பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 29, 2008

விகடன் சர்வே பற்றி குமுததில் அழகிரி கருத்து!

குமுதம் ரிப்போட்டரில் வந்த அழகிரி பேட்டி.


முன்பு ஒருமுறை மாறன் சகோதரர்களுடன் ஒட்டோ உறவோ கிடையாது எனக் கூறியிருந்தீர்கள். இப்போது எப்படி?

``என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே நிதானமாக முடிவெடுப்பவன். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவன். அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ண மெல்லாம் எனக்குக் கிடையாது. நான் என் கருத்துக்கு உடன்படா தவர்களிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். அவ்வளவுதான். மாறன் சகோதரர்களுடனான என் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களுடன் கூட நான் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்.''

சமீபத்தில் ஓர் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் `மாறன் சகோதரர்களுடன் நல்லுறவு தொடர்ந்திருந்தால் முதல்வருக்குக் கூடுதல் பலமாக இருந்திருக்கும்' எனக் கூறப்பட்டுள்ளதே?

`தலைவருக்கு எப்படி இது போன்ற கருத்துக்கணிப்புகளில் உடன்பாடு கிடையாதோ, அதுபோல எனக்கும் கருத்துக் கணிப்பு களில் நம்பிக்கை கிடையாது. வாழ்நாளெல்லாம் பொதுவாழ்க் கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கலைஞர். இன் றைக்கு இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். மத்தியில் தேசிய அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது, தலைவர் கலைஞரின் கருத்தும் கேட்கப் படுகிறது. அதற்கு முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. அப்படிப் பட்ட ஒரு தலைவருக்கு, சிலரது உறவு தொடர்ந்தால் கூடுதலான பலமாக இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதே வேடிக்கையாக இருக்கிறது. `அவர்களுடன் நல்லுறவு தொடர்ந் திருந்தால் முதல்வருக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்' என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடன் சேர்ந்திருந்தால் பலம் குறையுமே தவிர, அதிகரிக்காது. இது கருத்துக் கணிப்பாகத் தெரியவில்லை. கருத்து உருவாக்கமாகவே தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், இப்போதைய சூழலில் முதல்வர் தனது பொறுப்புகளை சீனியருடன் பகிர்ந்தளிக்கலாம் எனக் கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள இளம் வயது அமைச்சர்கள் சிலரை விட கலைஞர் சுறுசுறுப்புடன் மக்கள் பணியாற்றி வருகிறார் என்பதை உடனிருப் பவர்களும் அறிவார்கள். மக்களுக்-கும் தெரியும்''

தா.கிருட்டிணன் கொலை வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து உங்கள் இமேஜ் உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் கூட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டி ருக்கிறதே?

``ஆரம்பத்திலேயே கூறிவிட்டேனே.. எனக்கு இந்தக் கருத்துக் கணிப்பிலெல்லாம் உடன்பாடு கிடையாது என்று. இன்னும் சொல்லப்போனால் அந்த வழக்கு என்பது கழகத்துக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அரசால் தொடரப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என மக்கள் அறிவார்கள். நாங்கள் நிரபராதி என மக்களுக்குத் தெரியும். அதனால் தான் வழக்கை பொருட் படுத்தாமல் கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களித்தார்கள். அதன் பிறகு நான் பொறுப்பேற்று நடத்திய மதுரை மேற்கு, மத்திய தொகுதி இடைத்தேர்தல்களில் கழகத்துக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்தார்கள். இந்த இடைத்தேர்தல் களின் வெற்றிக்கு கலைஞர் அரசின் சாதனைகள்தான் காரணம் என்றாலும் தேர்தல் பணிகளை நான் முன்னெடுத்துச் செய்தேன். என்மீது மக்களுக்குச் சிறிதளவு ஆத்திரம் இருந்தாலும் அதை வாக்குச்சீட்டில் காண்பித்திருப்பார்கள். ஆனால், அந்த இடைத் தேர்தல் இரண்டிலும் தி.மு.க. அணி வேட்பாளர்கள் முப்பதாயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றனர். மதுரை மக்களுக்கும் கட்சியின ருக்கும் என்மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. நானும் அவர்கள் நம்பிக்கைக்கு என்றும் பாத்திரமானவனாக இருந்து வருகிறேன். அப்படியிருக்கை-யில் என் இமேஜ் உயர்ந்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் கருத்துக் கணிப்பில் கூறப்-பட்டிருப்பது விஷமத்தனமானது.''

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி என்பதை தேர்தலில் போட்டியிட்டு வென்றால் பரிசீலிக்கலாம்.. என்றும் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளதே?

(சற்று கோபமாக) ``தேர்தலில் போட்டியிடாமல் சிலர் ராஜ்யசபா எம்.பி.யாகி மத்தியில் அமைச்சராகவில்லையா? இந்த சர்வேயை தூண்டிவிட்டவர்களுக்கே அது தெரியுமே.''

வழக்கு முடியட்டும் எனக் கருதியோ என்னவோ நீங்கள் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்தீர்கள். இனி எப்படி?

