பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 24, 2008

வெட்கக்கேடு 1, 2, 3, 4, 5 - ஞாநி

இந்த வார குமுதத்தில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்கள்.

வெட்கக்கேடு 1

பூங்கோதையின் அமைச்சர் பதவி நிலைக்குமா , அவர் பதவி விலகலை கலைஞர் ஏற்றுக் கொண்டு விடுவாரா மாட்டாரா என்று ஒரு நண்பர் என்னிடம் ஆரூடம் கேட்டார். என்ன ஆனாலும் டி.ஆர்.பாலுவின் பதவி நிலைக்கும் என்று அடித்துச் சொல்வது போல இதில் எதையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது என்றேன். பாலு பதவி மட்டும் நிலைக்கும் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று கேட்டார் நண்பர்.

`என் மகனின் கம்பெனிக்காக பிரதமர் அலுவலகத்திலும் பெட்ரோலி யத்துறை அதிகாரிகளிடமும் சிபாரிசு செய்தேன். அதில் என்ன தவறு? என்று டி.ஆர்.பாலு கேட்டதை, வெட்கக் கேடானது என்று கலைஞர் சொல்லவில்லை என்பதுதான் காரணம் என்றேன். கலைஞரின் அகராதி யில் எதெல்லாம் வெட்கக்கேடானது, எதெல்லாம் வெட்கக் கேட்டுக்கு அப்பாற்பட்டது என்று இருக்கும் வரையறைகளை ஆராய்ச்சி செய்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் 1972-ல் கலைஞர் மீது ஊழல் புகார்கள் வைத்தபோது அவற்றுக்கு ஐட்டம் வாரியாக பதில் அளிக்கையில், ஒரு குறிப்பிட்ட வீடு யாருக்குச் சொந்தம் என்ற கேள் விக்கு, `என் மகள் கனிமொழியின் தாயார்' என்று பதில் தரவேண்டிய நிலையில் தன்னைத் தானே வைத்துக் கொள்ள நேரிட்டது அவருக்கு வெட்க உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

தமிழால் மட்டுமே வாழ்க்கை முழுக்க தன் பிழைப்பை நடத்தி வந்திருக்கும் அவருக்கு, இன்று தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தமிழை மொழிப் பாடமாகக் கூடப் படிக்கத் தேவையில்லை என்று தன்னுடைய ஆட்சியிலேயே முடிவெடுக்கப்படுவது வெட்கக்கேடான விஷயமாகப் படவில்லை.

திருப்பூரிலும் ஈரோட்டிலும் நகரத்தையும் ஆற்றையும் மாசுபடுத்தி சூழலைக் குட்டிச் சுவராக்கியிருக்கும் சாய ஆலை, ஜவுளி ஆலை அதிபர்கள் எல்லாருமாகச் சேர்ந்து திருப்பூர் நகரத்தின் தி.மு.க மேயருக்கு தங்க மாலை அணிவிப்பது முதலமைச்சருக்கு வெட்கக்கேடான விஷயமாகப் படவில்லை. கலைஞருடைய 50 வருடப் பொது வாழ்க் கையில் இதுவரை அவர் வெட்கக்கேடானது என்று வேறு எதையும் வர்ணித்ததில்லை. பூங்கோதைக்கு மட்டுமே அந்த கௌரவம் கிட்டியி ருக்கிறது.

கீழ் முதல் மேல் வரை நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்ற மகாத்மாக்கள் மட்டுமே நிறைந்திருக்கும் தன் கட்சியில், ஒற்றை பூங்கோதை மட்டும் களங்கம் ஏற்படுத்திவிட்டதுதான் அவருக்கு வெட்கக்கேடானதாக இருக்கிறது. அது கூட ஒரு சில வாரங்களில் வெட்கத்துக்கு அப்பாற் பட்டதாக ஆகிவிடலாம். ஏனென்றால் ஞாபக மறதி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், மனிதனால் நிம்மதியாக வாழமுடியாது என்ற அரிய தத்துவத்தை சில வருடங்கள் முன்பு சொன்னவரும் அவர்தான்.

