பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 02, 2008

அழகிரிக்கு பதவியில்லை

எல்லா நாளிதழ்களும் அழகிரிக்கு பதவி தருவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க, அவருக்கு பதவி இல்லை என்று பொதுக்குழு தீர்மானித்துள்ளது. இது பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும் இரண்டாம் ஏமாற்றம் ( முதல் ஏமாற்றம் மாநாட்டில் அறிவிப்பு என்று ஏமாந்தது )
இது திமுகவில் பிளவை கொஞ்சம் நாளைக்கு தள்ளிபோடலாம் அவ்வளவு தான்.


திமுக உட்கட்சி தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கும் வரை கட்சியின் தற்போதைய நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் என்று திமுக பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
.
மு.க.அழகிரிக்கு திமுக துணைத் தலைவர் பதவி கொடுப்பதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தற் போதைக்கு கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை தொடங்கியது.

20 தீர்மானங்கள்
இதில் 20 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

நிர்வாகிகள் மாற்றம் இல்லை
ஐந்தாண்டுகளுக்கு மேற்படாத கால அளவில் திமுக அமைப்பு தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாமல் மழை, வெள்ளம், புயல் போன்ற தவிர்க்க இயலாத காரணங்கள் தடையாக ஆகிவிட்டமையால் வரும் 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்சித் தேர்தல்களை நடத்தி முடித்து விடுவது என்றும், அதுவரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகிப்பார்கள் என்றும், 19-வது தீர்மானம் கூறுகிறது.

அழகிரிக்கு எதிர்ப்பு
இந்த தீர்மானத்தின்படி தற்போதைய கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு அழகிரிக்கு கட்சியில் உயர்ந்த பதவி அளிக்க ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித் ததே காரணம் என்று கூறப்படுகிறது.

அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்தால் அவர் கட்சியையே கைப்பற்றி தனக்கு எதிராக செயல்படுவார் என்று ஸ்டாலின் கருதியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்தே ஸ்டாலின் கோபித்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றதாகவும், அவரை சமாதானப் படுத்தி அழைத்ததன் பேரிலேயே அவர் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை சமாதானப்படுத்தும் வகையில் தற்போதைக்கு கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை என முடிவெடுக்கப் பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

மற்ற தீர்மானங்கள்
வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது என்று முதல் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானமும், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்மொழியை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக ஆக்க மத்திய அரசை வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள், தைத்திங்கள் முதல் நாளை ஆண்டுப் பிறப்பாக அறிவித்தது ஆகியவற்றுக்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

மூன்று புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரவாணிகளுக்கு தனி நலவாரியம், செம்மொழி தமிழாய்வு மையம், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு ஆகியவை குறித்தும் பாராட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தனியார் துறையில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், இடஒதுக்கீடு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு உரிமை வழங்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை தீர்மானங்கள் வாயிலாக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

வரவிருக்கும் கட்சி தேர்தலை யொட்டி உறுப்பினர் கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
( நன்றி: மாலைமலர் )

0 Comments: