பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

விவேகானந்தர் மண்டபம் - கலைஞர் பேச்சு

சட்டசபையில் இன்று விவேகானந்தர் நினைவிடம் தொடர்பான பிரச்சினை விவாதத்திற்கு வந்தது. யார் சொல்லுவது பொய் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இட்லிவடை வாசகர்கள் புத்திசாலிகள் :-)

செங்கோட்டையன் (அ.தி.மு.க.): சென்னையில் விவேகானந்தர் தங்கி இருந்த இடம் மெரீனா கடற்கரையில் உள்ளது. இந்த விவேகானந்தர் இல்லம் சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இங்கு தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அரசு முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்): விவேகானந்தருக்காக குமரி முனையில் நினைவிடம் உள்ளது. அவர் பெயரால் பல கல்லூரிகள் உள்ளது. எனவே இந்த இடத்தில் செம்மொழி மையம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை.

திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.): விவேகானந்தர் நினைவிடத்தை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் வைத்துக்கொண்டு அருகில் செம்மொழி மையம் கட்டலாம்.

ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.): ராமகிருஷ்ண மடம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலேயே இருக்க வேண்டும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்): ஆன்மீகத்தை அரசியல் ஆக்க கூடாது. அந்த இடத்தில் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.

முதல்- அமைச்சர் கருணாநிதி: உறுப்பினர்கள் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப் படக் கூடியது. தம்பி கம்பம் ராமகிருஷ்ணன் விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலே இருக்கட்டும், "பழைய இடத்திலே இருப்பதுதான் நல்லது'' என்று சொன்னார். ஆமாம், "பழைய இடத்தில்'' இருப்பதுதான் நல்லது என்பதை நான் தம்பி ராமகிருஷ்ணனுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் - அண்ணன் என்ற முறையில்.

விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட, தமிழகத்திலே உள்ள ஆறு கோடி மக்களுக்கும் உரிமை உண்டு. குமரி முனையில் இருக்கின்ற விவேகானந்தர் ஆலயத்தை வி.வி.கிரி 1970-ஆம் ஆண்டு என்னுடைய தலைமையிலேதான் திறந்து வைத்தார்.

அதன் பிறகு சென்னை மாநகரத்தில் 1997-ஆம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்த காரணத்தினால், அதன் நினைவாக விவேகானந்தர் இல்லத்தை, சென்னை இராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கும்படி அந்த மடத்தின் தலைவர் இந்த அரசிடம் கோரியிருந்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுர அடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தில் அவருடைய நினைவாக அந்த இடத்தை அரசு அந்த மடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போது 24.2.1997 நாளிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணை எண். 89-ன்படி சில நிபந்த னைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன்முதலாக ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்கு - ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறி, அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியதை அடுத்து -அதையும் தி.மு.க. அரசு பரிசீலனை செய்து, 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் மூன்றாண்டு கால குத்தகைக்கு ஆண் டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என 10.6.1998 அன்று வழங்கியது.

மற்றொரு கோரிக்கையாக, இதை 30 ஆண்டுக்கு குத்த கைக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கேட்ட போது நான் அது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் தான் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு ஏதாவது பகையா என்றால் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத் தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது எங்களுக்கு விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன் எடுத் துக் காட்டியதைப் போல விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. மத்தி யிலேயிருந்து எங்களுக்கு வந்த தகவல் செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்பவும், ஏற்ற முறையில் அதற்கான வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற "ஐம்பெருங்குழு'', "எண் பேராயம்'' போன்ற அமைப் புக்கள் செயல்படவும் 76 கோடி ரூபாய் உங்களுக்காக ஒதுக்கப் படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டிடம், ஒரு அமைப்பு இவைகளையெல்லாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற போது தற்காலிகமாக ஒரு இடத்தைத் தேடலாம் என்று எண்ணி அதைத் தேடிய நேரத்தில் சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டிடத்தை பிறகு கட்டுவது என்று அதற்கான முனைப்பான முயற்சிகளிலே ஈடுபட்ட போது, தற்காலிகமாக ஏதாவது அரசுக்குச் சொந்தமான இடங்கள் கிடைக்குமா என்று எண்ணிய நேரத்திலே யாரோ ஒரு கதை கட்டி அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று இன்றைக்கு சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட் டிருக்கிறார்கள். நீங்கள் சாமி யாரிடத்திலே மோத விட்டாலும், மாமி யாரிடத்திலே மோத விட்டா லும் நாங்கள் யாரும் அவை களையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதி யிருக்கிறார்கள். பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அதுப இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலு விழந்த மண்டபமாப இல்லை; வலுவான மண்ட பம். அதை யாரும் இடிக்க விரும்ப வுமில்லை, நினைக் கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை.

"அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்'' என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம். ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே - அவருடைய குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோத மானது.

இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது. குமரி முனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேக மான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப் பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக்கிற இடம் அதே காமராஜர் சாலையில் "பாலாறு இல்லம்'' - அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்க ளுக்கு அந்தப் பெரிய கட்டி டம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடை பெறும் என்பதைத் தெரி வித்து கொள்கிறேன்.

பழைய செய்தி:

கடந்த 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன், கண்காணிப்புப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் விவேகானந்தா இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சகஜானந்தாவை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். இதை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்


இந்த செய்தி பொய் என்றாலும் கூட எப்படி சரியா மாலை 6:15 மணிக்கு என்றெல்லாம் பொய் சொல்ல முடிகிறதோ. ஆண்டவா இவர்களை காப்பாத்துப்பா !

3 Comments:

Anonymous said...

பொய் சொல்லுவது யாரென்று நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியதில்லை உண்மைதான்.

//செங்கோட்டையன் (ம.தி.மு.க.): //

செங்கோட்டையன் எப்போது மதிமுகவுக்கு போனார்? அவர் மதிமுகவுக்கு போனது பொய்யா? அல்லது அதிமுகவிலேயே இருப்பது உண்மையா?

IdlyVadai said...

//செங்கோட்டையன் எப்போது மதிமுகவுக்கு போனார்? அவர் மதிமுகவுக்கு போனது பொய்யா? அல்லது அதிமுகவிலேயே இருப்பது உண்மையா?//

நிஜமாகவே இட்லிவடை வாசகர்கள் புத்திசாலிகள் தான் :-)
மாலைமலரில் வந்ததை அப்படியே கொடுத்திருக்கிறேன். செங்கோட்டையன் அதிமுக தான்.

S.Ravi said...

பொய் சொல்லுவது யார்?

Kalangera ? or Press?
Please do not answer like 'CHO'