பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 16, 2008

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் - கலைஞர் உருக்கம், ராமதாஸ் விளக்கம்

கூட இருந்தே குழி பறிப்போரின் சிலரின் தோழமை ``பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்'' என்று கூறியதற்கு காரணம் என்ன? கருணாநிதி உருக்கம்

தவறுகளையும், குளறுபடிகளையும் சரி செய்யுங்கள் என்று சொன்னால் அதற்கு, கூடயிருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்துவதா?' டாக்டர் ராமதாஸ் விளக்கம்கலைஞர் அறிக்கை
பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களால் வலியுறுத்தப்பெற்றதும், எதிர்காலத் தமிழகம் ஏற்றம் கண்டிட வாணிபப் பெருக்கும், வளங்கள் குவிப்பும் வழங்கிடும் வற்றாப் பெருங்கொடையாக விளங்ககூடியதும், எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டதுமான, சேது சமுத்திரத்திட்டம்; தொங்கலிலே விடப்பட்டு கிடக்கிறது.

இன்னும் எத்தனை காலம் வாழப்போகிறோம் என்ற கேள்விக்குப் பதில் தேடிய நாட்கள் ஓடிப்போய்; செத்துச் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்க செய்யும் தீவிரவாத மிரட்டலுக்கிடையே: தேசத்தைக்காப்பதா; தேகத்தைத் துளைத்துக் கூறும்போடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு கிடந்து தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதோ என்று வினா தொடுக்கும் விபரீத தீவிரவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.

குழி பறிக்கும் தோழமை

நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நாலைந்து பேராகக் கூட்டணி சேர்ந்து ``நமக்கு நாமே'' என்று நற்செயல் புரியலாம் என்றால்; கூட இருந்தே குழி பறிப்போரின் சிலரின் தோழமை தான் கிட்டுகிறது. இந்த நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால், அது வேம்பாய்க் கசக்கிறது.

என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர்-தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில்-எனக்கு ஏன் பிறந்தநாள் விழா-பிறந்தநாள் என ஒரு நாள் வருவது எதற்காக-என்ற ஏக்கப் பெருமூச்சினை வெளிப்படுத்துவதே ``பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்'' என்ற என் வேண்டுகோளுக்கு முக்கிய காரணம்.ராமதாஸ் அறிக்கை
பாராட்டும்-பழியும்

தி.மு.க. ஆட்சி இரண்டாண்டு பதவி காலத்தை முடித்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அரசு மீது அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா 61 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். ஆனால், அவரது கட்சி, வள்ளுவரின் வாக்கிற்கேற்ப இடித்துச் சொல்லுகின்ற கடமையைத் திறம்பட ஆற்றுகிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

அதே நேரத்தில், குற்றச்சாட்டாக அல்லாமல் அரசுக்கு நல்வழி காட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறவர்களைப் பார்த்து, "கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை'' என்று பழி சுமத்தியிருக்கிறார்.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் கூட இருநëதே குழி பறிக்கும் வேலை என்பது நான் இதுவரையில் அறிந்திராத கலை, நான் தெரிந்திராத கலை. நான் கற்றுக் கொள்ளாத கலை, இனியும் கற்றுக் கொள்ள விரும்பாத கலை.

ஏற்க தயாரில்லை

"உங்களுடைய கருத்துக்களை கேட்க மாட்டோம். அதற்கான அவசியமும் இல்லை. நாங்கள் எதையும் செய்வோம். நீங்கள் எதையும் தட்டிக் கேட்கக் கூடாது. ஆலோசனை என்ற முறையில் கூட கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் எங்களது துணைக் கட்சிகள். எங்கள் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நிற்க வேண்டுமே தவிர, கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. அதுதான் தோழமைக்கு இலக்கணம். தட்டி கேட்டால், தவறுகளைச் சுட்டிக் காட்டினால், கருத்துக்களை தெரிவித்தால், தவறைக் கூட தவறு என்று சுட்டிக் காட்டினால் அதனை நாங்கள் குழி பறிக்கும் செயல் என்று பழி சுமத்துவோம். இதையும் நீங்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'' என்று சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள நாங்களும் தயாரில்லை. மக்களும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சர்ச்சைக்குரிய மசோதாக்கள்

சட்டப்பேரவைக்கூட்டத் தொடரின் கடைசி நாளில் இரண்டு சர்ச்சைக்குரிய மசோதாக்கள் அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டன. அந்த இரண்டு மசோதாக்களும் எந்த வேகத்தில் கொண்டு வரப்பட்டதோ, அதே வேகத்தில் அவை நிறைவேற்றப்படவில்லை.

