும்போதும், புகழும்போதும் வெட்கமும் ஏக்கமும் கலந்து இயலாமையாய்ப் பார்க்கும் அவரது அழுத்தமான பார்வைக்கு ஆயிரம் பாராட்டுக்களைத் தரலாம்.

நயன்தாரா 'நெய்'ந்தாரா. வழுக்கும் உடலில் வழுக்கும் உடைகளில் இதயங்களை வழுக்கி விழ வைக்கிறார். அவர் நடை,உடை பாவனைகளைப் பார்க்கும்போது கூடிய விரைவில் ஹாலிவுட் படங்களில் அரங்கேறுவார் என்று பட்சி சொல்லுகிறது.

மீனாவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று. அப்படியே இருக்கீங்க அம்மணி.

கஸ்டமர் கிடைக்காததால், முடி வளர்த்தவர்களைக் கடத்திக் கொண்டு வந்து 'கட்டிங்' செய்யும் பார்பராக வந்து கலகலக்க வைக்கிறார் வடிவேலு. அவரின் மனைவியாக வரும் சோனா.. செமை சால்னா !

முதல் பாதியில் ரஜினி எப்போது வருவார் என்று பார்த்துப் பார்த்து கொஞ்சம் அலுப்பு வருவது திரைக்கதையின் பலவீனம். ஆனால் அந்தக் குறையை கடைசி அரைமணி நேரத்தில் மனதைக் கரைத்து மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர். ரஜினி போன்ற ஆக்சன் சூப்ப்ர் ஸ்டாரை வைத்துக் கொண்டு இது போன்ற அழுத்தமான படங்களை எடுப்பது சற்று சிரமமான காரியம். கெட்டியாகச் செய்திருக்கிறார் ப்.வாசு. சபாஷ் .

லிவிங்ஸ்டன், சின்னிஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், டி.பி.கஜேந்திரன் என்று காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறது.

ஜி.வி. பிரகாசின் இசையில் 'தலைவா' பாடல் தாளம் போட வைக்கிறது. வாலியின் வரிகள் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக கொஞ்ச காலத்திற்கு இருக்கும். இவர் வாத்தியங்ளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்கும் கேட்பவர்களின் காதுகளுக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா குசேலனை, குபேரனாக்கியிருக்கிறது. தோட்டாதரணியின் செட்டிங்ஸும் பிரமாண்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்குள்ளும் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம். ரஜினி ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

குசேலன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, டைரக்டர் பி.வாசுவிடம் சொன்ன கமெண்ட் இதுதான். "படம் 25 வாரம் ஒடும்".

உண்மைதான். ரஜினி ரசிகர்கள் ஒட வைத்துவிடுவார்கள்.

நன்றி: குமுதம்.
( இதை முழுவதும் டைப் அடித்து தந்த heartzக்கு ஸ்பெஷல் நன்றி )

6 Comments:

Anonymous said...

இட்லி வடை நீங்க எப்பவுமே சூப்பர் பாஸ்ட்.

சூப்பர் ஸ்டார் குசேலனில் நடித்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சியான செய்தி.

ஒரு சிறந்த நடிகரை கமர்சியல் சாயம் பூசி சூப்பர் ஸ்டார் என்றாக்கி விட்டார்கள். ஹிந்தியில் அமிதாப் செய்வது போல் ரஜினியும் இனி நல்ல கேரக்டர் ரோல் செய்ய வேண்டும் என்பதே என் போன்ற நடுநிலை சினிமா ரசிகனின் விருப்பம்.

ஆனால் அடுத்து ரோபோ என்ற "டைனோசர் "மேலே ஏறி விட்டார் ரஜினி.

டைரக்டர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னது போல் ரஜினி இனியாவது நல்ல கேரக்டர் ரோல் செய்ய வேண்டும்.

யு.எஸ்.தமிழன் said...

இது சினிமா விமர்சனம் மாதிரி தெரியலையே? ட்ரெய்லர் பார்த்தே விமர்சனம் எழுதுவாங்களோ?

தமிழ்நெஞ்சம் said...நாளைய திரைப்படத்திற்கு இன்றே விமர்சனம். சூப்பர்ங்க.

நீங்கள் படத்தைப் பார்த்துட்டு உங்களது விமர்சனத்தை நாளைக்கே தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றிகளுடன் உங்கள் தமிழ்நெஞ்சம்


Anonymous said...

இட்லி வடை விசிறி..

ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுட்டார் போலிருக்கே..?!
அப்போ பேசினதெல்லாம் தயவுசெஞ்சு சிலேட்ல அழிப்பதுபோல அழிச்சிடுங்கானுட்டாரு..!
இப்பதான் இவரு அரசியலுக்கு வருவாருன்னு எனக்கு ஏதோ ஒரு பட்சி சொல்லுது...
இத பத்தி உங்க கருத்து என்ன இட்லி வடையாரே?

Anonymous said...

http://www.deccanherald.com/UserFiles/DHGallery/Aug12008/city-thumb1.jpg

Traffic jam seen on Lalbagh Road as Rajnikant�s fans gathered at Urvashi theatre to buy tickets for his new movie �Kuselan� in Bangalore on Thursday.

சினிமா நிருபர் said...

படத்தின் முன்னோட்டம்தான் கலக்கும் முதல் திரைவிமர்சனமாக வந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்பதுதான் எனது கருத்து.

இட்லிவடையார் மற்றும் சினிமா ரசிக நண்பர்களே...

குசேலன் படத்துக்கு மட்டுமல்ல குசேலன் படத்தில் நடித்துள்ள நட்சத்திங்களுக்கும் நான் போட்டுள்ள மார்க்கையும் ஒருமுறை வந்து பாருங்களேன்...!