பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 07, 2008

தவறான நேரம்; தவறான முடிவு!

தவறான நேரம்; தவறான முடிவு! - தினமணியில் வந்த கட்டுரை.

எங்கள் எலும்பு நொறுங்கினாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று வீரவசனம் பேசி, அனைத்துத் தரப்பினரும் களமிறங்கிவிட்ட நிலையில் கத்தியைக் கீழே போட்டு சமாதானக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார் முதல்வர். கர்நாடகத்தில் தேர்தல் முடியும்வரை அமைதி காப்போம் என்று கூறி பிரச்னையை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்த முன்யோசனை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்து விழா எடுப்பதற்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் வீரவசனம் பேசாமல் அடக்கியாவது வாசித்திருக்க வேண்டும். எத்தனை பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன; எத்தனை வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; கர்நாடகத்திலும் தமிழகத்திலும் எத்தனை பயணிகள் அல்லலுற்றனர் - நமது ஆட்சியாளர்களிடம் முன்யோசனையும், தைரியமும் இருந்திருந்தால் இத்தனையையும் தவிர்த்திருக்கலாமே என்பதுதான் நமது ஆதங்கம்.

1998-ல் முத்தரப்புக் கூட்டத்தில் பெங்களூர் குடிநீர்த் திட்டமும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமும் நிறைவேற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கர்நாடக ஆட்சியாளர்கள் புத்திசாலிகள். உடனடியாகத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த இதே முதல்வரின் அரசு, கர்நாடக அரசு காட்டிய அதே முனைப்புடன் செயல்பட்டு இந்தத் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை?

பொக்ரான் அணுசோதனைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரத் தடையால் வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கவில்லை என்கிற நொண்டிச்சாக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அன்றைய மதிப்பீட்டில் ரூ. 576 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டத்திற்கு அன்னிய உதவியை நாட வேண்டிய அவசியம் என்ன? கர்நாடகம் எந்த அன்னிய நாட்டு உதவிக்குக் காத்திருந்தது? தாமதப்படுத்தினால் பிரச்னை ஏற்படும் என்கிற முன்யோசனை இல்லாமல் போனது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள்?

தடையில்லாச் சான்று கிடைத்ததும், பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் அதேவேளையில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இன்றைக்கு இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது என்பது ஒருபுறம். ரூ. 576 கோடியாக இருந்த திட்ட மதிப்பு இப்படி ரூ. 1,334 கோடியாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்காது.

கர்நாடகத்தில் தேர்தல் வரவிருக்கும்போது இந்தத் திட்டத்தை அறிவித்தது ராஜதந்திரமற்ற செயல் என்பதை நாம் முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம். பிரச்னையை இந்த அளவுக்கு வளரவிட்டு, கர்நாடக வெறியர்களை உசுப்பேற்றிவிட்ட பிறகு, புதிய அரசு பதவி ஏற்கும் வரையில் அமைதி காப்போம் என்கிற அறிவிப்பு புத்திசாலித்தனமான முடிவுதானா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாகி விட்டதோ என்று தோன்றுகிறது.

இனிமேல் கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகம்தான். இப்போதே, முன்னாள் முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா பிரச்னையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனால், அது காவிரிப் பிரச்னைபோல, முடிவுக்கு வராமல் திட்டத்தைக் கிடப்பில் போடத்தான் உதவும்.

கிருஷ்ணாவானாலும் சரி, எடியூரப்பாவானாலும் சரி, குமாரசாமியானாலும் சரி இந்த விஷயத்தில் யாரும் தமிழகத்துக்குச் சாதகமான முடிவை எடுக்க முடியாமல் பிரச்னையை வளர்த்துவிட்டிருக்கிறார் முதல்வர். இனிமேல் தமிழகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க கர்நாடகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் துணிவு இருக்காது என்பது நிச்சயம்.

பிரச்னையை இந்த அளவுக்கு வளர்த்த பிறகு, திரையுலகத்தினர் உள்பட அனைவரையும் வீரவசனம் பேச வைத்துவிட்ட பிறகு இப்படி திடீரென "ஜகா' வாங்குவது என்பது ஒகேனக்கல் திட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழக நலனுக்கே வலு சேர்க்காது என்பதுதான் நிஜம். தனது கட்சி நலனுக்காகப் பிடிவாதம் பிடித்தும், சண்டை போட்டும், சண்டித்தனம் செய்தும் அமைச்சரவை இலாகாக்களைப் பெறும் முதல்வர், தமிழகத்தின் நலனுக்காகத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் ஒப்புதலுடன் ஏன் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற முயலவில்லை?

முதல்வரிடம் காணப்படாத முன்யோசனையும், தைரியமும் நடிகர் ரஜினிகாந்திடம் காணப்படுகிறது. அவர் கூறுவதுபோல, இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் தேச ஒற்றுமையையே அது பாதித்துவிடும். முதல்வரது முடிவு, தவறான நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் தவறான முடிவு!

5 Comments:

Anonymous said...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு போனா வேலைக்கு ஆகாது தலைவா

மாஞ்சு மாஞ்சு சண்டை போடாமா சாஞ்சு சாஞ்சு சாதிக்கலாம்னு நெனக்கிறார் போல

எல்லாம் ஓஞ்சு ஓஞ்சு போனாலும் நீ விடமாட்டாய் போலிருக்கு

ஆளாளுக்கு பேசி ஒரே ரேஞ்சு ரேஞ்சா ஏத்தி விட்டுடீங்க

அங்க ஜ்லமே இல்லாம காஞ்சு காஞ்சு போய்டும்

Anonymous said...

உள்ளுரில் இருக்கும் 'Ramadass'-யெ எதிர்த்து ஒரு நல்ல திட்டமும் செயல் படுத்த முடியல.. இவரர்ல.. இம்..
இவரு எங்க....

Anonymous said...

Well said.By postponing Karunanidhi has gone against the
interests of Tamils.

scssundar said...

சரியான நேரம் சரியான பதிவு.

Venpu said...

ராமதாஸின் இன்றைய அறிக்கையை படித்தீர்களா? நெத்தியடி கேள்விகள், ஆனால் யார் பதில் தருவது?