பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 17, 2008

ரிப்போட்டர் கவர் ஸ்டோரி - வெடித்த விஜயகாந்த் பதிவு செய்த இட்லிவடை

குமுதம் ரிப்போட்டர் கவர் ஸ்டோரி - இந்த கவர் ஸ்டோரி படித்துவிட்டு விஜயகாந்த் குமுதம் மேல் கேஸ் போட்டிருக்கிறார். அதனால் எவ்வளவு தூரம் இந்த கவர் ஸ்டோரி உண்மை என்று தெரியலை...

சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், `மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சாவே வராது' என்று முழங்கிய விஜயகாந்த், கடந்த பதின்மூன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,`ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று அதிரடியாக முழங்கி, தி.மு.க.வினரை அதிர வைத்திருக்கிறார்.

அவருடைய அந்தப் பேச்சை மாவட்ட உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்ததோடு, தங்களது செல்போன் மூலம் சென்னையில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அப்படியே `லைவ்' செய்தும் விட்டார்கள். சர்ச்சைக்குரிய விஜயகாந்தின் அந்தப் பேச்சு, அவரைக் கைது செய்யும் சூழலையும் உருவாக்கியிருப்பதாக ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது.

தவிர,மாவட்ட தி.மு.க.வினரும் கொந்தளித்துப் போய் தங்கள் தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி, விஜயகாந்தின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க அனுமதியும் கேட்டிருப்பது, நிலவரத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.

நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.

ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.

அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.

சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.ல என்ன சொல்றாரு? `தமிழர்களே தமிழர்களே.... நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்'னு பேசறாரு. யோவ், நீ கவிழ மாட்டே... மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப் போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா...? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணா கயிறுகூட மிஞ்சாது.

அணுசக்தி ஒப்பந்தம் முக்கியமா? ஆட்சி முக்கியமானு வரும்போது எனக்கு ஆட்சிதான் முக்கியம்னு வர்றே? ஏன்யா.. முதல்வரே? நேத்து வேதாரண்யத்துல ரெண்டு மீனவர்கள் சுடப்பட்டு இறந்தாங்களே... உடனே அமைச்சர்களையும். அதிகாரிகளையும் அனுப்பி வெச்சு அவங்களுக்கு நிவாரணமெல்லாம் கொடுத்தியே? ஏன் இந்த வேகம்? இன்னைக்கு இந்த விஜயகாந்த் ராமேஸ்வரத்துல ஆர்ப்பாட்டம் வெச்சிருக்கான். ஏதாவது அரசியல் பேசி மீனவர்களைத் தன் பக்கம் இழுத்துடுவான்கிற பயம்தானே? இதுக்கு முன்னால மீனவர்கள் சாகலையா? அப்போதெல்லாம் வராத அமைச்சர்கள் இப்போ ஓடி வர என்ன காரணம்? இந்த விஜயகாந்துதான். என்னிடம் இருக்கும் உண்மையும் மக்கள் செல்வாக்கும் கலைஞரை மிரள வைக்குது. என்னைக் கண்டு கலைஞர் பயப்படுகிறார். மதுரை `தினகரன்' அலுவலகத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டபோது, அதுக்குக் காரணம் உன் பிள்ளை தான்னு இந்தத் தமிழ்நாடே சொல்லுச்சு... உன் பிள்ளையைக் காப்பாத்த நீ டெல்லிக்கு ஓடினே. அங்கே ஒரு பத்திரிகையாளர், `கொலைக்குக் காரணம் உங்கள் மகன் தானாமே?' என்று கேட்ட போது, அவர்மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா, உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?''என்று தடதடத்த விஜயகாந்த், கச்சத்தீவு விவகாரத்துக்குத் தாவினார்.

``இந்தக் கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தபோது, தமிழகத்தில் யார் முதல்வர் தெரியுமா? இதே கலைஞர்தான். அன்றைக்கே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தால், இன்றைக்கு தமிழக மீனவர்கள் சுடப்படும் கொடுமை நடக்குமா? கேட்டா, மீற முடியாத ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கிடையே நட்புறவைப் பாதிக்கும் என்றெல்லாம் காரணம் சொல்கிறார். தமிழக மீனவர்களோட உயிருக்கு உத்தரவாதம் தராத - இல்லாத அந்த ஒப்பந்தம் எதுக்கு? கிழிச்சு குப்பைத் தொட்டில போடு. இமயமலையில இல்லாத ஒப்பந்தங்களா? காஷ்மீர்ல போடப்படாத ஒப்பந்தங்களா? அதையெல்லாம் மீறலே? கச்சத்தீவு விவகாரத்துல மட்டும் எதுக்கு ஒப்பந்தத்தைக் கட்டிக்கிட்டு அழணும்?

அடுத்ததா எல்லைப் பிரச்னை, நம்ம மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கறாங்கன்னு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் உள்ள கடல் தூரமே வெறும் பதினெட்டு நாட்டிக்கல் மைல் தூரம் தான். இதுக்குள்ளே என்னய்யா எல்லை? எல்லாத்தையும் எடு. கச்சத்தீவைத் தாண்டித்தான் மீன் வளம் இருக்குன்னு நம்ம ஆளு அங்கே போறான். அது தப்பா? நம்ம பகுதில மீன்வளம் இல்லை. அவன் என்ன பண்ணுவான்? இது இந்திய எல்லை! இது இலங்கை எல்லைன்னு மீனுக்குத் தெரியுமா? மனுசனுக்கே தெரியலே. மீனுக்கு எப்படித் தெரியும்?'' என்று பேசிய விஜயகாந்த், தடாலடியாக ஒரு போராட்ட ஐடியா ஒன்றையும் அப்போதே அறிவித்தார்.

``என் மீனவ மக்களே... உங்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த விஜயகாந்த் உங்களோடு போராடத் தயாராக இருக்கிறான். மீனவர்கள் எல்லோரும் படகுகளில் திரண்டு நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல... இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம். போராட்ட தினத்தைக் குறித்து விட்டு என்னைக் கூப்பிடுங்கள். தட்டிக் கழிக்காமல் வருகிறேன்'' என்ற போது மீனவப் பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஆரவாரம்.

அந்த ஆரவாரத்தில் குஷியாகிப் போன விஜயகாந்த், மீண்டும் கலைஞரை வசைபாட ஆரம்பித்தார். `தொட்டதுக்கெல்லாம் சோனியா கூட போன்ல பேசுறியே... நடுக்கடல்ல இத்தனை பேர் செத்துப் போறானே... அதுக்காக, ஒரு தடவையாவது சோனியா கூட போன்ல பேசி இருக்கியா? ஒரு மண்ணும் பண்ணலே.கடல்ல நம்ம மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் திராணியற்ற ஆளும் தி.மு.க.வினரையும் சுட்டுத் தள்ள வேண்டும்'' என்றபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் நிமிர்ந்து அவரைப் பார்த்து, மீண்டும் ஆரவாரித்தது. உளவுத் துறையினரும் உஷாரானார்கள்.

உளவுத்துறையினரின் நடவடிக்கைகளை அந்தக் கூட்டத்திலும் கவனித்த விஜயகாந்த், அதன் பிறகு தன் பேச்சில் ஆவேசத்தை அதிகரித்துக் கொண்டார்.

``நான் இங்கே பேசுற ஒவ்வொரு பேச்சும் `லைவ்'வா சென்னைக்குப் போயிட்டு இருக்கு. என்னோட பேச்சு இன்னும் ஒரு மணி நேரத்துல முதல்வருக்குப் போட்டுக் காண்பிக்க, உளவுத்துறை பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கு. இந்த விஜயகாந்த் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டான். என்னோட பேச்சு இதோ பக்கத்துல இருக்கிற இலங்கைக்கே போகுது. நீ என்ன பிசாத்து! என்னை என்ன பண்ணிட முடியும்? நான் பயப்பட மாட்டேன். என்னோட கல்யாண மண்டபத்தை இடித்த போதே நான் கவலைப்படலே. நில ஆக்கிரமிப்புன்னு என் மேல பழி போட்டப்போநான் பயப்படலே. இதுக்கெல்லாமா பயப்படப் போறேன்?'' என்ற விஜயகாந்த், அதன்பிறகு ஆவேசம் தலைக்கேறியவராக இலவச டி.வி., இலவச நிலம், இரண்டு ரூபாய் அரிசி என்று தி.மு.க. அரசைக் குறிவைத்தே அடுத்த முக்கால் மணி நேரமும் வியர்க்க விறுவிறுக்க முழங்கி முடித்தார்.

பேச்சை முடித்துவிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று விட்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். கலைந்து சென்ற ஒட்டுமொத்த கூட்டமும் விஜயகாந்தின் ஆவேசப் பேச்சுக்கு அதிலும் குறிப்பாக, `தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்' என்ற பேச்சை ஆச்சரியத்தோடு அசை போட்டபடி சென்றது.