வெட்கக்கேடு 2

"என் மனநிலை கருதியும் உடல்நிலை கருதியும் (ஜூன் 3 பிறந்த நாளன்று) வாழ்த்துக்களை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்று உற்ற நண்பர்களையும் உயிரனைய உடன்பிறப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே கடும் கழுத்து வலி, முதுகு வலியினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறச் சென்றார்.

ஓரிரு தினங்கள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் என்ன நடந்தது? மருத்துவமனையில் வாராது வந்த மாமணியான பேரன் தயாநிதி மாறன் முதல் பல கட்சி அரசியல் பிரமுகர்களையும், வீடு திரும்பியதுமே, உற்ற நண்பரான சோ ராமசாமி முதல் மத்திய மாநில அமைச்சர்கள் வரையிலும் சந்தித்து நலம் விசாரித்ததை அனுமதித்தார்.

கலைஞருக்கிருக்கும் அதே கழுத்து வலியும் முதுகு வலியும் எனக்கும் உண்டு என்பதால், அதன் வேதனையை நான் நன்றாகவே அறிவேன். யாராவது வந்தால், எப்போது போய்த் தொலைவார்கள் என்று உள்ளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தும் வலி கழுத்து வலி. உட்கார்ந்தால் நிற்கத் தோன்றும். நின்றால் படுக்கத் தோன்றும். படுத்தால் வலி அதிகமாகி எழுந்து நடக்கத் தோன்றும். வலியினால் படுத்துத் தூங்க முடியாமல் இரவெல்லாம் நடந்து நடந்து களைத்தபின்னே தூக்கம் வந்து காலையில் படுத்த நாட்கள் பல.

இவ்வளவு கொடுமையான வலிக்கான சிகிச்சை வேளையிலும் வீடு திரும்பிய பின்னரும், அவரைப் போய் பார்த்து நலம் விசாரித்தவர்கள் உண்மையில் நண்பர்களே அல்ல. மேலும் அவரை சித்ரவதைப்படுத்தி யவர்கள்தான். அன்பின் பெயரால் கொடுமைப்படுத்துவது என்பது இதுதான். பிறந்த நாளன்றும் இதுதான் நடக்கும்.

இந்த முறை கலைஞருக்கு கடும் வலித் தாக்குதல் ஏற்படுத்தியது எது? சுமார் 40 மணி நேரம் சட்டமன்றத்தில் அவர் விவாதங்களில் பங்கேற்றுப் பேசியதுதான். இப்படிப்பட்ட பணிகளிலிருந்து அவருக்கு ஓய்வு தரப்பட வேண்டும் என்று நான் சொன்னால் உடனே எனக்கு பார்ப்பனீய அர்ச்சனை தொடங்கிவிடும்.

தி.மு.க.வுக்குள் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்தபடி முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்குத்தான் என்பது இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட விஷயம். ஸ்டாலினை முதலமைச்சராக ஏற்க முடியாதவர்களாக இருப்பவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. கலைஞர் குடும்பத்தையே சேர்ந்த ஒரு சிலர்தான். ஸ்டாலினை என் தலைவராக ஏற்க நான் தயார் என்று மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகன் பகிரங்கமாக அறிவித்தது போல ஒரு போதும் அழகிரியோ கனிமொழியோ தயாநிதியோ சொன்னதில்லை.

இந்த நெருக்கடிதான் கலைஞரின் மன நிலையையும் உடல் நிலை யையும் தொடர்ந்து நலிவுபடுத்தி வருகின்றன. இதுதான் உண்மை. ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு, கலைஞர் கட்சித் தலைவராக வேலைப் பளுக்கள் இல்லாமல் வழிகாட்டும் பொறுப்பை மட்டும் மேற்கொள் ளவேண்டிய தருணம் வந்து பல காலமாகிவிட்டது. மீண்டும் மீண்டும் இதை நிரூபிக்கிற, நினைவுபடுத்துகிற தருணங்களாகவே அவரது மருத்து வமனை விசிட்டையும், ஓய்வுக்காக ஏங்கும் அறிக்கைகளையும் கருத வேண்டும். இந்த நிதர்சனமான உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்து என்னை வசை பாடும் வேலைகளில் இறங்கும் சூழல் இருப்பதுதான் வெட்கக் கேடானது.

வெட்கக்கேடு 3

`கூட இருந்தே குழி பறிக்கும் தோழமைகளும்` கலைஞரின் மன வலிக்குக் காரணம் என்று அவருடைய இன்னும் சில அறிக்கைகள் காட்டியிருக்கின்றன. யார் அப்படி குழி பறிப்பது? நாங்கள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி தேவையில்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

டெல்லியில் வேண்டுமானால் குழி பறிக்கும் வல்லமை இடதுசாரிகளுக்கு இருக்கலாம். தமிழகத்தில், குழி என்று சாக்பீசில் போர்டில் எழுதும் பலத்தில் கூட அவர்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

கலைஞரின் ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி 60 மார்க் கொடுத்திருக்கும் அதே நேரத்தில் `நான் எந்த மார்க்கும் போட முடியாது; மக்களே போடுவார்கள்' என்று சொல்லும் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியைத்தான், `கூட இருந்து குழி பறிக்கும் தோழமை'யாகக் கலைஞர் கருதுகிறார் என்பது தமிழக அரசியலில் நேற்று நுழைந்து இன்று வெளியேறிக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக்கிற்குக் கூடப் புரியும்.

பாவம் பா.ம.க. அது என்ன செய்யும்? டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிறந்த விமர்சகர்களாக இருக்கும் இடதுசாரிகளால் அதே போல தமிழ்நாட்டில் இருக்க முடியவில்லை. டெல்லியில் எதிர்க்கட்சியாக தொடர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்யும் பி.ஜே.பிக்கு நிகராக தமிழகத்தில் எதிர்க்கட்சிக் கடமையைச் செய்யும் நிலையில் ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வும் இல்லை. விசிட்டிங் புரொபசரான சுப்ரமணியன் சுவாமியை நம்பித்தான் ஜெயா டி.வி.யே இயங்க வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இயங்கியாகவேண்டிய சுமை பா.ம.க மீது வந்து விழுந்துவிட்டது. இதைப் போய் கூட இருந்தே குழி பறிப்பது என்று சொல்வது வெட்கக்கேடானது அல்லவா. 2011-ல் உனக்கு என்னிடமிருந்து குழியும் பாலும் நிச்சயம் என்று இப்போதே கூட இருந்து சொல்பவன் நல்லவனா, கெட்டவனா?

வெட்கக்கேடு 4

தெய்வீகச் சிலைகள் மற்றும் தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி, விகாரப்படுத்தி இழிவுபடுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவோர், மற்றவர்களைக் கலகம் செய்யத் தூண்டுவோர், சாதி மத அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகை உணர்ச்சியை வளர்க்க செயல்படுவோர் எல்லாரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மதுரையில் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புத் தரப்படும் என்று அண்மையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். நாட்டில் மனிதனுக்கு முழு நேரப் பாதுகாப்பு இல்லை. சிலைக்குப் பாதுகாப்பு என்பது எவ்வளவு வெட்கக் கேடானது. இந்த நிலைக்கு தமிழ்ச் சமூகத்தை ஆக்கியது யார்? அம்பேத்கர், காமராஜர், சிங்காரவேலர் போன்ற சாதி கடந்த தலைவர்களையெல்லாம் குறிப்பிட்ட சாதிக்கானவர்கள் என்று கொண்டாடும் சூழல் வந்தது எதனால்?

குண்டர் சட்டத்துக்கான புதிய திருத்தத்தின்படி, மதுரை உத்தப்புரத்தில் ஊரைப் பிரித்த சுவரை இடித்ததை எதிர்த்து காட்டுக்குப் போய் உட்கார்ந்து கலகம் செய்யும் அத்தனை உயர்சாதியினரையும் கைது செய்யவேண்டும். எப்போதும் மத துவேஷத்தையே பரப்பி வரும் ராம கோபாலன், இந்து முன்னணி1, 2, 3 ஆட்களையெல்லாம் கைது செய்யவேண்டும். இதையெல்லாம் நிச்சயம் அரசு செய்யப் போவதில்லை என்பதால், குண்டர் சட்டத் திருத்தம் என்பதே வெட்கக் கேடானது.

வெட்கக்கேடு 5

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் கோஷ்டி வேறுபாடு களினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால் இருக்கும் இரு அம்சங்களும் முக்கியமானவைதான். முதலாவது இயக்குநர்களின் ஈகோ காய்ச்சல்கள்.

