பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 03, 2008

ஒகேனக்கல் பிரச்சனை - சோ கருத்து

இந்த வாரம் துக்ளக் பத்திரிக்கையில் வந்த தலையங்கம் - பிரிவினைவாதிகள் சாதிக்காததை...!

சாதாரண காலத்திலேயே, கர்நாடக அரசியல்வாதிகளின் "மாநில வெறி அரசியல்' சகிக்க முடியாததாக இருக்கும்; இப்போது தேர்தல் காலம் வந்துவிட்டது; மாநில வெறி அங்கு கோரத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது.

இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற மேடை, ஹொகேனக்கல் குடிநீர்த் திட்டம். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, ஹொகேனக்கல்லிற்கு வருகிற காவிரி நீரைப் பயன்படுத்த, தமிழகம் திட்டமிட்டு
வந்தது. இது பலவருடங்களாகத் திட்டமிடப்பட்டு, இப்போது செயல்முறைக் கட்டத்தை அடைந்து, அங்கு பணிகள் தொடங்கியிருக்கின்றன.

ஹொகேனக்கல்லில் தங்களைச் சார்ந்த பகுதிகளை தமிழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அதை ஒரு பிரச்சனையாக்கி, அந்தப் பிரச்சனை தீருகிற வரையில், அங்கு
குடிநீர்த் திட்டப்பணி எதுவும் நடக்கக்கூடாது என்று கர்நாடக அரசியல்வாதிகள் கோஷமிட ஆரம்பித்திருக்கின்றனர். இது முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால், காவிரிப் பிரச்சனை போல, மற்றொரு தீராத பிரச்சனையாகிவிடும்.

இப்போதுள்ள மத்திய அரசும், இதற்கு முந்தைய வாஜ்பாய் அரசும் மட்டுமல்ல
– அதற்கும் முந்தைய அரசு கூட, தமிழகத்தின் இந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளன; இப்போது கூட மத்திய அரசின் உதவியுடன்தான், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது – என்று தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்வளவு இருந்தும், கர்நாடக அரசியல்வாதிகள், இப்போது திடீரென்று, இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு வந்து சேர்கிற காவிரி நீரை, தனது தேவைக்கேற்ப, தமிழகம் பயன்படுத்திக்கொள்வதில், கர்நாடகத்திற்கு என்ன பாதகம் வந்துவிடும்? காவிரி நீரை, மக்களின் குடிநீருக்கு கர்நாடகம் பயன்படுத்தலாம்
– ஆனால், தமிழகத்தில் இருமாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கு, தனக்கு வந்து சேர்கிற காவிரி நீரை தமிழகம் பயன்படுத்தக்கூடாதாம். இது வறட்டுத்தனமான வாதம்.

இதில், கர்நாடக பா.ஜ.க. மற்றக் கட்சிகளை மிஞ்சிக் காட்டி, தங்களுடைய மாநில அக்கறையைப் பிரகடனப்படுத்த முனைந்துவிட்டது. அக்கட்சியின் ஒருநாள் முதல்வரும், முதல்வர் பதவிக்கான வேட்பாளருமான எடியூரப்பா
– ஹொகேனக்கல்லுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போயிருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற கட்சியாகிய பா.ஜ.க., மாநில வெறியைத் தூண்டிவிடுவதில் காட்டியுள்ள முனைப்பு, பிரமிக்கத்தக்கது.

மற்ற மாநிலத்தின் மீது துவேஷத்தை வளர்க்கிற மஹாராஷ்டிரத்தின் ராஜ்தாக்கரேவுக்கும், அண்டை மாநிலத்தின் மீது வெறுப்பைத் தூண்டிவிடுகிற எடியூரப்பாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே அரசியல் லாபத்திற்காக, தேசிய ஒருமைப்பாட்டையே குலைப்பவர்கள்தான்.

காங்கிரஸும், பா.ஜ.க.வும் தேசியக் கட்சிகள் என்ற பெயருடன், ஆங்காங்கே மாநிலக் கட்சிகள் நடத்துகிற சாதாரணமான, குறுகிய நோக்கம் கொண்ட கட்சிகளாக, அவ்வப்போது தோற்றமளிப்பது, வருந்தத்தக்கது. தங்களுடைய மாநிலத் தலைவர்களை, மாநில வெறியைத் தவிர்க்குமாறு கட்டளையிடுகிற மனோதைரியம், இந்த இருகட்சிகளுக்குமே இல்லை.

நாத்திகவாதிகளின் பிரச்சாரத்தினால், தோற்றுவிக்கப்பட முடியாத நாத்திகம் – போலி ஆன்மீகவாதிகளினால் தோற்றுவிக்கப்பட்டுவிட முடியும்; பிரிவினைவாதிகளால் சாதிக்க முடியாததை, இம்மாதிரி தேசியவாதிகள் சாதித்துக் காட்டிவிடுவார்கள் போலிருக்கிறது.

7 Comments:

நந்தவனத்தான் said...

//நாத்திகவாதிகளின் பிரச்சாரத்தினால், தோற்றுவிக்கப்பட முடியாத நாத்திகம் – போலி ஆன்மீகவாதிகளினால் தோற்றுவிக்கப்பட்டுவிட முடியும்; பிரிவினைவாதிகளால் சாதிக்க முடியாததை, இம்மாதிரி தேசியவாதிகள் சாதித்துக் காட்டிவிடுவார்கள் போலிருக்கிறது.//

:D

Anonymous said...

சோ இப்பதான்யா உண்மை சொல்லி இருக்காரு

Anonymous said...

சோ இப்பதான்யா உண்மை சொல்லி இருக்காரு

உடன்பிறப்பு said...

சோவுக்கும் அப்பப்போ மூளை வேலை செய்யத் தான் செய்யுது

Madhu said...

For one Cho has talked sense!!

Anonymous said...

சோ இப்பதான்யா உண்மை சொல்லி இருக்காரு

Anonymous said...

சோ இப்பதான்யா உண்மை சொல்லி இருக்காரு