``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை. தி.மு.க.வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் என் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. கட்சிப்பணிகள் ஆகட்டும் பொதுத்தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகட்டும் நான் களமிறங்கி பம்பரமாகச் சுற்றி வந்திருக்கிறேன். அதே நேரத்தில் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாகவே பணியாற்றினேன். எந்த வெற்றியிலும் என் முகம் தெரிய வேண்டும் எனப் பணியாற்றியதில்லை. கழகமும் கலை ஞரும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்தான் என் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் நேரடி அரசியலில் நான் இல்லாதது போல கேட்கிறீர்களே.?''

நீங்கள் சென்னையை மையமாக வைத்து அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள் என்ற பேச்சு உள்ளதே?

``சென்னையை மையமாக வைத்து நான் செயல்படப்போவதாகப் பேச்சு உள்ளதா? எது எப்படியோ, எப்பவும் என்னை மையமாக வைத்துப் பேசுவது என்பதே சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. மதுரையையும் வைகை நதியையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல என்னை மதுரையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. நான் என்றும் மதுரை மக்களுக்கு உரியவன்.''


தற்போது தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. உங்கள் ஆதரவாளர்களுக்கு அதிக பொறுப்பு களைப் பெற்றுத் தருவீர்களா?

``எனது ஆதரவாளர்-கள் எனக் குறிப்பிடாதீர்கள். அனைவரும் கலை ஞரின் ஆதரவாளர்கள். கட்சித் தேர் தல் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. தகுதியான வர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் யார் குறுக்கீடும் இருக்காது. கட்சிக்-காக மெய் வருத் தம் பாராமல் கண்துஞ்சாது பணியாற்றுபவர்கள் பதவியையும் பொறுப்புகளையும் பெறுவார்கள்.''

வழக்கிலிருந்து விடுதலையானதும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தினார்களே?

``அது எனக்குத் தெரியாது. என்மீது கொண்ட அதிகமான அன்பால் இது போன்று செய்திருக்கலாம். என்றாலும் அதுமாதிரியான செயல்களில் எனக்கு உடன்பாடில்லை. எந்தச் செயலும் மக்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.. அதே நேரத்தில் தங்கள் கட்சித் தலைவிக்காக சிலர் வேப்பிலை ஆடை அணிந்ததையும் மண் சோறு சாப்பிட்டதையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.''

இரண்டாண்டு கால தி.மு.க. ஆட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

``தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றியது மட்டுமல்ல. மக்கள் நலனுக்காக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் கலைஞர் அவர்கள். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் மகிழ்வுறும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசின் ஒவ்வொரு துறையும் மக்களுக்-காக இயங்கிக் கொண்டிருப்பதை இந்த ஆட்சியில்தான் பார்க்க முடிகிறது என நடுநிலையாளர்களே கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கலைஞர் தேர்தல் நேரத்தில் அறிவித்து நிறைவேற்றிவரும் நியாயவிலைக்கடையில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்களை தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர்-களும் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழகத்தில் இரண்டாண்டுகாலமாக பொற் கால ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது...'' என்றார் அழகிரி.
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

1 Comment:

Mani said...

வழக்கிலிருந்து விடுதலையானதும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தினார்களே?

``அது எனக்குத் தெரியாது. என்மீது கொண்ட அதிகமான அன்பால் இது போன்று செய்திருக்கலாம். என்றாலும் அதுமாதிரியான செயல்களில் எனக்கு உடன்பாடில்லை. எந்தச் செயலும் மக்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.. அதே நேரத்தில் தங்கள் கட்சித் தலைவிக்காக சிலர் வேப்பிலை ஆடை அணிந்ததையும் மண் சோறு சாப்பிட்டதையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.''

அம்மாவுக்காக மண்சோறு சாப்டதும் வேப்பிலை கட்டுனதும் ஒன்றும் பெரிய அளவில் செலவில்லை. ஆனால் தங்களுடைய பிறந்தநாள் அன்று பெரிய பெரிய பாநேர்களால் மதுரை மானகரேமே அல்லோகலப்பட்டது. தெருவெங்கும் மின்சார போஅர்டுகள் வைத்து மதுரை நகரமே அசிங்கமான உங்கள் குடும்ப போடோவல் நிரந்து இருந்தது. அதெல்லாம் உங்கள் மீது அன்பால் உங்கள் தொண்டர்கள் செய்தார்களா?? யாருடைய பணம் இதெல்லாம்?? அழகிரி அவர்களே நெஞ்சில் கொஞ்சமாவது இறக்கமுண்டன் பேசுங்கள். மதுரை மாநகர மக்கள் ஒருபோதும் உங்களை ஒரு கழக தொண்டராக நினைத்ததில்லை, நினைக்கபோவதும் இல்லை. இதுதான் உண்மை. போதும் உங்க குடும்ப அரசியல். மதுரை மாநகர மக்களுக்கு தாங்கள் என்றுமே எதிரிதான். உங்கள் தொண்டர்கள் / ஜால்ரா போடுகிறவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் முகஸ்துதி பாடுவார்கள்.