சராசரி மனிதனை விட தனக்கு இரண்டு கொம்பு எக்ஸ்ட்ராவாக இருப்பதாக நினைக்கும் மெகா சைஸ் ஈகோ சினிமா இயக்குநர்களுக்கு எப்போதுமே உண்டு. சக இயக்குநரை விட தனக்குக் கூடுதல் கொம்பு இருப்பதாக நினைப்பதும் இதன் தொடர்ச்சி.

இதை விட நம் கவனத்துக்குரிய முக்கியமான அம்சம் இரண்டாவதுதான். இயக்குநர்கள் சங்கம் என்பதில் இயக்குநர்களும் இருக்கிறார்கள். உதவி இயக்குநர்களும் இருக்கிறார்கள். இதுதான் அடிப்படைத் தவறு.

ஒரு தொழிற் சங்கம் என்பதே அதன் உறுப்பினர்களின் வேலை, சம்பளம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பே தவிர பொழுதுபோக்கு கிளப் அல்ல. சினிமாவில் உதவி இயக்குநர்களின் வேலைச்சுமை, சம்பளம், சுயமரியாதை எல்லாமே சிக்கலுக்குள்ளாவது தயாரிப்பாளரை விட அதிகம் இயக்குநரால்தான். எனவே இந்த உரிமைகளையெல்லாம் உதவிகளுக்கு சங்கம் யாரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும்? இயக்குநரிடமிருந்துதான். இருவருமே எப்படி ஒரே சங்கத்தில் இருக்க முடியும் ?

இதே நிலைதான் எல்லா உதவிகளுக்கும் எனவே உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி படத்தொகுப்பாளர்கள், உதவி சவுண்ட் இன்ஜினீயர்கள் தனியே உதவியாளர்கள் சங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் பெப்சி எத்தனை முயற்சித்தாலும், இயக்குநர்கள் சங்க கோஷ்டித் தகராறுகள் தீராது.

தற்போதைய பிரச்னையே இயக்குநர்கள் ஒருபுறமும் `உதவி'கள் ஒரு புறமுமாக எதிரெதிர் கோஷ்டிகளாக இருப்பதால்தான் வந்திருக்கிறது. இது அடிப்படை நோயின் அடையாளம். இதுவே நோய் அல்ல. அசல் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றை சந்திக்க மறுப்பதுதான் சினிமாவின் சாபக்கேடும் வெட்கக்கேடும்..
( நன்றி: குமுதம் )

9 Comments:

Anonymous said...

சும்மா மாத்தி மாத்தி பேசும் இந்த பச்சோந்தியை முதலே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

Anonymous said...

மன்னிக்கவும். ஞானி மாதிரி ஒரு பச்சோந்தியின் அறிக்கையை நீங்கள் போடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. "எல்லோரும் என்ன சொல்கிறார்கள், உடனே அதற்கு எதிராக பேசவேண்டும்; அப்பொழுது தான் புகழ் பெற முடியும்" என்ற கொள்கை கொண்டவர் அவர். அவர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

Seetha said...

கூப்பிடு கவிஞர் தமிழச்சியை.

sathappan said...

அவர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.


Repeattayee.....

sathappan

Anonymous said...

http://www.kumudam.com/webtv_streaming.php?type=Ladies%20Corner&catid=83&strid=2622&leftid=20

Idly புடவை கட்டத்தெரியுமா

Bala

Anonymous said...

Vetkkakettilum Vetkkakedu-Kumuthathil Inthalu Ezhuthurathu.
Thalavidhi...

Anonymous said...

இதைய நாங்களே குமுதம்.காமில் ஓசியில் படித்துக் கொள்ளமாட்டோமா?

புதுசா எதுனா போடு தலை!

Anonymous said...

டி.ஆர்.பாலு பதவி நிலைக்கும் என்பது பிரதமர்,கலைஞரூக்கு வெட்கக்கேடானது.

Anonymous said...

ஞானிய பத்தி தப்பு சொல்லரதுல்லாம் இருக்கட்டும். அவர் இப்ப சொன்னதுல எதாவது தப்பு இருந்த மட்டும் சொல்லுங்க. Don't criticise the performer criticise the performance.