நாம் ஸ்பாட்டில் இருந்த உளவுத்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

``வேதாரண்யத்தில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே, ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆகவே, அவரின் பேச்சை ஒரு வார்த்தைகூட விடாமல் வீடியோவிலும் ஆடியோவிலும் எங்கள் அதிகாரிகள் பதிவு செய்யச் சொன்னார்கள். தவிர, மொபைல் போன் மூலமாகவும் சென்னையில் உள்ள எங்கள் அதிகாரிகளுக்கு விஜயகாந்த் பேச்சை `லைவ்' செய்தோம். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே, `ஆள்வோரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று பேசினார். என்னதான் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தாலும், அரசுக்கும் ஆள்வோருக்கும் எதிராக இப்படி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவது கூடாது. ஆள்வோர் என்றால் தி.மு.க.வினரை - அதிலும் குறிப்பாக பெரியவர் கலைஞரைத்தானே குறிக்கும்? விபரீதம் புரியாமல் விஜயகாந்த் பேசிவிட்டார். அவரின் இந்தப் பேச்சை வைத்தே அவரைக் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. அவரின் பேச்சைப் பதிவு செய்து மேலிடத்துக்கு அனுப்பியதோடு எங்கள் வேலை முடிந்து விட்டது'' என்றார்.

விஜயகாந்தின் இந்தப் பேச்சு என்ன மாதிரியான விளைவுகளை அவருக்கு எதிராக உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.பேசிக்கொண்டே வந்த விஷயகாந்த் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் போஸ், அந்தோணி ஆகிய இருவரையும் அழைத்து மைக்கில் பேச வைத்தார். ``எங்கள் பிரச்னைக்காக முதல்வராக இருந்தவர்களை மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களுக்கு ஸ்வீட், காரம், காபி கொடுத்து அனுப்பினார்களே தவிர, பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணும் வழியை - நடவடிக்கையைச் செய்யவில்லை'' என்றார் போஸ் என்பவர்.

``மீனவர்கள் நலனில் அக்கறையோடு இருந்தவர் எம்.ஜி.ஆர்.! அவருக்குப் பிறகு நாங்கள் நம்புவது விஷயகாந்தைத்தான்'' என்று அந்தோணி என்பவர் கூறிய போது, விஷயகாந்த் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.

ஒரு மூதாட்டி விஷயகாந்தைப் பார்த்து, ``இப்போ எங்களைத் தேடி வர்ற நீங்க, முதலமைச்சரா ஆன பின்னாடி எங்கே பார்க்க வரப் போறீங்க? எங்களுக்கு எங்கே நல்லது செய்யப் போறீங்க? மத்த முதலமைச்சருங்க மாதிரி நீங்களும்தான் மாறிடுவீங்க'' என்று துணிச்சலாகக் கூற, திகைத்துப் போன விஷயகாந்த், ``எங்கிட்டே ஆட்சி, அதிகாரம் எதையும் கொடுக்காமலே இப்படி கேள்வி கேட்கலாமா? எனக்கு இன்னும் நீங்க எதுவும் செய்யலே. செய்துட்டு இந்தக் கேள்விகளை எங்கிட்டே கேளுங்க. அதுக்குப் பதில் சொல்றேன்'' என்றார்.

``இலவச டி.வி., இலவச நிலம், இரண்டு ரூபாய் அரிசி இதெல்லாம் கிடைக்காத மீனவப் பெண்கள் இரண்டு ரூபாய் கொடுத்து தி.மு.க. உறுப்பினர் கார்டு வாங்குங்க. உடனே உங்களுக்குக் கிடைக்காத எல்லாம் கிடைக்கும்'' என்று நக்கலாக விஷயகாந்த் கூறியபோது, மீனவப் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

ஆர்வத்தின் காரணமாக ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க வந்திருந்த லோக்கல் தி.மு.க.வினர் விஷயகாந்தின் கலைஞர் அட்டாக் பேச்சைக் கேட்டு டென்ஜனாகி, தங்களது மொபைல் போன் மூலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கேப்டனின் பேச்சை ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

பரமக்குடியில் தே.மு.தி.க.வின் பேனரை தி.மு.க.வினர் கிழித்து எறிந்தனர். அவர்களைக் கைது செய்யக் கோரி தே.மு.தி.க.வினர் கொடுத்த புகாரை போலீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனைக் கேள்விப்பட்ட விஷயகாந்த் அமைச்சர் சுப.தங்கவேலனை ஒரு பிடிபிடித்தார். ``ஏன்யா, டம்மி அமைச்சரா உன்னை கலைஞரு மாத்திட்டாரு. இன்னும் நீ பரமக்குடில ஆட்டமா போடுறே? கூடிய சீக்கிரமே உன் அமைச்சர் பதவி காலி ஆகிடும்யா'' என்றபோது, தே.மு.தி.க.வினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

2 Comments:

Anonymous said...

கேப்டன் வாயால் சுட்டார்.

முரளீ

geeyar said...

இனி ஒரு ஆயுதம் செய்வோம்,
சிங்களனோ
இங்கெனை ஆள்பவனோ
எவனென் தலையில் கைவைத்தாலும்
அவன் தலை கொய்வோம்