பா.ம.க.தலைவர் கோ.க.மணி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களின் விழிப்புணர்வின் காரணமாகவும், அவர்கள் எடுத்து வைத்த வாதத் திறமையின் காரணமாகவும் ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இரு மசோதாக்களையும் அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 7 கல்லூரிகளை ஒருமை வகை (யூனிட்டெரி) பல்கலைக்கழகங்களாக மாற்றுவது என்று முடிவு அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குள்ளாக அவற்றில் 5 அரசு கல்லூரிகளை விட்டு விட்டு, கோவை மற்றும் மதுரையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளை மட்டும் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான மசோதாக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் புயல் வேகத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவற்றை அவசரமாகக் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?

உயர்கல்வியின் நிலை

கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக இதுபற்றி எல்லாம் கேள்வி கேட்டு விளக்கம் பெற எங்களுக்கு உரிமையில்லையா?.

தோழமை என்பதால் இந்த ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் உயர்கல்வித்துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அத்தனை குளறுபடிகளையும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

பள்ளிக்கல்வித்துை
பள்ளிக் கல்வித்துறை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பலமுறை அதைப் பாராட்டியிருக்கிறேன். முதல்-அமைச்சரிடமே நேரில் என்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறேன். அதே நேரத்தில் உயர்கல்வித்துறை எந்த அளவுக்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு பலமுறை நேரில் கொண்டு சென்றிருக்கிறேன்.

கடந்த ஆட்சியின்போது உயர்கல்வித்துறையின் குறைகள் அல்லது குளறுபடிகள் என்று நம் எல்லோராலும் சொல்லப்பட்டவை அனைத்தும் இந்த ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டன என்று சொல்ல முடியுமா?

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், இந்தக் குளறுபடிகளையெல்லாம் சரி செய்யுங்கள் என்று சொன்னால் அது, ``கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை'' என்று பழி சுமத்தினால் அதனை உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? உலகம் கிடக்கட்டும், அய்யன் வள்ளுவர் ஏற்றுக்கொள்வாரா? "நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண், மேற்சென்று இடித்தற் பொருட்டு''- நட்பு செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று. நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும் என்பது வள்ளுவரின் வாக்கு.

விருந்தும் கசக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சில நேரத்தில் உண்மையும் கசக்கத்தான் செய்யும்.

ஜெயலலிதா 61 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார் - அது என்ன என்று யாருக்காவது தெரியுமா ?
எங்கே அடித்தால் ராமதாஸுக்கு வலிக்கும் என்று கலைஞருக்கு தெரியும்
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அனுப்பிய தடுப்பூசிக் குழல்களில் உள்ள ஊசிகள் துரு பிடித்து உள்ளன என்றும் இனிமேலாவது நல்ல ஊசிகளை அனுப்ப வேண்டும் என்று மத்திய மந்திரி அன்புமணிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தின் ஒரு பகுதி
...திருச்சி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 102 துரு பிடித்த தடுப்பூசிக் குழல்களில் 5 ஊசிகளை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதுபோன்ற துரு பிடித்த ஏ.டி. தடுப்பூசிக் குழல்களை இனிமேல் அனுப்பாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பெரியார், அண்ணா, காமராஜரிடம் பாஸ் மார்க் வாங்கியவன்: டாக்டர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை-கருணாநிதி பதில்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 13-ந்தேதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து 3-வது ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த இரண்டாண்டில் அதன் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? என்றும், இந்த அரசின் செயல்பாட்டிற்கு மதிப்பெண் போடுவாதாக இருந்தால் எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?, இந்த அரசு தேர்வு பெற்றுவிட்டது என்று கருதுகிறீர்களா? என்றும் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, "ஒட்டு மொத்தத்தில் தேர்வு பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் பதிலளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் இந்த கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

நான் ஏற்கனவே எல்லா பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாய தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும், ஏன்? பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்து விடாது.

நான் எஸ்.எஸ்.எல்.சி.யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு முதல்-அமைச்சராகவே ஆகியிருக்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு கிரெடிட்டாகவே கருதுகிறேன்.

நல்ல டைம்மிங் :-)

படம்: 2006, துக்ளக் அட்டை படம்

0 Comments: